மெல்லிய உடல் வேண்டுமா?

 

உடல் இளைக்க உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு இந்தக் கட்டுரை உற்சாகத்தைக் கொடுக்கும்.

காலை சிற்றுண்டியுடன் ஏதாவது ஒரு இனிப்பு சாப்பிடுவது எடையைக் குறைக்க செய்வதுடன் இழந்த எடை மறுபடி ஏறாமலிருக்கவும் உதவுகிறது என்று ஒரு ஆய்வு சொல்லுகிறது.

இதை நிரூபிக்க விஞ்ஞானிகள் சர்க்கரை நோய் இல்லாத, ஆனால் உடற்பருமனுள்ள 200 பேர்களைத் தேர்ந்தெடுத்தனர். இவர்கள் இரண்டு குழு வாகப் பிரிக்கப்பட்டனர்.

இவர்களுக்காக இரண்டு வகையான குறைந்த கலோரி கொண்ட உணவுகள் (ஆண்களுக்கு 1600 கலோரிகள், பெண்களுக்கு 1400 கலோரிகள்) தயாரிக்கப்பட்டன. ஒரு வகை உணவு பெரிய அளவிலான காலை சிற்றுண்டி கூடவே ஒரு இனிப்பு (டோனட் (doughnut) போன்ற இனிப்பு வகை ) இன்னொரு வகை பெரிய அளவிலான மதிய சாப்பாடு.

ஒரு குழுவுக்கு இனிப்புடன் கூடிய  காலை சிற்றுண்டி கொடுக்கப்பட்டது. மற்றொரு குழுவுக்கு  மதிய சாப்பாடு கொடுக்கப் பட்டது.

மாவுச்சத்து, புரதச்சத்து நிறைந்த 600 கலோரிகள் கொண்ட சிற்றுண்டியை சாப்பிட்டு வந்தவர்கள் தங்களது உணவுக் கட்டுப்பாட்டை மீறாமல் இருந்தார்கள். எட்டு மாதங்கள் நடந்த இந்த ஆய்வின் போது இரண்டு குழுவில் இருந்தவர்களும் 33 பவுண்ட்கள் குறைந்தனர். கடைசி 4 மாதங்களில் இனிப்புடன் கூடிய சிற்றுண்டி சாப்பிடவர்கள் மேலும் 15 பவுண்ட் எடை குறைந்தனர்.

“எடை குறைப்பதற்கான உணவு எடையை மட்டும் குறைக்காமல் பசியையும், எப்போதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசையையும் குறைப்பதாக இருக்க  வேண்டும். அப்போதுதான் குறைந்த எடை மீண்டும் ஏறாமலிருக்கும்” என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இரண்டு குழுவினருக்கும் நடந்த இரத்தப் பரிசோதனையில் இனிப்புடன் கூடிய சிற்றுண்டியை சாப்பிட்டவர்களுக்கு ‘பசி ஹார்மோன்’ க்ரேலின் (ghrelin) 45% குறைவாகவும்,  மதிய சாப்பாடு சாப்பிட்டவர்களுக்கு 30%  குறைவாகவும் சுரப்பது  தெரியவந்தது.

எடை குறைய வேளை தவறாமல் சாப்பிடுவதும், சத்துப்பொருள்கள் சரியான விகிதத்தில் அடங்கிய உணவை சாப்பிடுவதும் மிகவும் அவசியம். இனிப்புடன் கூடிய சிற்றுண்டியில் இருந்த அதிக புரதச்சத்து பசியைக் குறைக்க உதவியது. மாவுச்சத்து, வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்தது. இனிப்பு, கொழுப்புள்ள உணவு சாப்பிடவேண்டும் என்ற அவாவைக் குறைத்தது என்று இந்த ஆராய்ச்சியின் முடிவு பற்றி விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

இங்கு என் சொந்த அனுபவம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். என் அம்மாவிடம் ஒரு வினோதமான பழக்கம் உண்டு. காலை உணவு சாப்பிட்டபின் கல்கண்டு ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளுவார். ஏன் என்று கேட்டால் அப்போதுதான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும் என்பார். அம்மா காலை சிற்றுண்டி சாப்பிட மாட்டார். காலை 10½ மணி அளவில் சாப்பாடு சாப்பிட்டு விடுவார்.

மேற்சொன்ன ஆராய்ச்சி பற்றிப் படித்தவுடன் என் அம்மாவின் மெல்லிய உடல்வாகிற்கு காரணம் புரிந்தாற்போல் இருக்கிறது.

தினசரி நடைப்பயிற்சி மார்பகப் புற்று நோய் வராமல் தடுக்கிறது


மார்பகப்புற்று நோய் வராமல் தடுக்க பெண்களுக்கு தினமும் 90 நிமிட உடற்பயிற்சி தேவை என்கிறார்கள் விஞ்ஞானிகள். இப்படி உடற்பயிற்சி செய்வது மார்பகப்புற்று நோய் வரும் வாய்ப்பை 30% வரைக் குறைக்கிறது என்று சொல்லுகிறார்கள்.

