உயிர் காக்கும் தோழன்

‘வாலைக் குழைத்து வரும் நாய்தான் – அது மனிதற்கு தோழனடி பாப்பா’ என்று அன்று பாரதி பாடியது, இன்று ‘உயிர் காக்கும் தோழனடி பாப்பா’ என்று மாற்றிப் பாடலாம். நிஜம் தான்.

நாய்கள் வெறும் செல்லப் பிராணிகள் மட்டுமல்ல; அவை தங்களது எஜமானர்களுக்கு வரும் நோய்களையும், அவற்றினால் உண்டாகும் அபாயகரமான அறிகுறிகளையும்  கண்டுபிடித்து அவர்களது உயிரைக்காப்பாற்ற உதவுகின்றன என்பது புதிய செய்தி.

சர்க்கரை நோயாளிகள் போதிய அளவு உணவு சாப்பிடாவிட்டாலோ, அல்லது தவறுதலாக அதிக அளவு இன்சுலின் எடுத்துக் கொண்டுவிட்டாலோ ‘ஹைபோ’ என்று சொல்லும் தீடீரென இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடும்நிலை ஏற்படலாம். இதன் விளைவாக நோயாளி பலவீனமாகி, நிறம் வெளுத்து, தடுமாறலாம். இந்த அறிகுறிகளை அவர் உணரவில்லை, உடனடியாக மருத்துவ உதவி கிடைக்கவில்லை என்றால் சுய உணர்வை இழக்கலாம்.

ஒரு பயிற்சி அளிக்கப்பட்ட நாய் தனது எஜமானரின் உடலில் சர்க்கரைக் குறைவால் தோன்றும் மாறுபட்ட வாசனையை அறிந்து அவரை எச்சரிக்கிறது. மெடிக்கல் டிடக்ஷன் டாக்ஸ் (Medical Detection Dogs) அமைப்பை சேர்ந்த டாக்டர் கிளேர் கெஸ்ட் “ எங்களது பயிற்சி பெற்ற நாய்கள் நோயாளியை நாக்கால் நக்கியும், அவரது முழங்கையில் இடித்தும், அவரையே வைத்த கண் வாங்காமல் முறைத்துப் பார்த்தும் ‘நீ சரியாக இல்லை; உடனே மருத்துவரைப் பார்’ என்று எச்சரிக்கை செய்கின்றன”. என்கிறார்.

நாய்கள் ஆட்டிசம் நோயாளிகளின் மன அழுத்தத்தையும், ஆக்ரோஷமான நடத்தையையும் சில வாரங்களிலேயே குறைப்பதாக தெரிகிறது.

டாக்ஸ் ஃபார் தி டிசேபில்ட் (Dogs for the Disabled) என்ற அமைப்பு, வீட்டில் வளரும் செல்ல நாய்களுக்கு ஆட்டிசம் குழந்தைகளுக்கு உதவி செய்ய இலவசமாக பயிற்சி அளிக்கிறது

“ஆட்டிசம் குழந்தைகள் மன அமைதி இல்லாமல் தவிக்கும்போது நாய்கள் தங்களது தலையை அவர்கள் மடியில் வைத்து அவர்களை அமைதிப் படுத்த நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம். அதேபோல குடும்பத்துடன் வெளியில் போகும்போதும் இவை குழந்தைகளுடன் கூடவே போய் அவர்கள் வேறு எங்காவது வழி தவறிச் சென்று விடாமல் காக்கின்றன” என்று மேல்சொன்ன அமைப்பைச் சேர்ந்த ஜோயல் யங் கூறுகிறார்.

அமெரிக்காவில் இருக்கும் பாஸ் ஃபார் கம்பர்ட் (Paws for Comfort) என்ற அமைப்பு, சில நோய்களால் மிகுந்த வலிகளுக்கு ஆளாகும் நோயாளிகளுக்கு ஆறுதல் கொடுக்க சைலோ (Xylo) வகை நாய்களை பயிற்றுவிக்கிறார்கள். பொதுவாகவே நாய்களின் உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கும். இந்த சைலோ வகை நாய்களின் உடலில் உரோமம் இருப்பதில்லை; அதனால் அவைகள் மிகுந்த வெப்பத்தை வெளிப்படுத்துகின்றன. இவை தங்கள் எஜமானர்களுடன் நெருங்கி படுத்து வலி குறைய ஒத்தடம் போலத் தங்களது உடல் வெப்பத்தைப் பயன்படுத்துகின்றன.

டிமென்ஷியா என்னும் மறதி நோய் உள்ளவர்கள் வீடுகளில் லாப்ரடார், கோல்டன் ரீட்ரீவ் போன்ற நோய்களை வளர்ப்பது நல்லது. இவைகள் தங்கள் எஜமானர்களுக்கு நேரத்தில் சாப்பிடவும், மருந்துகளை உட்கொள்ளவும், ஒய்வு எடுத்துக் கொள்ளவும், தேவைப்படும் போது தூங்கவும் உதவி செய்ய பயிற்றுவிக்கப்படுகின்றன.

சமீபத்திய வெஸ்டர்ன் ஜர்னல் ஆப் நர்ஸிங் ரீசர்ச் இதழில் வெளியான ஒரு ஆய்வு, வீட்டு நாய்கள், மறதி நோயாளிகளின் மனக் கிளர்ச்சிகளைக் குறைத்து அவர்களது சமூக தொடர்புகளை மேம்படுத்த உதவுகின்றன என்று கூறுகிறது.

வலிப்பு நோயாளிகளுக்கு எச்சரிக்கை கொடுக்க நாய்களுக்கு பயிற்சி அளிக்கப் படுகிறது. இந்நோயாளிகளின் உடலில் வலிப்பு ஏற்படுவதற்கு சுமார் 40 நிமிடங்களுக்கு முன்பே அவர்களில் உடலில் உண்டாகும் இரசாயன மாற்றத்தை நாய்கள் மோப்பம் பிடிக்கின்றன. அவர்களை மருத்துவ உதவியை நாடும்படி அறிவுறுத்துகின்றன.

சில நாய்கள் வலிப்பு நோயாளிகளின் அருகிலேயே படுத்துக் கொண்டு அவர்கள் அசையாமல் இருக்கச் செய்கின்றன; அவர்களை காயம் பட்டுக் கொள்ளாமல் பாதுகாப்பதுடன், ஓடிப் போய் உதவிக்கு ஆட்களை அழைத்து வரவும் செய்கின்றன.

