மனித நாக்கு


மனிதனின் வாய்ப் பகுதியில் உள்ள நாக்கு தசைப் பற்றுக்களால் ஆன ஒன்று. முதுகெலும்பு உள்ள உயிரினங்கள் எல்லாவற்றிற்கும் நாக்கு உண்டு – வேறுவேறு அளவுகளில், வேறுவேறு பயன்பாட்டுக்காக.

ருசி கண்டறிய உதவும் முதன்மையான உறுப்பு இது. உணர் திறன் மிக்கது. நரம்புகளும் (நாக்கில் நரம்பில்லாமல் பேசுகிறாய் என்று சொல்லுவது தப்பு!) இரத்தக் குழாய்களும் நிரம்பியது. வாயில் சுரக்கும் உமிழ்நீரால் எப்போதும் ஈரமாக வைக்கப்படுகிறது. நாம் சாப்பிடும் உணவை தாடை மற்றும் பற்களின் உதவியுடன் நன்கு பொடியாக்கி கூழ் போலச் செய்வது நாக்கின் முதன்மையான வேலை. பற்களை சுத்தம் செய்வதும் இதனுடைய வேலைதான்.

மற்ற உயிரினங்களுக்கு இல்லாத அரிய வரம் மனிதனுக்கு இருக்கிறதென்றால் அது அவனது வாக்கு வன்மை. நமது வாக்குத் திறனுக்கும் நமது நாக்குதான் உதவுகிறது. நாக்கை பலவிதமாக நீட்டியும், மடித்தும், சுருட்டியும், வாயில் மேல் அண்ணத்தில் வைத்தும் நாம் ஒலிகளை உண்டாக்குகிறோம்.

மனித நாக்கின் மேல்பரப்பு முழுவதும் பாப்பிலே என்று அழைக்கப்படும் ருசி அறியும் நுண்ணிய மேடுகள் அமைந்துள்ளன. ருசி மொட்டுக்கள் இந்தப் பாப்பிலேக்களின் அடி பாகத்திலும், பக்கங்களிலும் அமைந்துள்ளன.

பலரும் நினைப்பது போல இந்த ருசி மொட்டுக்கள் நாக்கின் ஒரே இடத்தில் அமைந்துள்ளவை அல்ல. நாக்கின் அடிபகுதி, கன்னத்தின் உள்பகுதி, வாயின் மேல்கூறையிலும் சில உதடுகள் மேலும் அமைந்துள்ளன. உதடுகளின் மேலே இருக்கும் ருசி மொட்டுக்கள் குறிப்பாக உப்பு ருசியை அறிகின்றன. ஆண்களைவிட பெண்களுக்கு ருசி மொட்டுக்கள் அதிகம்! அதனால்தான் ருசிருசியாக சமைக்கிறார்களோ?

உடல்நிலை பாதிக்கப்பட்டு  மருத்துவரிடம் செல்ல சேர்ந்தால் அவர் நமது நாக்கையும் பரிசோதிப்பார். பல தொற்றுக்கள் நாக்கின் மேலும் நாக்கின் அடிப் பாகத்திலும் ஏற்படுகின்றன. நாக்கின் அடிப்பாகத்தில் தோன்றும் நுண்ணிய வெள்ளை மேடுகளும் உடம்பில் தொற்று இருப்பதை வெளிப் படுத்தும்.

பற்களை சுத்தப் படுத்தும்போது கூடவே நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும். நாம் சாப்பிடும் உணவு மெல்லிய படலமாக நாக்கின் மேல் படிந்திருக்கும். வாய் துர்நாற்றம் ஏற்பட இதுவும் ஒரு காரணம். அதனால் பல் துலக்கும் போது நாக்கு வழிப்பான் கொண்டு நாக்கை தினமும் சுத்தப் படுத்துவது மிகவும் இன்றியமையாதது.

சில சமயங்களில் மருத்துவர்கள் சிலவகை மருந்துகளை (முக்கியமாக நெஞ்சு வலி மருந்துகள்) நாக்கின் அடிப் பகுதியில் வைத்துக்கொள்ளுமாறு கூறுவார்கள். இந்தப் பகுதியில் நரம்புப் பின்னல்களிடையே அமைந்துள்ள சவ்வு மிக மெல்லியது; குருதிக் கலன்கள் (Blood vessel) இந்தப் பகுதியில் அதிகம் உள்ளதால் இந்த மருந்துகள் மெல்லிய சவ்வின் மூலம் உறிஞ்சப் பட்டு அதி வேகமாக வயிற்றுக்குள் செல்லாமல் இதயத்தை அடைகின்றன.

விலங்கினங்களின் நாக்கு வேறுவிதமான வேலைகளைச் செய்கிறது. நாய், பூனை இவற்றின் நாக்குகள் சொரசொரப்பாக இருக்கும். இவற்றின் உடம்பில் இருக்கும் ஒட்டுண்ணிகளை நீக்கவும் இவைகளின் உடலை சுத்தப்படுத்தவும்  இந்த சொரசொரப்பு உதவுகிறது. நாயின் நாக்கு அதன் உடல் உஷ்ணத்தை சீராக வைக்க உதவுகிறது. நாய் அதிக தூரம் ஓடும்போது அதன் உடலில் ஏற்படும் அதிகமான இரத்த ஓட்டத்தால் அதன் நாக்கின் அளவும் அதிகரிக்கிறது. அப்போது ஏற்படும் அளவுக்கதிகமான உடல் உஷ்ணத்தை தணித்துக்கொள்ள நாக்கின் மூலம் வியர்வையை வெளியேற்றி தன் உடலை குளிர்வித்துக் கொள்ளுகிறது.

பச்சோந்தி, தவளை, எறும்புத்தின்னி போன்ற உயிரினங்களின் நாக்கு, இரையை பற்றி இழுத்துக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

இன்னும் சில வினோதமான நாக்குகளைக் கொண்ட விலங்கினங்கள்:

ஒட்டகச்சிவிங்கி: (Giraffee) இதன் நீண்ட, பிசுபிசுப்பான வளைந்து கொடுக்கக்கூடிய நாக்கு, நீல நிறமுடையது. ஆப்பிரிக்கக் காடுகளில் பலமணி நேரம் உயர்ந்த மரங்களின் இலைகளைச் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் இவற்றின் நாக்குகளை கொளுத்தும் வெய்யிலிலிருந்து காப்பாற்றவே இயற்கை இந்த நீல நிறத்தைக் கொடுத்திருக்கிறது.

பச்சோந்தி : இதன் உடலைவிட நாக்கு இரண்டு மடங்கு நீளமானது. தன் நாக்கை வெளியே நீட்டி பின் உள்ளிழுத்துக் கொள்ளும் வேகம் மனிதக் கண்களின் அசைவை விட வேகமானது.

பாம்பு: இது தன் நாக்கினால் முகருகிறது. தனது நாக்கை அவ்வப்போது வெளியே நீட்டி, சுற்றும்முற்றும் ஆராய்கிறது. தனது இரை எத்தனை தூரத்தில் இருக்கிறது என்பதை அறியவும், தனக்கு வரும் ஆபத்தை அறியவும் நாக்கைப் பயன்படுத்துகிறது.

சிங்கம்: இதன் நாக்கு சாதாரண பூனையின் நாக்கைவிட சொரசொரப்பானது. கரடுமுரடான உப்புக் காகிதத்தைப் போன்றது. அதன் உடலை சீர்ப்படுத்திக் கொள்ள நாக்கைப் பயன்படுத்துகிறது.