பேஸ்புக்கின் இமாலய வெற்றியை வீழ்த்த முடியுமா?

2004 ஆம் ஆண்டு மார்க் ஸக்கர்பெர்க் தனது விடுதி அறையில் உட்கார்ந்து கொண்டு பேஸ்புக்கின் முதல் பன்முறை செயலாக்கத்திற்கான குறியீடுகளை எழுதிக் கொண்டிருந்த போது இணையதள வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் நடப்பட்டது. உலகம் முழுவதும் 750 மில்லியன் மக்கள் பேஸ் புக்  மூலம் இணைக்கப் பட்டனர். இணையதளம் எப்போது ஆரம்பித்தது என்று சரியாகச் சொல்ல முடியாது; ஆனால் இத்தனை பெரிய ஜனத்தொகையை அடைய அதற்கு சுமார் 30 வருடங்கள் ஆகியிருக்கிறது.

தொடங்கிய 8 வருடத்தில் 750 மில்லியன் பயனர்கள் பேஸ்புக்கிற்கு மட்டுமே இருக்கிறார்கள். இந்த அசுர வளர்ச்சியில் காரணமாக ஒரு மல்டிமில்லியன் டாலருக்கு தன் நிறுவன பங்குகளை பொது மக்களுக்கு விற்க இருப்பதைத் தவிர இன்னும் பலவற்றை பேஸ்புக் சாதிக்க இருக்கிறது.

இப்போது பேஸ்புக் தனியான ஒரு ஊடகமாக – தொலைக்காட்சி போல ஆகலாம்; எல்லோரும் வந்து சேருமிடமாக மட்டும் அல்லாமல் தனியாக ஒரு முழுமையான வலைய தளம் ஆக உருவாகலாம். இதற்கு வெறும் பயனர்களின் எண்ணிக்கை மட்டும் காரணமல்ல. பல வர்த்தக நிறுவனங்கள் பழைய தொழில் உத்திகளைக்  கைவிட்டுவிட்டு, பேஸ் புக்கில் மட்டுமே தங்கள் நிலையை தெரியப்படுத்த விரும்புவதும் இன்னொரு காரணம்.

பேஸ்புக் அமைத்துக் கொடுத்த மேடை ஏற்கனவே ஒரு பில்லியன் டாலர் முதலீட்டில் சைங்கா (Zynga) என்ற இணையதள விளையாட்டுக் கம்பனிக்கு வித்திட்டுள்ளது. இன்ஸ்டாக்ராம் என்ற புகைப்பட இணையதளத்தை விழுங்கி விட்டது. 2009 இல் 4½ மணி நேரம் பேஸ் புக்கில் செலவழித்து வந்த மக்கள் இப்போது 7 மணி நேரம் செலவழிக்கிறார்கள்.

பேஸ் புக்கின் வளர்ந்துவரும் மேலாதிக்கம் இணையதளத்தின் 3 வது பரிணாம வளர்ச்சி என்று சொல்லலாம். முதல் கட்டத்தில் இணையதளம் peer-to-peer architecture, packet-switched data இவற்றை பிரபலப்படுத்தியது. அடுத்தபடியாக  வலைப்பின்னல்களால் ஆன பக்கங்களையும் அவற்றிலிருந்து மற்ற பக்கங்களுக்கு போக மிகவும் சுலபமான பின் குறிப்பு போன்ற தொடுப்புகளையும் (network of “pages” and footnote-like links) நடைமுறைபடுத்தியது. இவையிரண்டும் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருந்தபோதிலும், இவை முற்றிலும் தகவல்களைச் சுற்றியே இருந்தன – மக்களைச் சுற்றி அல்ல. ஒரு கணணி விஞ்ஞானியின் கண்ணோட்டத்தில் இவை குறைகள் அல்ல. ஆயினும் மக்கள் உலகத்தைப் பார்ப்பது தங்களது நண்பர்கள், குடும்பத்தினர்கள், சக பணியாளர்கள் மூலம்தான்.