நார்கோலப்சி என்ற துயில் மயக்க நோய் பிரிட்டனில் சுமார் 25,000 மக்களை பீடிக்கிறது. இவர்கள் தங்களது அன்றாட வேலைகளைச் செய்து கொண்டே இருக்கும்போது அப்படியே தூங்கி விடுவார்கள். எஸெக்ஸில் இருககும் தியோ என்ற காக்கர் ஸ்பெனியல் நாய்தான் இவ்வகை நோயாளிகளுக்கு உதவ பயிற்சி அளிக்கப் பட்ட முதல் நாய். இது தன் இளம்வயது எஜமானியான கெல்லி சியர்ஸ் என்ற நார்கோலப்சி  நோயால் பாதிக்கப் பட்ட பெண்ணை அவள் தூங்கத் தொடங்கும் போதெல்லாம் நாக்கால் நக்கியும் முட்டியும் தூங்கிப் போய்விடாமல் செய்கிறது. ஒருவேளை தூங்கி விட்டால் ஓடிப் போய் உதவிக்கு ஆட்களைக் கூட்டி வருகிறது. கெல்லியின் உடலில் உண்டாகும் மாறுபட்ட வாசனையை உணர்ந்து அவளை உடனடியாக உட்காரச் செய்யவும் இப்போது இந்த நாய்க்குப் பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது.

இந்தச் செய்தி படித்தவுடன் பாரதியின் வார்த்தைகள் எத்தனை உண்மை என்று தோன்றுகிறது.

இனிமேல் நமக்குப் பிடிக்காதவர்களை ‘நாயே..’ என்று திட்டக் கூடாது, இல்லையா?

மாக்டெய்ல்

எங்கள் ஊரில் மிகப் பிரபலமான பழச்சாறு விற்பனை கூடம் கணேஷ் ஜூஸ் சென்டர். ஒரு தடவை அங்கு போயிருந்த போது ஒருவர் வந்து “காக்டெய்ல் கொடுங்க” என்றார். எங்களுக்கு சற்று ஆச்சரியம். பழச்சாறு விற்பனை கூடத்தில் காக்டெய்ல்? கடைக்காரரிடமே கேட்டு விட்டேன். அவர் சிரித்துக் கொண்டே ‘எல்லாப் பழச்சாற்றையும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து ஒன்றாகக் கலந்து கொடுப்போம். அதுதான் காக்டெய்ல்’ என்றார். நான் உடனே ‘ஓ! அதுக்கு பேரு மாக்டெய்ல்!; காக்டெய்ல் இல்லை’ என்று அவரை திருத்தி விட்டு (ஆசிரியை ஆயிற்றே!) நகர்ந்தேன்.

ஆல்கஹால் சேர்க்காத, இரண்டு அல்லது மூன்று பழச்சாறுகளைச் சேர்த்து தயாரிப்பதுதான் இந்த மாக்டெய்ல். காக்டெய்ல் போலவே இரண்டு, மூன்று பானங்களை கலந்து தயாரிப்பதால் ‘mock’ (copy or imitation) என்ற ஆங்கில வார்த்தையுடன் காக்டெய்லின் வாலையும் (tail) சேர்த்து மாக்டெய்ல் என்ற பெயர் பெற்றது இந்தப் பானம். இன்னொரு பெயர் விர்ஜின் டிரிங்க்ஸ்.

பழச்சுவை பிடித்தவர்களும், மது அருந்தும் பழக்கமில்லாத பெண்களும் இந்தப் பானத்தை விரும்பிக் குடிப்பார்கள். இதன் அலாதியான சுவையும், வேறு வேறு பழச்சாறுகள் கலக்கப் படுவதால் ஏற்படும் வாசனையும் எல்லோரையும் கவர்ந்துவிடும். பொதுவாக மாக்டெய்ல் ஒரு குளிர்ந்த, கெட்டியான, மிருதுவான – பழக்கூழ், ஐஸ் க்ரீம், யோகர்ட் அல்லது பால் கலந்த பானம். பலவகைப்பட்ட பெர்ரீஸ், பீச்சஸ், மெலன்ஸ், ஆரஞ்சு ஜூஸ், பைனாப்பிள், மாம்பழம், மற்றும் கிவி பழங்கள் மாக்டெய்லில் சேர்க்கப் படும் பிரபலமான பொருள்கள். புத்தம்புதிதான பழங்கள் சேர்ப்பது சுவையைகூட்டும் என்றாலும், பதப்படுத்தப்பட்ட, இனிப்பு சேர்க்காத பழங்களையும் பயன் படுத்தலாம்.

கச்சிதமான விகிதத்தில் சுவையான மாக்டெய்ல் செய்ய பல வருட அனுபவம் வேண்டும் என்றாலும், ஒரு கற்பனைவளம் மிக்க சமையல் கலைஞர் சின்னச்சின்ன உத்திகளைக் கையாண்டு கண் இமைக்கும் நேரத்தில் வாயில் நீர் ஊற வைக்கும் மாக்டெய்ல்களை தயார் செய்துவிடலாம்.

மாக்டெய்ல் தயாரிப்பதற்கு முன், தேவையான எல்லாப் பொருள்களையும் கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பழச்சாறுகளை சரியான அளவில் அளந்து வைத்துக் கொள்ளுங்கள்.

புதிதாகத் தயாரிக்கப்பட்ட பொடிக்கப்பட்ட ஐஸ் கட்டிகள்.

நீங்கள் தயாரிக்கப் போகும் மாக்டெய்லுக்கு புதிய தோற்றம் அளிக்க, பழங்களை சதுரமாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

வித்தியாசமான ஐஸ் கட்டிகள் தயார் செய்ய ஐஸ் தட்டில் எலுமிச்சை துண்டுகள், பழத்துண்டுகளை வைக்கலாம்.

மாக்டெய்ல் பரிமாற கண்ணாடி குவளைகள் விதவிதமாகத் தேவை:

ஷாம்பெய்ன் குவளைகள்: நீள வடிவிலான கண்ணாடிக் குவளைகள்;

காக்டெயில் குவளைகள்: ‘V’ வடிவ முக்கோண கண்ணாடிக் குவளைகள்;

பழங்காலக் குவளைகள்: வளைந்த ஓரங்கள் கொண்ட டம்ளர்கள்;

ஹை-பால் குவளைகள்: (Highball glasses): உயரமான, நேரான பக்கங்கள் கொண்ட குவளைகள்

ஸ்டெம் – ஒயின் குவளைகள்: ஒயின் குடிப்பதற்கு என்றே பலவித வடிவங்களில், அளவுகளில் கிடைப்பவை.

