உலர்ந்த திராட்சை


பள்ளி முடிந்தவுடன் மாலை வீடு திரும்பும் குழந்தைகளுக்கு என்ன சாப்பிடக் கொடுப்பது என்பது பல தாய்மார்களின் கவலை. அப்போது அவர்களுக்கு நொறுக்குத்தீனிகள் தான் வேண்டும். நொறுக்குத்தீனிகளில் உள்ள அதிகக் கலோரிகள் அவர்களது எடையை அதிகரிக்கக்கூடும். என்ன செய்வது? இதோ அதற்கு ஒரு நல்ல தீர்வு:

பள்ளிக்கூடம் முடிந்து மாலை வீடு திரும்பும் குழந்தைகளுக்கு, உலர்ந்த திராட்சைப் பழங்களைக் கொடுக்கலாம். இதனால் நொறுக்குத்தீனிகள் மூலம் குழந்தைகள் அதிக கலோரிகள் உட்கொள்ளுவது குறைகிறது; மேலும் சீக்கிரமே வயிறு நிரம்பிய உணர்வும் அவர்களுக்கு கிடைக்கிறது.

டொரோண்டோ பல்கலைக்கழகம் சாதாரண எடை உள்ள 8 முதல் 11 வயது சிறுவர் சிறுமிகளை வைத்து 3 மாதங்கள் நடத்திய ஒரு ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

சிறுவர் சிறுமியர்களுக்கு தினமும் திராட்சைப் பழங்கள், உலர்ந்த திராட்சை, மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ், சாக்லேட் சிப் குக்கீஸ் என வித விதமான நொறுக்குத்தீனிகள் அவர்களது வயிறு நிரம்பும் வரை கொடுக்கப்பட்டன.

இதை தவிர காலை சிற்றுண்டி, மதிய உணவு ஆகியவையும் கொடுக்கப் பட்டன. நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பும், சாப்பிட்டப்பின் 15 நிமிடங்களுக்கு பிறகும் அவர்களது பசியின் அளவு கணக்கிடப்பட்டது.

உலர்ந்த திராட்சையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, திராட்சைப் பழங்கள் 56%, உருளைக்கிழங்கு சிப்ஸ் 70%, சாக்லேட் சிப் குக்கீஸ் 108% அதிகக் கலோரி கொண்டவை. எல்லா நொறுக்குத்தீனிகளும் பசியைக் குறைத்த போதும், உலர்ந்த திராட்சை பசியைக் குறைத்ததுடன் மேலும் மேலும் சாப்பிட வேண்டும் என்கிற உணர்வைக் கணிசமாகக் குறைத்தது.

ஆகவே தாய்மார்களே! உங்கள் சமையலறையில் இனி உலர்ந்த திராட்சை அதிக அளவில் இருக்கட்டும், சரியா?