……..3001!

அது என்ன 3001?

வேலூர் ஜெயிலில் நான் இருந்தபோது என்…….. ஸாரி,  jokes apart!

இன்றுடன் என் வலைப் பதிவுகளைப் படித்த அன்பு உள்ளங்களின் எண்ணிக்கை தான் இது. ஆரம்பித்த ஆறு மாதத்தில் இது பெரிய எண்ணிக்கை என்றே தோன்றுகிறது.

 

என் வலைப்பதிவுகளைப் படித்து தங்களின் அபிப்பிராயங்களை எழுதுபவர்களுக்கும், எழுதாமல் மனதிற்குள் ரசிப்பவர்களுக்கும், படித்துவிட்டு தங்கள் நண்பர்களையும் படிக்கச் சொல்லுபவர்களுக்கும், நண்பர்களுடன் என் எழுத்துக்களை பகிர்ந்துகொள்ளுபவர்களுக்கும் அறிந்தவர், அறியாதவர்கள் எல்லோருக்கும் என் நன்றிகள். இது வெறும் வாய் வார்த்தை அல்ல. என் இதயம் சொல்லும் வார்த்தைகள். (என்ன, ரொம்ப உணர்ச்சி வசப்படுகிறேனா?) ஓகே! ஸ்டாப்!

 

indiblogger இணையதளத்தில் என் எழுத்துக்களுக்கு வோட் போடுபவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!

அற்புதமான…….. அட்லஸ்……..

Image

ரொம்ப ரொம்ப காலத்திற்கு முன் பிரம்மாண்டமான, வலிமையான உடலமைப்பைக் கொண்ட ஒரு இனம் இருந்தது. அந்த இனத்திற்கு ‘டைடன்ஸ்’ என்று பெயர். அதில் ஒருவர்தான் அட்லஸ்.

ஒருமுறை கிரேக்க கடவுள்களுக்கும் டைடன்ஸுகளுக்கும் பெரிய யுத்தம் நடந்தது. அதில் டைடன்கள் தோற்றுப் போய் கடவுளர்களால் தண்டிக்கப் பட்டனர். தோள்களில் சுவர்க்கத்தைத் தூக்கி சுமக்க வேண்டும் என்பதுதான் அட்லஸுக்குக் கிடைத்த தண்டனை. பல பல வருடங்கள் அட்லஸ் சுமந்துகொண்டு இருந்தார்.

ஒருநாள் கிரேக்க வீரன் ‘ஹெர்குலிஸ்’ அட்லஸை சந்திக்க வந்தான். அவனுக்கு கிடைத்தற்கரிய தங்க ஆப்பிள்கள் வேண்டுமாயிருந்தது. அவை இருக்குமிடம் அட்லஸ் மட்டுமே அறிவார். அதனால் அட்லஸ் ஹெர்குலிஸிடம் தான் போய் அந்த ஆப்பிள்களை கொண்டு வருவதாகவும் அதுவரை பூமியை சுமக்கும்படியும் கேட்டுக் கொண்டார். அட்லஸைப் போலவே ஹெர்குலிஸும் பெரிய உருவத்துடன் இருந்ததால் பூமியை சுமக்க ஒப்புக்கொண்டான்.

பல காலம் கழித்து அட்லஸ் தங்க ஆப்பிள்களுடன் திரும்பி வந்தபோது, ஹெர்குலிஸ் பூமியை தூக்கமுடியாமல் வியர்த்து, முனகிக்கொண்டு இருந்தான். அப்போதுதான் அட்லஸுக்கு பூமியைத் தூக்கி சுமப்பது எத்தனை கடினமான காரியம் என்று புரிந்தது.

எதாவது யுக்தி செய்து ஹெர்குலிஸையே பூமியை சுமக்கும்படி செய்துவிட்டுத் தான் சுதந்திர மனிதனாக இருக்கலாம் என்ற அட்லஸின் எண்ணம் ஹெர்குலிஸுக்குத் தெரிந்து விடுகிறது. அட்லஸிடம், வலிக்கும் தனது தோளுக்கு திண்டு வைத்துக் கொண்டு பிறகு பூமியைத் தூக்கிப் பிடிப்பதாக சொல்லி அட்லஸிடமே திரும்ப பூமியை கொடுத்துவிட்டு ஹெர்குலிஸ் ஓடிவிடுகிறான்.

பாவம் அட்லஸ், தனது பாரத்தை காலங்காலமாக சுமந்துபடியே இருந்தார். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கல் மலையாக மாறிவிடுகிறார். வடமேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள மலைகள் ‘அட்லஸ் தி டைடன்’ என்றே அழைக்கப்படுகின்றன. இம்மலைகள் இன்றும் சுவர்க்கத்தை தூக்கிப் பிடித்திருப்பதாக நம்பப்படுகிறது.

அட்லஸ் வலிமைக்கும் உறுதிப்பாட்டுக்கும் அடையாளமாக கருதப்படுகிறார்.

எனது அட்லஸ் பற்றிய இன்னொரு கட்டுரையைப் படிக்க இங்கே ‘கிளிக்’ செய்யவும்.

பின் குறிப்பு: இந்தக் கட்டுரை ‘டெக்கான் ஹெரால்ட்’ பத்திரிகையுடன் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வரும் ‘ஓபன் சீசேம்’ என்ற சிறுவர் மலரில் இன்று வெளியான (ஸ்வப்னா தத்தா என்பவர் எழுதிய) கட்டுரையை அடி ஒற்றி எழுதியது.

‘இனிமேல் ‘ஓபன் சீசேம்’ வராது. இன்றைய இதழ் தான் கடைசி இதழ்’ என்று ஆசிரியர் அறிவித்து இருக்கிறார். இதைப் படித்து எனக்குள்  ஒரு நெருங்கிய நண்பனை இழக்கும் வருத்தம். இந்த இதழில் வெளியான கட்டுரைகளின் அடி ஒற்றி நான் நிறைய எழுதி இருக்கிறேன். இந்த ‘அட்லஸ்’ கட்டுரையை எழுதுவதன் மூலம் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்!