இத்தனை எழுதியபின் அட்லீஸ்ட் இரண்டு மூன்று செய்முறைகள் சொன்னால் தானே நன்றாக இருக்கும். இதோ உங்களுக்காக:

விர்ஜின் மோஜிடோ:

தேவையானவை:

புதினா இலைகள் 3 அல்லது 4

எலுமிச்சை துண்டுகள் (பெரியது) 2

எலுமிச்சை சாறு 2 மேசைக்கரண்டி

ப்ரவுன் ஷுகர்: 1 மேசைக்கரண்டி

ஸ்ப்ரைட் அல்லது சோடா : 1 பாட்டில்

எலுமிச்சை துண்டங்கள், புதினா இலைகள், ப்ரவுன் ஷுகர் இவற்றை ஒன்றாகச் சேர்த்து பிழிந்து சாறு எடுக்கவும். இதனுடன் எலுமிச்சை சாறு கலக்கவும். இவற்றுடன் ஸ்ப்ரைட் அல்லது சோடா சேர்க்கவும். பொடியாக்கப்பட்ட ஐஸ் கட்டிகள் போட்டு பரிமாறவும்.

ப்ரூட் பஞ்ச்:

தேவையானவை:

லீச்சி பழச்சாறு 100 மிலி

மாம்பழச் சாறு 100 மிலி

ஆரஞ்சு பழச்சாறு 100 மிலி

புது க்ரீம்: 30 மிலி

எல்லாவற்றையும் ஷேக்கரில் போட்டு நன்றாகக் குலுக்கவும். புது க்ரீம் சேர்த்து கலக்கவும். பொடியாக்கப்பட்ட ஐஸ் கட்டிகளை போடவும். ஒரு பழத்துண்டை வைத்து அலங்கரிக்கவும்.

என்ன தோழிகளே, இந்த வாரக்கடைசியை மாக்டெய்லுடன் குளுகுளுவென்று செலவழிக்க தயாரா

வெள்ளைத்தாள்களை மறுபடியும் பயன்படுத்தலாம்!

 

அச்சடித்த வெள்ளைத்தாள்களிலிருந்து மசியை அப்புறப்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஒரு புதிய தொழில்நுட்பத்தின் மூலம் மசியை அகற்றிவிட்டு, அந்த தாளை மறுபடியும் அச்சு இயந்திரத்திலும் நகல் இயந்திரங்களிலும் பயன்படுத்தலாம் என்கிறார்கள்.

கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகக் குழுவினால் உருவாக்கப்பட்ட இந்த முறை தாள்களின் மேல் அச்சடிக்கப் பட்ட வார்த்தைகளையும், படங்களையும் அழிக்க ஒளிக்கதிரை குறுகிய துடிப்புகளாக மாற்றி பயன்படுத்துகிறது.

ஒளிக்கதிர் தாள்களை பழுதாக்காமல் மசியை ஆவியாக்கி அகற்றி விடுகிறது. இதன் விளைவாக எதிர்காலத்தில் அச்சடிக்கும் இயந்திரங்கள் ‘அன்ப்ரின்ட்’ (unprint) என்ற ஒரு செயல்பாட்டுடன் உருவாகும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இதனால் ஒருமுறை அச்சான வெள்ளைத்தாள்களை மறுபடி பயன்படுத்தலாம்.

“இதனால் காகிதத்திற்காக மரங்களை வெட்டுவதும் கணிசமாகக் குறைவதுடன், காகித மறுசுழற்சிக்கு குறைந்தவிலையிலான ஒரு மாற்றாகவும் அமையும்” என்று இந்த ஆராய்ச்சியின் தலைமை விஞ்ஞானி டாக்டர் திரு ஜூலியன் ஆல்வுட் கூறுகிறார். இந்த செயல்பாடு பெரும்பாலான மசிகளை அழிக்கிறது. அதனால் அலுவலகங்களிலும் காகிதத்தை மறுஉபயோகம் செய்ய இயலும். பல வர்த்தக நிறுவனங்கள் இந்த அன்ப்ரின்ட் கருவியை உருவாக்க ஆர்வத்துடன் தம்மை அணுகுவதாக திரு ஜூலியன் கூறுகிறார்.

ஆராய்ச்சியாளர்கள் தங்களது இந்த ஆய்வு பற்றி ப்ரோசீடிங்க்ஸ் ஆப் தி ராயல் சொசைட்டி A என்ற இதழில் விவரித்துள்ளார்கள். இப்படி எழுத்துக்களையும், படங்களையும் அழிப்பதற்கு ஒரு நொடியில் 4/1000000000 நொடிகளே ஆகின்றன என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

அல்ட்ரா வயலட், மற்றும் இன்ப்ரரெட் ஒளிக் கதிர்கள் இதற்கு பயன்பட்டாலும், பச்சை ஒளிக் கதிர் மிகவும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. இந்தக் கதிர்கள் காகிதத்திற்கு எந்தவித சேதமும் ஏற்படாமலும் நிறச் சிதைவு ஏற்படாமாலும் மசியினை அகற்றிவிடுகிறது. ஆவியாகும் மசி வாயுவாக வெளியேறும்போது அதனை வடிகட்டிகள் மூலம் பிடிக்கலாம்.

இதற்கான மாதிரியை உருவாக்க 19000 பவுண்ட்ஸ் ஆகலாம் என்றாலும் தொழில் நுட்பம் வளர்ந்து, வர்த்தகமயம் ஆகும்போது விலையும் குறையும். குறைந்த விலை இயந்திரங்களுக்கு அலுவலகங்களில் மதிப்பு கூடுவதுடன், காகிதம் வாங்கும் செலவும் குறையும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பதுடன், காகிதத்தை மறுசுழற்சி செய்யும்போது வெளிப்படும் கரியமில வாயு உமிழ்வும் 79% வரை குறையும் என்பதும் கூடுதல் நன்மைகள்.

பேஸ் புக்கின் இமாலய வெற்றியை வீழ்த்த முடியுமா? (கடைசி பாகம்)

நாம் உரிமையைப் பற்றிப் பேசும்போது இன்னும் சில விஷயங்களைக் கவனிக்கவேண்டும். பேஸ்புக் நம்மைப் பற்றிய தகவல்களுக்கு உரிமை கொண்டாடுகிறது. பேஸ்புக்கின் உரிமையே குறிப்பிடத்தக்க வகையில் ஒரே இடத்தில் குவிந்துள்ளது. S-1 அறிக்கையில் நம்மை திடுக்கிட வைப்பது பேஸ் புக்கின் மூர்க்கத்தனமான சமூக நோக்கம் மட்டுமல்ல; பில் கேட்சையும் மிஞ்சக் கூடிய வகையில் ஸக்கர்பெர்க்கிடம் உள்ள 57% வாக்குரிமையுடன் கூடிய பங்குகளும், பேஸ்புக்கின் இலக்கின் மேல் அவருக்குள்ள அதிகாரமும்தான். இது ஒரு அறிவாற்றல் மிக்க முரண்பாடு: உலகத்திற்கு அவர் சொல்லுவது பீர் டு பீர் நெட்வொர்க் – தனது நிறுவனத்திற்குள் அவர் விரும்புவது ஒரு இடத்தில் குவிக்கப்பட்ட டாப்-டவுன் (top-down) கட்டுப்பாடு!