முன்பெல்லாம் 40 – 50 வயதான பெண்களுக்குத் தான் மார்பகப்புற்று வரும் என்ற நிலை இருந்தது. இப்போது மிகச்சிறிய வயதிலேயே பெண்கள் இந்நோயினால் பாதிக்கப் படுகின்றனர்.

கான்சர் ரிசர்ச், யு. கே. ஆய்வின்படி பிரிட்டனில் எட்டு பெண்களில் ஒருவருக்கு அவரது வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் மார்பகப்புற்று நோய் வருகிறது. பிரிட்டனில் ஒரு வருடத்திற்கு 48,000 பெண்கள் புதிதாக இப்புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் சுமார் 11,500 பேர்கள் இறக்கின்றனர்.

சற்று வயதான பெண்களுக்கு உடற்பருமனால் இந்நோய் வருகிறது. புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை  விட உடற் பருமன் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

ஒரு வாரத்திற்கு 10 மணி நேர மிதமான உடற்பயிற்சி –  வீட்டு வேலைகளையும் சேர்த்து – செய்வது பெண்களில் எல்லா வயதினருக்கும் இந்த நோய் வரமால் தடுக்க உதவுகிறது.

உடற்பயிற்சி செய்யும் பெண்களுக்கு மார்பகப்புற்று நோய் வருவது சற்றுக் குறைவு. உடலுழைப்பு அதிகம் இருப்பதால் கொழுப்புத் திசுக்கள் உருவாவது தடுக்கப் படுகிறது. கொழுப்புத் திசுக்கள் தான் புற்றுநோய் கட்டிகளாக மாறுகிறது. இந்த திசுக்கள் ஆஸ்ட்ரோஜென், டெஸ்டோஸ்டேரன் ஆகிய ஹார்மோன்களை சுரக்க செய்கின்றன இவைதான் புற்றுநோய் கட்டிகள் வளரக் காரணம். உடற்பயிற்சி கொழுப்புத் திசுக்கள் உருவாவதைத் தடுக்கின்றன.

உடற்பயிற்சி செய்வதற்காக பெண்கள் ‘ஜிம்’ போக வேண்டிய அவசிய இல்லை. பெண்கள் மாரத்தான் ஒடுபவராகவோ, ட்ரெட்மில்லில் ‘ஜாக்’ செய்பவராகவோ இருக்கத் தேவை இல்லை. நடைப் பயிற்சி, வீட்டு வேலை அல்லது சைக்கிள் ஓட்டுதல் ஆகியவை போதும்.

உடலுழைப்புடன் கூடவே தங்களது எடை கூடாமலும் பெண்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

ஆகவே பெண்களே, நடங்க, நடங்க, நடந்துகிட்டே இருங்க. மார்பகப்புற்று நோயிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்க!

மேலும் படிக்க: மார்பகப் புற்றுநோய்

காப்பி பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி

இருதயத்தை ஆரோக்கியமாக வைக்க தினமும் இரண்டு கோப்பை காப்பி சாப்பிடுவது நல்லது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இதனால் இதய செயலிழப்பு (heart failure) ஏற்படுவது குறைகிறது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

வருடந்தோறும் இதய செயலிழப்பின் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை புற்றுநோயால் இறப்பவர்களைக் காட்டிலும் அதிகம். சமீபத்திய ஆராய்ச்சி தினமும் மிதமான அளவில் காப்பி குடிப்பது இதய நோய்களினால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கிறது என்றும் இரண்டு கோப்பைக்கு மேல் அதிகமாக காப்பி குடிப்பது நல்லதல்ல என்றும் கூறுகிறது.

ஏற்கனவே செய்யப்பட்ட 5 ஆய்வுகளின் படியும் தினமும் ஒன்று அல்லது இரண்டு கோப்பை காப்பி குடிப்பவர்கள், காப்பி குடிக்காதவர்கள், அல்லது அதிகம் குடிப்பவர்களைக் காட்டிலும் 11% குறைந்த அபாயத்தில் இருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது.

மாரடைப்பு நோயிலிருந்து மீண்டவர்களும் காப்பி குடிப்பதால் ஆரோக்கியமான இதயம் உடையவர்களுக்கு கிடைக்கும் நல்ல பலனை அடைகிறார்கள்.

மாரடைப்பினால் அல்லது வேறு இதய நோயினால் இதயம் பலவீனமாகி நம் உடலுக்கு வேண்டிய இரத்தத்தை அனுப்ப முடியாத நிலையை இதய செயலிழப்பு என்று சொல்லுகிறோம்.

காப்பி குடிப்பது எந்த விதத்தில் இதயத்திற்கு நல்லது செய்கிறது என்பதைப்பற்றி சரியாக சொல்ல முடியாதபோதும், காப்பி குடிப்பது உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இவை வருவதைக் குறைக்கிறது. இதயம் செயலிழக்க இவ்விரு நோய்களும் முக்கியக் காரணங்கள்.

மனிதர்கள் நீண்ட நாள் வாழவும் காப்பி உதவுகிறது என்று இன்னொரு ஆய்வு கூறுகிறது.

காப்பி குடிப்பது இதய நோய், சுவாச நோய், பக்கவாதம், சர்க்கரை நோய், காயங்கள், விபத்துக்கள் சர்க்கரை நோய், தொற்று நோய்கள் முதலிய பல நோய்களினால் இறப்பு ஏற்படுவதைக் குறைக்கிறது.

