பூக்களைப் ……..பறிக்காதீர்…….!

தும்கூரில் எங்கள் பள்ளியைச் சுற்றி விதவிதமான செடிகள், மரங்கள்; பார்க்க மிக ரம்மியமாக இருக்கும். ஒவ்வொரு வகுப்பறையை சுற்றிலும் வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்கும் செடிகள்; பள்ளி வளாக சுற்று சுவரை ஒட்டினாற் போல விண்ணை முட்டும் உயரமான மரங்கள். பள்ளியில் நுழைந்த உடன் வேறு ஏதோ உலகத்திற்கு வந்து விட்டாற்போல ஒரு சூழ்நிலை. கண்ணுக்கு அத்தனை குளுமையாக இருக்கும். பள்ளியை சுற்றிப் பூங்காவா? அல்லது பூங்காவிற்குள் பள்ளியா என்று கேட்கத் தோன்றும். ரோஜாக்களில் எத்தனை வண்ணங்கள் உண்டோ அத்தனையையும் இங்கே பார்க்கலாம். எப்படி இயற்கை அன்னை இந்த இடத்தில் மட்டும் இத்தகைய எழிலைக் காட்டுகிறாள் என்று பலசமயங்களில் எனக்குத் தோன்றும்.

நான் சங்கீத ஆசிரியை. என் வேலை பிரார்த்தனையை நடத்துவது. அது முடிந்தபின் எனது வகுப்பு உடனடியாக இருந்தால் அங்கேயே இருப்பேன். இல்லையென்றால் வீட்டிற்கு வந்து விடுவேன்.

ஒரு நாள் எங்கள் தலைமை ஆசிரியர் பிரார்த்தனை முடிந்தவுடன் என்னைப் பார்த்து “ஒரு ‘நேச்சர் வாக்’ போய்விட்டு வாருங்களேன்” என்றார்.

“’நேச்சர் வாக்……’ ?” நான் புரியாமல் பார்த்தேன்.

“அதோ, அந்தக் குழந்தைகளுடன் சேர்ந்து கொள்ளுங்கள்…” என்று கை காட்டினார். அவர் காட்டிய திசையில் ஒரு ஆசிரியை குழந்தைகளுடன் பள்ளியைச் சுற்றி நடந்து கொண்டிருந்தார். நானும் அவர்களுடன் நடக்க ஆரம்பித்தேன்.

ஒரு புதுமையான அனுபவம் எனக்காகக் காத்திருந்தது அங்கே. அந்த ஆசிரியை குழந்தைகளுக்கு ஒவ்வொரு செடியின் பெயரையும் சொல்லி, அது செடி வகையா, கொடி வகையா, புதர் வகையா, அல்லது நீண்டு நெடிதுயர்ந்து வளரும் மரமா  என்று சொல்லிக் கொண்டே வந்தார். அதுமட்டுமல்ல. ஒவ்வொரு குழந்தையும் செடிகளை தொட்டுப் பார்த்து அதன் இலை அமைப்பு, தன்மை, அளவு, வண்ணம் ஆகியவற்றை அவர்களுக்குத் தெரிந்த வரையில் சொல்லிக் கொண்டிருந்தன. அதேபோல பூக்களின் பெயர்கள், பூக்கும் காலம், அந்தச் செடியை எப்படிப் பயிரிடுவது – அதாவது விதையை நடவேண்டுமா அல்லது பதியன் போட வேண்டுமா என்ற விவரங்களையும் ஆசிரியை சொன்னார். சிறிது தூரம் சென்றபின் குழந்தைகள் தாங்களாவே அங்கிருந்த செடிகளைப் பற்றிய விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தனர்.

“புதிதாக நட்ட செடிகளைப் பற்றி மட்டும்தான் நான் சொல்லுவேன். இந்தச் செடிகளை அவர்கள் பலமுறை பார்த்திருப்பதால், அவர்களுக்கே எல்லாம் தெரியும். வேறு எந்த இடத்தில் இந்தச் செடிகளைப் பார்த்தாலும் இந்தக் குழந்தைகளால் பெயர் சொல்லி அடையாளம் காட்ட முடியும்.” என்று எனக்கு விளக்கினார் ஆசிரியை.

ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வகுப்புக் குழந்தைகள் அவர்களது ஆசிரியைகளுடன் இந்த ‘நேச்சர் வாக்’ பண்ணுகிறார்கள்.

நேச்சர் வாக்’ முடித்துக் கொண்டு வந்த என்னிடம் எங்கள் தலைமை ஆசிரியர் மிகப் பெருமையாக சொன்னார்: “குழந்தைகளின் கையாலேயே பல செடிகளை நடச் செய்கிறோம். நட்டபின் தினமும் நீர் ஊற்றி அவற்றைப் பராமரிப்பது அவர்கள்தான். முளை விடுவதிலிருந்து ஒவ்வொரு நாள் வளர்ச்சியையும் அவர்கள் கண்கூடாகப் பார்க்கிறார்கள். இதனால் இயற்கை தங்கள் வாழ்வில் ஒரு அங்கம் என்று சிறு வயதிலேயே இந்தக் குழந்தைகள் உணருகிறார்கள். எங்கள் பள்ளியில் ‘புற்களின் மேல் நடக்காதே’, ‘பூக்களைப் பறிக்காதே’ என்ற அறிவிப்பு பலகை கிடையாது. குழந்தைகள் இயற்கையைப் பேணுவது தங்கள் கடமை என்று பள்ளிப் பருவத்திலேயே தெரிந்து கொண்டு விடுகிறார்கள்.”

பிஞ்சுக் குழந்தைகளின் பிஞ்சுக் கரங்களால் தீண்டப்படுவதாலேயே இயற்கை இப்படி எழில் கோலம் காட்டுகிறாள் என்று எனது சந்தேகத்திற்கும் விடை கிடைத்தது அவரது பேச்சிலிருந்து. மனது நிறைந்து போயிற்று.

நானும் என் கணவரும் வீட்டிற்கு அருகிலுள்ள பூங்காவில் தினசரி நடைப் பயிற்சி செய்யும் போது இந்த நிகழ்ச்சி அடிக்கடி எனக்கு நினைவுக்கு வரும். எங்களைப் போல நிறைய பேர் நடப்பதற்காக வருவார்கள். பலபேரின் கையில் கைபேசி இருக்கும். அதில் பேசியபடியே நடப்பார்கள். பெங்களூருக்கு ‘பூங்கா நகரம்’ என்றே பெயர். எத்தனை பேருக்கு இயற்கையை ரசிக்கத் தெரிகிறது?

இப்படி ‘நேச்சர் வாக்’ பண்ணுவது மனிதர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கிறது; நமது கவனம் கலையாமல் இருக்கிறது என்று ஒரு ஆராய்ச்சி சொல்லுகிறது என்று இன்று காலை செய்தித்தாளில் படித்தவுடன் எனக்குத் தும்கூர் பள்ளி நினைவு ஏகமாக வந்து விட்டது.

அதன் விளைவாக பூத்ததுதான் இந்தப் ‘பூக்களைப் பறிக்காதீர்”

சுவாசமே…….சுவாசமே…….!

