தங்க மேனிக்குத் தக்காளி!

தினசரி மேக்-அப்புக்கு எக்கச்சக்கமாக செலவு செய்பவர்களுக்கு ஒரு நற்செய்தி. யானை விலை குதிரை விலை கொடுத்து இனிமேல் சருமப் பாதுகாப்புக் க்ரீம் வாங்க வேண்டாம்; தக்காளியை தினமும் சாப்பிட்டு வாருங்கள். சருமம் இளமையாக இருப்பதுடன், சூரிய ஒளியினால் ஏற்படும் தாக்குதல்களிலிருந்தும் சருமத்தை காக்கிறது தக்காளி.

தக்காளிக் கூழை சாப்பிடுவதால் சூரிய ஒளியால் சருமம் வயதானதைப் போல காணப்படுவதைத் தடுக்கலாம் என்று நியுகேசில் பல்கலைக்கழக ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.

தக்காளிக்கு அதன் சிவப்பு நிறத்தை கொடுக்கும் லைகொபேன் என்னும் இயற்கை நிறமி தான் நம் சருமம் வயதாவதையும் தாமதப்படுத்துகிறது. லைகொபேன் சமைத்த தக்காளியிலும், கெச்சப், சூப், ஜூஸ் ஆகிய தக்காளியை வைத்து செய்யப்படும் பொருட்களிலும் அதிக அளவில் காணப் படுகிறது.

இந்த ஆராய்ச்சிக்காக 20 (21 வயதிலிருந்து 47 வயதுள்ள) பெண்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர். பாதிப் பேருக்கு தினமும் 5 மேசைக்கரண்டி தக்காளிக் கூழும் (55gms) 10g ஆலிவ் எண்ணையும் 12 வாரங்களுக்கு கொடுக்கப் பட்டது. மற்ற பெண்களுக்கு வெறும் ஆலிவ் எண்ணெய் மட்டும் கொடுக்கப்பட்டது.

சோதனைக்கு முன்னும் பின்னும் எல்லா பெண்களும் சூரியனின் புற ஊதாக் கதிர்களின் தாக்குதலுக்கு உட்படுத்தப் பட்டனர். அவர்களது சருமத்தின் மாதிரிகளும் எடுக்கப்பட்டன.

 

 

இரண்டு குழுவிலுள்ள பெண்களின் சருமமும் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. தக்காளி சாப்பிட்டவர்களின் சருமத்தில்  சூரியனின் புற ஊதக் கதிர்களின் தாக்குதலிலிருந்து  காத்துக்கொள்ளும் சக்தி 33% அதிகரித்திருப்பது தெரிய வந்தது. ப்ரோ கொலாஜென் (procollagen) என்ற சருமத்தின் கட்டமைப்புக்கு உதவும் மூலக்கூறுகளின் அளவும் அதிகரித்து இருப்பது தெரிய வந்தது.

சரும வல்லுநர் ப்ரொபசர் திரு பிர்ச்-மாசின் கூறுகிறார்: “தக்காளி சாப்பிடுவதால் கூடுதலான சருமப் பாதுகாப்பு கிடைக்கிறது”. தக்காளி நமது சருமத்தில் உள்ள மைட்டோகாண்ட்ரியல் டி என் ஏ-வைப் பாதுகாக்கிறது. இந்த டி என் ஏ தான் நமது சருமம் வயதாவதற்கு காரணம் என்று நம்பப் படுகிறது. தக்காளியின் இந்தப் பாதுகாப்பு சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதையும் தாமதப் படுத்துகிறது.

பதப்படுத்தப்பட்ட தக்காளியினால் செய்யப்படும் கெச்சப், சூப், ஜூஸ் முதலியவற்றில் லைகோபென் அதிக அளவில் இருக்கிறது; இது நம் உடலால் மிக எளிதில் கிரகித்துக் கொள்ளப் படுகிறது.

லைகோபென் என்னும் அற்புத இரசாயனப் பொருள் :

சருமத்தில் சுருக்கம் விழுவதை குறைக்கிறது;

ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிவு நோய், நுரையீரல், மார்பகம் மற்றும் ப்ரோஸ்டேட் (Prostate) புற்றுநோய் ஆகியவை வராமல் காப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அளவுக்குமீறி லைகோபென் உட்கொள்ளுவதும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்; அமெரிக்காவில் ஒரு பெண்மணி எக்கச்சக்கமாக தக்காளி ஜூஸ் குடித்ததால் அவரது சருமம் ஆரஞ்சு நிறமாக மாறிவிட்டது.

லைகோபென்னின் மூலக்கூறுகள் நீரில் கரைவதில்லை அதனால் தக்காளிக் கரை துணியிலோ, சமையலறை தரையிலோ பட்டால் எளிதில் அகற்ற முடியாது.

சீனாவில் கிடைக்கும் Gac என்னும் ஒருவகை இனிப்பு பூசணி வகையில் அதிகபட்ச லைகோபென் (தக்காளியைவிட 70% அதிகம்) இருக்கிறது. பப்பாளியிலும், rosehips இலும் கூட லைகோபென் இருக்கிறது.

பச்சை தக்காளியை விட சமைத்து உண்ணுவது அதிக பலன் அளிக்கும்.

லைகோபென் சூடக்கப்படும் போது அதன் கட்டமைப்பு மாறுகிறது; அதனால் இரத்த ஓட்டத்தில் எளிதாக எடுத்துச் செல்ல படுகிறது.

ஆகவே இதனால் அறியப்படுவது என்னவென்றால், தக்காளியை அதிகம் சாப்பிட்டு மேக்கப் செலவைக் குறைக்கலாம்!