பூமி தினம் (Earth Day)

பூமி தினம் (Earth Day)
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 22 ஆம் நாள் பூமி தினமாக அனுசரிக்கப்படுகிறது. எதற்காக நாம் வாழும் இந்த பூமிக்குத் தனியாக ஒரு நாள் ஒதுக்க வேண்டும்? பல காரணங்கள். அடுக்கிக்கொண்டே போகலாம்.
முதல் காரணம்: நாம் எல்லா வளங்களும் நிறைந்த இந்த பூமியில் பிறந்திருக்கிறோம். இதற்காக பூமித்தாய்க்கு நன்றி கூற.
இரண்டாவது காரணம்:
இந்த நிலவுலகை சுமார் 2 மில்லியன் மனிதரல்லாத உயிரினங்களுடன் பகிர்ந்து கொண்டு வாழுகிறோம். இன்னும் புதுப்புது உயிரினங்கள் கண்டுபிடிக்கப் பட்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 140,000 உயிரினங்கள் அழிந்து போக நாம் காரணம் ஆகிறோம். இதற்காக பூமித்தாயிடம் மன்னிப்புக் கேட்க!
இது மனித இனம் மேலாதிக்கம் செலுத்தும் சகாப்தம். அதனால் சில விஞ்ஞானிகள் இந்த சகாப்தத்தை மனித சகாப்தம் (Anthropogenic) என்றே குறிப்பிடுகிறார்கள். அதனால் இப்போது நடக்கும் நல்லது கெட்டது இரண்டுக்குமே நாம்தான் காரணம்.
ஏன் உயிரினங்கள் அழிந்து போயின? மனித இனப்பெருக்கம் தான் காரணம். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒன்றரை பில்லியன் ஆக இருந்த உலக மக்கள் தொகை இப்போது 7 பில்லியன் ஆக உயர்ந்திருக்கிறது. மக்கள் பெருக்க விகிதம் குறைந்திருந்தாலும் 2050 ஆம் ஆண்டு உலகின் மக்கள் தொகை 9 பில்லியனைத் தொட்டுவிடும் என்று எதிர்பார்க்க படுகிறது.
மக்கள் இனப் பெருக்கம் உணவுப் பெருக்கத்திற்கு வழி வகுத்தது. உணவுத் தேவையை பூர்த்தி செய்ய காடுகள் அழிக்கப்பட்டு விளைநிலங்கள் ஆயின. அங்கு வாழ்ந்து வந்த உயிரினங்களின் உறைவிடங்கள் குறைந்தன அல்லது மறைந்து போயின. பூமியின் நிலவளம் மனிதனால் சூறையாடப்பட்டது. நீர் வளத்தையும் பாதுகாக்க தவறினான்.
பூமியில் இருக்கும் அத்தனை செல்வங்களையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற மனிதனின் பேராசையால் பருவநிலை மாறியது. சுற்றுச்சூழல் மாசடைந்தது. கிட்டத்தட்ட 300 வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக மாறிவரும் இந்த நிலை பிராணிகளுக்கும், தாவரங்களுக்கும் பொருந்தக் கூடியதாக இல்லை. பல உயிரினங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. பல அழியும் தருவாயில் இருக்கின்றன.
ஒரே ஒரு சின்ன ஆறுதல்: பூமியில் இன்னும் சில இடங்கள் சுமார் 15 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றையாவது பாதுகாத்து நமது அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. இதைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தவே இந்த பூமி தினம் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 22 ஆம் தேதி உலகளாவிய அளவில் சுமார் 175 நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது.
இந்த பூமி தினத்திற்கு ஒரு கொடி, ஒரு பாடல் இரண்டுமே உண்டு. இதோ அவை பற்றிய விவரங்கள்:

இதுதான் ‘சூழலியல் கொடி’ (Ecology flag). இதை 1969 இல் கார்ட்டூனிஸ்ட் திரு. ரான் காப் (Ron Cobb) உருவமைத்தார். நடுவில் இருக்கும் குறியீடு ஆங்கில ‘E’ (environment) மற்றும் ‘O’ (Organism) என்ற வார்த்தைகளின் முதல் எழுத்துக்களின் கலவையாக கிரேக்க எண் (8) ‘தீட்டா’ (theta) வடிவத்தில் அமைந்திருக்கிறது. அமெரிக்க நாட்டுக் கொடியைப் போலவே 13 கோடுகள் பச்சை வெள்ளை நிறங்களில் மாறிமாறி இருக்கிறன. இடது ஓரத்தில் பச்சை சதுரமும் அதில் மஞ்சள் கலர் ‘தீட்டா’ (theta)வும் அமைந்துள்ளது. கிரேக்க எண் (8) ‘தீட்டா’ ‘Earth Day’ வில் உள்ள 8 எழுத்துக்களைக் குறிக்கின்றது.
Earth Anthem
Joyful joyful we adore our Earth in all its wonderment
Simple gifts of nature that all join into a paradise
Now we must resolve to protect her
Show her our love throughout all time
With our gentle hand and touch
We make our home a newborn world
Now we must resolve to protect her
Show her our love throughout all time
With our gentle hand and touch
We make our home a newborn world
உலகின் பல அரிய செல்வங்களை – குடி தண்ணீரிலிருந்து விலையுயர்ந்த ரத்தினக்கல் வரை – பெரும் செல்வந்தர்கள் மட்டுமே அனுபவிக்கிறார்கள். இந்த வளங்கள் எல்லாம் மனித இனத்திற்கு மட்டும் சொந்தமானது இல்லை. இந்த பூமியில் பிறந்த புழு, பூச்சிகள், செடி கொடிகளுக்கும் இவற்றை அனுபவிக்க உரிமை உண்டு. அவற்றுடன் சேர்ந்து வாழ்ந்தால்தான் மனித வாழ்க்கை சிறக்கும். நமது அடுத்த தலைமுறை செழித்து வாழும் என்பதை இந்த பூமி தினத்தில் நினைவு கொள்ளுவோம். பூமியின் வளங்களை காப்பது நம் கையில் தான் இருக்கிறது. இந்த பூமி தினத்தில் பூமியின் வளங்களைக் காத்து சக உயிரினங்களின் வளமான வாழ்க்கைக்கு வழி செய்வோம் என்ற உறுதி மொழியை எடுத்துக் கொள்ளுவோம்.

1000awesomethings.com வலைப்பூ பதிவாளர்!

1000 அற்புதங்கள் பதித்த கனடிய வலைப்பூ பதிவாளர்!

1000awesomethings.com  வலைப் பதிவாளர் திரு நீல் பாஸ்ரிச்சா (Neil Pasricha) தனது 1000 மாவது வலைப்பதிவை வியாழக்கிழமை வெற்றிகரமாகப் பதிவு செய்தார். 1000 அற்புதங்கள் பற்றிய வலைப்பூ ஆதலால் இதுவே அவரது கடைசி வலைப்பதிவாக இருக்கலாம். வலைப்பதிவு செய்ய ஆரம்பித்து 4 வருடங்களுக்குள் டொராண்டோவைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்த 32 வயதுக்காரரின் வலைப்பதிவுகள் 45 மில்லியன் ‘ஹிட்’ களைத் தாண்டியுள்ளது.

இவர் குறிப்பிடும் சில அதி அற்புதங்கள்:

விக்கல் நின்றவுடன் ஏற்படும் நிம்மதி (635), மளிகைக் கடையில் பணம் செலுத்த வேகமாக முன்னேறும் வரிசையில் இடம் கிடைப்பது (501), ரொம்பவும் சிரித்து பின் அழுவது (538) நீண்டநேரம் அடக்கி வைத்துக்கொண்டு பிறகு அப்பாடா என்று ‘ஸுஸ்ஸு’ போவது! (529)

இவர் அதி அற்புதங்கள் என்று குறிப்பிடும் சில நமது அன்றாட வாழ்வில் சாதாரணமாக நடப்பவை தான் என்றாலும் இவரது வலைப்பூ பதிவுகள்  ‘தி புக் ஆப் ஆசம்’ (the book of awesome), ‘The book of even more awesome’, ‘The book of Holiday awesome’ என்ற பெயரில் புத்தகங்களாக வெளி வரத்  தொடங்கி விட்டன. முதல் ‘புக் ஆப் ஆசம்’ 2010 ஏப்ரல் மாதம் வெளியானது.

