ஒரு நாளைக்கு எத்தனை தண்ணீர் குடிக்க வேண்டும்?

எங்கள் வீட்டில் உள்ளவர்களை நான் அடிக்கடி கேட்கும் கேள்வி: தண்ணீர் குடித்தீர்களா? என்பதுதான். ஒருமுறை என் பேரனை இந்தக் கேள்வி கேட்டபோது அந்த வாண்டு சொல்லிற்று: “பாட்டி, பேசாம ஒரு நாளைக்கு எத்தனை தண்ணீர் குடிக்க வேண்டும் என்று உடனே ஒரு கட்டுரை எழுதேன். கொஞ்ச நேரம் நாங்கள் நிம்மதியாக இருப்போம்”

என்ன கட்டுரை எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த எனக்கு இந்த ஆலோசனை ரொம்பவும் பிடித்துப் போயிற்று. இதோ கட்டுரை:

ஒரு நாளைக்கு எத்தனை தண்ணீர் குடிக்க வேண்டும்?

கேள்வி என்னவோ மிகவும் எளிமையானதுதான். ஆனால் பதில் அளிப்பது அத்தனை சுலபம் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அளவில் தண்ணீர் தேவைப்படுகிறது. தனி மனிதரின் ஆரோக்கியம், அவரது வேலை – கடினமான உடல் உழைப்பு செய்பவரா? அல்லது உட்கார்ந்த இடத்தில் வேலை செய்பவரா? – அவர் வாழும் இடத்தின் பருவ நிலை இவற்றைப் பொறுத்து அவர் குடிக்க வேண்டிய நீரின் அளவும் வேறுபடும்.

நீர் என்பது நமக்கு மிக வேண்டிய, நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கவல்ல ஒரு பொருள். நமது உடலின் எடையில் நீரின் பங்களிப்பு 55-60 சதவிகிதம். ஒருவரின் வயது, அவரது உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு, ஆணா, பெண்ணா என்பதெல்லாம் கூட நாம் குடிக்கும் நீரின் அளவை நிர்ணயிக்கும்.

உணவு இல்லாமல் 2 மாதங்கள் இருக்கலாம், ஆனால் நீரில்லாமல் சில நாட்கள் கூட உயிர் வாழ முடியாது. நம் உடல் உறுப்புக்கள் சரிவர இயங்கவும் நீர் அத்தியாவசியமானது.

குறைந்த அளவு நீர் உட்கொள்ளுவது சிறுநீரகத்தை பாதிக்கும். இதனால் நம் உடலிலிருந்து யூரிக் ஆசிட், யூரியா, கால்சியம் ஆகியவை வெளியேறுவது தடைபடும். இதன் விளைவாக சிறுநீரகக் கற்கள் உருவாகலாம். சரியான அளவு நீர் குடிக்காது போனால்  நம் உடலின் மின்பகுப்பொருளின் (electrolytes) சமநிலை பாதிக்கப்பட்டு ஆழ் மயக்க நிலை, சில சமயம் மரணம் கூட சம்பவிக்கலாம்.

பேதி, வாந்தி போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் மருத்துவர்கள் நிறைய நீர் குடிக்கச் சொல்லுவார்கள். உடலிலிருந்து வெளியேறும் நீரினால் உடலின் நீர் குறைந்து, நீர் வறட்சி என்னும் டீஹைட்ரேஷேன் ஏற்படுவதைத் தடுக்கவே இந்த அறிவுரை. சிறுநீர் தொற்று (Urine infection) ஏற்பட்டாலும் நிறைய நீர் குடிக்க வேண்டியிருக்கும்.

நுரையீரல் நன்கு வேலை செய்யவும் நீர் இன்றியமையாதது. நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் பிராணவாயுவை கிரகித்து, கரியமில வாயுவை வெளியே விட நுரையீரல் ஈரப்பதத்துடன் இருப்பது அவசியம். நாம் உண்ணும் உணவு நன்கு செரிமானம் ஆக, நமது வளர்சிதை மாற்றத்திற்கு என்று நமது உடலின் ஒவ்வொரு செயலுக்கும் நாம் குடிக்கும் நீர் தான் உதவுகிறது. வியர்வையாக வெளியேறி நமது  உடலைக் குளிர்விப்பதும் நீர்தான். நம் மூட்டுக்களின் உராய்வை குறைப்பதும் நீர்தான். மூட்டு வலி, மூட்டு வீக்கம் இருப்பவர்கள் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு தம்ளர் நீர் குடிக்க வேண்டும்.

‘8X8 வழிமுறை’ உலகெங்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதன்படி ஒரு நாளைக்கு 8 அவுன்ஸ் அல்லது 8 தம்ளர் நீர்  குடிக்க வேண்டும். ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு தினசரி 2 லிட்டர் அல்லது 8 தம்ளர் நீர் கட்டாய வேண்டும்.

தண்ணீர் குடிப்பதைத் தவிர குறைந்த கலோரிகளைக் கொண்ட எலுமிச்சை நீர், கிரீன் டீ, இளநீர், மோர் இவற்றிலிருந்தும் போதுமான அளவு நீரேற்றம் (hydration) கிடைக்கும். இவற்றில் ஏதாவது ஒன்றை காலை, மதிய உணவுகளுக்கு இடையில் குடிக்கலாம்.

சுருக்கமாகச் சொன்னால் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 8 தம்ளர் நீர் வேண்டும்; ஒரேயடியாகக் குடிக்கக் கூடாது. போதுமான இடைவெளியில் பரவலாகக் குடிக்க வேண்டும். இத்துடன் மேற்சொன்ன பானங்களையும் அவ்வப்போது சேர்த்துக் கொள்ளலாம்.

கடைசியாக ஒன்று: பருவநிலைக்கு தகுந்தவாறு உட்கொள்ளும் நீரின் அளவைக் கூட்டிக் குறைத்து உட்கொள்ள வேண்டும்.

நீரின்றி அமையாது உலகம். நினைவு இருக்கட்டும்: நம் உடலும் நீரின்றி இயங்காது. போதுமான நீரேற்றதுடன் ஆரோக்கியமாக வாழ்வோம்.