“மூச்சு விட நேரமில்லை……….”

“மூச்சு விடாம வேலை செய்துண்டே இருக்கேன்………”

“மூச்சு விடாம பேசறா……..”

மூச்சு என்று நாம் சாதாரணமாக குறிப்பிடும் சுவாசம் இல்லாமல் மேற்சொன்ன எதுவுமே சாத்தியமில்லை.

ரஜினிகாந்த் ஒரு படத்தில் சொல்லுவார்: “இந்த இருமல், தும்மல் இதெல்லாம் தானா வரும்; தானா போகும்; வான்னா வராது; போன்னா போகாது…..” என்று.

இந்த விதி நமது சுவாசத்திற்கும் பொருந்தும். பிறந்ததிலிருந்து நமது உடல் சாயும் வரை இது நிற்காது. ஒருமுறை போய்விட்டால், திரும்பவும் வராது. நாம் உயிர் என்றும் உயிர்மூச்சு என்றும்  குறிப்பிடுவதும் இதைத்தான்.

எல்லோரும் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் சரியாக, அதாவது சரியான முறையில் சுவாசிக்கிறோமா?

உண்மையில் நாம் நமது உதரவிதானம் (மார்புக்கும் வயிற்றுக்கும் இடையே உள்ள சவ்வு; நுரையீரல் விரிந்து சுருங்கக் காரணமான தசை) முழுக்க விரிந்து சுருங்கும் அளவுக்கு சுவாசிப்பதில்லை.

நமது ஆரோக்கியம் நன்றாக இருப்பதற்கும், நீண்ட ஆயுளுக்கும் சரியான முறையில் நம் சுவாசம் அமைவது முக்கியம்.

சுவாசத்தின் மூலம்தான் நமது உடலுக்குத் தேவையான பிராணவாயு கிடைக்கிறது. இதனால் தான் மூச்சு என்பதைப் பிராணன் என்றும் சொல்லுகிறோம். நமது சுவாசம் சரியான முறையில் அமையும் போது மனதும் அமைதி அடைகிறது. நிதானமான, ஆழ்ந்த, உள்ளுணர்வுடன் சுவாசிக்கும்போது நுரையிரலின் ஒட்டுமொத்தத் திறனும் பயன்படுத்தப் படுகிறது.

ஆனால் நம்மில் பலபேரின் சுவாசம் மேலோட்டமாகத்தான் இருக்கிறது. நாம் சாப்பிடும் உணவிலிருந்து நமது உடலுக்கு தேவையான சக்தியை செல்கள் பெற நாம் உள்ளிழுக்கும் பிராணவாயுதான் உதவுகிறது. நமது உடலிலிருந்து 70% கழிவுகள் வாயுவாகவும்  (அபான வாயு)  துகள்களாகவும் வெளியேறுவதால் சுவாசம் நமது உடலைத் தூய்மை படுத்துகிறது. இதனால் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுகிறது. சரியான சுவாசம் நம் மனதில் நேர்மறையான எண்ணங்களைத் தூண்டி, நமது தன்னம்பிக்கையை மேம்படுத்துகிறது. இதன் காரணமாக நாம் திறந்த மனத்துடன் எல்லோருடனும் பழகவும், கருணையுடன் மற்றவர்களைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது.

சரியான சுவாசம் நம் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. பசியைக் குறைத்து உணவு வேண்டும் என்கிற அவாவையும் கட்டுப்படுத்துகிறது.

சுவாசிக்கும் முறை

மூக்கின் வழியாக நிதானமாக ஆழ்ந்து காற்றை உள்ளிழுங்கள். தோள்பட்டைகளை நன்றாக தளர்த்திக் கொள்ளுங்கள்.

வயிறு நன்றாக உப்ப வேண்டும்.

மார்பு சற்று மேல் நோக்கி எழும்ப வேண்டும்.

தாடைகளை தளர்த்திக் கொள்ளுங்கள்.உதடுகளைக் குவித்து வைத்து, வாயின் மூலம் காற்றை மிக மிக மெதுவாக வெளியே விடுங்கள்.

காற்றை உள்ளிழுக்கும் போதும், வெளியே விடும்போதும் ஒன்று, இரண்டு, மூன்று என்று நிதானமாக எண்ணுங்கள்.

இதைபோல் எத்தனை முறை முடியுமோ, அத்தனை முறை சுவாசியுங்கள். ஒவ்வொரு முறையும் காற்றை மெதுவாக….. ஆழ்ந்து……. வயிறு நிரம்ப…. மார்பு விரிய…… சுவாசிக்கிறோம் என்ற முழு உணர்வுடன் சுவாசியுங்கள். உடல் முழுவதும் அக்காற்று பரவுவதை உணருங்கள். அதேபோல காற்றை வெளியே விடும்போதும் நிதானமாக வெளியேற்றுங்கள்.

சிலர் மூச்சுக் காற்றை வெளியே விடும்போது ‘அ……அ…………’ என்றோ ‘ஒ………’ என்றோ சொல்லுவார்கள். அதேபோல relax என்ற வார்த்தையைப் பிரித்து காற்றை உள்ளிழுக்கும் போது ‘re…..’ என்றும் வெளியே விடும்போது ‘l….a…x…’ என்றும் மனதிற்குள் சொல்லிக் கொண்டே பயிற்சி செய்யலாம்.

இப்படி மெதுவாக முழு உணர்வுடன் சுவாசிக்கும்போது, மனதில் உள்ள கவலைகள், அழுத்தங்கள் விலகுகின்றன. மனதுடன், உடலும் லேசாகிறது. புத்துணர்ச்சி பிறக்கிறது.

தினமும் 15 நிமிடங்கள் சுவாசப் பயிற்சி நாள் முழுவதும் நமக்குத் தேவையான புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது. நம் உடலில் இருக்கும் நாடிகள், சக்கரங்கள் தூண்டிவிடப்பட்டு உடல் ஆரோக்கியம் பெருகுகிறது.

எங்கள் யோகா மாஸ்டர் என்ன சொல்லுவார் தெரியுமா?

“சுவாசத்தை உள்ளிழுக்கும் போது நல்ல எண்ணங்களை உள்ளிழுங்கள்; வெளியே விடும்போது உங்கள் கோப தாபங்கள், அசூயை, விரோதம் முதலிய மன அழுக்குகளை அந்தக் காற்றுடனேயே வெளியே தள்ளுங்கள்”

செய்வோமா?

ஹை டீ (High Tea)

 

பிரிட்டீஷ்காரர்களின் சமையல் கலையில் இந்த ‘ஹை டீ’ க்கு மிக உயர்ந்த இடம். இதன் ரிஷிமூலம் நதிமூலம் தெரிந்து கொள்ள 1800 ஆண்டுக்குச் செல்லவேண்டும். இந்த காலகட்டத்தில் பிரிட்டனில் காஸ் விளக்கு, மற்றும் எண்ணெய் விளக்குகள் குறிப்பாக செல்வந்தர்களின் வீடுகளில் புழக்கத்துக்கு வர ஆரம்பித்து இருந்தன. இதனால் இரவு சாப்பாடு தாமதமாக சாப்பிடுவது நாகரிகம் ஆனது. அதுவுமின்றி, அப்போதெல்லாம் இரண்டு வேளை சாப்பாடுதான். காலை, மதியம் இரண்டுக்கும் நடுவில் சிற்றுண்டியைப் போல ஒரு சாப்பாடு; அதேபோல இரவு தாமதமாக (எங்கள் வீட்டில் விளக்கு இருக்கிறதே!) ஒரு சாப்பாடு.

