சோஷியல்…. ஜெட்லாக்

வெளிநாடுகளில் இருப்பவர்கள் இந்தியா வரும்போது இரண்டு மூன்று நாட்கள் தூக்கம் வராமல் அல்லது வேளை கெட்ட வேளையில் தூக்கம் வந்து அவதிப் படுவார்கள். இதனை ஜெட்லாக் என்பார்கள். மேலே குறிப்பிட்ட ‘சோஷியல் ஜெட்லாக்’ கும் இதைப் போலத்தான்.

அலுவலகத்தில் நீண்ட நேரம் வேலை செய்வது, வேலையில் ஏற்படும் மன அழுத்தம், குடும்பத்தினருடன் போதுமான அளவு நேரம் ஒதுக்க முடியாததால் ஏற்படும் குற்ற உணர்ச்சி, மன உளைச்சல் இவைகளே இந்த நவ நாகரிக மனக் கோளாறுக்கு காரணம்.

“5 நாட்கள் கடுமையாக உழைப்பது; வாரக்கடைசியில் 2 நாட்கள் நன்றாக என்ஜாய் பண்ணுவது” என்ற நினைப்பு தவறு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

‘work hard; party harder’ என்ற மன நிலைதான் சோஷியல் ஜெட்லாக் உண்டாகக் காரணம். இளைஞர்கள், ( ஆண், பெண் இருபாலரும்) குறிப்பாக 22-29 வயதில் இருப்பவர்கள் அலுவலகத்தில் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். இதற்குக் காரணம் ‘எல்லாவற்றையும் மிகச் சிறப்பாக செய்யவேண்டும்’ (‘trying too hard’) என்ற இவர்களின் மன உந்துதல் தான். இதன் விளைவாக மூளைச் சோர்வுக்கு ஆளாகிறார்கள்.

இங்கு இரண்டு விதமான இளைஞர்களைக் காணலாம்:

முதல் வகை: அளவுக்கு அதிகமாக உழைத்துவிட்டு, வீட்டிற்கு வந்து நாற்காலியில் உட்கார்ந்து விடுவது. இது உங்களை ‘Couch Potato” ஆக்கிவிடும்.. உடல் எடை கூடும்; அழைப்பிதழ் அனுப்பாமலேயே  இதய நோய், மூட்டுக்களில் வலி எல்லாம் தேடி வரும். வீட்டில் இருப்பவர்களுடனும் பேசுவது இல்லை; வெளியில் போவதும் இல்லை. எத்தனை பேர் சுற்றி இருந்தாலும் தனிமையாக உணர்வது. இது ஆபத்தானது.

இரண்டாவது வகை: இவர்கள் எப்போதுமே எல்லை மீறுபவர்கள்; அலுவலகத்தில் வேலை செய்வது ஆகட்டும், நண்பர்களுடன் வெளியே போவது, வீட்டில் கொண்டாட்டம் எல்லாமே ‘சாரி, கொஞ்சம் ஓவர்’ தான்.

“டயர்ட் ஆக இருக்கிறீர்களா?”, என்று யாராவது தப்பித்தவறி கேட்டுவிட்டால் போச்சு, “யார் சொன்னது? ஒரு கப் காபி குடித்தால் ஒரு வாரம் வேலை செய்வேன்” என்பார்கள்.

இதுவும் தவறான போக்கு இளைஞனே! (இளம் யுவதியே!)

உடல் சோர்ந்து போகும்போது காபி குடிப்பது அல்லது புகை பிடிப்பது நிலைமையை இன்னும் மோசமாக்கும். வெறும் காபி மட்டும் சாப்பிடுவது மலச்சிக்கலை உண்டாக்கும்; பற்கள் பழுதடையும்.

கைநிறையக் காசு; வீட்டில் இல்லாத பொருட்கள் என்று எதுவும் இல்லை. ஆனால் இவர்களுக்கு அனுபவிக்க நேரமில்லை! என்ன வாழ்க்கை இது? விசித்திரமாக இல்லையா?

“40 வயது வரை நன்றாக (கடுமையாக என்று படிக்கவும்) உழைத்து விட்டு அப்புறம் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டியதுதான்….” என்று பல இளைஞர்கள் பேசுவதை இப்போதெல்லாம் அடிக்கடி கேட்க நேரிடுகிறது. ஆனால் அந்த 40 வயதை எட்டுவதற்குள், அவர்களது ஆரோக்கியம் 15 வருடங்களை இழந்து விடுகிறது; வாழ்க்கையை தொலைத்து விடுகிறோம் என்பதை இவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். அந்த அளவுக்கு ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டு எதையோ தேடி ஓடுகிறார்கள்.