பலருக்கு காப்பி குடிப்பது அவர்களின் இரத்தத்தில் பரம்பரையாக வந்திருக்கும். காப்பிக்கு அடிமையாக இருக்கும் இவர்கள் அதிக காப்பி குடிப்பது இதய நோயைத் தடுக்க உதவும்.

யாரங்கே! கொண்டு வாருங்கள் ஒரு கோப்பை காப்பி!

60 வயதினிலும் வாழ்க்கை இனிக்க……


ஆரோக்கியக் குறைவாலும், மன அமைதி இல்லாமையாலும் நம்மில் பலருக்கு 60 வயதுக்கு மேல் வாழ்க்கை என்பது இறக்கி வைக்க முடியாத ஒரு பெரும் பாரமாக தோன்றும். என்ன வாழ்க்கை என்ற அலுப்பு தலை காட்டும்.

 

இழந்துபோன முக்கியத்துவத்தை நினைத்து சிலர் வருத்தப்படுவார்கள். பெண்கள் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி தாங்களாகவே முடிவு எடுக்கும் சூழ்நிலைக்கு வந்திருப்பார்கள். இதைச் சில அப்பாக்களால் தாங்க முடியாது. அம்மாக்களுக்கோ மாட்டுப்பெண் வந்து பொறுப்பு எடுத்துக்கொண்டு தன் பதவியை பறித்துக்கொண்டு விட்டதாக கோவம் இருக்கும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்க்கை எப்படி இனிக்கும் என்கிறீர்களா? கட்டாயம் இனிக்கும் சில விஷயங்களில் கவனம் செலுத்தினால்.

முதலில் ஒரு விஷயம் நினைவில் இருக்க வேண்டும். வயதாவதைத் தடுக்க முடியாது. அதனால் வரும் சில சில உபத்திரவங்களையும் தடுக்க முடியாது. இவற்றால் நம் மனது பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளலாம்; இது நம்மால் நிச்சயம் முடியும்.

நம் மனதை எது பாதிக்கும்? எதிர்பார்ப்பு: எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். இந்த எதிர்பார்ப்பு உங்களுக்கு துக்கத்தை கொடுக்கும். தூக்கத்தை கெடுக்கும்.

பிறரது குற்றங்களை மறக்கவும், மன்னிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள். எப்போதும் யாரையாவது, எதற்காகவாவது குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பது பிறரை உங்களிடமிருந்து தூர விரட்டும். தப்பு செய்யாதவர்கள் யார்?

‘சும்மா’ இருக்காதீர்கள்: எப்போதும் மனதையும் உடலையும் எதாவது ஒரு வேலையில் ஈடுபடுத்துங்கள். சும்மா இருக்கும் மனமும் உடலும் சைத்தானின் கூடாரம் என்பது நினைவிருக்கட்டும். சிறு வயதுப்  பொழுதுபோக்கை இப்போது தொடரலாம். பாட்டுப் பாடுவது, தையல், கை வேலை என்று ஏதாவது செய்து கொண்டே இருங்கள். இதெல்லாம் பெண்கள் வேலை. ஆண்கள் என்ன செய்ய?

ஆடவர்களுக்கு மிக அருமையான பொழுபோக்கு இருக்கிறது. ஆங்கில செய்தித்தாள் அல்லது தமிழ் தினப் பத்திரிகையை ஒரு வரி விடாமல் படிக்கிறீர்கள், இல்லையா? ஆசிரியருக்கு கடிதம் எழுதலாம்;

எல்லா ஆங்கிலப் பத்திரிகையிலும் தலையங்கம் வெளியாகும் பக்கத்தில் ‘மிடில்’ (middle) என்று அரைப் பக்கத்திற்கு ஓர் சிறிய பதிவு வரும். மிகச் சிறப்பாக இருக்கும். அதற்கு உங்களின் அனுபவம், பிறரது அநுபவத்தில் நீங்கள் கற்ற பாடம், நகைச்சுவை நிகழ்ச்சிகள், மனதை உருக்கும் செய்திகள் என்ற பலவற்றையும் எழுதலாம்.

கொஞ்சம் கணணி அறிவு இருந்தால் போதும்; வலைப்பதிவு தொடங்கலாம். உங்கள் எழுத்துக்களை படிக்க உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். நான் எதோ விளையாட்டுக்கு சொல்லுகிறேன் என்று நினைக்காதீர்கள். எழுதத் துவங்குங்கள்; அப்புறம் நீங்களே அசந்து போகும் அளவு ‘விசிறிகள்’, நண்பர்கள் கிடைத்து விடுவார்கள்.

பெண்மணிகளும் எழுதலாம். சமையல் குறிப்பிலிருந்து, சிறுகதை வரை, கோலத்தில் இருந்து பண்டிகைகளை கோலாகலமாகக் கொண்டாடுவது வரை எழுதித் தள்ளலாம்.

