சொந்தக் கதை

 

நாளை எனது 60 வது பிறந்தநாள். 59 வயது முடிந்து 60 தொடங்குகிறது. இத்தனை வருடங்களில் என்ன சாதித்தேன் என்று தெரியவில்லை. பிறந்தது ஸ்ரீரங்கம் என்றாலும் படித்தது, திருமணம் ஆனது எல்லாம் சிங்காரச் சென்னையில்தான். பெங்களூர் வந்து 25 வருடம் ஆகிறது. வாழ்க்கைப் பாடங்கள் பல இங்கு வந்துதான் கற்றேன். அதைத் தவிர சங்கீதம்,  வீணை கற்றேன். கன்னடம் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டேன். கல்லூரிக்குச் செல்லவில்லை; பட்டதாரி ஆகவில்லை என்ற என் குறையை இங்கு வந்து M.A., படித்துப் போக்கிக் கொண்டேன்.

தும்கூரில் என் கணவரின் வேலைக்காக (GM, TVS Electronics) இரண்டு வருடங்கள் இருந்தபோது அங்கு TVS பள்ளியில் பாட்டு டீச்சர் ஆக வேலைக்குச் சேர்ந்த சமயம், இரண்டாம் வகுப்புக் குழந்தைகளுக்கு கன்னடம் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதனால் கன்னட மொழியை நன்கு கற்கும் பேறு பெற்றேன்.

எனக்கு எல்லாமே late take-off தான். திருமணத்திற்கு முன் ஸ்டெனோ டைப்பிஸ்ட் ஆக வேலை பார்த்தேன். திருமணத்திற்குப் பின் விட்டுவிட்டேன். 25 வருடங்கள் கழித்து தீடீரென ஒரு வேலை வாய்ப்பு! Spoken English Trainer ஆனேன். மூன்று மல்டி-நேஷனல் நிறுவனங்களின் கார்ப்பரேட் ட்ரெயினர் ஆகவும் இருந்தேன். கிட்டத்தட்ட 12 வருடங்கள் மிகவும் பிஸியாக வேலை பார்த்தேன். இப்போதும் ஒன்றிரண்டு மாணவர்கள் வருகிறார்கள். வீட்டிலேயே சொல்லிக் கொடுக்கிறேன். எனது மாணவர்களில் பல வெளிநாட்டு மாணவர்களும் அடக்கம். அதேசமயம் பத்திரிகைகளில் கதை, கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன்.

என் பிள்ளை இரண்டு வருடங்கள் அமெரிக்காவில் இருந்தபோது கணணி முன் உட்கார ஆரம்பித்து (அவனுடன் தினம் பேசவேண்டுமே!) கணனியில் நிறையக் கற்றுக் கொண்டேன். எனக்காக அங்கிருந்து ஒரு லேப்டாப் கணணி வாங்கி வந்தான். இப்போது அதுதான் என் ஒரே பொழுதுபோக்கு! வெளியில் சென்று வேலை பார்ப்பதைக் குறைத்துக் கொண்டு விட்டேன்.

அதனால் ஆன்லைனில் எழுதும் வேலை ஏதாவது கிடைக்குமா என்று தேடியதில் ஒரு இணையதளம் என் எழுத்துக்களை கைநீட்டி வரவேற்றது. அதில் எழுதி வெளியானதை எல்லாம் வோர்ட்பிரஸ்.காமில் பதிய ஆரம்பித்தேன். அதைப் படித்து விட்டு ஒருவர் அவர் நடத்தும் ஆன்லைன் தமிழ் பத்திரிகைக்கு கட்டுரைகள் எழுதி கொடுக்குமாறு சொன்னார்.

என் எழுத்துக்களுக்கு நல்வரவு சொன்ன திரு பிரகாஷ், திரு பிரதீப், திருமதி ஸ்ரீ வித்யா, (a2ztamilnadu) மற்றும் திரு சுகந்தன் (ஊர்.காம் ) இவர்கள் அனைவருக்கும் என் இதயம் நனைந்த நன்றிகள்!

ஆரம்பத்தில் நான் எழுதி அந்தப் பத்திரிகைக்கு அனுப்பி விடுவேன். அவர்கள் அதை வெளியிடுவார்கள். இந்த மாத ஆரம்பத்தில் இருந்து எனக்கே ஒரு பயனர் பெயர், பாஸ்வோர்ட் கொடுத்து என்னையே வெளியிடவும் சொல்லி விட்டார்கள். நானே என் எழுத்துக்களை வெளியிடவும் முடியும். இதில் எனக்கு சொல்லமுடியாத ஆனந்தம்! இந்த வயதில் யாருக்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கும்? எனக்குக் கொடுத்த இந்த பொறுப்பை மிகவும் கவனமாகக் கையாளுகிறேன். பல முன்பின் தெரியாதவர்கள் என் எழுத்தைப் பாராட்டும் போது மகிழ்ச்சியுடன் பொறுப்பும் அதிகமாவதை உணருகிறேன். நான் எழுதுவதை எல்லாம் வோர்ட்பிரஸ்ஸிலும் போடுகிறேன். இதன் மூலம் பல பேரின் நட்பு கிடைத்திருக்கிறது.

பல ஆங்கிலக் கட்டுரைகளை தமிழ் மொழியாக்கமும் செய்கிறேன்.

சில மாதங்கள்தான் ஆனாலும் என் ப்ளாகிற்கு கணிசமான வாசகர்கள் வருகை தந்து எனது எழுத்தை தினமும் படிப்பது மிகவும் மகிழ்ச்சி உரிய விஷயம்.

வோர்ட்பிரஸ் நண்பர்கள் திருமதி காமாட்சி, திருமதி சித்ரா சுந்தர், திரு சந்தோஷ், திருமதி கேரி ஆண்ட்ரூஸ், திருமதி மேகி ஆகியவர்களுக்கு என் நன்றி, நன்றி, நன்றி!

என் எழுத்துக்களை உடனே படித்து தனது கருத்தையும் உடனே பதிவு செய்யும் என் பத்திரிக்கை தோழி திருமதி ராதா பாலுவுக்கு என் நன்றிகள். இவரது எழுத்துக்களுக்கும் நிறைய விசிறிகள்; இருந்தும் சக எழுத்தாளரை வாயார வாழ்த்தும் இவரது குணம் மிக அரிது. பாராட்டுக்கு உரியது.

பலர் படித்தாலும் சிலர்தான் கருத்துக்களைச் சொல்லுகிறார்கள். படிக்கும் அத்தனை பேரும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் எனது எழுத்தின் தரத்தை உயர்த்திக் கொள்ள உதவியாயிருக்கும்.

படிக்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!