 

ஹை டீயைப் பற்றிய கதை என்னவென்றால், பெட்போர்ட் என்ற இடத்தில் இருந்த சீமாட்டி ஒருவருக்கு மதிய வேளையில் மிகவும் ‘போர்’ அடிக்கவே அவ்வப்போது தனது தோழியரை அழைத்து சில நொறுக்குத் தீனிகளுடன் டீ சாப்பிடும் வழக்கத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். டீ சாப்பிடுவதே ஒரு பெரிய நாகரீகமாகக் கருதப்பட்டது அப்போது! சீமாட்டி ஆரம்பித்த வழக்கம் வேகமாகப் பரவ ஆரம்பித்து, பெண்களின் விருப்பமான பொழுது போக்கானது. செல்வந்தர்களிடம் ஆரம்பித்த இந்தப் பழக்கம் சாதாரண மக்களிடையேயும் பரவிற்று.

 

கொஞ்சம் கொஞ்சமாக சாயங்கால மதுபான விருந்துகளுக்கு பதில் இத்தகைய தேநீர் விருந்துகள் பிரபலமானது. வீட்டுக் கூடங்களில் கொடுக்கப் படும் இந்த டீ பார்ட்டிகள் பெண்களின் அந்தஸ்தை உயர்த்துவதாக (காட்டுவதாக) இருந்தது.

 

வீடுகளில் ஹை டீ பார்ட்டி என்றால், 4 மணிக்கு தொடங்க வேண்டும். இந்தப் விருந்துகளில் பயன்படுத்த படும் மேசைகள், தேநீர் கோப்பைகள், தேநீர் பாத்திரங்கள் என்று எல்லாமே ஸ்பெஷல் தான். சீனா களிமண்ணால் செய்யப்பட்ட தேநீர் கோப்பைகள், தேநீர் கெட்டில்கள், கைத்தறி துணியால் ஆன கை துடைக்கும் சின்ன துண்டுகள், வெள்ளியால் செய்யப்பட்ட பரிமாறும் பாத்திரங்கள் என்று இவற்றிற்கு ஒரு பாரம்பரியம் உண்டு.

 

மேசை அலங்காரம்:

ஹை டீ என்பது பரபரப்பான காலை வேளைக்குப் பிறகு கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ள, அரட்டை அடிக்க, (ஊர் வம்பு பேச), கொடுக்கப்படும் விருந்து. இதனால் எல்லா ஏற்பாடுகளும் பக்காவாக இருக்கவேண்டும்.

 

மேசை விரிப்பு: கைத்தறி அல்லது லேஸ் வேலைப்பாடு செய்த, வெள்ளை அல்லது க்ரீம் முதலான மென்மையான வண்ணத்தில் பூக்கள் போட்ட மேசை விரிப்பு எடுப்பாக இருக்கும். மிகவும் ‘பளிச்’ நிறத்தில் இருக்கக் கூடாது. தேநீர் கோப்பை, தேநீர் கெட்டில்களின் அழகை எடுத்துக்காட்டுவது போல மேசை விரிப்பு அமைய வேண்டும்.

 

தேநீர் கோப்பைகள்: பூ வேலைப்பாடுகள் நிறைந்த கோப்பைகள் நன்றாக இருக்கும். கோப்பைகள் எல்லாம் ஒரே மாதிரி இல்லாமல் ஒன்றுக்கொன்று ஒத்துப் போகும் வகையில் இருந்தால் நல்லது.  மிகச் சிறந்தவற்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். சைனா களிமண்ணால் செய்தவை, வெள்ளியால் செய்தவை என்று ஒரு அழகான வண்ணமயமான கலவை வரிசை இருப்பது விருந்தின் அந்தஸ்த்தை உயர்த்தும்.

 

பூ அலங்காரம்: கிரிஸ்டல் அல்லது போர்செலின் பூஜாடிகளில் பூக்களை வைத்து மேசையின் அழகை அதிகரிக்கலாம். மேசையின் நடுவில் கேக் வைப்பதற்கு சற்று உயரமான இடத்தை அமைத்து அதையும் பூக்களால் அலங்கரிக்கலாம். பூக்களின் நடுவில் செயற்கை பறவைகூடுகள் வண்ணத்துப்பூச்சிகள் ஆகியவற்றை வைக்கலாம். பழங்காலத்து தேநீர் கெட்டில்கள் இருந்தால் அதிலும் பூக்களை ஜோடித்து  மேசை மேல் வைக்கலாம். பூக்களை மேசை முழுவதும் பரவலாக வைத்து வண்ண ரிப்பன்களால் அழகு படுத்தலாம்.

 

மெழுகுவர்த்திகள்: பூக்களுக்கு அடுத்தபடியாக மெழுகுவர்த்திகள் மேசை அலங்காரத்திற்கு ஏற்றவை. நீரில் மிதக்கும் மெழுகுவர்த்திகள், வேறுவேறு உயர அளவுகளில் வைக்கப்பட்ட மெழுகுவர்த்திகள், வண்ண வண்ணப் பூக்கள் சேர்ந்து ஒரு மாயத்தோற்றத்தை உண்டு பண்ணும்.

 

ஹை டீயுடன் என்ன உணவுகள் நன்றாக இருக்கும்? ஒவ்வொரு வகை தேநீருடன் ஒவ்வொருவகை உணவு ஜோடி சேரும். சைவ அசைவ உணவுகள் நன்றாக இருக்கும்.

 

  • நாம் ஸ்பைசி என்று சொல்லும் காரமான, மசாலா சேர்த்த உணவுகள். ஊலாங், டார்ஜிலிங், ஏர்ல் க்ரே, க்ரீன் மற்றும் ஜாஸ்மின் தேநீருடன் நன்றாக இருக்கும்
  • சீஸ் உடன் ஏர்ல் க்ரே (Earl Grey) மற்றும் க்ரீன் டீ ஜோடி சேரும்.
  • புகைபதனம் செய்யப்பட்ட சாலமன் (smoked salmon) சேர்த்த சாண்ட்விச் ஊலாங், டார்ஜிலிங், ஏர்ல் க்ரே, க்ரீன் மற்றும் ஜாஸ்மின் தேநீருடன் நன்றாக இருக்கும்.
  • உணவிற்குப் பிறகு வெள்ளை அல்லது க்ரீன் டீ நன்றாக இருக்கும்.
  • ஃபிங்கர் சாண்ட்விச்சஸ், பேஸ்ட்ரீஸ், ஸ்கோன்ஸ் எனப்படும் கேக்குகள், சிக்னேச்சர் கேக்குகள் போச்ட் சிக்கன் (Poached chicken) ஆகியவையும் ஹை டீ விருந்துக்கு ஏற்ற உணவுகள்.