அடுத்தது உங்கள் ஆரோக்கியத்திற்கு போதுமான கவனம் கொடுங்கள். எல்லோருக்குமே ஆரோக்கியம் மிக மிக அவசியம். வேலையில் இருக்கும்போதே ஆரோக்கியக் காப்பிடுகளில் முதலீடு செய்வது இன்றியமையாதது. வேளாவேளைக்கு மருந்து சாப்பிடத் தவற வேண்டாம். வருடத்துகொரு முறையோ அல்லது சரியான இடைவெளியில் பரிசோதனைகள் செய்து கொள்ளவும். மருந்துகள் சாப்பிடுவதோ எத்தனை முக்கியமோ இப்பரிசோதனைகளும் அவ்வளவே முக்கியம்.

வயதானவர்களுக்கும் உடற்பயிற்சி மிக அவசியம். காலை மாலை இரண்டு வேளையும் ‘விறுவிறு’ நடை கட்டாயத் தேவை. கணவன், மனைவி இரண்டு பேரும் சேர்ந்து போவது நல்ல உற்சாகத்தைக் கொடுக்கும். ஒருவருக்கு ஒருவர் துணையாகவும் இருக்கும்.

உடற்பயிற்சியைப் போலவே உணவுக் கட்டுப்பாடும் வேண்டும். வீட்டுச் சாப்பாடு நல்லது. எப்போதாவது ஒருமுறை வெளியில் போய் சாப்பிடுவது தப்பில்லை.

சேமிப்பு மிக அவசியம்: ஓய்வு பெற்றபின் கிடைத்த பணத்தை நல்ல முறையில் முதலீடு செய்யுங்கள். அநாவசியச் செலவுகளைக் குறையுங்கள். அதே சமயம் கருமித்தனம் வேண்டாம்.

இறை நம்பிக்கை உள்ளவர்கள் கோவில்களுக்கு யாத்திரை போகலாம். ஒரு குழுவுடன் போவது மாறுதலாகவும், பல புதிய நண்பர்களையும் ஏற்படுத்தும். இல்லையானால் வருடத்திற்கு ஒருமுறைநண்பர்களுடன் சுற்றுலாத்தலங்களுக்குப் போகலாம். இங்கு அவசியம் நினைவில் கொள்ள வேண்டியது: கைபேசியை எடுத்துச் செல்லுங்கள். தினமும் ஒருமுறை நீங்கள் இருக்குமிடம், உங்கள் ஆரோக்கியம் பற்றி உங்கள் பெண்ணுக்கோ, பிள்ளைக்கோ தெரிவியுங்கள்.

 

மனத் திருப்தியுடன் வாழுங்கள். பழையவற்றை, நடந்துபோன கசப்பான விஷயங்களை திரும்பத் திரும்ப பேசி ஆறிப்போன புண்களை கீறி விட்டுக் கொள்ளாதீர்கள். இது உங்கள் மனதை நஞ்சாக்கும். உடலையும் வருத்தும். உடல் நலத்துடன் இருக்க மன நலம் மிகவும் முக்கியம்.

 

‘வயதாகிவிட்டது’ என்று சொல்லிக் கொள்ளாதீர்கள். வயது என்பது ஒரு எண்ணிக்கை தான். நமக்கு chronological, biological, psychological என்று 3  வயதுகள் உண்டு. முதலாவது நாம் பிறந்த தேதி வருடம் இவற்றை வைத்துச் சொல்லுவது. இரண்டாவது நம் ஆரோக்கியத்தை வைத்து தீர்மானம் செய்வது. மூன்றாவது நமக்கு எத்தனை வயது என்று நாம் உணருவது.

 

முதல் வகை வயதை மாற்ற முடியாது. இரண்டாவது வயதை தேவையான உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மூலம் நம் கைக்குள் அடக்கலாம். மூன்றாவது வயதினை நேர்மறையான எண்ணங்கள், நம்பிக்கை நிறைந்த யோசனைகள், செயல்கள் மூலம் குறைக்க முடியும்.

 

முடிவாக நீங்கள் ஏற்கனவே ஒரு ‘இன்னிங்ஸ்’ ஆடி முடித்தாகி விட்டது. நாமெல்லோரும் சச்சின் டெண்டுல்கர் அல்ல; ஆடிக் கொண்டே இருப்பேன் என்று சொல்வதற்கு.

 

மாற்றங்களை சரியான கோணத்தில் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள்.

 

60 அல்ல 90 வயதில் கூட வாழ்க்கை இனிக்கும்.

பேஸ்புக்கின் ஸ்டேடஸ் அப்டேட்

பயனீட்டாளர்களின் ஈமெயில் விலாசத்தை மாற்றியது பேஸ்புக்!

 

பேஸ்புக்கைப் பயன்படுத்தும் 900 மில்லியன் பயனீட்டாளர்களுக்குத் தெரிவிக்காமல் அவர்களின் ஈமெயில் விலாசத்தை ‘@facebook.com’ என்று முடியும்படி இன்று (26.6.2012) மாற்றியது பேஸ்புக். உங்கள் ஈமெயில் விலாசம், xyz@gmail.com என்றால் அது மறைக்கப்பட்டு xyz@facebook.com என்று மாற்றப்பட்டு இருக்கிறது.

