ஹை! டீ!


இந்தத் தலைப்பை நீங்கள் இரண்டு விதமாகப் படிக்கலாம்: High Tea,

“ஹை……! டீ………..!” என்று.

முதலில் “ஹை…….! டீ……!”

என் அம்மாதான் நாங்கள் தேநீரை விரும்பிக் குடிக்கக் காரணம். என் அம்மா மிக அருமையாகத் தேநீர் தயாரிப்பார். அம்மாவுக்கு காலை 8¾ மணிக்கும் மாலை 5¾ மணிக்கும் தேநீர் தேவை. இன்றைக்கும் அப்படித்தான். ஒவ்வொருமுறை அம்மா தேநீர் தயாரிக்கும்போதும் நாங்கள் “ஹை……! டீ…..!” என்று வியந்துகொண்டே தான் குடிப்போம்.

என் குழந்தைகளுக்கு தேநீரை அறிமுகப் படுத்தியதும் என் அம்மாதான். ஒருமுறை என் அம்மா தயாரித்த தேநீரை குடித்துவிட்டு என் பெண், பிள்ளை இருவரும் அதன் ருசியில் மயங்கிப் போனார்கள். அன்றிலிருந்து இன்றுவரை அவர்கள் இருவரும் தேநீர்தான். என் கணவர் பக்கா சென்னைவாசி. அவருக்கு காப்பிதான் எப்பவுமே. நான் குழந்தைகளுடன் தேநீர், கணவருடன் காப்பி என்று அவ்வப்போது கட்சி மாறிக் கொள்ளுவேன். என் மாட்டுப்பெண்ணும் சென்னைவாசி. எங்கள் வீட்டிற்கு வந்து நன்றாக தேநீர் தயாரிக்கக் கற்றுக்கொண்டு விட்டாள். ஆனால் அவள் எங்களுடன் இன்னும் தேநீர் குடிக்க ஆரம்பிக்கவில்லை!

காப்பி நல்லதா தேநீர் நல்லதா என்று அவ்வப்போது எங்களுக்குள் சர்ச்சை எழும். காப்பியை விட தேநீர் நல்லது என்று சொல்லுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். காரணங்கள் இதோ:

சைனாவில் கிடைக்கும் ஊலாங் என்ற கருப்பு தேநீர் வயதாவதை தாமதப் படுத்துகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

புற்று நோய் மற்றும் இருதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆண்டிஆக்சிடென்ட் நிரம்பியது தேநீர்.

க்ரீன் தேநீர் மூட்டு வீக்கத்தை குறைத்து குருத்தெலும்பு உடையாமல் பாதுகாக்கிறது. வயதானவர்களுக்கு எலும்புகள் தேய்மானம் இல்லாமல் தடுக்க எல்லா வகையான தேநீரும் நல்லது.

சாப்பிட்டபின் குளிர் பானங்களை அருந்துவது நம் உணவில் உள்ள கொழுப்புப் பொருட்களை உறைய வைத்து, இருதய நோய் ஏற்படக் காரணமாகிறது. உணவுக்குப் பின் சூடான தேநீர் குடிப்பது இந்த கொழுப்பை கரைத்து வெளியேற்றி விடுகிறது. தினமும் தேநீர் குடிப்பவர்களுக்கு கெட்ட (LDL) கொலஸ்ட்ரால் 10% குறைகிறது.

எடை குறைக்க விரும்புபவர்கள் க்ரீன் தேநீர் குடிப்பதால் நாம் செலவழிக்கும் சக்தி 4% அதிகரிக்கிறது. வெகு காலமாக உங்கள் எடை ஒரே அளவில் குறையாமல் இருந்தால் க்ரீன் தேநீர் குடிப்பது நல்லது. இது எடையை நிதானமாகக் குறைக்க உதவும்.

தேநீர் பைகளை (Tea bags) விட தேயிலைத் தூள் நல்லது. ஒரு கோப்பை க்ரீன், ப்ளாக் தேநீரில் ஒரு கரண்டி சமைத்த கேரட், ப்ரோகோலி, கீரை இவற்றில் இருப்பதைவிட அதிக ஆண்டிஆக்சிடேன்ட் இருக்கிறது.