மிகவும் முக்கியமான விஷயம்:

இந்தத் தேநீர் விருந்தின் நோக்கம் பரபரப்பான வாழ்க்கையில் மனதை தளர்த்திக் கொள்ளுவதுதான். அதனால் விருந்தினருடன் உங்கள் பேச்சு கலகலப்பாக, மனதுக்கு மகிழ்ச்சி கொடுப்பதாக இருக்கட்டும்.

மே 13 ஆம் நாள்

 

எல்லோருக்கும் தெரிந்தது தான் அம்மாக்களின் தினம். அன்று ஒருநாள் மட்டும் தான் அம்மாவை நினைக்க வேண்டுமா? மற்ற தினங்களில் மறந்துவிடலாமா? அம்மாக்களின் தினம் என்று வைத்ததற்கு அதுவல்ல அர்த்தம். நம் அம்மாவிடமிருந்து நாம் கற்றது என்ன? நம் குழந்தைகளுக்கு நம் அம்மாவைப் போல நாம் சிறந்த அம்மாவாக இருக்கிறோமா? இவற்றைப் பற்றிச் சிந்திக்கத்தான் இந்த நாள்.

 

என்ன செய்யலாம் அன்று? அம்மா அருகில் இருந்தால் வாழ்த்து அட்டை கொடுக்கலாம் நாமே தயாரித்து; பூக்கொத்து கொடுக்கலாம்; அவளுக்குப் பிடித்ததை சமைத்து அவளுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடலாம். அவள் மடியில் தலை வைத்துப் படுத்து அவளது பழைய கதைகளைக் கேட்கலாம்.

 

எல்லா அம்மாவுமே பழங்கதைகள் தான் பேசுவார்கள். அடுத்தடுத்த தலைமுறைகள் வந்தவுடன் வீட்டின் முதியவர்கள் தனித்துப் போய்விடுகிறார்கள். அவர்களது தனிமைக்கு பழைய நினைவுகள் தான் துணை.

 

இவற்றையெல்லாம்விட மிக முக்கியமானது அம்மாவிடம் இருந்து நாம் என்ன கற்றோம், எதை நம் குழந்தைகளுக்குக் கற்றுத் தரப் போகிறோம் என்று சிந்திக்கலாம். அம்மாவிடம் நாம் ரொம்பவும் விரும்பும் குணம் நமக்கு வந்திருக்கிறதா என்று யோசனை செய்யலாம்.

 

மற்றவர்களுக்குச் சொல்லும் முன் நான் சற்று யோசிக்கிறேன்: நான் என்ன கற்றுக் கொண்டேன் என் அம்மாவிடமிருந்து? என் அம்மா மிக நன்றாகப் பாடுவாள். பரவாயில்லை, நாங்கள் நாலு பேருமே சுமாராகப் பாடுவோம். அம்மாவின் சங்கீத ஞானம் எங்கள் குழந்தைகளுக்கும் வந்திருக்கிறது.

 

குழந்தைகளாக இருந்தபோது அம்மா தான் எங்கள் உடை வடிவமைப்பாளர்; அம்மா கையால் தைத்த உடைகள் ஏராளம். தையல் கலையை மிக ஆர்வமாகச் செய்வாள். ஊஹும்….! நாங்கள் யாரும் இதை மட்டும் கற்கவே இல்லை.

 

வீடு பளிச்சென்று இருக்கும். இந்த விஷயத்தில் என் அக்கா அப்படியே என் அம்மா! அம்மா நன்றாக சமைப்பாள். நான் என் அம்மாவிடம் சமையல் கற்றதே இல்லை. திருமணம் ஆனபின் முழுக்க முழுக்க என் மாமியாரிடம் தான் கற்றுக் கொண்டேன். அவரும் அம்மா தான் இல்லையா?

 

என் அம்மாவின் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். மிகக் கோர்வையாக எழுதுவாள். அந்தக் காலத்து இன்லேண்ட் கவரில் ஒரு துளி இடம் பாக்கி விடாமல் எழுதுவாள். அம்மாவின் முத்து முத்துக் கையெழுத்து யாருக்கும் வரவில்லை. ஆனால் எனக்கு என் அம்மாவிடமிருந்து வந்த சொத்து எழுதும் திறமை தான். எத்தனை அரிய திறமை இது! நான் எழுதுவது எல்லாவற்றையும் பிரின்ட் அவுட் எடுத்து அம்மாவுக்குக் கொடுப்பேன். என் கதைகள், கட்டுரைகள் எல்லாவற்றையும் அம்மா பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாள்.

 

அம்மா நிறையப் படிப்பாள். எங்கள் நால்வருக்கும் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் அம்மாவிடமிருந்து வந்ததுதான். இப்போதும் புத்தகமும் கையுமாகத்தான் இருப்பாள். நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் ஈடுபாடு வந்தது அம்மாவால்தான். இப்பவும் பார்க்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு பாசுரத்தைச் சொல்லி ‘என்ன தமிழ் பாரு! அருவி மாதிரி என்ன ஒரு நடை பாரு!’ என்று தானும் வியந்து எங்களையும் வியப்பில் ஆழ்த்துவாள்.

 

ஒவ்வொரு முறை அம்மாவைப் பார்க்கும்போதும் அம்மா தன் டைரியை கொடுத்துப் படிக்கச் சொல்லுவாள். தான் படித்ததில் மிகவும் கவர்ந்ததை அதில் முத்து முத்துக் கையெழுத்தில் எழுதி வைத்து இருப்பாள். அம்ம்மாவின் டைரி அவளைப் பற்றிப் பேசாது; அவளது ரசனையைப் பேசும்.

 

இவை எல்லாவற்றையும் விட மிக மிக அரிய சொத்து ஆரோக்கியம். என் அம்மாவுக்கு இப்போது 84 வயது. முதுமை என்பதைத் தவிர வேறு எந்தவித தொந்திரவும் அம்மாவுக்குக் கிடையாது. ( டச் வுட்!) இந்த விஷயத்தில் நாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். தன் வேலையைத் தான் பார்த்துக் கொண்டு ஒருவருக்கு ஒரு கஷ்டம் கொடுக்காமல் இருந்து வருகிறாள். உணவு விஷயத்தில் இது கூடும் கூடாது என்பதே இல்லை அம்மாவுக்கு. மிக மிக குறைந்த அளவு தான் சாப்பிடுவாள். இரண்டு வேளை சாப்பாடு; மதியம் ரொம்ப கொஞ்சமாக சிற்றுண்டி.

 

அம்மாவிடமிருந்து ஆரோக்கியம் தான் எங்கள் எல்லோருக்கும் வந்திருக்கிறது. அம்மா எங்களுக்குத் தந்த பெறற்கரிய சொத்து இது தான். வேறென்ன வேண்டும்? இதே ஆரோக்கியத்தை நாங்களும் எங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

 

நாங்கள் இப்போது இறைவனிடம் பிரார்த்திப்பது இரண்டு விஷயங்கள் தான்: இப்படியே அம்மா எந்தவித நோயும் இல்லாமல் கடைசி வரை இருக்க வேண்டும்; அம்மாவின் ஆரோக்கியம் எங்களுக்கும் வேண்டும்.