 

உங்களை யாரவது பேஸ்புக் மூலம் தேடினால் அவர்களுக்கு இந்தப் புது ஈமெயில் விலாசம் தான் கிடைக்கும். அதாவது உங்களுக்கு வரும் கடிதங்கள் பேஸ்புக் மூலம் வரும். உங்கள் ஈமெயில் விலாசம்உங்களின் விருப்பம் போல இல்லாமல் பேஸ்புக்கின் விருப்பம் போல மாற்றப்பட்டு இருக்கிறது.

 

தொழில்நுட்ப வலைத்தளங்கள் இதை கடுமையாக சாடியுள்ளன. “மறுபடியும் இப்படிச் செய்யாதே!” என்று Gizmodo எச்சரித்து இருக்கிறது. போர்ப்ஸ்.காம் இந்தச் செயலை “பேஸ்புக்கின் செருக்கான நடவடிக்கை” என்று வர்ணித்திருக்கிறது.

 

பேஸ்புக் என்ன சொல்லுகிறது?

 

பயனீட்டாளர்களின் பாதுகாப்புக்காக ஒரு பொதுவான, நிலையான ஈமெயில் விலாசத்தைக் கொடுப்பதுதான் தனது குறிக்கோள் என்கிறது. ஒவ்வொரு பயனீட்டாளரின் ஈமெயில் விலாசமும் மேம்படுத்தப் படுவதுடன், எந்த ஈமெயில் விலாசம் அவர்களது ‘டைம்லைனி’ல் காணப்பட வேண்டும் என்றும் அவர்களே தீர்மானம் செய்யும் வண்ணம்  அமைப்புகள் மாற்றப்பட்டு இருக்கின்றன என்கிறது.

 

ஏற்கனவே டைம்லைன் மூலம் நமது பழைய நடவடிக்கைகள் முன்பின் தெரியாதவர்களுக்கு மிகச் சுலபமாக கிடைக்கும் என்று பலரும் புகார் செய்திருக்கிறார்கள்.

 

இந்த சமூக வலைத்தளம் புதிதாக அறிமுகம் செய்திருக்கும் கைபேசியில் GPS குறியீடு மூலம் அருகில் இருக்கும் நண்பர்களை அறிய உதவும் வசதி சிலருக்குப் பிடித்திருந்தாலும், பலர் இதனை பேஸ்புக் நம் அந்தரங்க விஷயத்தில் தலையிடுவதாக நினைக்கிறார்கள்.

 

பேஸ்புக்கின் இந்த ‘பெரிய அண்ணா’ த்தனமான நடவடிக்கைக்கு பலவிதமான கருத்துரைகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

 

சிலர் ‘அதனால் என்ன?’ , நமது நிஜ ஈமெயில் விலாசம் தெரியாதது நல்லதுதான் என்றும், சிலர் ‘இது மிகவும் ஆபத்து; பேஸ்புக்கில் இருந்து வெளியேறு’ என்றும் ‘உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள்’ என்றும் பல பல கருத்துக்கள்.

உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யுங்களேன் ப்ளீஸ்!

 

ஸ்டீபன் ஹாக்கிங் மூளையை ‘hack’ செய்ய ஒரு கருவி!

விஞ்ஞானிகள் இதுவரை இல்லாத முறையில் திரு. ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களின் மூளைக்குள் ‘புகுந்து’ பார்க்க இருக்கிறார்கள். திரு. ஸ்டீபன் ஹாக்கிங் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் சேர்ந்து iBrain என்ற ஒரு கருவியைத் தயார் செய்ய இருக்கிறார்கள். இக்கருவி மூளையில் ஏற்படும் அதிர்வுகளை எடுத்து ஒரு கணணி மூலம் தகவல் தெரிவிக்கும்.

திரு. ஹாக்கிங் மோட்டார் ந்யூரான் நோய் காரணமாக சுமார் 30 வருடங்களாக பேச முடியாமல் இருந்து வருகிறார். இந்த நோய் அவரது உடலையும் தசைகளையும் பலவீனப்படுத்தி வருகிறது.

தற்சமயம் அவர் கணணியை பயன்படுத்தி ஒரு இயந்திர மனிதனின் குரலில் தகவல் தொடர்பு கொண்டு வருகிறார். ஆனால் அவரது நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

நரம்பியல் அலைபரப்பிகள் வரிசையாக வைக்கப்பட்ட பரிவட்டம் போன்ற அமைப்பு அவரது தலையில் பொருத்தப்பட்டுள்ளது. அவரால் தான் பேச நினைப்பதை ஒரு மாதிரி படிவமாக (pattern) உருவாக்க முடிகிறது. ஆராய்ச்சியாளர்கள் ஒருநாள் இந்த மாதிரிகளை எழுத்துக்களாகவும், வார்த்தைகளாகவும், வாக்கியங்களாகவும் மாற்றமுடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் திரு. பிலிப் லோ அவர்களால் உருவாக்கப்பட்ட ஐ-ப்ரையன் ஒரு தீப்பெட்டி அளவில் மிகவும் லேசானதாக இருக்கிறது. இந்தக் கருவி திரு. ஹாக்கிங்-யை – அவர் என்ன செய்தாலும் – கண்காணித்துக் கொண்டே இருக்கும்.

