Uncategorized

மே 13 ஆம் நாள்

 

எல்லோருக்கும் தெரிந்தது தான் அம்மாக்களின் தினம். அன்று ஒருநாள் மட்டும் தான் அம்மாவை நினைக்க வேண்டுமா? மற்ற தினங்களில் மறந்துவிடலாமா? அம்மாக்களின் தினம் என்று வைத்ததற்கு அதுவல்ல அர்த்தம். நம் அம்மாவிடமிருந்து நாம் கற்றது என்ன? நம் குழந்தைகளுக்கு நம் அம்மாவைப் போல நாம் சிறந்த அம்மாவாக இருக்கிறோமா? இவற்றைப் பற்றிச் சிந்திக்கத்தான் இந்த நாள்.

 

என்ன செய்யலாம் அன்று? அம்மா அருகில் இருந்தால் வாழ்த்து அட்டை கொடுக்கலாம் நாமே தயாரித்து; பூக்கொத்து கொடுக்கலாம்; அவளுக்குப் பிடித்ததை சமைத்து அவளுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடலாம். அவள் மடியில் தலை வைத்துப் படுத்து அவளது பழைய கதைகளைக் கேட்கலாம்.

 

எல்லா அம்மாவுமே பழங்கதைகள் தான் பேசுவார்கள். அடுத்தடுத்த தலைமுறைகள் வந்தவுடன் வீட்டின் முதியவர்கள் தனித்துப் போய்விடுகிறார்கள். அவர்களது தனிமைக்கு பழைய நினைவுகள் தான் துணை.

 

இவற்றையெல்லாம்விட மிக முக்கியமானது அம்மாவிடம் இருந்து நாம் என்ன கற்றோம், எதை நம் குழந்தைகளுக்குக் கற்றுத் தரப் போகிறோம் என்று சிந்திக்கலாம். அம்மாவிடம் நாம் ரொம்பவும் விரும்பும் குணம் நமக்கு வந்திருக்கிறதா என்று யோசனை செய்யலாம்.

 

மற்றவர்களுக்குச் சொல்லும் முன் நான் சற்று யோசிக்கிறேன்: நான் என்ன கற்றுக் கொண்டேன் என் அம்மாவிடமிருந்து? என் அம்மா மிக நன்றாகப் பாடுவாள். பரவாயில்லை, நாங்கள் நாலு பேருமே சுமாராகப் பாடுவோம். அம்மாவின் சங்கீத ஞானம் எங்கள் குழந்தைகளுக்கும் வந்திருக்கிறது.

 

குழந்தைகளாக இருந்தபோது அம்மா தான் எங்கள் உடை வடிவமைப்பாளர்; அம்மா கையால் தைத்த உடைகள் ஏராளம். தையல் கலையை மிக ஆர்வமாகச் செய்வாள். ஊஹும்….! நாங்கள் யாரும் இதை மட்டும் கற்கவே இல்லை.

 

வீடு பளிச்சென்று இருக்கும். இந்த விஷயத்தில் என் அக்கா அப்படியே என் அம்மா! அம்மா நன்றாக சமைப்பாள். நான் என் அம்மாவிடம் சமையல் கற்றதே இல்லை. திருமணம் ஆனபின் முழுக்க முழுக்க என் மாமியாரிடம் தான் கற்றுக் கொண்டேன். அவரும் அம்மா தான் இல்லையா?

 

என் அம்மாவின் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். மிகக் கோர்வையாக எழுதுவாள். அந்தக் காலத்து இன்லேண்ட் கவரில் ஒரு துளி இடம் பாக்கி விடாமல் எழுதுவாள். அம்மாவின் முத்து முத்துக் கையெழுத்து யாருக்கும் வரவில்லை. ஆனால் எனக்கு என் அம்மாவிடமிருந்து வந்த சொத்து எழுதும் திறமை தான். எத்தனை அரிய திறமை இது! நான் எழுதுவது எல்லாவற்றையும் பிரின்ட் அவுட் எடுத்து அம்மாவுக்குக் கொடுப்பேன். என் கதைகள், கட்டுரைகள் எல்லாவற்றையும் அம்மா பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாள்.

 

அம்மா நிறையப் படிப்பாள். எங்கள் நால்வருக்கும் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் அம்மாவிடமிருந்து வந்ததுதான். இப்போதும் புத்தகமும் கையுமாகத்தான் இருப்பாள். நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் ஈடுபாடு வந்தது அம்மாவால்தான். இப்பவும் பார்க்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு பாசுரத்தைச் சொல்லி ‘என்ன தமிழ் பாரு! அருவி மாதிரி என்ன ஒரு நடை பாரு!’ என்று தானும் வியந்து எங்களையும் வியப்பில் ஆழ்த்துவாள்.