சொந்தக் கதை

 

நாளை எனது 60 வது பிறந்தநாள். 59 வயது முடிந்து 60 தொடங்குகிறது. இத்தனை வருடங்களில் என்ன சாதித்தேன் என்று தெரியவில்லை. பிறந்தது ஸ்ரீரங்கம் என்றாலும் படித்தது, திருமணம் ஆனது எல்லாம் சிங்காரச் சென்னையில்தான். பெங்களூர் வந்து 25 வருடம் ஆகிறது. வாழ்க்கைப் பாடங்கள் பல இங்கு வந்துதான் கற்றேன். அதைத் தவிர சங்கீதம்,  வீணை கற்றேன். கன்னடம் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டேன். கல்லூரிக்குச் செல்லவில்லை; பட்டதாரி ஆகவில்லை என்ற என் குறையை இங்கு வந்து M.A., படித்துப் போக்கிக் கொண்டேன்.

தும்கூரில் என் கணவரின் வேலைக்காக (GM, TVS Electronics) இரண்டு வருடங்கள் இருந்தபோது அங்கு TVS பள்ளியில் பாட்டு டீச்சர் ஆக வேலைக்குச் சேர்ந்த சமயம், இரண்டாம் வகுப்புக் குழந்தைகளுக்கு கன்னடம் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதனால் கன்னட மொழியை நன்கு கற்கும் பேறு பெற்றேன்.

எனக்கு எல்லாமே late take-off தான். திருமணத்திற்கு முன் ஸ்டெனோ டைப்பிஸ்ட் ஆக வேலை பார்த்தேன். திருமணத்திற்குப் பின் விட்டுவிட்டேன். 25 வருடங்கள் கழித்து தீடீரென ஒரு வேலை வாய்ப்பு! Spoken English Trainer ஆனேன். மூன்று மல்டி-நேஷனல் நிறுவனங்களின் கார்ப்பரேட் ட்ரெயினர் ஆகவும் இருந்தேன். கிட்டத்தட்ட 12 வருடங்கள் மிகவும் பிஸியாக வேலை பார்த்தேன். இப்போதும் ஒன்றிரண்டு மாணவர்கள் வருகிறார்கள். வீட்டிலேயே சொல்லிக் கொடுக்கிறேன். எனது மாணவர்களில் பல வெளிநாட்டு மாணவர்களும் அடக்கம். அதேசமயம் பத்திரிகைகளில் கதை, கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன்.

என் பிள்ளை இரண்டு வருடங்கள் அமெரிக்காவில் இருந்தபோது கணணி முன் உட்கார ஆரம்பித்து (அவனுடன் தினம் பேசவேண்டுமே!) கணனியில் நிறையக் கற்றுக் கொண்டேன். எனக்காக அங்கிருந்து ஒரு லேப்டாப் கணணி வாங்கி வந்தான். இப்போது அதுதான் என் ஒரே பொழுதுபோக்கு! வெளியில் சென்று வேலை பார்ப்பதைக் குறைத்துக் கொண்டு விட்டேன்.

அதனால் ஆன்லைனில் எழுதும் வேலை ஏதாவது கிடைக்குமா என்று தேடியதில் ஒரு இணையதளம் என் எழுத்துக்களை கைநீட்டி வரவேற்றது. அதில் எழுதி வெளியானதை எல்லாம் வோர்ட்பிரஸ்.காமில் பதிய ஆரம்பித்தேன். அதைப் படித்து விட்டு ஒருவர் அவர் நடத்தும் ஆன்லைன் தமிழ் பத்திரிகைக்கு கட்டுரைகள் எழுதி கொடுக்குமாறு சொன்னார்.

என் எழுத்துக்களுக்கு நல்வரவு சொன்ன திரு பிரகாஷ், திரு பிரதீப், திருமதி ஸ்ரீ வித்யா, (a2ztamilnadu) மற்றும் திரு சுகந்தன் (ஊர்.காம் ) இவர்கள் அனைவருக்கும் என் இதயம் நனைந்த நன்றிகள்!

ஆரம்பத்தில் நான் எழுதி அந்தப் பத்திரிகைக்கு அனுப்பி விடுவேன். அவர்கள் அதை வெளியிடுவார்கள். இந்த மாத ஆரம்பத்தில் இருந்து எனக்கே ஒரு பயனர் பெயர், பாஸ்வோர்ட் கொடுத்து என்னையே வெளியிடவும் சொல்லி விட்டார்கள். நானே என் எழுத்துக்களை வெளியிடவும் முடியும். இதில் எனக்கு சொல்லமுடியாத ஆனந்தம்! இந்த வயதில் யாருக்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கும்? எனக்குக் கொடுத்த இந்த பொறுப்பை மிகவும் கவனமாகக் கையாளுகிறேன். பல முன்பின் தெரியாதவர்கள் என் எழுத்தைப் பாராட்டும் போது மகிழ்ச்சியுடன் பொறுப்பும் அதிகமாவதை உணருகிறேன். நான் எழுதுவதை எல்லாம் வோர்ட்பிரஸ்ஸிலும் போடுகிறேன். இதன் மூலம் பல பேரின் நட்பு கிடைத்திருக்கிறது.

பல ஆங்கிலக் கட்டுரைகளை தமிழ் மொழியாக்கமும் செய்கிறேன்.

சில மாதங்கள்தான் ஆனாலும் என் ப்ளாகிற்கு கணிசமான வாசகர்கள் வருகை தந்து எனது எழுத்தை தினமும் படிப்பது மிகவும் மகிழ்ச்சி உரிய விஷயம்.

வோர்ட்பிரஸ் நண்பர்கள் திருமதி காமாட்சி, திருமதி சித்ரா சுந்தர், திரு சந்தோஷ், திருமதி கேரி ஆண்ட்ரூஸ், திருமதி மேகி ஆகியவர்களுக்கு என் நன்றி, நன்றி, நன்றி!

என் எழுத்துக்களை உடனே படித்து தனது கருத்தையும் உடனே பதிவு செய்யும் என் பத்திரிக்கை தோழி திருமதி ராதா பாலுவுக்கு என் நன்றிகள். இவரது எழுத்துக்களுக்கும் நிறைய விசிறிகள்; இருந்தும் சக எழுத்தாளரை வாயார வாழ்த்தும் இவரது குணம் மிக அரிது. பாராட்டுக்கு உரியது.

பலர் படித்தாலும் சிலர்தான் கருத்துக்களைச் சொல்லுகிறார்கள். படிக்கும் அத்தனை பேரும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் எனது எழுத்தின் தரத்தை உயர்த்திக் கொள்ள உதவியாயிருக்கும்.

படிக்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!

ஹை! டீ!


இந்தத் தலைப்பை நீங்கள் இரண்டு விதமாகப் படிக்கலாம்: High Tea,

“ஹை……! டீ………..!” என்று.

முதலில் “ஹை…….! டீ……!”