“அவரது உடலைக் கடந்து – முக்கியமாக அவரது மூளைக்குள் புகுந்து பார்க்க இருக்கிறோம். இந்த விஷயம் எங்களுக்கு மிகுந்த ஆர்வத்தை கொடுக்கிறது ஏனெனில் இப்படிச் செய்வதன்மூலம் மனித மூளைக்குள் பார்க்க ஒரு வழி கிடைக்கக்கூடும்”

“முதல்முறையாக மனித மூளையை அணுக ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறோம். இதன் மூலம் மோட்டார்  ந்யூரான் நோயாளிகளின் தகவல் தொடர்பு சாதனங்கள் அவர்களது உடலை சார்ந்ததாக இல்லாமல் மூளையை சார்ந்து இருக்கும்.” என்று திரு. லோ கூறுகிறார்.

பெண் குழந்தைகளின் உடல் நலம்

“என் பெண்ணுக்கு 10 வயது என்றால் யாரும் நம்ப மாட்டேன் என்கிறார்கள்….14,  15 வயதுப் பெண் போல இருக்கிறாள் என்று எல்லோரும் சொல்கிறார்கள்………”

8 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி 12 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி போல வளர்த்தியாக இருப்பதும், 10 வயதிலேயே ‘பெரியவள்’ ஆகிவிடுவதும் இப்போது சர்வ சகஜம் ஆகி விட்டது.

சிறுமிகள் வயதுக்கு மீறி வளர்வது மட்டுமல்ல, வயதுக்கும், உயரத்துக்கும் பொருந்தாத அதிகமான உடற்பருமனுடன் இருப்பதும் கவலைக்குரிய விஷயம்.

சிறு வயதில் ஏற்படும் உடற்பருமனுக்குக் காரணம் அதிகமான கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடுவதும், போதுமான உடற்பயிற்சி இல்லாததும் தான். உடலுழைப்பு தேவையில்லாத வாழ்க்கைமுறை, போஷாக்கு இல்லாத ‘ஜங்க்’ உணவுகள் இவர்களை ‘couch potato’ ஆக்குகின்றன. இதனால் இவர்கள் பலவித நோய்களுக்கு ஆளாகி மிகக் குறைந்த வயதிலேயே இறக்கும் அபாயம் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் கவலையுடன் சொல்லுகிறார்கள்.

ந்யுகேஸில் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் 8 வயது முதல் 10 வயது வரை உள்ள 508 பள்ளிச்சிறார்களை கண்காணித்ததில், ஒரு நாளில் அவர்கள் விழித்திருக்கும் நேரத்தில் 4% நேரம் மட்டுமே உடலளவில் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. அதிலும் சிறுமிகள் சிறுவர்களை விட குறைந்த நேரம் சுறுசுறுப்பாக இருப்பது தெரிய வந்திருக்கிறது.

சிறுமிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சிறுவர்கள் பரவாயில்லையாம். சிறுமிகள் ஒரு நாளைக்கு 17 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதாகவும் சிறுவர்கள் 24 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதாகவும் தெரிகிறது. உண்மையில் இவர்கள் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும்.

நமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடலளவில் சுறுசுறுப்பாக இருப்பது மிக முக்கியம். குழந்தைகளை சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சி செய்ய வைக்கவேண்டும்.

சிறுமிகளுக்கு 8 வயது ஆகும்போதே அவர்களது சுறுசுறுப்பு குறைந்து விடுவதாகக் கூறப்படுகிறது. இந்தப் போக்கை மாற்ற, சிறுமிகளை பெண் விளையாட்டு வீராங்கனைகளை தொலைக்காட்சியில் பார்க்கவும் அவர்களை இவர்களின் ‘மாதிரிப் பெண்மணி’களாகக்  கொள்ளவும் உற்சாகப்படுத்த வேண்டும். மேலும் பள்ளிகளிலும் உடலுழைப்பு அதிகமுள்ள விளையாட்டுக்களை அறிமுகப் படுத்த வேண்டும்.

இந்த ஆய்வின் மூலம் சற்று வயதான தந்தை இருக்கும் குழந்தைகள் உடல் செயல்பாட்டில் அத்தனை விருப்பம் காட்டுவதில்லை என்று தெரிய வந்திருக்கிறது. இந்தத் தந்தைமார்கள் பெரிய பதவியில் இருப்பதும், குழந்தைகளுடன் விளையாட அவர்களுக்குப் போதுமான அவகாசம் கிடைக்காததும் இந்தப் போக்குக்கு காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதுவுமன்றி குழந்தை வளர்ப்பு பற்றிய அவர்களது கண்ணோட்டம் வேறு விதமாக இருப்பதுடன், அவர்களே சுறுசுறுப்பு குறைந்தவர்களாக இருப்பதும் காரணம்.

பல குழந்தைகளுக்கு ஓய்வு நேரத்தில் உடற்பயிற்சி செய்ய போதுமான உற்சாகம் இருப்பதில்லை. பள்ளிகள் உடற்பயிற்சிக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும்.  உடற்பருமன் குறையவும் , ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் உடலுழைப்பு மிக முக்கியம். உடற்பயிற்சி செய்வது வகுப்பறையில் அவர்களது கவனத்தை அதிகரிக்கும். அவர்களது நடவடிக்கைகளும் மேம்பாடு அடையும்.