 

ஒவ்வொரு முறை அம்மாவைப் பார்க்கும்போதும் அம்மா தன் டைரியை கொடுத்துப் படிக்கச் சொல்லுவாள். தான் படித்ததில் மிகவும் கவர்ந்ததை அதில் முத்து முத்துக் கையெழுத்தில் எழுதி வைத்து இருப்பாள். அம்ம்மாவின் டைரி அவளைப் பற்றிப் பேசாது; அவளது ரசனையைப் பேசும்.

 

இவை எல்லாவற்றையும் விட மிக மிக அரிய சொத்து ஆரோக்கியம். என் அம்மாவுக்கு இப்போது 84 வயது. முதுமை என்பதைத் தவிர வேறு எந்தவித தொந்திரவும் அம்மாவுக்குக் கிடையாது. ( டச் வுட்!) இந்த விஷயத்தில் நாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். தன் வேலையைத் தான் பார்த்துக் கொண்டு ஒருவருக்கு ஒரு கஷ்டம் கொடுக்காமல் இருந்து வருகிறாள். உணவு விஷயத்தில் இது கூடும் கூடாது என்பதே இல்லை அம்மாவுக்கு. மிக மிக குறைந்த அளவு தான் சாப்பிடுவாள். இரண்டு வேளை சாப்பாடு; மதியம் ரொம்ப கொஞ்சமாக சிற்றுண்டி.

 

அம்மாவிடமிருந்து ஆரோக்கியம் தான் எங்கள் எல்லோருக்கும் வந்திருக்கிறது. அம்மா எங்களுக்குத் தந்த பெறற்கரிய சொத்து இது தான். வேறென்ன வேண்டும்? இதே ஆரோக்கியத்தை நாங்களும் எங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

 

நாங்கள் இப்போது இறைவனிடம் பிரார்த்திப்பது இரண்டு விஷயங்கள் தான்: இப்படியே அம்மா எந்தவித நோயும் இல்லாமல் கடைசி வரை இருக்க வேண்டும்; அம்மாவின் ஆரோக்கியம் எங்களுக்கும் வேண்டும்.

Advertisements

15 thoughts on “மே 13 ஆம் நாள்

 1. அம்மா என்பது பலவிதமான பல்கலைக் கழகம். விருப்பப் பாடமல்லாமல் பல கலைகளையும் படித்தறியலாம். இயற்கையாக
  சில பல கலைகளும் பிறவியிலேயும் வரலாம்… அம்மா மட்டும் அல்ல. குழந்தைகளும் பாக்யமானிகள். எல்லோரும் அவரவர்கள் அளவில் அம்மாவை நினைவு கூறும்படி அமைந்திருக்கிறது உன் அம்மாவைப்பற்றிய பதிவு.

 2. மிக அழகாக ‘அவரவர்கள் அளவில் அம்மாவை நினைவு கூறும்படி அமைந்திருக்கிறது’ என்ற சொல்லியிருக்கிறீர்கள். எனக்கும் வயதாவதாலோ என்னவோ அம்மாவைப்பற்றி நிறைய நினைக்கிறேன். உங்களது பின்னூட்டம் பற்றி அம்மாவிடம் கட்டாயம் சொல்லுகிறேன். நன்றியுடன்…..

 3. என் மனதில் என் அம்மாவைப் பற்றிய ஒரு விசுவ ரூபமான நல்லெண்ணக் கட்டுரை மளமளவென்று உருவாகி உயர்ந்து கொண்டே போனது. அப்போதுதான் அந்த வார்த்தை தோன்றியது. உன் அம்மாவின் அறிமுகமும் கிடைப்பதில் ஸந்தோஷம்.

  1. உடனே உடனே எழுதுங்கள் ப்ளீஸ்! படிக்க அவலாக இருக்கிறேன்!
   இன்னுமொரு விஷயமும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகிறேன். இந்தக் கட்டுரை எழுதி முடித்தவுடன் நான் வழக்கமாக எழுதும் ஆன்லைன் பத்திரிக்கையில் இதை பிரசுரம் செய்வதா வேண்டாமா என்று எனக்குள் ஒரு குழப்பம். ரொம்பவும் பர்சனல் ஆக எழுதிவிட்டேனோ என்று ஒரு நினைப்பு. அதனால் நானே பிரசுரம் செய்யாமல் அந்தப் பத்திரிகை ஆசிரியருக்கு, ‘நீங்கள் பிரசுரம் செய்யலாம் என்று சொன்னால் செய்கிறேன்’ என்று எழுதி அனுப்பிவிட்டேன்.
   ஆச்சரியம் ‘உங்களிடமிருந்து இதைப்போல வித்தியாசமான ஒன்றைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். உடனே பிரசுரம் செய்யுங்கள்’ என்று பதில் வந்தது. இந்த விஷயத்தை என் அம்மாவிடமும் சொன்னேன். இப்போது உங்களிடமும்