21 பக்கங்கள் கொண்ட S-1 அறிக்கை, வரும் வருடங்களில் பேஸ்புக்கின் எதிர் காரணிகளாக (risk factors) அதன் போட்டியாளர்களான கூகிள், ட்விட்டர், மைக்ரோசாப்ட் மற்றும் இதர சமூக வலைத் தளங்களிடமிருந்து வரக்கூடிய அச்சுறுத்தல்களையும் குறிப்பிடுகிறது. ஆனால் போட்டியாளர்களே இல்லாத நிலை (antitrust) பற்றி மௌனம் சாதிக்கிறது. “சட்டதிட்டங்களில் ஏற்படும் கட்டாய மாற்றங்கள், ஒழுங்கு முறை அதிகாரிகள், வழக்கு மன்றங்களில் கிடைக்கும் தீர்ப்பாணைகள் ஆகியவை எங்கள் மேல் ஏற்றத் தாழ்வான விளைவுகளை உண்டாக்கலாம்” என்று ஒரே ஒரு கருத்தை மட்டும் பேசுகிறது.

பேஸ் புக் முதன்முறையாக புகைப்பட சேவையை தொடங்கியபோது – அதன் சில செயல்பாடுகள் ப்ளிக்கர், போட்டோபக்கெட் இவற்றைவிட தரம் குறைவாக இருந்தபோதும் – எப்படி நொடியில் உலகின் மிகப் பெரிய புகைப்படக் களஞ்சியமாக ஆனது என்பதைக் குறித்து மிக சந்தோஷமாக விவரிக்கிறார் திரு ஸக்கர்பெர்க். அவரது கருத்துப்படி புகைப்பட பகிர்தல் அவர் தனது போட்டியாளர்களுக்கு தனது வல்லமையை காட்ட பயன்படுத்தும் ஒரு துருப்புச் சீட்டாகும். பேஸ் புக்கின் புகைப்பட பகிர்தலின் மேலாதிக்கம் எதைக்காட்டுகிறது என்றால் ஒரு நிறுவனம் ஒரு துறையில் தனக்கு இருக்கும் செல்வாக்கால் தனது போட்டியாளர்களை இன்னொரு துறையில் நசுக்கப் பார்க்கிறது என்பதைத்தான். பேஸ் புக்கின் வளர்ச்சி இதே போலத் தொடரும் என்ற நிலையில், அடுத்தமுறை அது இன்ஸ்டாகிராம் அளவில் வேறொரு கையகப்படுத்துதலுக்கு முயலும்போது, வழக்கறிஞர்கள் அதை மிகவும் கூர்ந்து பரிசீலனை செய்யக் கூடும்.

பேஸ் புக் தனது போட்டியாளராக கூகிள்+ என்று சொல்லுவது மிகச் சரி. ஏனெனில் தொடங்கிய ஒருவருடத்திற்குள் 170 மில்லியன் பயனர்களை அது பெற்றிருக்கிறது. மற்ற சின்னசின்ன வலயதலங்களும் – போர்ஸ்கொயர், பாத், ஸ்போட்டி – போன்றவைகளும் தங்கள் பங்கிற்கு மெதுமெதுவே பெரிய ஜனத் தொகையை எட்டிப்பிடிக்க முயன்று கொண்டிருக்கின்றன. ஆனால் பேஸ் புக் அவர்களை தனது அபரிமிதமான வளர்ச்சியால் குறு நிறுவனங்களாகச் செய்துவிடும். அதிக மக்கள் ஒரு இணையதளத்தில் சேரும்போது அதன் பயன்பாடு அதிகரித்து, இன்னும் அதிக மக்களை கவர்ந்து இழுக்கிறது. 1990 களில் விண்டோஸின் இயங்குதளமும், 2000 த்தில் கூகிள் தொடங்கிய விளம்பர வர்த்தகமும் இந்த விதமான வெற்றியால் antitrust புலனாய்வு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

S-1 அறிக்கையில் தன்னை வலையதள ஏகபோக உரிமையாளர் என்று மக்கள் நினைப்பார்களோ என்ற கவலையை விட, போட்டிகளால் தன்னை குறைத்து மதிப்பிட்டு விடுவார்களோ என்ற கவலை அதிகம் தெரிகிறது. ஆனால் பேஸ் புக்கிற்கு antitrust புலனாய்வு ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஆக இருக்கும். பேஸ்புக், இணைய தளத்திலிருந்து ஒரு ஊடகமாக மாற விரும்பினால் ஸக்கர்பெர்க்கும் அவரது குழுவினரும் அவர்களது இந்த சமூக வலைப்பின்னலை வெளிப்படையாக மாற்ற  ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும்.

“பேஸ்புக் நிறுவனம் ஆக இருப்பதற்காக உருவாக்கப் படவில்லை” என்று ஸக்கர்பெர்க் சொன்னாலும் இப்போது உலகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனம் ஆகி விட்டது. பேஸ் புக் இப்போது உலகத்தை சிறந்தமுறையில் இணைக்கப் பட்ட இடமாக மாற்றி இருக்கிறது. இது மிகவும் பாராட்டுக்கு உரிய விஷயம். தனது சமூக நோக்கம் ஒரு திறந்த, வெளிப்படையான ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஸக்கர்பெர்க் விரும்பினால் சில மதில்களை உடைத்துக் கொண்டு வர வேண்டியிருக்கும்.

written by Steven Johnson / translated by Ranjani Narayanan

பேஸ்புக்கின் இமாலய வெற்றியை வீழ்த்த முடியுமா? (2)

 