வாழ்க்கை இவர்கள் நினைத்தபடி ஒரே நேர்க்கோட்டில் செல்லாது. இதை அவர்கள் புரிந்துகொள்ளும்போது – வேலைக்கும் தங்களது சொந்த வாழ்க்கைக்கும் சமாமான அளவு முக்கியத்துவம் கொடுத்து நேரம் ஒதுக்கி வாழ்க்கையை நடத்திச் செல்லும்போது – எல்லாவற்றிற்கும் நேரம் கிடைக்கும்.

சமீபத்தில் எனக்கு வந்த SMS இது:

ஒரு நாள் மனிதன் கடவுளிடம் கேட்டானாம்: “மனிதர்களிடம் எந்தக் குணம் உனக்கு ஆச்சரியத்தை உண்டுபண்ணுகிறது? எந்த குணம் வருத்தத்தைக் கொடுக்கிறது?” என்று.

கடவுள் சொன்னார்: “ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டு பணம் சம்பாதிக்கிறார்கள்; அப்படி சம்பாதித்த பணத்தை கெட்டுப் போன ஆரோக்கியத்தை சரி செய்ய பயன்படுத்துகிறார்கள். இது ஆச்சர்யம்.

நாளை என்பது இல்லைபோல இன்றே வாழத் துடிக்கிறார்கள். கடைசியில் வாழாமலேயே இறக்கிறார்கள். இது மிகவும் வருத்தத்தைக் கொடுக்கிறது.”

எதற்காக இந்தப் பரபரப்பு? நினைவிருக்கட்டும் நீங்கள் நிதானமாக விடும் ஒவ்வொரு மூச்சும் உங்கள் ஆயுளை கூட்டும்.

முன் உதாரணமாக இருக்க வேண்டாம்; மோசமான உதாரணமாக இருக்கக்கூடாது இல்லையா?

நான் சொல்வது புரிகிறதா, இளைஞர், இளைஞிகளே?

வெற்றிலை என்னும் பசும் தங்கம்

இது ஒரு இலை. நம் திருமணங்கள் இது இல்லாமல் ஆரம்பிக்காது; இது கொடுக்காமல் முடிவடையாது; விருந்துகளுக்குப் போனால் கடைசியில் இதை போட்டால்தான் முழு திருப்தி. பிரசவித்த பெண்ணை தினமும் இதை கட்டாயம் சாப்பிட சொல்லி வற்புறுத்துவார்கள். இந்த பச்சைத் தங்கம் இல்லாமல் எந்த விழாவுமே சோபிக்காது. பாக்கு, மஞ்சள் இவற்றுடன் இதுவும் ஒரு மங்கலமான பொருள். புரிந்து விட்டதா, நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்று? தாம்பூலம் இல்லாமல் ஏது பண்டிகை? சுப நாட்களில் ‘தாம்பூலம் வாங்கிக் கொள்ள வாருங்கள்’ என்று தானே அழைக்கிறோம்.

‘பான்’, ‘பான் கா பத்தர்’ என்றும் ஹிந்தி மொழியிலும், ‘வெத்தில’ என்று மலையாளத்திலும், ‘விளேதெலே’ என்று கர்நாடகாவிலும், குறிப்பிடப்படும் நம்மூர் வெற்றிலையை தான் பச்சைத் தங்கம் என்று குறிப்பிடுகிறேன். இதன் மருத்துவ குணத்தலேயே இது ‘பச்சைத் தங்கம்’ என்று போற்றப் படுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி தெற்கு ஆசியா முழுவதும் இதன் மருத்துவ குணம் தெரிந்து இதனை பயன்படுத்துகின்றனர்.

இது கொடி வகையைச் சேர்ந்தது. தரையில் படரும்; அல்லது பாக்கு மரத்தையோ, பனை மரத்தையோ சுற்றிப் படரும். இதைப்போல கொழு கொம்பு தேவைப்படும் போது மட்டுமே பற்றி படர நுண்ணிய வேர்கள் இந்தக் கொடியில் தோன்றும். வெற்றிலை மங்கலமான பொருளாகவும் பவித்ரமான பொருளாகவும் கொண்டாடப்படுகிறது.