குளிர்ந்த தேநீரை விட சூடான தேநீர் நல்லது.

சர்க்கரை சேர்க்காமல் தேநீர் எப்படிக் குடிப்பது என்று தோன்றினால் தேன் சேர்த்துக்கொள்ளலாம். இல்லை என்றால் பழத் துண்டுகள் போட்டுக் குடிக்கலாம்.

லெமன் தேநீர் என்று தேநீர் டிகாக்ஷனில் ஒரு சில துளி எலுமிச்சைச் சாறு சேர்த்து சாப்பிடலாம்.

தேநீர் தயாரிப்பு பற்றி:

பொதுவாக 2 கோப்பை தேநீர் வேண்டுமென்றால் ஒரு கோப்பை நீர் ஒரு கோப்பைப் பால் எடுத்துக் கொண்டு 2, 2½ தேக்கரண்டி தேயிலைத் தூள், 4 தேக்கரண்டி சர்க்கரை போட்டு அடுப்பில் வைத்து கொதிக்கும்போது இறக்கி வடிகட்டிக் குடிக்கலாம். தேநீருக்கு எப்போதும் சர்க்கரை அதிகம் வேண்டும். இந்தத் தேநீரில் இஞ்சி தட்டிப் போடலாம். எங்கள் அம்மா சுக்கு + மிளகு சரிபங்கு போட்டு இரண்டையும் பொடி செய்து வைத்துக் கொண்டு  தேயிலைத் தூள் போட்டவுடன் இந்தப் பொடியையும் ஒரு கால் தேக்கரண்டி போடுவார்.

ஜலதோஷம் வரும்போல் இருந்தால் கொதிக்கும் தேநீரில் துளசி, புதினா இலைகளைப் போடலாம். கற்பூரவள்ளி இலை கூடச் சேர்க்கலாம். ஒரு விஷயம்: இந்த இலைகளைப் போட்டு கொதிக்க வைக்கக் கூடாது. இலைகளின் சத்து போய்விடும்.

இப்போது எல்லா மூலிகைகளும் கலந்த தேயிலைத் தூள் கிடைக்கிறது. பால் இல்லாத தேநீர் குடிப்பது சற்று கஷ்டம்தான். எங்கள் வீட்டில் எப்போதும் பால் கலந்த தேநீர்தான். இதை எழுதி முடித்தவுடன் எப்போது அம்மா கையால் தேநீர் செய்து சாப்பிடப் போகிறேன் என்று சின்னதாக ஒரு ஏக்கம்!

High Tea?  நாளை…….

உருளைகிழங்கு: ஓர் அற்புதமான உணவு!


உருளைக்கிழங்கை ரசித்து ருசிக்காதவர்கள் உண்டா? சிப்ஸ், பொறியல், போண்டா, பஜ்ஜி, ரோஸ்ட், பூரி மசால் என்று அணுஅணுவாக அனுபவித்தாலும் அதைச் சாப்பிடும்போது மனதிற்குள் ஒரு சின்ன குற்ற உணர்ச்சி ‘ஐயோ! குண்டாகிவிட்டால் என்ன செய்வது?’ என்று. இல்லையா?

உடம்பு இளைக்க வேண்டும் என்று உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் உருளைக்கிழங்கை கண்ணால் பார்க்கவும் மாட்டார்கள். அதன் பெயரைக் காதால் கேட்கவும் மாட்டார்கள். கையால் அதைத் தொட்டு வாங்கவும் மாட்டார்கள். அப்படியொரு தீண்டாமை அதனிடத்தில்!

இவர்களுக்காகவே இந்தச் செய்தி: உருளைக்கிழங்கை ‘சூப்பர் உணவு’ என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.

வாழைப்பழம், புரோக்கோலி, பீட்ரூட், பட்டர் ப்ரூட் (avocado) ஆகியவற்றை விட உருளைக்கிழங்கு உடம்பிற்கு நன்மை பயக்கும் என்று புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.

