பிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசி

பிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசி
நம் எல்லாருக்கும் பல வருடங்களாக வெள்ளை அரிசிதான் தெரியும். அதுதான் சமைக்க சுலபம். வெள்ளை வெளேரென்று மெத்தென்று பார்க்கவே அழகாக இருக்கும். சீக்கிரம் வெந்துவிடும். ஆனால் சத்துக்கள் என்று எடுத்துக் கொண்டால் அதிலிருந்து நமக்குக் கிடைப்பது மிக மிகக் கொஞ்சம். தற்போது சிவப்பு அரிசியின் நன்மைகளை அறிந்துக்கொண்டு பல நாடுகளிலும் மக்கள் சிவப்பு அரிசியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
சிவப்பு அரிசியை தீட்டப்படாத அரிசி (unpolished) என்றும், முழு அரிசி என்றும் சரக்கு அரிசி என்றும் சொல்லுகிறார்கள். அதன் நிறம் பிரவுன் அல்லது சிவப்பாக இருக்கும். இதன் கெட்டியான மேல்தோல் (உமி) எனப்படுகிறது. இதற்கு அடுத்த மேல்தோல் மெல்லியதாக பிரவுன் நிறத்தில் இருக்கும் இந்த மேல்தோல் தவிடு எனப்படுகிறது. நாம் சாப்பிடும் வெள்ளை அரிசி மறுபடி மறுபடி தீட்டப்பட்டு அத்தனை சத்துக்களும் இழந்த பின் கிடைப்பது.
• இந்த சிவப்பு அரிசி ஓர் முழு தான்யமாக இருப்பதை தவிர, நமது ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதில் இருக்கும் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
• நார்சத்து நிறைந்து இருப்பதுடன், சுலபமாக செரிக்கக்கூடிய மாவுச்சத்தும் இருப்பதால் இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது.
• இந்த நார்சத்து புற்றுநோய் உண்டாக்கக்கூடிய வேதியியல் பொருட்கள் பெருங்குடலை அணுகாத வண்ணம் பார்த்துக் கொள்ளுவதால், கோலோன் புற்றுநோய் தடுக்கப் படுகிறது.
• மேலும் மலக்கட்டு ஏற்படாமல், மலம் சுலபமாக வெளியேறவும் உதவுகிறது.
• இதில் இருக்கும் கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

• ஒரு கிண்ணம் சிவப்பு அரிசியில் நமக்கு தினப்படி வேண்டிய 8% மாங்கநீசும் (magnesium) 14% நார்சத்தும் கிடைக்கிறது.
• புளிக்க வைக்கப்பட்ட சிவப்பு அரிசியில் சிறுநீர்ப்பை, கல்லீரல், உணவுக்குழாய் மற்றும் இரத்தப் புற்று நோய்கள் வராமல் காக்கக்கூடிய தன்மைகள் இருக்கின்றன.
சமைக்கும் முறை:
வெள்ளை அரிசியைவிட சமைப்பதற்கு அதிக நேரம் ஆவதால் சாதம் செய்வதற்கு முன் 30-40 நிமிடங்கள் ஊறவைப்பது நல்லது. சாதம் செய்யும் போது ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு நீர் ஊற்றலாம்.
வெள்ளை அரிசியில் செய்வது போலவே இதிலும் பயத்தம்பருப்பு சேர்த்து பொங்கல் செய்யலாம். செய்முறை அதே போலத்தான்.
சிவப்பு அரிசி செய்யும் தோசையும் மிக ருசியாக இருக்கும். 2½ கிண்ணம் அரிசிக்கு ½ கிண்ணம் உளுத்தம்பருப்பு என்ற அளவில் சிறிது வெந்தயமும் சேர்த்து அரைத்து இரவு புளிக்க வைத்து மறுநாள் செய்யலாம்.
கடைசியாக ஒரு குறிப்பு:
இந்த அரிசியிலிருந்து எண்ணெய் எடுக்கப் படாததால் சீக்கிரமே கெட்டுப் போய்விடக் கூடிய வாய்ப்புகள் அதிகம். வாங்கும்போது காலாவதியாகும் தேதி பார்த்து வாங்கவும்.