கடவுளுடன் ஒரு சந்திப்பு:

கடவுளுடன் ஒரு சந்திப்பு:

‘அல்கெமிஸ்ட்’ (Alchemist) என்ற மிகச்சிறந்த நாவலைப் படைத்த திரு. பாலோ கோயிலோ (Paulo Coelho) அவர்கள் சமீபத்திய டெக்கான் கிரானிக்கல் தினசரியில் எழுதிய இரண்டு சின்னச்சின்ன கதைகள் இதோ தமிழில்:

புதிதாக அந்த மடத்தில் சேர்ந்த அனுபவம் இல்லாத சீடன் ஒருவன் காலை நேர தீவிரமான, நீண்ட பிரார்த்தனை முடிந்தவுடன் அங்குள்ள ஒரு சந்நியாசியிடம் கேட்கிறான்:

“நீங்கள் சொல்லித் தரும் பிரார்த்தனைகள் எல்லாம் கடவுளை நம் சமீபத்திற்கு அழைத்துக்கொண்டு வருமா?”

“உன் கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன், நீ என் கேள்விக்கு பதில் சொல். உன் பிரார்த்தனைகள் நாளை சூரியனை உதிக்கச் செய்யுமா?”

“நிச்சயமாக இல்லை. சூரியன் உதிப்பது ஒரு பிரபஞ்ச விதிக்கு உட்பட்டு”

“அதேதான் உன் கேள்விக்கு பதில். கடவுள் நம் அருகிலேயே இருக்கிறார், நீ பிரார்த்தனை செய்தாலும், செய்யாவிட்டாலும்…”

புதிய சீடன் எதிர் கேள்வி கேட்டான்: “அப்படியானால் நம் பிரார்த்தனைகள் பயனில்லாதவை என்று சொல்ல விரும்புகிறீர்களா?”

“சரியாகச் சொன்னாய்! நீ காலையில் சீக்கிரம் எழுந்திருக்கவில்லை என்றால் சூரியன் உதிப்பதைப் பார்க்க முடியாது. நீ பிரார்த்தனை செய்யவில்லை என்றால் கடவுள் நம் அருகில் இருந்தாலும், அவரது இருப்பை நீ உணர மாட்டாய்!”

இரண்டாவது கதை:

நான் கடவுளைச் சந்திக்க விரும்புகிறேன்:

நீண்ட பிரயாணம் செய்து களைத்துப் போயிருந்த வழிப்போக்கன் ஒருவன் ஒரு மடத்தின் வாசலுக்கு வந்து சேர்ந்தான். முதலில் கண்ணில் பட்ட சந்நியாசியிடம் சொன்னான்: “நான் நீண்ட நாட்களாக கடவுளை தேடிக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் அவரை சந்திக்க எனக்கு சரியான பாதையை காட்டிவீர்கள் என்று நம்புகிறேன்.”

“உள்ளே வாருங்கள், வந்து எங்கள் நடைமுறைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்,” என்று சொல்லி அந்த சந்நியாசி வழிப் போக்கனின் கரத்தை பிடித்து தேவாலயத்திற்குள் அழைத்துச்சென்றார். “இதோ இங்கு இருப்பவை எல்லாம் 16 ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த அழகிய கலைப் பொக்கிஷங்கள். கடவுளின் வாழ்க்கை, அவரது பெருமை ஆகியவற்றை பறை சாற்றுபவை.”

அவர் ஒவ்வொரு படங்களையும், சிற்பங்களையும் பற்றி கூறுவதை மிகுந்த பொறுமையுடன் கேட்டு விட்டு வழிப் போக்கன் சொன்னான்: “நான் பார்த்த எல்லாமே மிகவும் அழகானவை; சந்தேகமே இல்லை. ஆனால் கடவுளைக் காண ஒரு சிறந்த வழியைக் கற்றுக்கொள்ள வந்திருக்கிறேன் நான்.”

“கடவுள்………” அந்த சந்நியாசி சொன்னார். “நீ சரியாகச் சொன்னாய், கடவுள்………”

வழிப்போக்கனை அழைத்துக்கொண்டு அங்கிருந்த உணவுக் கூடத்திற்குப் போனார்.

“இதோ பார், இன்னும் சற்று நேரத்தில் இரவு சாப்பாடு தயாராகி விடும். இன்று நீ எங்கள் விருந்தினர். நீ வேதாங்கம் கேட்டுக் கொண்டே உன் பசியைத் தணித்துக் கொள்ளலாம்.”

“எனக்குப் பசியில்லை. நான் எல்லா வேதாங்கமும் படித்து விட்டேன். கடவுளைக் காணக் கற்றுக் கொடுங்கள். அதற்காகவே வந்திருக்கிறேன்.”

வழிப்போக்கனின் சொற்கள் சந்நியாசியின் காதுகளில் விழவே இல்லை. அவனை அழைத்துக்கொண்டு கன்னிமடம் நோக்கி நடக்கலானார். சுற்றிலும் அழகான கண்ணைக் கவரும் தோட்டம்.