பேஸ்புக் தனது பயனர்களுக்கு அவர்களது அந்தரங்க காப்புரிமைகளின் மேல்  ஒரு சிறு குந்துமணி அளவு கட்டுபாட்டை மட்டுமே கொடுத்திருக்கிறது. அந்தரங்க காப்புரிமைகளின் அமைப்பில் பலவிதமான தனித்தனியான விருப்பங்கள் பட்டியல் இடப்பட்டிருக்கின்றன. இவற்றை வேண்டும்போது ஆம் என்றும் வேண்டாத போது இல்லை என்றும் மாற்றிக்கொள்ள முடியும்.  பயனர்கள் மிக எளிமையாகக் கையாளும்வகையில் புதுப்புது அம்சங்களை கொடுப்பதில் பேஸ்புக் வெகு காலமாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. முதலில் வந்த எதிர்மறை விமர்சனங்கள் காலப்போக்கில் ஒப்புதலாக மாறி,  ஆர்வத்தையும் தூண்டும்படி அமைந்து விடுகின்றன. முதன்முதலாக ந்யூஸ் பீட் (News feed) அம்சம் அறிமுகப்படுத்தப் பட்டபோது சற்றுப் பின்னடைவு ஏற்பட்டாலும்  இப்போது அது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. பேஸ் புக் தான் செய்யும் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுகிறது என்று தோன்றுகிறது. பீகன் (Beacon) ரத்து செய்யப்பட்டது; தற்போது அந்தரங்க காப்புரிமை மேம்பாட்டு அமைப்புகள் எளிமைப்படுத்தபட்டிருப்பதால் டாஷ்போர்ட் விருப்பங்கள் பயனர்களை மலைப்பூட்டுவதாக  இல்லை.

இதே முறையிலேயே பேஸ் புக் சமூகப் பகிர்வுக்கான தனது எல்லைகளை விரிவுபடுத்தும் என்று தோன்றுகிறது; அதாவது எல்லை மீறும் போது, பயனர்களிடமிருந்து, விமர்சகர்களிடமிருந்து எதிர்ப்பு வரும்போது பின்வாங்குவது; விமர்சனங்களுக்கு பேஸ்புக் செவி சாய்க்கும்வரை இந்த முறையே சரியானது. பயனர்கள் இந்த இணையதளம் வழியே அதிகமாகப் பகிர்ந்துகொள்ளுதல் என்பதுதான் பேஸ்புக்கின் அடையாளம்.  நாம்தான் அதற்கு அதன் எல்லை எது என்பதைப் புரிய வைக்கவேண்டும்.

2012 ஆம் வருட ஆரம்பத்தில் தனது பங்குகளை பொது சந்தைக்கு கொண்டுவர திட்டமிட்டு செக்யூரிட்டிஸ் அண்ட் எக்சேஞ்ச் கமிஷன் முன் S-1 அறிக்கையை பதிவு செய்தபோது ஒரு கடிதத்தையும் சேர்த்துப் பதிவு செய்தார் ஸக்கர்பெர்க். சட்ட மொழிக்கும், பொருளாதார மாதிரிகளுக்கும் நடுவில் எல்லோருடைய ஆர்வத்தையும் கிளப்பும் ஒரு ஆவணம் அது.

“பேஸ் புக் நிறுவனமாக இருப்பதற்காக உருவாக்கப்பட்டது அல்ல. இந்த உலகம் வெளிப்படையாகவும், ஒருவருக்கு ஒருவர் தொடர்புடையதாகவும் இருக்க வேண்டும் என்ற சமூக நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது” என்று ஸக்கர்பெர்க் குறிப்பிட்டு இருந்தார் இந்தக் கடிதத்தில். இந்த நோக்கத்தை யாரும் குறை சொல்லவே முடியாது. பிரச்னை என்னவென்றால் பேஸ்புக் மற்ற வலயங்களுடன் தொடர்பு கொள்ள விரும்பாததுதான். உதாரணமாக ‘கார்டியன்’ இதழில் வரும் ஒரு கட்டுரையைப் படிக்க பேஸ் புக்கில் இருக்கும் ஒரு லிங்க்-கை சொடுக்கினால், அது நேராக உங்களை கார்டியன் பக்கத்திற்கு அழைத்து செல்லாது. நடுவில் ஒரு இடைமறிப்பு செய்தி வரும்: கார்டியன் பயன்பாட்டை நிறுவச் சொல்லும்.

ரீட் ரைட் வெப் (Read Write Web) டெக் ப்ளாகில் திரு மார்ஷல் கிர்க்பாட்ரிக் எழுதுகிறார்: “வலயத்தில் தங்கள் படைப்புக்களை வெளியிடுபவர்களுக்கும், பயனர்களுக்கும் நடுவில் இருக்கும் ஒரு அடிப்படை ஒப்பந்தத்தை பேஸ் புக் இந்த தடங்கலற்ற பகிர்வின் மூலம் மீறுகிறது. ஒரு சுவாரஸ்யமான செய்தியைப் படிக்க ஒரு இணையத்தை அடைய முயற்சிக்கும்போது நடுவில் ஒரு மென்பொருளை சமூக வலைப்பின்னலில் நிறுவச் சொல்லுவது சரியல்ல”. ஸக்கர்பெர்க்கின் ‘வெளிப்படையான உலகம்’ என்பதை இந்த செயல்கள் மறுக்கின்றன.

ப்ளாகர் அனில் டேஷ் (New Wired columnist), “தீம்பொருள் தடை செய்யும் சேவைகள், பேஸ் புக் ஒரு தீம்பொருள்; அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று பயனர்களை எச்சரிக்கை செய்யும் அளவுக்கு பேஸ் புக்கின் எச்சரிக்கைகள் பைத்தியக்காரத்தனமானதாக இருக்கின்றன” என்று மிகக் கோபமாக கூறுகிறார்.

இணையத்தின் முக்கியமான இணைப்புகள் இந்த மீத்தொடுப்புக்கள் (hyperlinks); அவற்றை இணையத்திலிருந்து தனியாக பிரித்து தரவிறக்கம் செய்வது  நண்பர்களுடன் மறைமுகமான தகவல் தொடர்புக்கு சுலபமாக இருக்கலாம்; ஆனால் தொடர்பையே வெட்டுவதும், மக்களை வெளிச்சத்திற்கு வராத வலைய மூலைகளுக்குப் போகவிடாமல் தடுப்பதும்  நல்லதல்ல.

தனது S-1 கடிதத்தில் மனித தொடர்புகளால் ஆன வலயத்தை விரிவு படுத்த விரும்புவதாக அவர் கூறும்போது ஸக்கர்பெர்க் ஒரு அக்கறையான, நல்ல உள்ளம் கொண்ட அதே சமயம் பேராவலுள்ள இளைஞர் ஆக தோன்றுகிறார். அவரது குறிக்கோளும் தூய்மையானதாகவே தெரிகிறது. பேஸ் புக் என்பது வியாபாரம் என்பதை விட ஒரு சமூக நோக்கம் என்று அவர் கூறுவது போற்றத்தக்கது; அப்படிக் கூறுவதை அவரும் நம்புகிறார். ஆனால் பேஸ் புக் என்பது சாலைகளும் பாலங்களும், குறுக்கும் நெடுக்கும் ஓடும் குழாய்களும் நிறைந்த உள்கட்டமைப்பாக இருக்கிறது.