சுண்ணாம்பு, பாக்கு முதலியவற்றுடன் வெற்றிலையைப் போடுவது ஜீரணத்திற்கு உதவுவதுடன், மிகச்சிறந்த கிருமி நாசினியாகவும், வாய்க்குப் புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது. சிலர் சுண்ணாம்பு என்று சொல்ல மாட்டார்கள்; மூணாது (அதாவது வெற்றிலையுடன் சேர்க்கும் மூன்றாவது பொருள்) என்பார்கள். வாயையும் உதட்டையும்  சிவக்க வைக்கும் இந்தக் கலவை ஆரோக்கியமான லிப் ஸ்டிக்! பற்கள் பழுப்புக் கலர் அடையாமல் இருக்க பல் துலக்குவது அவசியம். வெற்றிலையை வேறு வேறு மூலிகைகளுடன் சேர்த்துப் பல நோய்களுக்கும் மருந்தாகக் கொடுக்கலாம்.

வெற்றிலையை கொதிக்கும் நீரில் போட்டு வடிகட்டி அந்த நீருடன் மிளகு சேர்த்துக் குடித்தால் தொண்டைக் கட்டு விலகும்..

இரவு படுக்கப்போகும் முன் 2 தேக்கரண்டி வெற்றிலைச் சாறுடன் ஓமம் சேர்த்துக் குடித்தால் ஆர்த்ரைட்டிஸ் மற்றும் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

பிரசவித்தப் பெண் வெற்றிலை போடுவதால் பால் நன்றாக சுரப்பதுடன் பசி, தாகம் இவையும் அடங்கும்.

வெற்றிலையுடன் சுண்ணாம்பு சேர்வது எலும்புகளுக்கு உறுதி அளிக்கிறது. அந்தக்கால பாட்டிமார்கள் திடமாக இருந்தற்கு தினமும் வெற்றிலை போட்டதும் ஒரு காரணம்.

இரத்தக் காயங்களும், சிராய்ப்புகளும் குணமாக வெற்றிலையை நன்கு கசக்கிக் காயங்களின் மேல் வைத்து அதன் மேல் இன்னொரு வெற்றிலையை வைத்துக் கட்டுப் போட்டால்  இரண்டு நாட்களில் காயங்கள் மறையும்.

இரவு நேரத்தில் வெற்றிலையுடன் ஏலக்காய், லவங்கம், வாசனைப் பாக்கு சுண்ணாம்பு முதலியவை சேர்த்துப் போடுதல் பாலுணர்வை தூண்டும் என்பது காலம்காலமாய் இருந்து வரும் நம்பிக்கை.

புகையிலையுடன் வெற்றிலையைச் சேர்த்துப் போடுவதால் வாயில் புற்றுநோய் ஏற்படுகிறது. அதனால் புகையிலை இல்லாத வெற்றிலையை மட்டுமே தினமும் உண்ண வேண்டும்.

நாக்கு தடித்து, பேச்சு சரியாக வராது என்பதால் குழந்தைகள் வெற்றிலை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

நல்லெண்ணெயுடன் ஓமம், வெற்றிலையைச் (அல்லது வெற்றிலைக் காம்பு) சேர்த்துக் காய்ச்சி தலைக்கு தடவிக் குளித்தால் குளிர் காலத்தில் சளி பிடிக்காமல் இருக்கும்.

சின்னஞ்சிறு குழந்தைகள் இரண்டு மூன்று நாட்கள் மலம் கழிக்காமல் போனால் வெற்றிலை காம்பை விளக்கெண்ணெயில் தோய்த்து ஆசன வாயில் சொருகினால் மலம் வெளியே வந்து விடும்.

முக்கியமான ஒரு விஷயம்: வெற்றிலையை உண்ணும் போது நடு நரம்பை எடுத்து விடவேண்டும்.

அந்தக் காலத்தில் எல்லோர் வீட்டிலும் ‘வெற்றிலை செல்லம்’ என்று செல்லமாக அழைக்கப்படும் ஒரு வெற்றிலை பாக்கு பெட்டி கட்டாயம் இருக்கும். வெற்றிலை, பாக்கு, (அப்போதெல்லாம் சீவல்தான்; அல்லது கொட்டைப் பாக்கு – அதை வெட்ட பாக்கு வெட்டி – பாக்கு வெட்டிக்கும் இந்த ‘செல்லத்தில்’ இடம் இருக்கும்) மூணாது வைக்க என்று தனித்தனி அறைகளுடன் அழகாக இருக்கும் இந்தப் பெட்டி.

இப்போது யாருக்கும் பொருந்தி உட்கார்ந்து சாப்பிடவே பொழுதில்லை. வெற்றிலை எங்கே போடுவது?

கையேந்தி பவனில் சாப்பாடு; பக்கத்து பீடாக் கடையில் ‘கல்கத்தா மீட்டா பான்’; அவ்வளவுக்குத்தான் நேரம்!

இந்தக் கட்டுரை தமிழ் விக்கிபீடியாவில் வெளி இணைப்பாக இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பு: வெற்றிலை