வருடக்கணக்கில் 1000மாவது அதி அற்புதத்திலிருந்து தலைகீழ் வரிசையில் எழுதிக் கொண்டு போனவர் முதலாவது அதி அற்புதம் என்று குறிப்பிட்டு இருப்பது பல வாசகர்களைக் குழப்புகிறது: “முதலாவது அதி அற்புதம் நீங்கள் விரும்பும் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்” என்று எழுதியிருக்கிறார்.

“நம் வாழ்வில் அதி அற்புதமான நொடிகள் முடிவடைவதில்லை; அதி அற்புதங்கள் என்றைக்கும் தொடர்ந்து கொண்டே இருக்கும். நீங்கள் விரும்பும் அதி அற்புதம் எதுவோ அதை தேர்ந்தெடுத்து நீங்களே கடைசி இடத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்” என்கிறார் நீல்.

வலைப்பூ பதிவு செய்ய ஆரம்பித்தவுடன் இவர் தெரிந்துகொண்டது, முதல் வகுப்பில் துபாய் போவது, ஓர் சின்னக் குழந்தை நம் கையைக் கெட்டியாகப் பிடித்து இழுத்து கொள்ளுவது, காதல் வயப்படுவது என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று அதி அற்புதம் என்பதைத்தான்.

மணமுறிவில் முடிந்த திருமணம், மனநிலைசரியில்லாத நண்பனின் தற்கொலை என்று இவர் தனது வாழ்வில் பல இன்னல்களை சந்திக்க நேரிட்டது. அப்போதுதான் நேர்மறையான எண்ணங்களை உண்டாகக்கூடிய ஏதாவது செயலை செய்ய வேண்டும் என்ற உந்துதலால் வலைபூ பின்னத் தொடங்கினார். சுரங்கப் பாதையின் முடிவில் தெரியும் வெளிச்சம் (567), நம்மை விட்டுச்சென்ற நண்பர்களை நினைத்து சிரிப்பது (829) முதலிய அதி அற்புதங்கள் மேற்கண்ட நிகழ்ச்சிகளின் பாதிப்பால் இவர் எழுதியவையாகும்.

தனது மகிழ்ச்சிகாகவே எழுதத் தொடங்கியதாக சொன்னாலும், இவரது எழுத்துக்களை நூற்றுக்கணக்கானவர்கள் படிக்கத் தொடங்கினார்கள்.

இவரது வலைப்பூ, புத்தகங்கள் மிகவும் பிரபலமான போதிலும் அலுவலகம் செல்வதை விடுவதாக இல்லை. தான் அதை மிக விரும்புவதாகச் சொல்லுகிறார். தனது வலையதளத்தில் விளம்பரங்கள் வருவதையும் விரும்பவில்லை இவர்.

1000 அதி அற்புதங்களை எழுதி முடித்துவிட்டாலும் தொடர்ந்து எழுதுவார் என்றே தோன்றுகிறது. தனது வாசகர்களையும், அவர்கள் எழுதும் கடிதங்களையும் மிகவும் ‘மிஸ்’ பண்ணுவதாகக் குறிப்பிடும் இவர் கடைசியாகக் கூறுவது:

“நம்மைச்சுற்றிலும் ஒவ்வொரு நாளும் பல அற்புதங்கள் நடக்கின்றன. அவைகளை தவறவிடாமல் கவனிப்பது நம் கையில் இருக்கிறது”


!function(d,s,id){var js,fjs=d.getElementsByTagName(s)[0];if(!d.getElementById(id)){js=d.createElement(s);js.id=id;js.src=”//platform.twitter.com/widgets.js”;fjs.parentNode.insertBefore(js,fjs);}}(document,”script”,”twitter-wjs”);