செடிகொடிகள் பேசுகின்றன!

இங்கிலாந்து நாட்டு இளவரசர் திரு சார்லஸ் 1986 ஆம் ஆண்டு ஒரு தொலைக்காட்சி பேட்டியாளரிடம்,” நான் செடி கொடிகளுடன் பேச வந்தேன்; நாம் அவைகளுடன் பேசுவது மிக முக்கியம்; அவை நமக்கு பதிலளிக்கின்றன” என்று சொன்னாராம்.

அன்று அவர் சொன்னதை இன்று விஞ்ஞானிகள் உண்மை என்று கூறுகிறார்கள். காற்றுக்கு செடிகொடிகள் தலை அசைப்பதைப் பார்த்திருக்கிறோம், இல்லையா? நிஜத்தில் அவை பக்கத்தில் இருக்கும் செடி சொல்லுவதைக் கேட்டு தலை அசைப்பதுதான் அது! தங்களைச் சுற்றிலும் உண்டாகும் ஒலிகளுக்கு தகுந்தவாறு அசைவதுடன், ஒன்றுடன் ஒன்று மிகத் தீவிரமாக ‘க்ளிக்’ சத்தத்துடன் பேசவும் செய்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இளம் மக்காச்சோளச் செடிகளின் அருகே சக்திவாய்ந்த ஒலிபெருக்கிகளை வைத்துக் கேட்டதில் அவற்றின் வேர்களில் இருந்து ‘க்ளிக்’ சத்தம் வருவதை கண்டறிந்தனர். இந்தச் செடிகளின் வேர்களை நீரில் வைத்து, ‘க்ளிக்’ சத்தத்தை போலவே சத்தத்தை எழுப்பியபோது சத்தம் வரும் திசையை நோக்கி அவை வளர்ந்தன.

காற்றின் அசைவுக்கு செடிகொடிகள் தலை அசைப்பது போலத் தெரிந்தாலும், ஒன்றுக்கொன்று தொடர்ச்சியாக அரட்டை அடிக்கின்றவாம்! இந்த வருட தொடக்கத்தில் நடந்த ஆய்வில் முட்டைக்கோஸ் செடிகள் தங்களுக்கு ஆபத்து (புழு பூச்சிகள், அல்லது கத்தரிக்கோல்) அருகில் வரும்போது ஒருவித ஆவியாகக் கூடிய வாயுவை வெளிப்படுத்தி மற்ற செடிகளை எச்சரிக்கை செய்கின்றன  என்று தெரிய வந்திருக்கிறது.

ஆனால் இப்போதுதான் முதல்முறையாக செடிகொடிகள் அவைகளுக்கென்று சொந்தமான மொழியில், மனிதக் காதுகளுக்கு கேட்காத சத்தத்தில் பேசுகின்றன என்பதற்கு ஒரு உறுதியான சான்று கிடைத்திருக்கிறது.

“இந்த சின்னச்சின்ன ‘க்ளிக்’ சத்தங்கள் வேர்களுக்கு இடையேயான தகவல் தொடர்பாக இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன” என்று பிரிஸ்டல் உயிரியல் விஞ்ஞானி திரு டேனியல் ராபர்ட் கூறுகிறார்.

இந்த ஆய்வு ட்ரெண்ட்ஸ் இன் பிளான்ட் (Trends in Plants) என்ற இதழில் வெளி வந்துள்ளது.