நாட்காட்டியின் சரித்திரம் – 2

ரஷ்யன் நாட்காட்டி (Slavic-Aryan)

ஆரம்ப காலத்தில் ரஷ்யர்கள் ஜூலியன் நாட்காட்டியைத்தான் பயன்படுத்தி வந்தனர். 1918 ஆம் ஆண்டிலிருந்து க்ரிகோரியன் நாட்காட்டியை பயன்படுத்த ஆரம்பித்த போதிலும், ரஷ்யாவின் ஆர்தொடக்ஸ் சர்ச் தொடர்ந்து ஜூலியன் நாட்காட்டியையே பயன்படுத்தி வருகிறது. இப்போதும் கூட ரஷ்யன் நாட்காட்டி சிறிது மாறுபட்டே இருந்து வருகிறது.

தி காண்டர்பரி அஸ்ட்ரோலாப் குவாட்ரன்ட் (The Canterbury Astrolabe Quadrant):

2005 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் கென்ட் மாகாண காண்டர்பரி என்ற இடத்தில் ஒரு உணவு விடுதியில் கண்டெடுக்கப்பட்ட இந்த அஸ்ட்ரோலாப் மிக அரிய பொருள். சூரியன் மற்றும் நட்சத்திரங்களின் அமைப்பைக் கொண்டு இதன் உதவியுடன் நேரத்தையும் நாம் இருக்கும் இடத்தின் பூகோள தொலைவையும் கணிக்கலாம். பொதுவாக இந்த மாதிரியான பொருட்கள் ஒரே குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக உபயோகத்தில் இருக்கும்; அல்லது குடும்பத்தின் உடமைப் பொருளாக இருக்கும்; புதைபொருள் அகழ்வாய்வின் போது இது கிடைத்திருப்பது யாரோ ஒரு பிரயாணி காண்டர்பரி பகுதிக்கு சுற்றுலா வந்திருந்தபோது இதனை இங்கு தொலைத்து இருக்கலாம் என்று எண்ண வைக்கிறது.

இந்திய நாட்காட்டி அல்லது பஞ்சாங்கம்:

நமது வானியல் நாட்காட்டி பஞ்சாங்கம் என்று அழைக்கப் படுகிறது. ஐந்து அங்கங்களை கொண்டிருப்பதால் பஞ்ச அங்கம் எனபடுகிறது. இந்தியாவின் சில பகுதிகளில் சந்திரனின் (சந்திரமான பஞ்சாங்கம்) சஞ்சாரத்தைக் கொண்டும், வேறு சில இடங்களில் சூரியனின் சஞ்சாரத்தைக் (சௌரமான பஞ்சாங்கம்) கொண்டும் பஞ்சாங்கங்கள் கணிக்கப்படுகிறன. ஒரு நாள் என்பது சூரிய உதயத்தில் ஆரம்பித்து அடுத்த சூரிய உதயத்தில் முடிவது. ஒரு மாதம் என்பது சந்திரனின் ஒரு சுழற்சியில் ஆரம்பித்து (அதாவது அமாவாசையில் இருந்து) அடுத்த சந்திர சுழற்சியில் முடியும். ஒரு மாதத்திற்கு 28 நாட்கள். ஒரு வருடம் என்பது ஒரு பருவ காலத்தில் தொடங்கி அதே பருவம் திரும்ப ஆரம்பிக்கும் வரை. ஒரு சந்திர வருடம் 12 மாதங்களும் 254 சூரிய நாட்களும் கொண்டது. சில சமயங்களில் சந்திர வருடத்தில் சூரிய வருடத்தைக் காட்டிலும் 12 நாட்கள் குறைவாக வரும். அதை ஈடுகட்ட 5 வருடங்களுக்கு ஒரு முறை ‘அதிகம்’ என்று ஒரு மாதம் சேர்க்கப்படும். ஒவ்வொரு மாதமும் சந்திர சுழற்சி 2 ஏற்படும். அதாவது அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை; திரும்பவும் பௌர்ணமியில் இருந்து அமாவாசை வரை. ஒரு வருடத்திற்கு 4 பருவகாலங்கள். இவைகள் ‘ருதுக்கள்’ என்று அழைக்கப் பட்டன.

சௌரமான முறை பஞ்சாங்கம் சூரியனின் சஞ்சாரத்தைக் கொண்டு கணிக்கப்படுகிறது. இதில் இரண்டு முக்கிய பிரிவுகள் உள்ளன: ஸௌர வருஷ முறை; சாயன வருஷ முறை.

ஸௌர வருஷ முறையில் சூரியனின் சுழற்சி மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரத்தில் ஆரம்பித்து, மீன ராசியில் கடைசி நட்சத்திரமான ரேவதியில் முடியும். இந்த இடைப்பட்ட காலம் வருடம் எனப்படுகிறது. ஒரு வருடம் என்பது 365 நாட்கள், 15 நாடிகள், 23 வினாடிகள் ஆகும். தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ஸௌர வருஷ முறையை பின்பற்றி வருகின்றன.

கேரளாவில் கொல்லம் ஆண்டு சாயன வருஷ முறையில் அமைந்துள்ளது. சூரியன் மேஷ விஷுவில் பிரவேசித்து திருமா மேஷ விஷுவை வந்தடையும் காலம் சாயன வருஷம். இதில் 365 நாட்கள், 14நாடிகள், 32 வினாடிகள் உள்ளன.

சந்திரமான முறை:

இது சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இந்த முறையில் ஸௌரமான வருடப்பிறப்புக்கு முன் வரும் பூர்வபக்ஷ பிரதமையில் வருடம் ஆரம்பித்து, அடுத்த ஸௌரமான வருடப்பிறப்புக்கு முன் வரும் அமாவாசையில் முடிகிறது. ஒரு வருடத்திற்கு 354 நாட்கள். கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய இடங்களில் இந்த முறை பஞ்சாங்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.

பின் குறிப்பு: இப்போதெல்லாம் தினசரி தேதி கிழிக்கும் நாட்காட்டியில் பஞ்சாங்கத்தில் இருக்கும் அத்தனை குறிப்புகளும் வந்து விடுவதால் திருமணம் முதலிய சுப காரியங்கள் தவிர மற்ற விஷயங்களுக்கு பஞ்சாங்கம் பார்ப்பவர்கள் குறைந்து விட்டார்கள் என்று தோன்றுகிறது