ப்ளாஸ்டிக் அழிவிலிருந்து உலகைக் காக்க முடியுமா?

எங்கு பார்த்தாலும் ப்ளாஸ்டிக் மயம். பால் பாக்கெட்டிலிருந்து பல் பொடி வரை எல்லாமே ப்ளாஸ்டிக் பைகளில் அல்லது ப்ளாஸ்டிக் ட்யூப்களில். உலகமே இந்த ப்ளாஸ்டிக்கிற்கு அடிமைப் பட்டுக் கிடக்கிறது.

மனிதனின் வாழ்க்கைக்கு மிக இன்றியமையாத பசுமைச் சூழலுக்கு இந்த ப்ளாஸ்டிக் மயத்தால் பெரும் ஆபத்து.

ப்ளாஸ்டிக் என்பது பெட்ரோலிய ரசயானப் பொருட்களால் ஆனது; மிகவும் நிதானமாக மக்கக்கூடியது; இதில் இருக்கும் சிக்கலான ரசாயனக் கலவைகளால் இயற்கையாக மண்ணோடு மண்ணாகி மக்கும் தன்மை இதற்கு மிகக் குறைவு.

1950 களிலிருந்து சுமார் ஒரு பில்லியன் டன் ப்ளாஸ்டிக் கழிவுகள் வெளியேற்றப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தக் கழிவுகள் இன்னும் பல நூறாண்டுகள், ஏன் ஆயிரமாண்டுகள் கூட அழியாமல் இருக்கக்கூடும்.

இப்போது அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் புதிதாக ஒரு பூஞ்சை – அதாவது பூஞ்சக்காளான் (fungus), இந்தப் ப்ளாஸ்டிக்கை அழிக்கக் கூடும் என்று கண்டறிந்து உள்ளார்கள். இந்தப் பூஞ்சை, ப்ளாஸ்டிக்கினால்  உண்டான சுற்றுச்சூழல் அழிவிலிருந்து மனிதனைக் காக்கும் என்று சொல்லுகிறார்கள்.

கனெக்டிகட் யேல் பல்கலைக் கழக மாணவர்கள் சிலர் அமேஸான் மழைக் காடுகளில் இருக்கும் ஒருவித பூஞ்சை ப்ளாஸ்டிக் பாலியூரேதேனை (polyurethane) அழிக்கவல்லது என்று கண்டுபிடித்துள்ளனர்.

அப்ளைடு அண்ட் என்வயரன்மென்டல் மைக்ரோபயாலாஜி  என்ற இதழில் இந்த ஆராய்ச்சி பற்றி இந்த மாணவர்கள் எழுதியுள்ளார்கள்.

“ஈக்வடோரியன் மழை காடுகளில் இருக்கும் தாவரங்களின் தண்டுகளில் இருந்து என்டோஃபைட்டுகளை பிரித்தெடுத்து ஆராய்ந்து இருக்கிறோம்.

என்டோஃபைட்டுகள் தாவரங்களின் உட்புற திசுவில் இருக்கும் மிக நுண்ணிய உயிரினம். வளரும் தாவரங்களுக்கு இவை எந்தவிதமான பாதிப்பையும் உண்டு பண்ணுவதில்லை. ஆனால் தாவரங்கள் இறந்துபோன பின் அவை மக்குவதற்கு உதவுபவை. இதுவரை இவற்றால் செயற்கை பொருட்களை மக்கச் செய்ய முடியுமா என்று ஆராயந்ததில்லை.

இந்த உயிரினத்தின் ஒரு சிறிய பகுதி மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு, இவற்றால் பாலியூரேதேனை தரமிழக்கச் செய்ய முடியுமா என்று சோதனை நடந்திருக்கிறது.

பூமியில் இருக்கும் பல லட்சக்கணக்கான தாவரங்கள் என்டோஃபைட்டுகள் வளர உதவுகின்றன. இந்த என்டோஃபைட்டுகளின்  பண்புகளை விரிவாக ஆராய்வதன் மூலம் இதன் உண்மையான பலவகையான வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் தெரிய வரும். வெப்பமண்டலக் காடுகளில் இருக்கும் தாவரங்களில் இதன் பன்முகத் தன்மை இன்னும் நன்றாகத் தெரிய வரும்.

மேன்மேலும் இந்தத் துறையில் ஆராய்ச்சி செய்வதன்மூலம், பலவகையான ப்ளாஸ்டிக் பொருட்களை தரமிழக்கச் செய்ய முடியும்”.

இவ்வாறு இவர்கள் எழுதியுள்ளார்கள்.