உயிர் காக்கும் தோழன்

‘வாலைக் குழைத்து வரும் நாய்தான் – அது மனிதற்கு தோழனடி பாப்பா’ என்று அன்று பாரதி பாடியது, இன்று ‘உயிர் காக்கும் தோழனடி பாப்பா’ என்று மாற்றிப் பாடலாம். நிஜம் தான்.

நாய்கள் வெறும் செல்லப் பிராணிகள் மட்டுமல்ல; அவை தங்களது எஜமானர்களுக்கு வரும் நோய்களையும், அவற்றினால் உண்டாகும் அபாயகரமான அறிகுறிகளையும்  கண்டுபிடித்து அவர்களது உயிரைக்காப்பாற்ற உதவுகின்றன என்பது புதிய செய்தி.

சர்க்கரை நோயாளிகள் போதிய அளவு உணவு சாப்பிடாவிட்டாலோ, அல்லது தவறுதலாக அதிக அளவு இன்சுலின் எடுத்துக் கொண்டுவிட்டாலோ ‘ஹைபோ’ என்று சொல்லும் தீடீரென இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடும்நிலை ஏற்படலாம். இதன் விளைவாக நோயாளி பலவீனமாகி, நிறம் வெளுத்து, தடுமாறலாம். இந்த அறிகுறிகளை அவர் உணரவில்லை, உடனடியாக மருத்துவ உதவி கிடைக்கவில்லை என்றால் சுய உணர்வை இழக்கலாம்.

ஒரு பயிற்சி அளிக்கப்பட்ட நாய் தனது எஜமானரின் உடலில் சர்க்கரைக் குறைவால் தோன்றும் மாறுபட்ட வாசனையை அறிந்து அவரை எச்சரிக்கிறது. மெடிக்கல் டிடக்ஷன் டாக்ஸ் (Medical Detection Dogs) அமைப்பை சேர்ந்த டாக்டர் கிளேர் கெஸ்ட் “ எங்களது பயிற்சி பெற்ற நாய்கள் நோயாளியை நாக்கால் நக்கியும், அவரது முழங்கையில் இடித்தும், அவரையே வைத்த கண் வாங்காமல் முறைத்துப் பார்த்தும் ‘நீ சரியாக இல்லை; உடனே மருத்துவரைப் பார்’ என்று எச்சரிக்கை செய்கின்றன”. என்கிறார்.

நாய்கள் ஆட்டிசம் நோயாளிகளின் மன அழுத்தத்தையும், ஆக்ரோஷமான நடத்தையையும் சில வாரங்களிலேயே குறைப்பதாக தெரிகிறது.

டாக்ஸ் ஃபார் தி டிசேபில்ட் (Dogs for the Disabled) என்ற அமைப்பு, வீட்டில் வளரும் செல்ல நாய்களுக்கு ஆட்டிசம் குழந்தைகளுக்கு உதவி செய்ய இலவசமாக பயிற்சி அளிக்கிறது

“ஆட்டிசம் குழந்தைகள் மன அமைதி இல்லாமல் தவிக்கும்போது நாய்கள் தங்களது தலையை அவர்கள் மடியில் வைத்து அவர்களை அமைதிப் படுத்த நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம். அதேபோல குடும்பத்துடன் வெளியில் போகும்போதும் இவை குழந்தைகளுடன் கூடவே போய் அவர்கள் வேறு எங்காவது வழி தவறிச் சென்று விடாமல் காக்கின்றன” என்று மேல்சொன்ன அமைப்பைச் சேர்ந்த ஜோயல் யங் கூறுகிறார்.

அமெரிக்காவில் இருக்கும் பாஸ் ஃபார் கம்பர்ட் (Paws for Comfort) என்ற அமைப்பு, சில நோய்களால் மிகுந்த வலிகளுக்கு ஆளாகும் நோயாளிகளுக்கு ஆறுதல் கொடுக்க சைலோ (Xylo) வகை நாய்களை பயிற்றுவிக்கிறார்கள். பொதுவாகவே நாய்களின் உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும். இந்த சைலோ வகை நாய்களின் உடலில் உரோமம் இருப்பதில்லை; அதனால் அவைகள் மிகுந்த வெப்பத்தை வெளிப்படுத்துகின்றன. இவை தங்கள் எஜமானர்களுடன் நெருங்கி படுத்து வலி குறைய ஒத்தடம் போலத் தங்களது உடல் வெப்பத்தைப் பயன்படுத்துகின்றன.