 4. ஆன்லைன் ஆசிரியர் ஸரியாகத்தான் சொன்னார்.. அந்தத் தேதியில் பொருத்தமான உண்மைக் கட்டுரையாக எதார்த்தமாக இருந்தது..பர்ஸனலாக உணர்ந்து எழுதுவதுதானே பிரரால் உணர. முடியும். என்னிடம் இதைப் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் ஸந்தோஷம்.. ஏதாவது ஸமயம் வரும்போது என் அம்மாவைப் பற்றி எழுதுகிறேன்.. உன் அம்மாவிடம் என்னையும் அறிமுகம்
  செய்வதுபற்றி மிக்க ஸந்தோஷம். அன்புடன்

 5. நம் குழந்தைகளுக்கு நம் அம்மாவைப் போல நாம் சிறந்த அம்மாவாக இருக்கிறோமா?

  நம்மைவிட வசதி வாய்ப்பில் குறைந்திருந்தாலும் நம் அம்மா நமக்குத்தந்த வரத்தை நம் பிள்ளைகளுக்கு நாம் கொண்டு சேர்த்தோமா என்று எண்ணும் போது இன்னும் சிறப்பாக செயல்படுத்தியிருக்கலாமோ என்னும் எண்ணம் வருவதைத்தவிர்க்க இயலவில்லை !

 6. அன்பின் ரஞ்ஜனி – அம்மாவினைப் பற்றிய அருமையான் கட்டுரை – இத்தனை வயதிலும் தன் வேலைகளைத் தானே பார்த்துக் கொண்டு இருக்கிறார் என்பதே பாராட்டுக்குரியது – நல்வாழ்த்துகள் ரஞ்ஜனி – நட்புடன் சீனா

 7. //ஒவ்வொரு முறை அம்மாவைப் பார்க்கும்போதும் அம்மா தன் டைரியை கொடுத்துப் படிக்கச் சொல்லுவாள். தான் படித்ததில் மிகவும் கவர்ந்ததை அதில் முத்து முத்துக் கையெழுத்தில் எழுதி வைத்து இருப்பாள். அம்ம்மாவின் டைரி அவளைப் பற்றிப் பேசாது; அவளது ரசனையைப் பேசும்.//

  ரசனையுள்ள அம்மா பெற்ற மகள் நீங்கள்.
  அதனால் உங்களுக்கு ’ரசனி’ என்று தான் பெயர் சூட்டியிருக்க வேண்டும். ர ச னி என்பதற்கு பதில் அதே ராகத்தில் ’ர ஞ் ஜ னி’ என்று வைத்துள்ளார்கள் போலும்.

  நல்ல பாஸிடிவ் ஆக எல்லாவற்றையும் சொல்லியுள்ளது மகிழ்வளிக்கிறது.

  அன்புள்ள
  VGK

 8. கடவுள் நமக்கு நேரிடையாக அன்பும், ஆறுதலும் சில சமயங்களில் தர முடியாமல் போகலாமென்று எண்ணித்தாய் தாய் என்ற ஒரு உறவை நம்மோடு பிறப்பிலிருந்து இணைத்திருக்கின்றார்.

  தாயின் அன்பும், தந்தையின் கண்டிப்பும் பெற்று வளர்ந்த குழந்தை பின்னாளில் நல்ல நிலையை அடையும். தாயினைப் பற்றி நிறைய எழுதலாம்.

  தங்களின் தாயினைப் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி

  என் வழியிலே தாய்க்கொரு கீர்த்தனை : http://sivahari.blogspot.com/2011/10/blog-post.html

 9. இவை எல்லாவற்றையும் விட மிக மிக அரிய சொத்து ஆரோக்கியம். என் அம்மாவுக்கு இப்போது 84 வயது. முதுமை என்பதைத் தவிர வேறு எந்தவித தொந்திரவும் அம்மாவுக்குக் கிடையாது. ( டச் வுட்!) இந்த விஷயத்தில் நாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். தன் வேலையைத் தான் பார்த்துக் கொண்டு ஒருவருக்கு ஒரு கஷ்டம் கொடுக்காமல் இருந்து வருகிறாள். //படிக்கவே பரவசமாக இருக்கும்மா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s