தனிமையிலே இனிமை………

தனிமையிலே இனிமை………

ஆடிப்பெருக்கு படத்தில் வரும் இந்தப் பாட்டை மிகவும் ரசிப்பேன் நான். ஜெமினி கணேசன் கவிஞர். எழுதுகோலும் கையுமாக இருப்பவரை, தான் பாடுவதை எழுதுமாறு சரோஜாதேவி (அவரது தலையில் எழுதுகோலால் செல்லமாக அடித்து) சொல்லுவது மிகவும் ரசிக்க வைக்கும் ரொமான்ஸ்!

இந்தப் பாட்டில் “நாம் காணும் உலகில் யாரும் தனிமை இல்லை” என்று சொன்னாலும், சில பல சமயங்களில் எல்லோரும் தனிமையை உணருகிறோம். எப்படித் தனிமையை சமாளிப்பது என்பது பெரிய கேள்விக்குறியாகிறது.

குறிப்பாக குழந்தைகள் வளர்ந்து, படிக்கவோ அல்லது வேலை நிமித்தம் காரணமாகவோ வேறு ஊர்களுக்கு – சில சமயம் கடல் கடந்து – செல்லும்போது உண்டாகும் தனிமை மிகக் கொடுமையானது. மன அழுத்தத்தையும், எதற்காக வாழுகிறோம் என்ற கேள்வியையும், வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் போகக் கூடிய நிலைமையையும் ஏற்படுத்தும். செல்லப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுத்து புக்ககம் அனுப்பிய பின் ஏற்படும் தனிமையும் சோகமும்….அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். இதனை ஆங்கிலத்தில் ‘empty nest syndrome’ என்கிறார்கள்.

மனவியலாளர்கள் இந்தத் தனிமைக்கு மாற்று மருந்து என்று கூறுவது ‘Get Home a PET’ என்பதுதான். அதாவது வீட்டிற்கு ஒரு செல்லப் பிராணியைக் கூட்டி வாருங்கள் என்கிறார்கள். வீட்டில் ஒரு நாய்குட்டியோ அல்லது பூனைக் குட்டியோ இருந்தால் தனிமை அவ்வளவு தெரியாது என்கிறார்கள். மனதை தளர்த்திக் கொள்ளவும் நேரத்தை நல்ல முறையில் செலவழிக்கவும் செல்லப் பிராணிகள் உதவுகின்றன. உடல் ரீதியாகவும் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வைக்கின்றன இந்தப் பிராணிகள். இதனால் அவர்களின் தனிமை  குறைவதுடன் பாதுகாப்பாகவும் உணருகிறார்கள்.

பலரும் செல்லப் பிராணியாக வளர்க்க விரும்புவது நாய்களை என்றாலும், பறவைகள், மீன் தொட்டியில் மீன் வளர்ப்பது கூட நன்மை பயக்கும் என்கிறார்கள் மனவியலாளர்கள்.

நாய்களில் சின்னதாக, சாதுவாக, வளர்க்க சுலபமாக இருக்கும் வகைகளை பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள். நட்புடனும், மனிதர்களுடன் சீக்கிரம் பழகும் தன்மையுள்ள நாய்களுக்கு அதிக தேவை இருக்கிறது. பாக்ஸர் (Boxer) பக் (Pug), லெப்ரடார் (Labrador), கோல்டன் ரெட்ரீவர்(Golden Retriever) ஆகிய நாய்கள் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.

ஆண்களை விடப் பெண்களைத் தான் இந்தத் தனிமை நோய் மிகவும் வாட்டுகிறது. அதனால் குழந்தைகள் மீது செலுத்திய அன்பை அப்படியே செல்லப் பிராணிகளின் பால் திருப்பி அவற்றை அக்கறையுடன் பார்த்துக் கொள்ளுவதும் இவர்கள்தான். செல்லப் பிராணிகள் இவர்களது குழந்தைகள் ஏற்படுத்தும் தனிமையை தங்களது விளையாட்டுக்களால் போக்கடித்து,  தங்களின் மேல் செலுத்தப்படும் அன்பை இரண்டு மடங்காக திருப்பி கொடுத்து இல்லத்தரசிகளின் ஏகோபித்த பாராட்டைப் பெறுகின்றன.

இதனால் “தனிமையிலே இனிமை காணலாம் – செல்லப் பிராணி உங்களுடன் இருந்தால்….” என்று இல்லத்தரசிகள் பாடக் கூடும்!

