பேஸ் புக்கின் இமாலய வெற்றியை வீழ்த்த முடியுமா? (கடைசி பாகம்)

நாம் உரிமையைப் பற்றிப் பேசும்போது இன்னும் சில விஷயங்களைக் கவனிக்கவேண்டும். பேஸ்புக் நம்மைப் பற்றிய தகவல்களுக்கு உரிமை கொண்டாடுகிறது. பேஸ்புக்கின் உரிமையே குறிப்பிடத்தக்க வகையில் ஒரே இடத்தில் குவிந்துள்ளது. S-1 அறிக்கையில் நம்மை திடுக்கிட வைப்பது பேஸ் புக்கின் மூர்க்கத்தனமான சமூக நோக்கம் மட்டுமல்ல; பில் கேட்சையும் மிஞ்சக் கூடிய வகையில் ஸக்கர்பெர்க்கிடம் உள்ள 57% வாக்குரிமையுடன் கூடிய பங்குகளும், பேஸ்புக்கின் இலக்கின் மேல் அவருக்குள்ள அதிகாரமும்தான். இது ஒரு அறிவாற்றல் மிக்க முரண்பாடு: உலகத்திற்கு அவர் சொல்லுவது பீர் டு பீர் நெட்வொர்க் – தனது நிறுவனத்திற்குள் அவர் விரும்புவது ஒரு இடத்தில் குவிக்கப்பட்ட டாப்-டவுன் (top-down) கட்டுப்பாடு!

21 பக்கங்கள் கொண்ட S-1 அறிக்கை, வரும் வருடங்களில் பேஸ்புக்கின் எதிர் காரணிகளாக (risk factors) அதன் போட்டியாளர்களான கூகிள், ட்விட்டர், மைக்ரோசாப்ட் மற்றும் இதர சமூக வலைத் தளங்களிடமிருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்களையும் குறிப்பிடுகிறது. ஆனால் போட்டியாளர்களே இல்லாத நிலை (antitrust) பற்றி மௌனம் சாதிக்கிறது. “சட்டதிட்டங்களில் ஏற்படும் கட்டாய மாற்றங்கள், ஒழுங்கு முறை அதிகாரிகள், வழக்கு மன்றங்களில் கிடைக்கும் தீர்ப்பாணைகள் ஆகியவை எங்கள் மேல் ஏற்றத் தாழ்வான விளைவுகளை உண்டாக்கலாம்” என்று ஒரே ஒரு கருத்தை மட்டும் பேசுகிறது.

பேஸ் புக் முதன்முறையாக புகைப்பட சேவையை தொடங்கியபோது – அதன் சில செயல்பாடுகள் ப்ளிக்கர், போட்டோபக்கெட் இவற்றைவிட தரம் குறைவாக இருந்தபோதும் – எப்படி நொடியில் உலகின் மிகப் பெரிய புகைப்படக் களஞ்சியமாக ஆனது என்பதைக் குறித்து மிக சந்தோஷமாக விவரிக்கிறார் திரு ஸக்கர்பெர்க். அவரது கருத்துப்படி புகைப்பட பகிர்தல் அவர் தனது போட்டியாளர்களுக்கு தனது வல்லமையை காட்ட பயன்படுத்தும் ஒரு துருப்புச் சீட்டாகும். பேஸ் புக்கின் புகைப்பட பகிர்தலின் மேலாதிக்கம் எதைக்காட்டுகிறது என்றால் ஒரு நிறுவனம் ஒரு துறையில் தனக்கு இருக்கும் செல்வாக்கால் தனது போட்டியாளர்களை இன்னொரு துறையில் நசுக்கப் பார்க்கிறது என்பதைத்தான். பேஸ் புக்கின் வளர்ச்சி இதே போலத் தொடரும் என்ற நிலையில், அடுத்தமுறை அது இன்ஸ்டாகிராம் அளவில் வேறொரு கையகப்படுத்துதலுக்கு முயலும்போது, வழக்கறிஞர்கள் அதை மிகவும் கூர்ந்து பரிசீலனை செய்யக் கூடும்.

பேஸ் புக் தனது போட்டியாளராக கூகிள்+ என்று சொல்லுவது மிகச் சரி. ஏனெனில் தொடங்கிய ஒருவருடத்திற்குள் 170 மில்லியன் பயனர்களை அது பெற்றிருக்கிறது. மற்ற சின்னசின்ன வலயதலங்களும் – போர்ஸ்கொயர், பாத், ஸ்போட்டி – போன்றவைகளும் தங்கள் பங்கிற்கு மெதுமெதுவே பெரிய ஜனத் தொகையை எட்டிப்பிடிக்க முயன்று கொண்டிருக்கின்றன. ஆனால் பேஸ் புக் அவர்களை தனது அபரிமிதமான வளர்ச்சியால் குறு நிறுவனங்களாகச் செய்துவிடும். அதிக மக்கள் ஒரு இணையதளத்தில் சேரும்போது அதன் பயன்பாடு அதிகரித்து, இன்னும் அதிக மக்களை கவர்ந்து இழுக்கிறது. 1990 களில் விண்டோஸின் இயங்குதளமும், 2000 த்தில் கூகிள் தொடங்கிய விளம்பர வர்த்தகமும் இந்த விதமான வெற்றியால் antitrust புலனாய்வு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

S-1 அறிக்கையில் தன்னை வலையதள ஏகபோக உரிமையாளர் என்று மக்கள் நினைப்பார்களோ என்ற கவலையை விட, போட்டிகளால் தன்னை குறைத்து மதிப்பிட்டு விடுவார்களோ என்ற கவலை அதிகம் தெரிகிறது. ஆனால் பேஸ் புக்கிற்கு antitrust புலனாய்வு ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஆக இருக்கும். பேஸ்புக், இணைய தளத்திலிருந்து ஒரு ஊடகமாக மாற விரும்பினால் ஸக்கர்பெர்க்கும் அவரது குழுவினரும் அவர்களது இந்த சமூக வலைப்பின்னலை வெளிப்படையாக மாற்ற  ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும்.

“பேஸ்புக் நிறுவனம் ஆக இருப்பதற்காக உருவாக்கப் படவில்லை” என்று ஸக்கர்பெர்க் சொன்னாலும் இப்போது உலகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனம் ஆகி விட்டது. பேஸ் புக் இப்போது உலகத்தை சிறந்தமுறையில் இணைக்கப் பட்ட இடமாக மாற்றி இருக்கிறது. இது மிகவும் பாராட்டுக்கு உரிய விஷயம். தனது சமூக நோக்கம் ஒரு திறந்த, வெளிப்படையான ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஸக்கர்பெர்க் விரும்பினால் சில மதில்களை உடைத்துக் கொண்டு வர வேண்டியிருக்கும்.

written by Steven Johnson / translated by Ranjani Narayanan

Leave a comment