5 வயதிலிருந்து  18 வயது உள்ள சிறார்கள் குறைந்த பட்சம் ஓர் மணி நேரம் மிதமான அல்லது தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. விளையாட்டு, சைக்ளிங், நடனம், விறுவிறுப்பான நடை, ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அவர்கள் தினமும் செய்ய வேண்டும்.

தசைகளையும், எலும்புகளையும் சுறுசுறுப்பாக்கும் உடற்பயிற்சிகளான ஸ்கிப்பிங், ஜிம்னாஸ்டிக்ஸ், சிட்-அப்ஸ் முதலியவற்றை வாரத்திற்கு 3 முறை செய்ய வேண்டும்..

பெற்றோர்கள் அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுடன் விளையாட நேரம் ஒதுக்க வேண்டும்.

கணணி முன் நீண்ட நேரம் உட்கார்ந்து கொள்ளுவது, அல்லது வீடியோ கேம்ஸ் மணிக் கணக்கில் ஆடுவது  போன்றவற்றையும் குறைக்க வேண்டும்.

இவற்றிற்கு பதிலாக வீட்டிற்கு வெளியே விளையாடும் விளையாட்டுக்கள் எதிலாவது பயிற்சி பெற வகுப்புகளில் சேர்க்கலாம்.

அதிக கொழுப்புள்ள ஆகாரங்களை தவிர்க்க குழந்தைகளுக்கு உதவலாம். வாரம் ஒரு முறை மட்டும் ‘ஜங்க்’ உணவுகள் என்ற கட்டுப்பாட்டைக் கொண்டு வரலாம்.

அவர்களைக் கேலி செய்யாமல், அதிக எடையினால் வரும் தீமைகளை நிதானமாக எடுத்துச் சொல்லி உடற்பயிற்சி செய்ய ஊக்கம் கொடுக்க வேண்டும்.

பெற்றோர்கள் குழந்தைகளுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்வது அவர்களுக்கு உற்சாகத்தையும், ஈடுபாட்டையும் ஏற்படுத்தும். நீச்சல் பயிற்சி பெரியவர்கள், குழந்தைகள் ஒன்றாக சேர்ந்து செய்யும்போது நல்ல பலனளிக்கும்.

அதிக எடை உள்ளவர்கள்தான் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்றில்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி என்ற உணர்வை பெண் குழந்தைகளிடம் சிறு வயதிலேயே ஏற்படுத்த வேண்டும்.

அதிக எடையினால் பெண் குழந்தைகளுக்கு மாதவிலக்கு தொந்திரவுகள் வரும். திருமணம் ஆனபின் குழந்தை பிறப்பதிலும் பல சிக்கல்கள் தோன்றும்.

பெண் குழந்தைகளை பேணிக்காப்பது நம் தலையாய கடமை

நெஞ்சு…… பொறுக்குதில்லையே……

மாஹி உயிருடன் இல்லை…….
3 நாட்களாக காத்திருந்து காத்திருந்து கடைசியில் இப்படி ஆகிவிட்டதே என்று மனது பதறுகிறது.
யாரைக் குறை சொல்லுவது? நிதானமாக வந்த போலீசையா? ஆழ் குழாய்க் கிணறை மூடாத அந்தப் பகுதி அதிகாரிகளையா? குழந்தை விளையாடப் போனால் கண்காணிக்காத பெற்றோர்களையா? யாரைக் குற்றம் சொன்னாலும் போன குழந்தை திரும்பி வரப் போவதில்லை. இதுதான் நிஜம். அரசாங்கத்தையோ, அதிகாரிகளையோ சுட்டிக் காட்டி விட்டு நாம் ஒதுங்க முடியாது. நம் குழந்தையை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டாமா?
இதோ இன்னொரு செய்தி: பள்ளிப் பேருந்துக்கு பலியான சிறுவன். குழந்தைகள் பேருந்தில் ஏறும்போதும் இறங்குபோதும்
கண்காணிக்க வேண்டாமா?
அரசாங்கம் எத்தனை சட்டம் போட்டாலும் அதில் இருந்து எப்படி தப்பிப்பது என்று பார்க்கிறோமே தவிர,சட்டத்தை மீறக் கூடாது என்று நாம் உணர மறுக்கிறோம்? வெட்கக் கேடு!
கைபேசியில் பேசியபடி வாகனங்கள் ஒட்டாதீர்கள் என்று அரசாங்கம் சொல்ல வேண்டுமா? நமக்குத் தெரியாதா?
முன்னால் ஒரு குழந்தை நின்றபடி; பின்னால் ஒரு குழந்தை இடுப்பைப் பிடித்தபடி – ஒரு கையால் கைபேசியை பார்த்தபடியே வாகனம் ஒட்டிக் கொண்டு போகிறார் குழந்தைகளின் தாய்! என்ன அநியாயம் இது? தன்னுடைய உயிரை பலி கொடுப்பதுடன் அந்தக் குழந்தைகளின் உயிரையும் பற்றியும் கவலைப் படாத இந்தப் பெண்ணைப் பற்றி என்ன சொல்ல?
கைபேசியில் பேசிய படியே தெருவைக் கடப்பது; வண்டி ஓட்டுவது;
ஹெல்மட் போடாமல் வண்டியில் போவது;
காஸ் சிலிண்டரை வண்டியின் பின்னால் ஆபத்தான நிலையில் வைத்துக் கொண்டு போவது;
இரண்டு பேர் போக வேண்டிய வண்டியில் 4 பேராகப் போவது;
சிக்னலில் போலீஸ் இல்லையென்றால் சட்டென்று கடப்பது (காத்திருக்கும் அத்தனை பேரும் கேனையன்கள் – இவர் ஒருவர் மட்டுமே அதி புத்திசாலி)
ஏன் ஏன் இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறோம்?
நம் நாட்டில் மனித உயிருக்கு விலை இல்லை. எல்லோருக்கும் ஓர் அக்கறையின்மை. எல்லாவற்றிலும் ஒரு அலட்சியம். யார் எப்படிப் போனால் என்ன என் வேலை நடக்கிறதா, அது போதும் என்ற மனோபாவம்! இது எத்தனை ஆபத்தானது.
பிறரைக் குற்றம் சொல்லுமுன் நாம் நம் பொறுப்பை உணர்ந்து செயல் படுவோம் என்று ஒவ்வொருவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டால் இளம் பிஞ்சுகளை இழக்க வேண்டி இருக்காதே?
நெஞ்சு பொறுக்குதில்லையே …………..