டிமென்ஷியா என்னும் மறதி நோய் உள்ளவர்கள் வீடுகளில் லாப்ரடார், கோல்டன் ரீட்ரீவ் போன்ற நோய்களை வளர்ப்பது நல்லது. இவைகள் தங்கள் எஜமானர்களுக்கு நேரத்தில் சாப்பிடவும், மருந்துகளை உட்கொள்ளவும், ஒய்வு எடுத்துக் கொள்ளவும், தேவைப்படும் போது தூங்கவும் உதவி செய்ய பயிற்றுவிக்கப்படுகின்றன.

சமீபத்திய வெஸ்டர்ன் ஜர்னல் ஆப் நர்ஸிங் ரீசர்ச் இதழில் வெளியான ஒரு ஆய்வு, வீட்டு நாய்கள், மறதி நோயாளிகளின் மனக் கிளர்ச்சிகளைக் குறைத்து அவர்களது சமூக தொடர்புகளை மேம்படுத்த உதவுகின்றன என்று கூறுகிறது.

வலிப்பு நோயாளிகளுக்கு எச்சரிக்கை கொடுக்க நாய்களுக்கு பயிற்சி அளிக்கப் படுகிறது. இந்நோயாளிகளின் உடலில் வலிப்பு ஏற்படுவதற்கு சுமார் 40 நிமிடங்களுக்கு முன்பே அவர்களில் உடலில் உண்டாகும் இரசாயன மாற்றத்தை நாய்கள் மோப்பம் பிடிக்கின்றன. அவர்களை மருத்துவ உதவியை நாடும்படி அறிவுறுத்துகின்றன.

சில நாய்கள் வலிப்பு நோயாளிகளின் அருகிலேயே படுத்துக் கொண்டு அவர்கள் அசையாமல் இருக்கச் செய்கின்றன; அவர்களை காயம் பட்டுக் கொள்ளாமல் பாதுகாப்பதுடன், ஓடிப் போய் உதவிக்கு ஆட்களை அழைத்து வரவும் செய்கின்றன.

நார்கோலப்சி என்ற துயில் மயக்க நோய் பிரிட்டனில் சுமார் 25,000 மக்களை பீடிக்கிறது. இவர்கள் தங்களது அன்றாட வேலைகளைச் செய்து கொண்டே இருக்கும்போது அப்படியே தூங்கி விடுவார்கள். எஸெக்ஸில் இருககும் தியோ என்ற காக்கர் ஸ்பெனியல் நாய்தான் இவ்வகை நோயாளிகளுக்கு உதவ பயிற்சி அளிக்கப் பட்ட முதல் நாய். இது தன் இளம்வயது எஜமானியான கெல்லி சியர்ஸ் என்ற நார்கோலப்சி  நோயால் பாதிக்கப் பட்ட பெண்ணை அவள் தூங்கத் தொடங்கும் போதெல்லாம் நாக்கால் நக்கியும் முட்டியும் தூங்கிப் போய்விடாமல் செய்கிறது. ஒருவேளை தூங்கி விட்டால் ஓடிப் போய் உதவிக்கு ஆட்களைக் கூட்டி வருகிறது. கெல்லியின் உடலில் உண்டாகும் மாறுபட்ட வாசனையை உணர்ந்து அவளை உடனடியாக உட்காரச் செய்யவும் இப்போது இந்த நாய்க்குப் பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது.

இந்தச் செய்தி படித்தவுடன் பாரதியின் வார்த்தைகள் எத்தனை உண்மை என்று தோன்றுகிறது.

இனிமேல் நமக்குப் பிடிக்காதவர்களை ‘நாயே..’ என்று திட்டக் கூடாது, இல்லையா?