என் அம்மாதான் நாங்கள் தேநீரை விரும்பிக் குடிக்கக் காரணம். என் அம்மா மிக அருமையாகத் தேநீர் தயாரிப்பார். அம்மாவுக்கு காலை 8¾ மணிக்கும் மாலை 5¾ மணிக்கும் தேநீர் தேவை. இன்றைக்கும் அப்படித்தான். ஒவ்வொருமுறை அம்மா தேநீர் தயாரிக்கும்போதும் நாங்கள் “ஹை……! டீ…..!” என்று வியந்துகொண்டே தான் குடிப்போம்.

என் குழந்தைகளுக்கு தேநீரை அறிமுகப் படுத்தியதும் என் அம்மாதான். ஒருமுறை என் அம்மா தயாரித்த தேநீரை குடித்துவிட்டு என் பெண், பிள்ளை இருவரும் அதன் ருசியில் மயங்கிப் போனார்கள். அன்றிலிருந்து இன்றுவரை அவர்கள் இருவரும் தேநீர்தான். என் கணவர் பக்கா சென்னைவாசி. அவருக்கு காப்பிதான் எப்பவுமே. நான் குழந்தைகளுடன் தேநீர், கணவருடன் காப்பி என்று அவ்வப்போது கட்சி மாறிக் கொள்ளுவேன். என் மாட்டுப்பெண்ணும் சென்னைவாசி. எங்கள் வீட்டிற்கு வந்து நன்றாக தேநீர் தயாரிக்கக் கற்றுக்கொண்டு விட்டாள். ஆனால் அவள் எங்களுடன் இன்னும் தேநீர் குடிக்க ஆரம்பிக்கவில்லை!

காப்பி நல்லதா தேநீர் நல்லதா என்று அவ்வப்போது எங்களுக்குள் சர்ச்சை எழும். காப்பியை விட தேநீர் நல்லது என்று சொல்லுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். காரணங்கள் இதோ:

சைனாவில் கிடைக்கும் ஊலாங் என்ற கருப்பு தேநீர் வயதாவதை தாமதப் படுத்துகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

புற்று நோய் மற்றும் இருதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆண்டிஆக்சிடென்ட் நிரம்பியது தேநீர்.

க்ரீன் தேநீர் மூட்டு வீக்கத்தை குறைத்து குருத்தெலும்பு உடையாமல் பாதுகாக்கிறது. வயதானவர்களுக்கு எலும்புகள் தேய்மானம் இல்லாமல் தடுக்க எல்லா வகையான தேநீரும் நல்லது.

சாப்பிட்டபின் குளிர் பானங்களை அருந்துவது நம் உணவில் உள்ள கொழுப்புப் பொருட்களை உறைய வைத்து, இருதய நோய் ஏற்படக் காரணமாகிறது. உணவுக்குப் பின் சூடான தேநீர் குடிப்பது இந்த கொழுப்பை கரைத்து வெளியேற்றி விடுகிறது. தினமும் தேநீர் குடிப்பவர்களுக்கு கெட்ட (LDL) கொலஸ்ட்ரால் 10% குறைகிறது.

எடை குறைக்க விரும்புபவர்கள் க்ரீன் தேநீர் குடிப்பதால் நாம் செலவழிக்கும் சக்தி 4% அதிகரிக்கிறது. வெகு காலமாக உங்கள் எடை ஒரே அளவில் குறையாமல் இருந்தால் க்ரீன் தேநீர் குடிப்பது நல்லது. இது எடையை நிதானமாகக் குறைக்க உதவும்.

தேநீர் பைகளை (Tea bags) விட தேயிலைத் தூள் நல்லது. ஒரு கோப்பை க்ரீன், ப்ளாக் தேநீரில் ஒரு கரண்டி சமைத்த கேரட், ப்ரோகோலி, கீரை இவற்றில் இருப்பதைவிட அதிக ஆண்டிஆக்சிடேன்ட் இருக்கிறது.

குளிர்ந்த தேநீரை விட சூடான தேநீர் நல்லது.

சர்க்கரை சேர்க்காமல் தேநீர் எப்படிக் குடிப்பது என்று தோன்றினால் தேன் சேர்த்துக்கொள்ளலாம். இல்லை என்றால் பழத் துண்டுகள் போட்டுக் குடிக்கலாம்.

லெமன் தேநீர் என்று தேநீர் டிகாக்ஷனில் ஒரு சில துளி எலுமிச்சைச் சாறு சேர்த்து சாப்பிடலாம்.

தேநீர் தயாரிப்பு பற்றி:

பொதுவாக 2 கோப்பை தேநீர் வேண்டுமென்றால் ஒரு கோப்பை நீர் ஒரு கோப்பைப் பால் எடுத்துக் கொண்டு 2, 2½ தேக்கரண்டி தேயிலைத் தூள், 4 தேக்கரண்டி சர்க்கரை போட்டு அடுப்பில் வைத்து கொதிக்கும்போது இறக்கி வடிகட்டிக் குடிக்கலாம். தேநீருக்கு எப்போதும் சர்க்கரை அதிகம் வேண்டும். இந்தத் தேநீரில் இஞ்சி தட்டிப் போடலாம். எங்கள் அம்மா சுக்கு + மிளகு சரிபங்கு போட்டு இரண்டையும் பொடி செய்து வைத்துக் கொண்டு  தேயிலைத் தூள் போட்டவுடன் இந்தப் பொடியையும் ஒரு கால் தேக்கரண்டி போடுவார்.

ஜலதோஷம் வரும்போல் இருந்தால் கொதிக்கும் தேநீரில் துளசி, புதினா இலைகளைப் போடலாம். கற்பூரவள்ளி இலை கூடச் சேர்க்கலாம். ஒரு விஷயம்: இந்த இலைகளைப் போட்டு கொதிக்க வைக்கக் கூடாது. இலைகளின் சத்து போய்விடும்.

இப்போது எல்லா மூலிகைகளும் கலந்த தேயிலைத் தூள் கிடைக்கிறது. பால் இல்லாத தேநீர் குடிப்பது சற்று கஷ்டம்தான். எங்கள் வீட்டில் எப்போதும் பால் கலந்த தேநீர்தான். இதை எழுதி முடித்தவுடன் எப்போது அம்மா கையால் தேநீர் செய்து சாப்பிடப் போகிறேன் என்று சின்னதாக ஒரு ஏக்கம்!

High Tea?  நாளை…….

உருளைகிழங்கு: ஓர் அற்புதமான உணவு!


உருளைக்கிழங்கை ரசித்து ருசிக்காதவர்கள் உண்டா? சிப்ஸ், பொறியல், போண்டா, பஜ்ஜி, ரோஸ்ட், பூரி மசால் என்று அணுஅணுவாக அனுபவித்தாலும் அதைச் சாப்பிடும்போது மனதிற்குள் ஒரு சின்ன குற்ற உணர்ச்சி ‘ஐயோ! குண்டாகிவிட்டால் என்ன செய்வது?’ என்று. இல்லையா?