அவரது கடிதத்தில் குறிப்பிடத் தக்க ஒரு வரி: “உலகின் தகவல் உள் கட்டமைப்பு சமூக வரைபடத்தை போல, கீழிருந்து மேல்நோக்கி பின்னப் பட்ட வலைப்பின்னல் போல இருக்கவேண்டும். ஒரேமாதிரியான மேலிருந்து கீழ் நோக்கி வரும் அமைப்பாக இன்றைக்கு இருப்பதுபோல இருக்கக் கூடாது”

இதில் அவர் ‘இன்றைக்கு’ என்று குறிப்பிடுவது 1975 வரை என்றிருந்தால் அவர் ஒரு மிகச்சிறந்த கருத்தைக் கூறுகிறார்; அப்படியல்லாமல் ‘இன்றைக்கு’ என்று இப்போதையை நிலையைக் குறிப்பிட்டால் அது சரியில்லை.

அவர் குறிப்பிடும் bottom-up, peer-to-peer பிணைப்புகள் நமக்கு பல சேவைகளை பல வருடங்கள் செய்திருக்கின்றன. வெளிப்படையான பிணைப்புகள் அடைக்கப்பட்டவைகளை விட சிறந்தவைதான். அடைப்பட்ட சுவர்களைக் கொண்ட Compuserve, Prodigy, மற்றும் ஒரிஜினல் AOL முதலிய நிறுவனங்கள் தங்களது குறுக்குச் சுவர்களை உடைத்துக் கொண்டு வெளியே வந்துதான் உயிர் பிழைக்க முடிந்தது.

சமூக வலையங்களின் இயங்குதளம் சற்று மாறுபட்டு இருக்கும். வழக்கமான வெளிப்படையான ஒரு இயங்கு தளத்திற்கு பதில் பல தனியுரிமை பிணைப்புக்கள் – சில வளரும்; சில மறையும் – ஒரு குறிப்பிட்ட கால அளவில் தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக உருவாகும். உதாரணம்: Tribes, Friendster, Myspace. ஆனால் பேஸ் புக் இந்த சுழற்சியிலிருந்தும், வேகத்திலிருந்தும் தப்பித்துவிட்டது.

வலையகத்தின் இயங்கு தளமும், இணையதளமும் நம் எல்லோருக்கும் சொந்தமானது. பேஸ் புக் ஒரு தனியான நகராட்சி கழகம்; பல பங்குதாரர்களைக் கொண்டது; ஸக்கர்பெர்க் சமூக வரைபடம் என்று கொண்டாடுவது தனியுரிமை தொழில்நுட்பம். நமது பகிர்தலின் மூலம் பேஸ் புக்கின் ஓபன் க்ராப் வளர நாம் உதவலாம். அதிலிருந்து வெளியேற விரும்பினால் நமது தகவல்களை அழித்து விடலாம்.

இக்கட்டுரையின் இறுதிப் பகுதி நாளை….

 

 

 

 

 

 

 

 

 

 

 

பேஸ்புக்கின் இமாலய வெற்றியை வீழ்த்த முடியுமா?

2004 ஆம் ஆண்டு மார்க் ஸக்கர்பெர்க் தனது விடுதி அறையில் உட்கார்ந்து கொண்டு பேஸ்புக்கின் முதல் பன்முறை செயலாக்கத்திற்கான குறியீடுகளை எழுதிக் கொண்டிருந்த போது இணையதள வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் நடப்பட்டது. உலகம் முழுவதும் 750 மில்லியன் மக்கள் பேஸ் புக்  மூலம் இணைக்கப் பட்டனர். இணையதளம் எப்போது ஆரம்பித்தது என்று சரியாகச் சொல்ல முடியாது; ஆனால் இத்தனை பெரிய ஜனத்தொகையை அடைய அதற்கு சுமார் 30 வருடங்கள் ஆகியிருக்கிறது.

தொடங்கிய 8 வருடத்தில் 750 மில்லியன் பயனர்கள் பேஸ்புக்கிற்கு மட்டுமே இருக்கிறார்கள். இந்த அசுர வளர்ச்சியில் காரணமாக ஒரு மல்டிமில்லியன் டாலருக்கு தன் நிறுவன பங்குகளை பொது மக்களுக்கு விற்க இருப்பதைத் தவிர இன்னும் பலவற்றை பேஸ்புக் சாதிக்க இருக்கிறது.

இப்போது பேஸ்புக் தனியான ஒரு ஊடகமாக – தொலைக்காட்சி போல ஆகலாம்; எல்லோரும் வந்து சேருமிடமாக மட்டும் அல்லாமல் தனியாக ஒரு முழுமையான வலைய தளம் ஆக உருவாகலாம். இதற்கு வெறும் பயனர்களின் எண்ணிக்கை மட்டும் காரணமல்ல. பல வர்த்தக நிறுவனங்கள் பழைய தொழில் உத்திகளைக்  கைவிட்டுவிட்டு, பேஸ் புக்கில் மட்டுமே தங்கள் நிலையை தெரியப்படுத்த விரும்புவதும் இன்னொரு காரணம்.

பேஸ்புக் அமைத்துக் கொடுத்த மேடை ஏற்கனவே ஒரு பில்லியன் டாலர் முதலீட்டில் சைங்கா (Zynga) என்ற இணையதள விளையாட்டுக் கம்பனிக்கு வித்திட்டுள்ளது. இன்ஸ்டாக்ராம் என்ற புகைப்பட இணையதளத்தை விழுங்கி விட்டது. 2009 இல் 4½ மணி நேரம் பேஸ் புக்கில் செலவழித்து வந்த மக்கள் இப்போது 7 மணி நேரம் செலவழிக்கிறார்கள்.

பேஸ் புக்கின் வளர்ந்துவரும் மேலாதிக்கம் இணையதளத்தின் 3 வது பரிணாம வளர்ச்சி என்று சொல்லலாம். முதல் கட்டத்தில் இணையதளம் peer-to-peer architecture, packet-switched data இவற்றை பிரபலப்படுத்தியது. அடுத்தபடியாக  வலைப்பின்னல்களால் ஆன பக்கங்களையும் அவற்றிலிருந்து மற்ற பக்கங்களுக்கு போக மிகவும் சுலபமான பின் குறிப்பு போன்ற தொடுப்புகளையும் (network of “pages” and footnote-like links) நடைமுறைபடுத்தியது. இவையிரண்டும் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருந்தபோதிலும், இவை முற்றிலும் தகவல்களைச் சுற்றியே இருந்தன – மக்களைச் சுற்றி அல்ல. ஒரு கணணி விஞ்ஞானியின் கண்ணோட்டத்தில் இவை குறைகள் அல்ல. ஆயினும் மக்கள் உலகத்தைப் பார்ப்பது தங்களது நண்பர்கள், குடும்பத்தினர்கள், சக பணியாளர்கள் மூலம்தான்.