முக்கியமாக வேகவைத்த உருளைகிழங்கில் (Baked or jacket potato) ஒரு சாதாரண வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்தைப் போல 5½  அடங்கு அதிக நார்ச்சத்து இருக்கிறது. பட்டர் ஃப்ரூட்டில் இருக்கும் ‘சி’ விட்டமினை விட அதிக ‘சி’ வைட்டமின் இருக்கிறது.. நாம் குழந்தைகளுக்குக் கொடுக்கும் கொட்டை வகைகள், விதை வித்துக்களை விட உருளைக்கிழங்கில் செலினியம் என்கிற தாதுப் பொருள் அதிகம் காணக் கிடைக்கிறது.

இரண்டு வேளை வேக வைத்த உருளைக்கிழங்கு சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையும். வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் உடலுக்கு நன்மை செய்வது போலவே, நம் உணவில் உருளைக்கிழங்கின் பங்களிப்பும் அதிகம் என்கிறது இந்த புதிய ஆராய்ச்சி.

இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டு இருக்கும் போது, வேறு ஏதாவது சுவாரஸ்யமான தகவல் கிடைக்குமா என்று ‘கூகிள்’ தேடு பொறியில் தேடியபோது மேற்சொன்ன ‘ஜாக்கட் பொடேடோ’ எப்படி செய்கிறார்கள் என்று தகவல் கிடைத்தது. இதோ அதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்:

கன்வெக்ஷன் (convection oven) அவன், மைக்ரோவேவ் அவன், பார்பிக்யு (Barbeque) க்ரில் அல்லது நேரடியாக நெருப்பிலும் உருளைக்கிழங்கை வேகவைக்கலாம். நீர் தேவையில்லை. இப்படி வேகவைத்த உருளைக்கிழங்கு வெளியில் கரகரப்பாகவும் உள்ளே மெத்துமெத்தென்று இருக்கும். இதனை வெண்ணெய், தக்காளி, இறால், சீஸ், மற்றும் ஹாம் (Ham)  உடன் சாப்பிடலாம்.

சமைப்பதற்கு முன் கிழங்கை நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும். மேலிருக்கும் கண்கள், அழுக்குகள் போக அலம்பித் துடைத்து விட்டு சிறிதளவு எண்ணெய் அல்லது வெண்ணெய் கொஞ்சம் உப்பு வேண்டுமானால் சேர்த்து கிழங்கின் மேல் தடவி வேக வைக்கலாம். இதனால் மேல் தோல் கரகரப்பாக இருக்கும். சமைக்கப்படும் போது ஃபோர்க் அல்லது கத்தியால் கிழங்கைக் கீறுவது அதன் உள்ளிருக்கும் நீராவி வெளியேற உதவும்.

உருளைக்கிழங்கை அலுமினியம் ஃபாயில் கொண்டு சுற்றியும் வேக வைக்கலாம். இதனால் உள்ளுக்குள் இருக்கும் ஈரத்தன்மை போவதில்லை. ஆனால் மேல்தோல் இந்த முறையில் கரகரப்பு ஆவதில்லை. பார்பிக்யு (Barbeque) க்ரிலில் சமைக்கும் போது அலுமினியம் ஃபாயிலில் சுற்றி வைத்தால் மேல்தோல் கருகாமல் இருக்கும். முழு உருளைக்கிழங்கை கரி அடுப்பில் நெருப்புத் தணல்களுக்கு இடையில் புதைத்து வைத்தும் சமைக்கலாம். ஆனால் மேல்தோல் கருகி சாப்பிட முடியாமல் போய்விடும்.

ஆகவே, பெரியோர்களே, தாய்மார்களே, உருளைக்கிழங்கை வேகவைத்துச் சாப்பிடவும். ரோஸ்ட், சிப்ஸ் என்று எண்ணையில் பொறித்து எடுத்து, அதன் இயற்கையான சத்துக்கள் அழியும்படி செய்து சாப்பிடாதீர்கள்!