உடம்பு இளைக்க வேண்டும் என்று உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் உருளைக்கிழங்கை கண்ணால் பார்க்கவும் மாட்டார்கள். அதன் பெயரைக் காதால் கேட்கவும் மாட்டார்கள். கையால் அதைத் தொட்டு வாங்கவும் மாட்டார்கள். அப்படியொரு தீண்டாமை அதனிடத்தில்!

இவர்களுக்காகவே இந்தச் செய்தி: உருளைக்கிழங்கை ‘சூப்பர் உணவு’ என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.

வாழைப்பழம், புரோக்கோலி, பீட்ரூட், பட்டர் ப்ரூட் (avocado) ஆகியவற்றை விட உருளைக்கிழங்கு உடம்பிற்கு நன்மை பயக்கும் என்று புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.

முக்கியமாக வேகவைத்த உருளைகிழங்கில் (Baked or jacket potato) ஒரு சாதாரண வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்தைப் போல 5½  அடங்கு அதிக நார்ச்சத்து இருக்கிறது. பட்டர் ஃப்ரூட்டில் இருக்கும் ‘சி’ விட்டமினை விட அதிக ‘சி’ வைட்டமின் இருக்கிறது.. நாம் குழந்தைகளுக்குக் கொடுக்கும் கொட்டை வகைகள், விதை வித்துக்களை விட உருளைக்கிழங்கில் செலினியம் என்கிற தாதுப் பொருள் அதிகம் காணக் கிடைக்கிறது.

இரண்டு வேளை வேக வைத்த உருளைக்கிழங்கு சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையும். வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் உடலுக்கு நன்மை செய்வது போலவே, நம் உணவில் உருளைக்கிழங்கின் பங்களிப்பும் அதிகம் என்கிறது இந்த புதிய ஆராய்ச்சி.

இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டு இருக்கும் போது, வேறு ஏதாவது சுவாரஸ்யமான தகவல் கிடைக்குமா என்று ‘கூகிள்’ தேடு பொறியில் தேடியபோது மேற்சொன்ன ‘ஜாக்கட் பொடேடோ’ எப்படி செய்கிறார்கள் என்று தகவல் கிடைத்தது. இதோ அதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்:

கன்வெக்ஷன் (convection oven) அவன், மைக்ரோவேவ் அவன், பார்பிக்யு (Barbeque) க்ரில் அல்லது நேரடியாக நெருப்பிலும் உருளைக்கிழங்கை வேகவைக்கலாம். நீர் தேவையில்லை. இப்படி வேகவைத்த உருளைக்கிழங்கு வெளியில் கரகரப்பாகவும் உள்ளே மெத்துமெத்தென்று இருக்கும். இதனை வெண்ணெய், தக்காளி, இறால், சீஸ், மற்றும் ஹாம் (Ham)  உடன் சாப்பிடலாம்.

சமைப்பதற்கு முன் கிழங்கை நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும். மேலிருக்கும் கண்கள், அழுக்குகள் போக அலம்பித் துடைத்து விட்டு சிறிதளவு எண்ணெய் அல்லது வெண்ணெய் கொஞ்சம் உப்பு வேண்டுமானால் சேர்த்து கிழங்கின் மேல் தடவி வேக வைக்கலாம். இதனால் மேல் தோல் கரகரப்பாக இருக்கும். சமைக்கப்படும் போது ஃபோர்க் அல்லது கத்தியால் கிழங்கைக் கீறுவது அதன் உள்ளிருக்கும் நீராவி வெளியேற உதவும்.

உருளைக்கிழங்கை அலுமினியம் ஃபாயில் கொண்டு சுற்றியும் வேக வைக்கலாம். இதனால் உள்ளுக்குள் இருக்கும் ஈரத்தன்மை போவதில்லை. ஆனால் மேல்தோல் இந்த முறையில் கரகரப்பு ஆவதில்லை. பார்பிக்யு (Barbeque) க்ரிலில் சமைக்கும் போது அலுமினியம் ஃபாயிலில் சுற்றி வைத்தால் மேல்தோல் கருகாமல் இருக்கும். முழு உருளைக்கிழங்கை கரி அடுப்பில் நெருப்புத் தணல்களுக்கு இடையில் புதைத்து வைத்தும் சமைக்கலாம். ஆனால் மேல்தோல் கருகி சாப்பிட முடியாமல் போய்விடும்.

ஆகவே, பெரியோர்களே, தாய்மார்களே, உருளைக்கிழங்கை வேகவைத்துச் சாப்பிடவும். ரோஸ்ட், சிப்ஸ் என்று எண்ணையில் பொறித்து எடுத்து, அதன் இயற்கையான சத்துக்கள் அழியும்படி செய்து சாப்பிடாதீர்கள்!

கடவுள் அவசியமா?


ஒரு நாள் காலை உலகின் தலை சிறந்த 10 விஞ்ஞானிகள் நியுயார்க் நகரில் சந்தித்தனர். மிக முக்கியமான விஷயம் ஒன்றை பற்றி விவாதித்து முடிவு எடுக்க வேண்டும். விவாத விஷயம் “நமக்கு இன்னும் கடவுள் அவசியமா?” தலைப்பு கடவுளைப்பற்றி என்பதால் அவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. அவர்களது அழைப்புக்கு இசைந்து கடவுளும் ஆஜர்!

“சொல்லுங்கள் குழந்தைகளே……!”

ஒரு விஞ்ஞானி கூறினார்: “கடவுளே! நீங்கள் இதுவரை செய்து வந்தது எல்லாவற்றையும் இப்போது நாங்களே செய்து கொள்ளுகிறோம். நாங்களே உயிரினங்களைப் படைத்து, காத்து என்று எல்லாம், எல்லாம் உங்களைப் போலவே செய்யும் ஆற்றல் எங்களிடம் உள்ளது. உங்கள் உதவி இல்லாமல் இந்த பூலோகத்தையும் காத்துக் கொள்ளும் வல்லமை எங்களிடம் இருக்கிறது. அதனால் நீங்கள் இங்கு தேவை இல்லை. உங்களது அவசியம் இங்கில்லை. வேறு ஒரு கிரகத்திற்கு சென்று அங்கு உங்கள் வழக்கமான வேலைகளைத் தொடரலாம். அங்கிருப்பவர்களை சந்தோஷப் படுத்தலாம். என்ன சொல்லுகிறீர்கள்?”

கடவுள் பலமாகத் தலையை அசைத்தார். “உண்மை, குழந்தைகளே, நீங்கள் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை. உங்கள் விருப்படியே நடக்கிறேன். வேறு கிரகத்திற்கு போவதற்கு தடையொன்றும் இல்லை. ஆனால் போவதற்கு முன் உங்கள் திறமையை நிச்சயம் செய்து கொள்ள விரும்புகிறேன். அதற்காக ஒரு சிறிய பரீட்சை செய்து பார்க்கலாமா?”

எல்லோரும் ஒப்புக்கொண்டனர். கடவுள் சொன்னார்: “நீங்களாகவே ஒரு மனிதனை உருவாக்கிக் காட்டுங்கள், பார்க்கலாம்….!”

உடனடியாக அத்தனை பேரும் அவசர அவசரமாக புழுதியை சேகரிக்கத் தொடங்கினார்கள்.

