ஆரோக்கியமான கல்லீரல் வேண்டுமா?

ஆரோக்கியமான கல்லீரல் வேண்டுமா?

நமது கல்லீரல் நமது உடலின் முக்கியமான அங்கங்களில் ஒன்று. நமது உடலில் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு உறுப்பு இது. இதன் எடை 1.5 கிலோ கிராம். நமது உடலுக்குத் தேவையான கனிமப் பொருட்கள், வைட்டமின்கள் இவற்றை சேமிப்பதுடன், தேவைப்படும் போது புது புரதப் பொருட்களையும் உற்பத்திப் பண்ணுகிறது.

நாம் உண்ணும் உணவில் இருக்கும் கொழுப்புப் பொருட்களை செரிமானம் செய்வதற்கு வேண்டிய பித்தநீர் கல்லீரலால் உற்பத்தி செய்யப்படுகிறது. நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகளில் உள்ள நோயைக் குணப்படுத்த தேவையான பொருட்களை உடைத்து நம் உடல் அவற்றை உறிஞ்சிக் கொள்ள உதவுகிறது. இரத்தம் உறையவும் கல்லீரல் உதவுகிறது. கல்லீரலைப் பற்றிய இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், இது தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளவும் முடியும்.

கல்லீரலை எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுவது என்று பார்க்கலாம்:

  • மக்னீஷியம், மாவுச்சத்து, இரும்புச்சத்து நிறைந்த உணவு கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், உடலில் சேரும் நஞ்சுப் பொருட்களை வெளியேற்ற உதவும். நாள் முழுவதும் நிறையத் தண்ணீர் குடிப்பது அவசியம்.
  • அளவுக்கு அதிகமாக மது அருந்துவது 3 விதமான நோய்களை வரவழைக்கும். 1. ஆல்கஹாலிக் ஹெபடைடிஸ், (alcoholic hepatitis) 2. ஆல்கஹாலிக் சிர்ரோசிஸ் ( alcoholic cirrhosis) எனப்படும் ஈரல் நோய், 3. கொழுப்பு கல்லீரல் அல்லது ஃபேட்டி லிவர் (fatty liver). மது அருந்துவதை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். மது அருந்தாமலே இருப்பது உத்தமம்.
  • புத்துணர்ச்சி கொடுக்கும் (recreational drugs) மருந்துகள் கல்லீரல் திசுக்களை சேதப்படுத்தும். மருத்துவர்கள் கொடுக்கும் சில மருந்துகளும் நச்சுப் பொருள் கலந்ததாக இருக்கக்கூடும். மருத்துவர் குறிப்பிடும் அளவுக்கு மேல் இவைகளை சாப்பிட வேண்டாம்.
  • ஆர்கானிக் எனப்படும் உயிர்ம உணவுகள் ஆன்டிஆக்ஸிடென்ட் (antioxidants) நிறைந்து இருப்பதால், இவை கல்லீரலை பாதுகாத்து, நச்சுப் பொருள்களை வெளியேற்றி, சுத்தப்படுத்தவும் செய்கின்றன.
  • வண்ணப் பூச்சுக்கள், பூச்சி மருந்துகள் முதலியவற்றில் இருந்து வரும் நச்சு புகைகள், தூசுப் படலங்கள் நுரையீரலுக்குள் மிகச்சிறிய இரத்த நாளங்கள் வழியாக சென்று கல்லீரலை அடையக்கூடும். இதனால் கல்லீரல் பாதிக்கப்படும். இந்தப் பொருட்களைப் பயன்படுத்தும் போது பாதுகாப்புக் கவசம் அணிவது நல்லது.
  • உடற்பயிற்சி மிக அவசியம்.
  • ஹெபடைடிஸ் A மற்றும் B தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளுவது மிக இன்றியமையாதது.

கல்லீரலுக்கு நன்மை பயக்கும் சில உணவு வகைகள்:

பூண்டு: கல்லீரலில் சுரக்கும் நொதிநீர்களை தூண்டி நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

பச்சை காய்கறிகள்: பச்சையம் நிறைந்த பசலைக்கீரை, வெந்தயக்கீரை, புரோக்கோலி, முட்டைக்கோஸ் முதலிய நச்சுப் பண்பு நீக்கிகள் (detoxifiers) கல்லீரலுக்கு நல்லது.

மஞ்சள்: பொறியல் வகைகளுக்கு மட்டுமல்லாமல் உணவுப் பொருட்களில் இருக்கும் புற்றுநோய் காரணிகளை கல்லீரலிலிருந்து வெளியேற்றவும் உதவுகிறது.

எலுமிச்சை: காலையில் எலுமிச்சை சாறு குடிப்பது கல்லீரலை தூண்டுகிறது.

பீட்ரூட், காரட்:  நச்சுப் பொருட்களை வெளியேற்ற இவை உதவுகின்றன.

இந்த உணவுப் பொருட்கள் பொதுவான ஆரோக்கியத்திற்கும் உதவும்.