உடற்பயிற்சியா?……

 

உடற்பயிற்சியா?……சரியான ‘போர்’ ……!

…..என்று சொல்பவரா நீங்கள்? இதோ உங்களுக்காகவே இந்தச் செய்தி.

இன்னொருவருடன் உடற்பயிற்சி செய்வது உற்சாகத்தைக் கொடுக்கும்; தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணமும் நிலைத்து நிற்கும் என்று எப்போதுமே மருத்துவர்கள் சொல்லுவார்கள். உங்கள் துணைவருக்கும் உடற்பயிற்சி சரியான ‘போர்’ என்றால்……..?

ஒரு உடற்பயிற்சி துணைவரை வேலைக்கு அமர்த்த வேண்டியதுதான்! ‘ஏற்கனவே ஜிம்முக்கு மாதாமாதம் அழுகிறோம்…. இன்னும் இந்த ‘உடற்பயிற்சி துணைவருக்கு வேறு அழவேண்டுமா?’ என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. இந்தத் துணைவர் ‘ஒரு கற்பனைத் துணைவர்’ தான். அதாவது virtual partner.

மிச்சிகன் பல்கலைக்கழகம் 58 இளம் பெண்களைத் தேர்ந்தெடுத்து உடற்பயிற்சி சைக்கிளில் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் பயிற்சி செய்யச் சொன்னார்கள்.

ஒரு குழு தனியாக பயிற்சி செய்தது. இன்னொரு குழுவிற்கு பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன் வீடியோ மூலம் ஒரு கற்பனைத் துணைவரை அறிமுகப்படுத்தினர். அந்த கற்பனை துணைவரும் இவர்கள் பயிற்சி செய்யும்போது வேறு ஒரு இடத்தில் இதே பயிற்சியை செய்து கொண்டிருப்பார்கள் என்று சொல்லப் பட்டது.

பயிற்சியின் போது இவர்கள் தங்களது செயல்பாட்டை கண்காணிக்க முடிந்தது. இவர்களது கற்பனை துணைவர் இவர்களை விட சற்று அதிகம் செய்வதாக இவர்களிடம் சொல்லப் பட்டது.

பயிற்சி முடிந்தபின் இந்தப் பெண்களிடம்  அவர்கள் உடற்பயிற்சி செய்யும் நோக்கம் என்ன; அவர்கள் எத்தனை தூரம் நன்றாக செய்தனர்; எந்த அளவுக்கு சோர்வு அடைந்தார்கள் என்ற கேள்விகள் கேட்கப்பட்டன.

தனியாக உடற்பயிற்சி செய்த பெண்களைவிட ‘கற்பனைத் துணைவருடன்’ உடற்பயிற்சி செய்தவர்கள் 22 நிமிடங்கள் அதாவது தனியாகச் செய்தவர்களை விட இரண்டு மடங்கு அதிக நேரம் பயிற்சி செய்திருக்கிறார்கள். உடற்பயிற்சி செய்யும்போது இவர்களது உற்சாகமும் குறையவில்லை.

 

தங்களது உடல் உழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த வழி. அதுமட்டுமின்றி நீண்ட நாட்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும் இந்த முறை வழி வகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.