“இங்குள்ள புற்களை எல்லாம் திறம்பட வெட்டி விடுமாறு எல்லோரிடமும் சொல்லியிருக்கிறேன். நடுவில் இருக்கும் நீரூற்றில் விழும் காய்ந்துபோன இலைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும். இந்தப் பகுதியிலேயே இந்த மடம் தான் மிகவும் சுத்தமானது என்று நினைக்கிறேன்.”

வழிப்போக்கன் சற்று தூரம் அவருடன் நடந்து விட்டு புறப்பட அனுமதி கேட்கிறான். “சாப்பாட்டுக்கு இருக்கப் போவதில்லையா?” சந்நியாசி கேட்டார்.

குதிரையில் ஏறும்போது வழிப்போக்கன் கூறுகிறான்: “உங்கள் மடத்தை இத்தனை தூய்மையாக வைத்துக்கொண்டு இருப்பதற்கு, உங்களிடம் இருக்கும் மிகச்சிறந்த உணவுக் கூடத்திற்கு, அப்பழுக்கில்லாத தோட்டத்திற்கு என் பாராட்டுக்கள்!. ஆனால் நான் பிரயாணம் செய்வது கடவுளை எப்படிக் காணுவது  என்று அறிவதற்காக; உங்களது திறமை, ஒழுக்கம், வசதிகள் இவற்றைப் பார்த்து மலைத்து போவதற்கு இல்லை.”

வானத்திலிருந்து இடி இறங்கியது; குதிரை கம்பீரமாகக் கனைத்தது; புழுதி மேலெழுந்தது. வழிப்போக்கன் தன் மாறுவேடத்தைக் களைந்தான்.

சந்நியாசிக்கு தான் இயேசுவின் முன்னால் நின்று கொண்டிருப்பது புரிந்தது.

இயேசு கூறினார்: “கடவுள் எங்கும் இருக்கிறார். உங்களது சட்டதிட்டங்கள், தற்பெருமை, செல்வச் செருக்கு, ஆடம்பரம் இவற்றால் அவரை மடத்தினுள்ளே வரவிடாமல் செய்கிறீர்கள். அவரை உள்ளே வரவிடுங்கள். அடுத்தமுறை யாராவது வந்து கடவுளைக் காண விழைந்தால் அன்புடனும், எளிமையுடனும் வழி காட்டுங்கள். கடவுளின் பெயரால் நீங்கள் செய்வதைக் காட்டாதீர்கள்!”

சொல்லிவிட்டு இயேசு மறைந்தார்!

இதை படித்தவுடன் எனக்கு நம் ஊர் மடங்கள் நினைவுக்கு வந்தன. உங்களுக்கு?

மிகப் பெரிய பௌர்ணமி நிலவு!

இந்த வருடத்தின் மிகப் பெரிய பௌர்ணமி நிலவு!

இந்தமுறை பௌர்ணமி நிலவு உதயமாகும் போது (வரும் சனிக்கிழமை 3.35 pm GMT) வழக்கமான பௌர்ணமி நிலவை விட 16% பெரியதாக, 30% அதிக ஒளி மிக்கதாக இருக்கும் என்று வானவியலாளர்கள் கூறுகின்றனர். பூமிக்கு மிக அருகாமையில் வரும் இந்த நிலவுக்கு ‘சூப்பர் மூன்’ என்று செல்லப் பெயர்.

முட்டை வடிவ சுற்றுப் பாதையில் சுற்றுவதால் முழு நிலவின் அளவு ஒவ்வொரு முறையும் மாறுபடும். இந்த நீள் வட்ட பாதையின் ஒரு பகுதி பூமிக்கு  0,000 கி.மீ. அருகில் இருக்கிறது. சந்திரனின் ஈர்ப்பு விசையால் கடலலைகள் வழக்கத்தை விட அதிக உயரம் எழும்பும்.

 

நிலவு உதயம் ஆகும்போது, அல்லது மறையும் போது அடிவானத்தில் இந்த சூப்பர் நிலவைக் காணலாம். அப்போதுதான் அதன் அளவு நன்றாகத் தெரியும். இந்த நிலவை கட்டிடங்கள் அல்லது மரங்களின் பின்னணியில் பார்க்க நேர்ந்தால் நிஜத்தை விடப் பெரியதாக ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும்.

இதனால் இயற்கை சீற்றங்கள் எதுவும் நிகழாது என்று வானியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதற்கு முன் 1983 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும், மற்றும்  2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் தோன்றிய சூப்பர் நிலவுகளால் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

நம் தலைக்கு மேல் தோன்றும் நிலவினை எப்படி அளப்பது? நம் சாதாரணக் கண்களுக்கு எல்லா முழு நிலவும் ஒரே அளவாகத்தான் தெரியும். அதனால் அடிவானத்தில் நிலவைப் பார்ப்பதுதான் ஒரே வழி. அப்போதுதான் நிஜமும் நிழலும் சேர்ந்து ஒரு அசத்தலான தோற்றத்தில் நிலவு நம்மை வியப்பில் ஆழ்த்தும்!