பூக்களைப் ……..பறிக்காதீர்…….!

தும்கூரில் எங்கள் பள்ளியைச் சுற்றி விதவிதமான செடிகள், மரங்கள்; பார்க்க மிக ரம்மியமாக இருக்கும். ஒவ்வொரு வகுப்பறையை சுற்றிலும் வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்கும் செடிகள்; பள்ளி வளாக சுற்று சுவரை ஒட்டினாற் போல விண்ணை முட்டும் உயரமான மரங்கள். பள்ளியில் நுழைந்த உடன் வேறு ஏதோ உலகத்திற்கு வந்து விட்டாற்போல ஒரு சூழ்நிலை. கண்ணுக்கு அத்தனை குளுமையாக இருக்கும். பள்ளியை சுற்றிப் பூங்காவா? அல்லது பூங்காவிற்குள் பள்ளியா என்று கேட்கத் தோன்றும். ரோஜாக்களில் எத்தனை வண்ணங்கள் உண்டோ அத்தனையையும் இங்கே பார்க்கலாம். எப்படி இயற்கை அன்னை இந்த இடத்தில் மட்டும் இத்தகைய எழிலைக் காட்டுகிறாள் என்று பலசமயங்களில் எனக்குத் தோன்றும்.

நான் சங்கீத ஆசிரியை. என் வேலை பிரார்த்தனையை நடத்துவது. அது முடிந்தபின் எனது வகுப்பு உடனடியாக இருந்தால் அங்கேயே இருப்பேன். இல்லையென்றால் வீட்டிற்கு வந்து விடுவேன்.

ஒரு நாள் எங்கள் தலைமை ஆசிரியர் பிரார்த்தனை முடிந்தவுடன் என்னைப் பார்த்து “ஒரு ‘நேச்சர் வாக்’ போய்விட்டு வாருங்களேன்” என்றார்.

“’நேச்சர் வாக்……’ ?” நான் புரியாமல் பார்த்தேன்.

“அதோ, அந்தக் குழந்தைகளுடன் சேர்ந்து கொள்ளுங்கள்…” என்று கை காட்டினார். அவர் காட்டிய திசையில் ஒரு ஆசிரியை குழந்தைகளுடன் பள்ளியைச் சுற்றி நடந்து கொண்டிருந்தார். நானும் அவர்களுடன் நடக்க ஆரம்பித்தேன்.

ஒரு புதுமையான அனுபவம் எனக்காகக் காத்திருந்தது அங்கே. அந்த ஆசிரியை குழந்தைகளுக்கு ஒவ்வொரு செடியின் பெயரையும் சொல்லி, அது செடி வகையா, கொடி வகையா, புதர் வகையா, அல்லது நீண்டு நெடிதுயர்ந்து வளரும் மரமா  என்று சொல்லிக் கொண்டே வந்தார். அதுமட்டுமல்ல. ஒவ்வொரு குழந்தையும் செடிகளை தொட்டுப் பார்த்து அதன் இலை அமைப்பு, தன்மை, அளவு, வண்ணம் ஆகியவற்றை அவர்களுக்குத் தெரிந்த வரையில் சொல்லிக் கொண்டிருந்தன. அதேபோல பூக்களின் பெயர்கள், பூக்கும் காலம், அந்தச் செடியை எப்படிப் பயிரிடுவது – அதாவது விதையை நடவேண்டுமா அல்லது பதியன் போட வேண்டுமா என்ற விவரங்களையும் ஆசிரியை சொன்னார். சிறிது தூரம் சென்றபின் குழந்தைகள் தாங்களாவே அங்கிருந்த செடிகளைப் பற்றிய விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தனர்.

“புதிதாக நட்ட செடிகளைப் பற்றி மட்டும்தான் நான் சொல்லுவேன். இந்தச் செடிகளை அவர்கள் பலமுறை பார்த்திருப்பதால், அவர்களுக்கே எல்லாம் தெரியும். வேறு எந்த இடத்தில் இந்தச் செடிகளைப் பார்த்தாலும் இந்தக் குழந்தைகளால் பெயர் சொல்லி அடையாளம் காட்ட முடியும்.” என்று எனக்கு விளக்கினார் ஆசிரியை.

ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வகுப்புக் குழந்தைகள் அவர்களது ஆசிரியைகளுடன் இந்த ‘நேச்சர் வாக்’ பண்ணுகிறார்கள்.

நேச்சர் வாக்’ முடித்துக் கொண்டு வந்த என்னிடம் எங்கள் தலைமை ஆசிரியர் மிகப் பெருமையாக சொன்னார்: “குழந்தைகளின் கையாலேயே பல செடிகளை நடச் செய்கிறோம். நட்டபின் தினமும் நீர் ஊற்றி அவற்றைப் பராமரிப்பது அவர்கள்தான். முளை விடுவதிலிருந்து ஒவ்வொரு நாள் வளர்ச்சியையும் அவர்கள் கண்கூடாகப் பார்க்கிறார்கள். இதனால் இயற்கை தங்கள் வாழ்வில் ஒரு அங்கம் என்று சிறு வயதிலேயே இந்தக் குழந்தைகள் உணருகிறார்கள். எங்கள் பள்ளியில் ‘புற்களின் மேல் நடக்காதே’, ‘பூக்களைப் பறிக்காதே’ என்ற அறிவிப்பு பலகை கிடையாது. குழந்தைகள் இயற்கையைப் பேணுவது தங்கள் கடமை என்று பள்ளிப் பருவத்திலேயே தெரிந்து கொண்டு விடுகிறார்கள்.”

பிஞ்சுக் குழந்தைகளின் பிஞ்சுக் கரங்களால் தீண்டப்படுவதாலேயே இயற்கை இப்படி எழில் கோலம் காட்டுகிறாள் என்று எனது சந்தேகத்திற்கும் விடை கிடைத்தது அவரது பேச்சிலிருந்து. மனது நிறைந்து போயிற்று.

நானும் என் கணவரும் வீட்டிற்கு அருகிலுள்ள பூங்காவில் தினசரி நடைப் பயிற்சி செய்யும் போது இந்த நிகழ்ச்சி அடிக்கடி எனக்கு நினைவுக்கு வரும். எங்களைப் போல நிறைய பேர் நடப்பதற்காக வருவார்கள். பலபேரின் கையில் கைபேசி இருக்கும். அதில் பேசியபடியே நடப்பார்கள். பெங்களூருக்கு ‘பூங்கா நகரம்’ என்றே பெயர். எத்தனை பேருக்கு இயற்கையை ரசிக்கத் தெரிகிறது?

இப்படி ‘நேச்சர் வாக்’ பண்ணுவது மனிதர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கிறது; நமது கவனம் கலையாமல் இருக்கிறது என்று ஒரு ஆராய்ச்சி சொல்லுகிறது என்று இன்று காலை செய்தித்தாளில் படித்தவுடன் எனக்குத் தும்கூர் பள்ளி நினைவு ஏகமாக வந்து விட்டது.

அதன் விளைவாக பூத்ததுதான் இந்தப் ‘பூக்களைப் பறிக்காதீர்”

3 thoughts on “பூக்களைப் ……..பறிக்காதீர்…….!

  1. என்னோடு என்ன போட்டி ரஞ்சனி உங்களுக்கு? நான் சிவலோக மலர் எழுதினேன் என்று பூக்களைப் பறிக்காதே என்ற பதிவை நீங்கள் எழுதிவிட்டீர்களா ஆஹா வெகு அருமை உங்கள் ஊரில் அது ஒரு வசதி எங்கு பார்த்தாலும் பூங்காக்கள் நடக்க அருமையான இடங்கள்

  2. வாவ்!! இந்தப் பள்ளியில் பயிலும் குழந்தைகள் தான் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள். என் குழந்தைகளை இது போன்ற பள்ளியில் சேர்க்க வேண்டுமென்பது என் கனவு. பெங்களூரிலும் இது போன்ற பள்ளிகளைப் பார்க்க முடிவதில்லை. வீட்டில் செடி போடக் கூட பெங்களூரில் இடம் இருப்பதில்லை. அங்கு வந்து செட்டில் ஆனவுடன் மொட்டை மாடியில் தோட்டம் போடும் ஐடியா உள்ளது. இயற்கை சூழ்நிலையில் குழந்தைகள் அதிக விஷயங்கள் கற்றுக் கொள்கிறார்கள் என்பது உண்மை.

    வழக்கம் போல் மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள் அம்மா!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s