அதிர்ஷ்ட இனிப்பு என்கிற ஃபார்ச்சூன் குக்கீஸ்

 

 

 

 

 

சைனீஸ் உணவு விடுதிக்குச் சென்று உணவு உண்டபின் கடைசியில் அவர்கள் கொடுக்கும் ஃபார்ச்சூன் குக்கீஸ் சாப்பிட்டது உண்டா? வழக்கமாக போகிறவர்களுக்கு இந்த ஃபார்ச்சூன் குக்கீஸ் பற்றித் தெரிந்திருக்கும்.

சிலருக்கு அதன் சுவை பிடிக்கும். சிலருக்கு அதனுடன் கூட வரும் உறையிலிருக்கும் நல் வார்த்தைகள் பிடிக்கும். வேறு சிலர் அது ஏதோ வேண்டாத செய்தி, தங்கள் வாழ்க்கைக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஒதுக்கிவிடுவார்கள். நாம் இப்போது பார்க்கப் போவது இதைப்பற்றி அல்ல. இந்த ஃபார்ச்சூன் குக்கீஸின் சரித்திரம்.(!!)

இந்த ஃபார்ச்சூன் குக்கீஸ் பற்றிப் பல கதைகள் உண்டு. சில கதைகள் இவை முதன்முதலாக அமெரிக்காவில் உருவானவை என்று சொல்கின்றன. இன்னொரு கதை 13, 14 நூற்றாண்டுகளுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன. அப்போது மங்கோலியர்கள் சைனாவை ஆண்டு கொண்டிருந்தனர்.

இந்த மங்கோலியர்கள் தாமரைக் கொட்டையில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வித கூழ் போன்ற தின்பண்டத்தை விரும்பவில்லை. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தினர் சீனர்கள். இதனைக் கொண்டு மூன் கேக் செய்து அதன் உள்ளே தங்களது புரட்சி நாளைக் குறிப்பிட்டு எல்லாவிடங்களிலும் ஆங்காங்கே இருக்கும் புரட்சிக்காரர்களுக்கு விநியோகம் செய்தனர். புரட்சிக்காரர்கள் ஒன்று திரண்டு சீனாவில் புரட்சி வெடித்து ‘மிங்’ வம்சம் ஆட்சியை கைப் பற்றியது.

சீனர்கள் அமெரிக்காவில் இரயில்வே கட்டுமானப் பணியை செய்து வரும் போது மூன் பண்டிகை வந்தது. அப்போது வழக்கமான மூன் கேக் செய்யப் பொருள்கள் இல்லாததால் முன்பு புரட்சிக் காலத்தில் செய்த மூன் கேக்குகளையே கெட்டியான பிஸ்கட்டுகள் சேர்த்து, சிறிது மாற்றி தரத்தை உயர்த்தி புதிதான மூன் கேக்குகளை உருவாக்கினார்கள்.

இதுவே பிறகு ‘ஃபார்ச்சூன் குக்கீஸ்’ ஆனது.

ஒரு நிஜக் கதை!

 

 

 

 

படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும் இது நிஜம் அல்ல என்று திரு. ஹமீத் அவர்கள் அனுப்பிய இணைப்பு மூலம் தெரிய வந்தது.

முதலில் பதிவை நீக்கி விடலாம் என்று நினைத்தேன். நிஜத்தகவலையும் என் பதிவைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என்று பதிவை விட்டு வைக்கிறேன் – மன்னிப்புக் கேட்டுக் கொண்டு!

 

ஒரு நிஜக் கதை!

பாஸ்டன் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய அந்தத் தம்பதிகள் நேராக ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தை நோக்கி நடந்தனர்.

ஹார்வேர்ட் பல்கலைக்கழகத் தலைவரைப் பார்க்க வேண்டும் என்றனர் அங்கு உட்கார்ந்திருந்த உதவியாளரிடம்.

“தலைவர் உங்களுக்காக நேரம் ஒதுக்கி இருக்கிறாரா?”

“இல்லை”, என்றனர். அவர்களை மேலே கீழே பார்த்தார் உதவியாளர். முதல் பார்வையிலேயே தெரிந்தது, சரியான பட்டிக்காட்டு மனிதர்கள் என்று. அந்தப் பெண்மணி சாயம் போன, அச்சடித்த பூக்கள் கொண்ட பருத்தியாலான உடையை அணிந்து இருந்தாள். கணவனோ நாட்டு நெசவில் நெய்த நூல் இழை இழையாகத் தெரியும் சூட் அணிந்து இருந்தார்.