அதனால் சமூக இணையத்தளங்களின் ஈர்ப்பு அதிகமாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. பேஸ் புக்கின் வருகையால் வலையத்தின் முகமே மாறிவிட்டது. வலையத்தின் இயக்கும் சக்திகள் ( packets, DNS look-ups etc.,) பின்னுக்குத் தள்ளப்பட்டன; அல்லது கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டன.பேஸ் புக் இப்போது வலையத்தையே எதிர்த்து தற்காப்புப் போர் செய்ய ஆயத்தமாகிவிட்டது. வலையம் என்பது தனி ஒருவரின் சொத்து அல்ல; நம் எல்லோருக்கும் பொதுவானது; ஆனால் பேஸ் புக் வந்தவுடன் நாம் எல்லோரும் நிலத்தில் வேலை செய்யும் குத்தகைதாரர் போல ஆகிவிட்டோம். நம் உழைப்பால் நல்ல விளைச்சல் கிடைக்கிறது ஆனால் நிலம் வேறு யாருடையதோ!

இந்த இமாலய வெற்றி, பேஸ் புக்கிற்கு முதலாளித்துவ வரலாற்றில் மிகச்சிறந்த பங்கு சந்தையை ஏற்படுத்தும் என்றபோதிலும் அதை விமர்சனம் செய்பவர்கள் பெருகி வருகிறார்கள். உங்கள் வியாபாரத்தை அதே தெருவில் வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ளுவது சாத்தியம் என்றால் உங்கள் வியாபாரத்திற்கு இடையூறு செய்யும் பெருநிறுவனத்தின் நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் அந்தத் தெருவே அந்த நிறுவனத்திற்கு சொந்தம் என்னும்போது சின்னசின்ன வரம்பு மீறுதல் கூட பெரிதாக்க படுகிறது. சில வருடங்களுக்கு முன், பேஸ்புக் மிகப் பெரிய அளவில் நமது நேரத்தை வீணடிப்பதாக புகார் எழுந்தது. இப்போது பேஸ் புக் நமது சமூக மதிப்பு, மற்றும் நமது அந்தரங்கம் இவற்றுக்கு ஒரு அச்சுறுத்துதல் என்று இன்னும் பலமான புகார்கள் வரத் தொடங்கி உள்ளன.

பேஸ்புக் எதிர்ப்பாளர்கள் உரத்துக் கூச்சலிடுவது அதனுடைய அடாவடித்தனமான அந்தரங்க காப்புரிமைகள் பற்றித்தான். பயனர்களது ஆன்லைன் விவகாரங்களை – வாங்கும் பொருட்கள் முதலிய விவரங்களை – அவர்களுக்கே தெரியாமல் பேஸ் புக் அவர்களின் நண்பர்களுக்கும், விளம்பரதார்களுக்கும் ‘Beacon’ – personalized advertisement என்ற பெயரில் தெரியப்படுத்திய போது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அதனை ரத்து செய்ய வைத்தனர்.

இப்போது புதிதாக ஓபன் க்ராஃப் என்ற நெறிமுறை நீங்கள் ஒரு பேஸ் புக் அப்ளிகேஷனை எப்படி பயன்படுத்து கிறீர்கள் என்ற தகவலை மற்ற பயன்பாடுகளுக்கும் வழங்கும். இது மிகவும் புதுமையான, உபயோகமுள்ள பல கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுக்கும் – ஒரு மிகப் பெரிய அக்கறையற்ற சமூகக் கேளிக்கைகளுக்கும் கூட என்பதை சொல்லத் தேவையில்லை – என்றாலும் நம்மைப் பற்றிய தகவல்கள் எங்கே போகிறது, எந்தெந்த வகையில் பகிரப்படும் படும் என்பதைக் கண்காணிக்க நமக்கு நேரம் போதாது. நீங்கள் ஒரு பயன்பாட்டை உபயோகிக்க விரும்பி சைன்-இன் செய்யும்போது ஒரு எச்சரிக்கை செய்தி வருகிறது: இந்தப் பயன்பாடு உங்கள் சார்பில் உங்களது அந்தஸ்து நிலை தகவல்களையும், குறிப்புகளையும், புகைப்படங்களையும், நிகழ் படங்களையும் போடக் கூடும்; உங்களைப்பற்றிய தகவல்களை எப்போது வேண்டுமானாலும் பெற முடியும்; நீங்கள் இந்த பயன்பாட்டுப் பொருளை உபயோகப்படுத்தாத நிலையிலும் உங்களைப் பற்றிய தகவல்களை பெற முடியும் என்று. தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், இது தடங்கலற்ற பகிர்வு என்பதன் பின் விளைவுகளை குறிப்பிடுகிறது என்று சொல்லலாம். ஆனால் நடைமுறையில் நாம் எதற்காக உள்நுழைகிறோம் என்று பயனர்களுக்குத் தெரியுமா?

தொடரும்…..