கடவுள் சொன்னார்: “பொறுமை, குழந்தைகளே, பொறுமை! ஏன் இந்தப் பதட்டம்? எதற்காகப் புழுதியை சேர்க்கிறீர்கள்? “

“புழுதி எதற்கு என்று நீங்கள் எங்களை கேட்கிறீர்களா? நீங்கள் முதல் மனிதனைப் புழுதியிலிருந்து தானே உருவாக்கினீர்கள்?……”

கடவுள் நிதானமாகக் கூறினார்:

“நீங்கள் சொல்வது மிகவும் சரி. நான் புழுதியிலிருந்து தான் மனிதனை உருவாக்கினேன். அது நான் உருவாக்கிய புழுதி. நீங்கள் இப்போது, நீங்கள் உருவாக்கிய புழுதியில் இருந்து மனிதனை படைக்க வேண்டும்……தயாரா?”

எல்லோரும் பதில் சொல்ல முடியாமல் விழிக்க, கடவுள் மறைந்தார்!

ஒரு நாளைக்கு எத்தனை தண்ணீர் குடிக்க வேண்டும்?

எங்கள் வீட்டில் உள்ளவர்களை நான் அடிக்கடி கேட்கும் கேள்வி: தண்ணீர் குடித்தீர்களா? என்பதுதான். ஒருமுறை என் பேரனை இந்தக் கேள்வி கேட்டபோது அந்த வாண்டு சொல்லிற்று: “பாட்டி, பேசாம ஒரு நாளைக்கு எத்தனை தண்ணீர் குடிக்க வேண்டும் என்று உடனே ஒரு கட்டுரை எழுதேன். கொஞ்ச நேரம் நாங்கள் நிம்மதியாக இருப்போம்”

என்ன கட்டுரை எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த எனக்கு இந்த ஆலோசனை ரொம்பவும் பிடித்துப் போயிற்று. இதோ கட்டுரை:

ஒரு நாளைக்கு எத்தனை தண்ணீர் குடிக்க வேண்டும்?

கேள்வி என்னவோ மிகவும் எளிமையானதுதான். ஆனால் பதில் அளிப்பது அத்தனை சுலபம் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அளவில் தண்ணீர் தேவைப்படுகிறது. தனி மனிதரின் ஆரோக்கியம், அவரது வேலை – கடினமான உடல் உழைப்பு செய்பவரா? அல்லது உட்கார்ந்த இடத்தில் வேலை செய்பவரா? – அவர் வாழும் இடத்தின் பருவ நிலை இவற்றைப் பொறுத்து அவர் குடிக்க வேண்டிய நீரின் அளவும் வேறுபடும்.

நீர் என்பது நமக்கு மிக வேண்டிய, நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கவல்ல ஒரு பொருள். நமது உடலின் எடையில் நீரின் பங்களிப்பு 55-60 சதவிகிதம். ஒருவரின் வயது, அவரது உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு, ஆணா, பெண்ணா என்பதெல்லாம் கூட நாம் குடிக்கும் நீரின் அளவை நிர்ணயிக்கும்.

உணவு இல்லாமல் 2 மாதங்கள் இருக்கலாம், ஆனால் நீரில்லாமல் சில நாட்கள் கூட உயிர் வாழ முடியாது. நம் உடல் உறுப்புக்கள் சரிவர இயங்கவும் நீர் அத்தியாவசியமானது.

குறைந்த அளவு நீர் உட்கொள்ளுவது சிறுநீரகத்தை பாதிக்கும். இதனால் நம் உடலிலிருந்து யூரிக் ஆசிட், யூரியா, கால்சியம் ஆகியவை வெளியேறுவது தடைபடும். இதன் விளைவாக சிறுநீரகக் கற்கள் உருவாகலாம். சரியான அளவு நீர் குடிக்காது போனால்  நம் உடலின் மின்பகுப்பொருளின் (electrolytes) சமநிலை பாதிக்கப்பட்டு ஆழ் மயக்க நிலை, சில சமயம் மரணம் கூட சம்பவிக்கலாம்.

பேதி, வாந்தி போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் மருத்துவர்கள் நிறைய நீர் குடிக்கச் சொல்லுவார்கள். உடலிலிருந்து வெளியேறும் நீரினால் உடலின் நீர் குறைந்து, நீர் வறட்சி என்னும் டீஹைட்ரேஷேன் ஏற்படுவதைத் தடுக்கவே இந்த அறிவுரை. சிறுநீர் தொற்று (Urine infection) ஏற்பட்டாலும் நிறைய நீர் குடிக்க வேண்டியிருக்கும்.

நுரையீரல் நன்கு வேலை செய்யவும் நீர் இன்றியமையாதது. நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் பிராணவாயுவை கிரகித்து, கரியமில வாயுவை வெளியே விட நுரையீரல் ஈரப்பதத்துடன் இருப்பது அவசியம். நாம் உண்ணும் உணவு நன்கு செரிமானம் ஆக, நமது வளர்சிதை மாற்றத்திற்கு என்று நமது உடலின் ஒவ்வொரு செயலுக்கும் நாம் குடிக்கும் நீர் தான் உதவுகிறது. வியர்வையாக வெளியேறி நமது  உடலைக் குளிர்விப்பதும் நீர்தான். நம் மூட்டுக்களின் உராய்வை குறைப்பதும் நீர்தான். மூட்டு வலி, மூட்டு வீக்கம் இருப்பவர்கள் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு தம்ளர் நீர் குடிக்க வேண்டும்.

‘8X8 வழிமுறை’ உலகெங்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதன்படி ஒரு நாளைக்கு 8 அவுன்ஸ் அல்லது 8 தம்ளர் நீர்  குடிக்க வேண்டும். ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு தினசரி 2 லிட்டர் அல்லது 8 தம்ளர் நீர் கட்டாய வேண்டும்.

தண்ணீர் குடிப்பதைத் தவிர குறைந்த கலோரிகளைக் கொண்ட எலுமிச்சை நீர், கிரீன் டீ, இளநீர், மோர் இவற்றிலிருந்தும் போதுமான அளவு நீரேற்றம் (hydration) கிடைக்கும். இவற்றில் ஏதாவது ஒன்றை காலை, மதிய உணவுகளுக்கு இடையில் குடிக்கலாம்.

சுருக்கமாகச் சொன்னால் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 8 தம்ளர் நீர் வேண்டும்; ஒரேயடியாகக் குடிக்கக் கூடாது. போதுமான இடைவெளியில் பரவலாகக் குடிக்க வேண்டும். இத்துடன் மேற்சொன்ன பானங்களையும் அவ்வப்போது சேர்த்துக் கொள்ளலாம்.

கடைசியாக ஒன்று: பருவநிலைக்கு தகுந்தவாறு உட்கொள்ளும் நீரின் அளவைக் கூட்டிக் குறைத்து உட்கொள்ள வேண்டும்.

நீரின்றி அமையாது உலகம். நினைவு இருக்கட்டும்: நம் உடலும் நீரின்றி இயங்காது. போதுமான நீரேற்றதுடன் ஆரோக்கியமாக வாழ்வோம்.