ஒட்டிப் பிறந்த இரட்டையர்

Conjoined twins separated after 12-hour surgery

ஒட்டிப் பிறந்த ஸ்துதி மற்றும் ஆராதனா சகோதரிகள் வெற்றிகரமாக பிரிக்கப் பட்டனர். இவர்கள் இருவரின் உடலும் கல்லீரல் மற்றும் இருதயப் பகுதிகளில் ஒட்டிக் கொண்டு இருந்தது. ஒரு வயதாகும் இந்தக் குழந்தைகள் அறுவை சிகிச்சை அறைக்கு காலை 8 மணிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இரவு 9 மணிக்கு முடிந்த இந்த அறுவை சிகிச்சை 23 மருத்துவர்கள் உட்பட 34 மருத்துவ வல்லுனர்களால் செய்யப்பட்டது.

நான்கு கட்டங்களில் நடந்த இந்த அறுவை சிகிச்சையின் முதல் பகுதியில் இருவருக்கும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு இரண்டு மணி நேரத்தில் இருவரின் இதயமும் பிரித்தெடுக்கப் பட்டது. பிறகு இருவருக்கும் இருதய மாற்று நடைபெற்றது. மூன்றாவது கட்டத்தில் கல்லீரல் பிரிக்கப்பட்டது. இது மிகவும் கடினமான அறுவை சிகிச்சை. கடைசி கட்டமாக ஒட்டிக் கொண்டிருந்த மற்ற பகுதிகளும் பிரித்தெடுக்கப் பட்டு திறக்கப்பட்ட பகுதிகள் மூடப் பட்டன.

கடைசியாக ஸ்துதி, ஆராதனாவின் உடலிலிருந்து முழுமையாகப் பிரிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு சிகிச்சைப் பகுதிக்கு மாற்றப் பட்டாள்.

ஓட்டிப் பிறந்த சகோதரிகள் மத்தியப் பிரதேசம் சுடியா கிராமத்தைச் சேர்ந்த மாயா யாதவ் என்ற பெண்ணிற்கு 2011 ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் தேதி பிறந்தனர். இவர்களைப் பிரித்தெடுக்கச் செய்யப்பட வேண்டிய அறுவை சிகிச்சைக்கு அதிகப் பொருட் செலவு ஆகும் என்பதால் பெற்றோர்கள் இவர்களை மருத்துவ மனைக்கு தானமாகக் கொடுத்தனர். மருத்துவ மனை நிர்வாகிகள் உடனடியாக இவர்களை ஏற்றுக் கொண்டு அறுவை சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்தனர்.

டாக்டர்கள் ஆல்பர்ட் சூன், கோர்டன் தாமஸ், சஞ்சீவ் பீட்டர், துருவ் கோஷ் ஆகியவர்கள் அடங்கிய மருத்துவர் குழு இந்த அறுவை சிகிச்சையைச் செய்தது.அந்தக் குழுவில் ஆஸ்திரலியா, லூதியானா, சென்னை, குஜராத், வேலூர் ஆகிய இடங்களைச் சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் இடம் பெற்றிருந்தனர்.

மத்தியப் பிரதேச மாநில முதல்வர் திரு சிவராஜ் சிங், முதல்வர் நல நிதியிலிருந்து அறுவை சிகிச்சைக்காக 20 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார்.

அறுவை சிகிச்சையின் பொது மருத்துவ மனைக்கு வெளியே பொதுமக்கள் திரண்டு வந்து காத்துக் கொண்டிருந்தனர். குழந்தைகளின் நலத்திற்காக பிரார்த்தனைகள் பலவிடங்களிலும் நடந்த வண்ணம் இருந்தது.

நாமும் ஸ்துதி, மற்றும் ஆராதனாவின் நலத்திற்குப் பிரார்த்திப்போம்.