அதனால் சமூக இணையத்தளங்களின் ஈர்ப்பு அதிகமாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. பேஸ் புக்கின் வருகையால் வலையத்தின் முகமே மாறிவிட்டது. வலையத்தின் இயக்கும் சக்திகள் ( packets, DNS look-ups etc.,) பின்னுக்குத் தள்ளப்பட்டன; அல்லது கண்ணுக்குத் தெரியாமல் போய்விட்டன.பேஸ் புக் இப்போது வலையத்தையே எதிர்த்து தற்காப்புப் போர் செய்ய ஆயத்தமாகிவிட்டது. வலையம் என்பது தனி ஒருவரின் சொத்து அல்ல; நம் எல்லோருக்கும் பொதுவானது; ஆனால் பேஸ் புக் வந்தவுடன் நாம் எல்லோரும் நிலத்தில் வேலை செய்யும் குத்தகைதாரர் போல ஆகிவிட்டோம். நம் உழைப்பால் நல்ல விளைச்சல் கிடைக்கிறது ஆனால் நிலம் வேறு யாருடையதோ!

இந்த இமாலய வெற்றி, பேஸ் புக்கிற்கு முதலாளித்துவ வரலாற்றில் மிகச்சிறந்த பங்கு சந்தையை ஏற்படுத்தும் என்றபோதிலும் அதை விமர்சனம் செய்பவர்கள் பெருகி வருகிறார்கள். உங்கள் வியாபாரத்தை அதே தெருவில் வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ளுவது சாத்தியம் என்றால் உங்கள் வியாபாரத்திற்கு இடையூறு செய்யும் பெருநிறுவனத்தின் நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் அந்தத் தெருவே அந்த நிறுவனத்திற்கு சொந்தம் என்னும்போது சின்னசின்ன வரம்பு மீறுதல் கூட பெரிதாக்க படுகிறது. சில வருடங்களுக்கு முன், பேஸ்புக் மிகப் பெரிய அளவில் நமது நேரத்தை வீணடிப்பதாக புகார் எழுந்தது. இப்போது பேஸ் புக் நமது சமூக மதிப்பு, மற்றும் நமது அந்தரங்கம் இவற்றுக்கு ஒரு அச்சுறுத்துதல் என்று இன்னும் பலமான புகார்கள் வரத் தொடங்கி உள்ளன.

பேஸ்புக் எதிர்ப்பாளர்கள் உரத்துக் கூச்சலிடுவது அதனுடைய அடாவடித்தனமான அந்தரங்க காப்புரிமைகள் பற்றித்தான். பயனர்களது ஆன்லைன் விவகாரங்களை – வாங்கும் பொருட்கள் முதலிய விவரங்களை – அவர்களுக்கே தெரியாமல் பேஸ் புக் அவர்களின் நண்பர்களுக்கும், விளம்பரதார்களுக்கும் ‘Beacon’ – personalized advertisement என்ற பெயரில் தெரியப்படுத்திய போது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அதனை ரத்து செய்ய வைத்தனர்.

இப்போது புதிதாக ஓபன் க்ராஃப் என்ற நெறிமுறை நீங்கள் ஒரு பேஸ் புக் அப்ளிகேஷனை எப்படி பயன்படுத்து கிறீர்கள் என்ற தகவலை மற்ற பயன்பாடுகளுக்கும் வழங்கும். இது மிகவும் புதுமையான, உபயோகமுள்ள பல கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுக்கும் – ஒரு மிகப் பெரிய அக்கறையற்ற சமூகக் கேளிக்கைகளுக்கும் கூட என்பதை சொல்லத் தேவையில்லை – என்றாலும் நம்மைப் பற்றிய தகவல்கள் எங்கே போகிறது, எந்தெந்த வகையில் பகிரப்படும் படும் என்பதைக் கண்காணிக்க நமக்கு நேரம் போதாது. நீங்கள் ஒரு பயன்பாட்டை உபயோகிக்க விரும்பி சைன்-இன் செய்யும்போது ஒரு எச்சரிக்கை செய்தி வருகிறது: இந்தப் பயன்பாடு உங்கள் சார்பில் உங்களது அந்தஸ்து நிலை தகவல்களையும், குறிப்புகளையும், புகைப்படங்களையும், நிகழ் படங்களையும் போடக் கூடும்; உங்களைப்பற்றிய தகவல்களை எப்போது வேண்டுமானாலும் பெற முடியும்; நீங்கள் இந்த பயன்பாட்டுப் பொருளை உபயோகப்படுத்தாத நிலையிலும் உங்களைப் பற்றிய தகவல்களை பெற முடியும் என்று. தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், இது தடங்கலற்ற பகிர்வு என்பதன் பின் விளைவுகளை குறிப்பிடுகிறது என்று சொல்லலாம். ஆனால் நடைமுறையில் நாம் எதற்காக உள்நுழைகிறோம் என்று பயனர்களுக்குத் தெரியுமா?

தொடரும்…..

உடற்பயிற்சியா?……

 

உடற்பயிற்சியா?……சரியான ‘போர்’ ……!

…..என்று சொல்பவரா நீங்கள்? இதோ உங்களுக்காகவே இந்தச் செய்தி.

இன்னொருவருடன் உடற்பயிற்சி செய்வது உற்சாகத்தைக் கொடுக்கும்; தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணமும் நிலைத்து நிற்கும் என்று எப்போதுமே மருத்துவர்கள் சொல்லுவார்கள். உங்கள் துணைவருக்கும் உடற்பயிற்சி சரியான ‘போர்’ என்றால்……..?

ஒரு உடற்பயிற்சி துணைவரை வேலைக்கு அமர்த்த வேண்டியதுதான்! ‘ஏற்கனவே ஜிம்முக்கு மாதாமாதம் அழுகிறோம்…. இன்னும் இந்த ‘உடற்பயிற்சி துணைவருக்கு வேறு அழவேண்டுமா?’ என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. இந்தத் துணைவர் ‘ஒரு கற்பனைத் துணைவர்’ தான். அதாவது virtual partner.