‘இவர்கள் எல்லாம் இங்கு வரத் தகுதி அற்றவர்கள். ஏன்தான் வந்து கழுத்தை அறுக்கிறார்களோ?’ மனதிற்குள் வைதபடி, “இன்று முழுவதும் அவர் பிஸியாக உள்ளார். பார்ப்பது கடினம்…”

“பரவாயில்லை. நாங்கள் காத்திருக்கிறோம்….”

பலமணி நேரம் சென்றது. உதவியாளர் அவர்களைக் கவனிக்கவே இல்லை. தனது அலட்சியம் அவர்களை அந்த இடத்திலிருந்து அகற்றி விடும் என்று நினைத்தார். ஊஹும்… அவர்கள் அந்த இடத்தை விட்டு அசைவதாகவே தெரியவில்லை.

வேறு வழியில்லாமல் தலைவருக்கு செய்தி அனுப்பினார். “சில நிமிடங்கள் நீங்கள் அவர்களுக்காக ஒதுக்கினால் அவர்கள் கிளம்பிவிடக் கூடும்…” என்றார் தலைவரிடம் உதவியாளர். அவர்கள் அங்கு இருப்பதே பெரிய குற்றம் போல ஒலித்தது அவர் குரல்.

தனது தகுதிக்கு அது தாழ்ந்தது என்று நினைத்தாலும், சரி என்று அவர்களைப் பார்க்க ஒப்புக்கொண்டார். மிகவும் கர்வத்துடன் ‘என்ன வேண்டும்?’ என்பது போல அவர்களை நோக்கினார்.

அந்தப் பெண்மணி பேசலானார்: “எங்களுக்கு ஒரு பிள்ளை இருந்தான். அவன் ஒரு வருடம் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தான். இங்கு அவன் மிகச் சந்தோஷமாக இருந்தான். ஹார்வேர்ட் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக, அவன் ஒரு வருடம் முன்னால் தற்செயலாகக் கொல்லப்பட்டான். என் கணவருக்கும் எனக்கும் அவனுக்காக இங்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்க ஆசை…..”

தலைவர் மனது நெகிழவில்லை. மாறாக கோபம் அடைந்தார். “அம்மணி, ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து, இறந்தவர்கள் எல்லோருக்கும் இங்கு சிலை வைப்பது முடியாத காரியம். அப்புறம் இந்த இடம் கல்லறை ஆகிவிடும்.”

“இல்லையில்லை…. நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள்! எங்கள் மகனுக்கு இங்கு சிலை வைப்பது எங்கள் நோக்கம் அல்ல. அவன் நினைவாக ஒரு கட்டிடம் அமைக்க எண்ணினோம்….”

தலைவர் தனது கண்களை உருட்டினார். “கட்டிடமா? இந்தக் கட்டிடங்களின் மதிப்பு என்ன தெரியுமா? 7½ மில்லியன் டாலர்கள்!”

ஒரு நிமிடம் அந்தப் பெண்மணி பேசவில்லை. தலைவருக்கு தாங்க முடியாத சந்தோஷம். அப்பாடா, இவர்கள் இடத்தைக் காலி செய்து விடுவார்கள் என்று ஆசுவாசப் பட்டார்.

பெண்மணி தனது கணவரைத் திரும்பிப் பார்த்துக் கேட்டார்: “ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பிக்க இவ்வளவு தான் ஆகுமா? அப்படியானால் நாமே ஏன் சொந்தமாக ஒரு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கக்கூடாது?”

கணவர் பெண்மணியின் கூற்றை ஆமோதிப்பது போலத் தலையை அசைத்தார்.

தலைவரின் முகம் அதிர்ச்சியில் சுருங்கியது. அவர் தனது அதிர்ச்சியிலிருந்து விடுபடும் முன் திரு. மற்றும் திருமதி லேலண்ட் ஸ்டான்போர்ட் எழுந்து நடந்தனர். கலிபோர்னியாவில் இருக்கும் பாலோ ஆல்டோ என்ற இடத்தில் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தை தொடங்கி, ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் தங்கள் மகனுக்குக் கொடுக்கத் தவறிய கௌரவத்தை நிலை நாட்டினார்கள்.

திரு. மால்கம் ஃபோர்ப்ஸ் எழுதிய ‘A TRUE STORY’ இலிருந்து தமிழாக்கம்.