‘அச்சு பிச்சு…..’ அவார்ட்!

Image

எந்த ஒரு விருதானாலும் அதை நிறுவியவர் யார், பெறப்போகும் நபர் யார், பெறுவதற்கு என்ன தகுதி வேண்டும் என்று முதலில் தெரிய வேண்டும் இல்லையா?

இந்த அச்சு பிச்சு விருதை நிறுவியது: சாட்சாத் அடியேன் தான்!

பெறப் போகும் நபர் யார்? : இதுதான் இந்த விருதின் மிகப் பெரிய ஆச்சரியம்! பெறப் போகும் நபர் யார் என்று பெறுபவர்களுக்கும் தெரியாது; கொடுப்பவர்களுக்கும் தெரியாது! கடைசி நிமிடம் வரை சஸ்பென்ஸ் தான்!

சரி, இதைப் பெற என்ன தகுதி? : வேறென்ன தகுதி? விருதின் பெயரிலேயே இருக்கிறதே! அச்சுப்பிச்சு என்று சமய சந்தர்ப்பம் தெரியாமல் பேச வேண்டும். அவ்வளவு தான்!

நம் நாட்டின் மிக உயர்ந்த விருதுகள் போலத்தான் இந்த விருதும். என்ன, சில பல வித்தியாசங்கள்!

பத்மா விருதுகள் வாங்கினால் பத்திரிக்கைகளில் போட்டோவுடன் செய்தி வரும். குடியரசு தினத்தை ஒட்டி வழங்கப் படும் இவ்விருதுகள் முதலிலேயே அறிவிக்கப்பட்டுவிடும். ஜனாதிபதி அவர்கள் எல்லோர் முன்னிலையிலும் விருதுகளை வழங்குவார்.. நாடு முழுவதும் அவர்களைப் பாராட்டும்.

ஆனால் நான் கொடுக்கும் இந்த விருதுகள் யாருக்கு எப்போது கிடைக்கும் என்றே தெரியாது(!). யாருக்குக் கொடுக்கப் போகிறேன் என்று கடைசி நிமிடம் வரை எனக்கும் தெரியாது (!!) அதைவிட அதிசயம் என்ன தெரியுமோ? அதைப் பெற்றுக் கொண்டவர்களுக்குத் தெரியவே தெரியாது(!!!) ‘நீ சரியான அச்சுப்பிச்சு’ என்று யாரிடமாவது நேரடியாக சொல்ல முடியுமா? இன்னொரு சிறப்பு ஒருவரே எத்தனை முறை வேண்டுமானாலும் பெறலாம்.

இப்போது ஓரளவுக்கு  இந்த விருது பற்றிப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இந்த விருதை நான் நிறுவியிருந்தாலும், யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம். உலகளாவிய விருது இது. இந்தக் கட்டுரையைப் படிக்கும் அத்தனை பேருக்கும் இந்த உரிமை உண்டு! இதுவே இந்த விருதின் மற்றொரு சிறப்பு!

முதன்முதலாக இந்த விருது யாருக்குக் கிடைத்தது?

முதன்முதலாக இந்த விருதைப் பெற்ற பாக்கியசாலியும் அடியேன் தான். (அதனால்தானோ என்னவோ, ‘யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்று இப்போது எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்). இதைப் பெற்ற பின் தான் இதன் மகத்துவம் புரிந்து இதனை அதிகார பூர்வமான விருதாக அறிவித்து இப்போது மற்றவர்களுக்கும் இதை ஆசை ஆசையாய் வழங்கிக் கொண்டிருக்கிறேன்.

இதனைப் பலமுறை பெறும் பாக்கியம் எங்கள் பக்கத்தாத்து மாமிக்குத் தான்! ‘அச்சுபிச்சு மாமி’ (சுருக்கமாக AP மாமி) என்றே அவருக்குப் பெயர் வைத்து விட்டோம். (அந்த மாமிக்கு இது தெரியாது!)

சரி நான் எப்போது பெற்றேன் என்று சொல்லுகிறேன். நான் ஸ்கூலில் படித்துக்கொண்டிருந்த சமயம் அது. (மிகச் சின்ன வயதிலேயே விருது வாங்கியிருக்கேனாக்கும்!) எங்கள் சொந்தக்காரர் வீட்டுக் கல்யாணம். பாட்டுப் பாடச் சொன்னார்கள். உடனே ‘எடுத்து வுட்டேன் பாருங்கள் ஒரு பாட்டு!’. பாடி முடித்தவுடன் ‘பின்-டிராப்’ சைலன்ஸ்! ஓ, எல்லோரும் என் பாட்டு என்கிற  நாத வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

சிறிது நேரம் கழித்து என் மாமா என்னிடம் வந்து “குய்யோ முறையோன்னு ரொம்ப நன்னா பாடிட்டேயே! சரியான அச்சுபிச்சு” என்றார். என்ன சொல்கிறார் என்று யோசித்தேன். சட்டென்று எனக்குள் ஒரு பல்ப்! (ட்யூப் லைட்!)

நிஜமாகவே ரொம்ப அருமையான பாட்டுதான்; பைரவி ராகத்தில் முருகனைப் பற்றிய பாடல். ‘துதி செய்திடு மனமே – உந்தன் தொந்த வினைகள் சிந்திட நீ’ என்று தொடங்கும் பாடல்.

சரணத்தில் ‘காமமாதி குணங்கள் மாய, கருத்தை உருக்கும் பிணிகள் ஓய, கருதிக் கருதி ஐயோ வென்று கண்விழி நீர் பாய……..’ என்று வரும். ‘ச்சே! புதிதாக வாழ்க்கைத் தொடங்கும் இளம் தம்பதிகளுக்கு எப்படி இருந்திருக்கும்’ என்று மாமா வைததிலிருந்து என் தவறை உணர்ந்து கொண்டேன். மானசீகமாக மன்னிப்பும் கேட்டுக் கொண்டேன்.

சமயா சந்தர்ப்பம் தெரியாமல் பேச மட்டுமல்ல; பாடவும் கூடாது என்று ஒரு பாடம் கற்றேன் அன்று.

ஆகவே இந்தக் கட்டுரையை வாசிக்கும் வாசகர்களே! இந்த ஈடு இணையில்லாத விருதை ‘கொடுங்க, கொடுங்க, கொடுத்துக் கிட்டே இருங்க’, ‘கொடுங்க, வாங்குங்க கொடுத்து வாங்கி மகிழுங்க!’