மிச்சிகன் பல்கலைக்கழகம் 58 இளம் பெண்களைத் தேர்ந்தெடுத்து உடற்பயிற்சி சைக்கிளில் எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் பயிற்சி செய்யச் சொன்னார்கள்.

ஒரு குழு தனியாக பயிற்சி செய்தது. இன்னொரு குழுவிற்கு பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன் வீடியோ மூலம் ஒரு கற்பனைத் துணைவரை அறிமுகப்படுத்தினர். அந்த கற்பனை துணைவரும் இவர்கள் பயிற்சி செய்யும்போது வேறு ஒரு இடத்தில் இதே பயிற்சியை செய்து கொண்டிருப்பார்கள் என்று சொல்லப் பட்டது.

பயிற்சியின் போது இவர்கள் தங்களது செயல்பாட்டை கண்காணிக்க முடிந்தது. இவர்களது கற்பனை துணைவர் இவர்களை விட சற்று அதிகம் செய்வதாக இவர்களிடம் சொல்லப் பட்டது.

பயிற்சி முடிந்தபின் இந்தப் பெண்களிடம்  அவர்கள் உடற்பயிற்சி செய்யும் நோக்கம் என்ன; அவர்கள் எத்தனை தூரம் நன்றாக செய்தனர்; எந்த அளவுக்கு சோர்வு அடைந்தார்கள் என்ற கேள்விகள் கேட்கப்பட்டன.

தனியாக உடற்பயிற்சி செய்த பெண்களைவிட ‘கற்பனைத் துணைவருடன்’ உடற்பயிற்சி செய்தவர்கள் 22 நிமிடங்கள் அதாவது தனியாகச் செய்தவர்களை விட இரண்டு மடங்கு அதிக நேரம் பயிற்சி செய்திருக்கிறார்கள். உடற்பயிற்சி செய்யும்போது இவர்களது உற்சாகமும் குறையவில்லை.

 

தங்களது உடல் உழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த வழி. அதுமட்டுமின்றி நீண்ட நாட்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும் இந்த முறை வழி வகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

ப்ளாஸ்டிக் அழிவிலிருந்து உலகைக் காக்க முடியுமா?

எங்கு பார்த்தாலும் ப்ளாஸ்டிக் மயம். பால் பாக்கெட்டிலிருந்து பல் பொடி வரை எல்லாமே ப்ளாஸ்டிக் பைகளில் அல்லது ப்ளாஸ்டிக் ட்யூப்களில். உலகமே இந்த ப்ளாஸ்டிக்கிற்கு அடிமைப் பட்டுக் கிடக்கிறது.

மனிதனின் வாழ்க்கைக்கு மிக இன்றியமையாத பசுமைச் சூழலுக்கு இந்த ப்ளாஸ்டிக் மயத்தால் பெரும் ஆபத்து.

ப்ளாஸ்டிக் என்பது பெட்ரோலிய ரசயானப் பொருட்களால் ஆனது; மிகவும் நிதானமாக மக்கக்கூடியது; இதில் இருக்கும் சிக்கலான ரசாயனக் கலவைகளால் இயற்கையாக மண்ணோடு மண்ணாகி மக்கும் தன்மை இதற்கு மிகக் குறைவு.

1950 களிலிருந்து சுமார் ஒரு பில்லியன் டன் ப்ளாஸ்டிக் கழிவுகள் வெளியேற்றப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தக் கழிவுகள் இன்னும் பல நூறாண்டுகள், ஏன் ஆயிரமாண்டுகள் கூட அழியாமல் இருக்கக்கூடும்.

இப்போது அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் புதிதாக ஒரு பூஞ்சை – அதாவது பூஞ்சக்காளான் (fungus), இந்தப் ப்ளாஸ்டிக்கை அழிக்கக் கூடும் என்று கண்டறிந்து உள்ளார்கள். இந்தப் பூஞ்சை, ப்ளாஸ்டிக்கினால்  உண்டான சுற்றுச்சூழல் அழிவிலிருந்து மனிதனைக் காக்கும் என்று சொல்லுகிறார்கள்.

கனெக்டிகட் யேல் பல்கலைக் கழக மாணவர்கள் சிலர் அமேஸான் மழைக் காடுகளில் இருக்கும் ஒருவித பூஞ்சை ப்ளாஸ்டிக் பாலியூரேதேனை (polyurethane) அழிக்கவல்லது என்று கண்டுபிடித்துள்ளனர்.

அப்ளைடு அண்ட் என்வயரன்மென்டல் மைக்ரோபயாலாஜி  என்ற இதழில் இந்த ஆராய்ச்சி பற்றி இந்த மாணவர்கள் எழுதியுள்ளார்கள்.

“ஈக்வடோரியன் மழை காடுகளில் இருக்கும் தாவரங்களின் தண்டுகளில் இருந்து என்டோஃபைட்டுகளை பிரித்தெடுத்து ஆராய்ந்து இருக்கிறோம்.

என்டோஃபைட்டுகள் தாவரங்களின் உட்புற திசுவில் இருக்கும் மிக நுண்ணிய உயிரினம். வளரும் தாவரங்களுக்கு இவை எந்தவிதமான பாதிப்பையும் உண்டு பண்ணுவதில்லை. ஆனால் தாவரங்கள் இறந்துபோன பின் அவை மக்குவதற்கு உதவுபவை. இதுவரை இவற்றால் செயற்கை பொருட்களை மக்கச் செய்ய முடியுமா என்று ஆராயந்ததில்லை.

இந்த உயிரினத்தின் ஒரு சிறிய பகுதி மட்டும் பிரித்தெடுக்கப்பட்டு, இவற்றால் பாலியூரேதேனை தரமிழக்கச் செய்ய முடியுமா என்று சோதனை நடந்திருக்கிறது.

பூமியில் இருக்கும் பல லட்சக்கணக்கான தாவரங்கள் என்டோஃபைட்டுகள் வளர உதவுகின்றன. இந்த என்டோஃபைட்டுகளின்  பண்புகளை விரிவாக ஆராய்வதன் மூலம் இதன் உண்மையான பலவகையான வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் தெரிய வரும். வெப்பமண்டலக் காடுகளில் இருக்கும் தாவரங்களில் இதன் பன்முகத் தன்மை இன்னும் நன்றாகத் தெரிய வரும்.

மேன்மேலும் இந்தத் துறையில் ஆராய்ச்சி செய்வதன்மூலம், பலவகையான ப்ளாஸ்டிக் பொருட்களை தரமிழக்கச் செய்ய முடியும்”.

இவ்வாறு இவர்கள் எழுதியுள்ளார்கள்.