சாக்லேட் நெருக்கடி!

 

சாக்லேட் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள் இந்த உலகத்தில். குட்டிக் குழந்தைகள் முதல் பல் போன பாட்டன் பாட்டிமார் வரை எல்லோரும் விரும்பி ருசிக்கும் பண்டம் இது.

தீடீரென்று சாக்லேட் கிடைக்காமல் போனால் என்ன ஆகும்?

எரிபொருள் நெருக்கடி, உலக வெப்பமயமாதல் போலவே சாக்லேட் நெருக்கடியும் ஏற்படக் கூடும் என்று எச்சரிக்கிறார் ஒரு பேராசிரியர். இதோ அவரது கருத்து:

சாக்லேட் தயாரிக்க மிக முக்கிய தேவையான கோகோ பயிரின் நிலையற்ற தன்மையாலும், வளரும் நாடுகளில் கோகோவின் தேவை அதிகரித்து வருவதாலும், தேவையான கோகோ கிடைப்பது சிரமமாக இருப்பதால் சாக்லேட் கிடைப்பது அரிதாகலாம் என்று சிட்னி பல்கலைக்கழக விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பேராசிரியர் திரு.டேவிட் கெஸ்ட் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

கோகோ பயிர் செய்பவர்களுக்கு நவீன பயிர் வளர்ப்பு முறைகளில் உடனடியாக பயிற்சி தேவை என்கிறார் திரு. கெஸ்ட். அப்போதுதான் சைனா முதலிய பொருளாதார முன்னேற்றம் அதிகரித்து வரும் நாடுகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். 2020 ஆம் ஆண்டு இப்போதைய அளவைவிட 25% அதிக கோகோ தேவைப்படும்.

கோகோ உலகின் பின்தங்கிய பகுதிகளில் பயிரிடப்படுகிறது. பொருளாதாரம் நிலையற்ற இடங்களில் கோகோ விவசாயிகள் இந்தத் தேவைக்கேற்ப உற்பத்தியை பெருக்குவதில் பெறும் சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.

திரு கெஸ்ட் சிட்னியில் “சாக்லேட் நெருக்கடி” பற்றிப் பேச இருக்கிறார். தன் உரையில் கோகோ விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றிப் பேசப் போகிறார். சாக்லேட் தயாரிப்பாளர்கள் பெருகிவரும் கோகோ தேவையைப் பூர்த்தி செய்யமுடியுமா என்பது குறித்துக் கவலை கொண்டுள்ளனர். தேவை அதிகரித்து இருக்கிறது. ஆனால் உற்பத்தியில் ஸ்திரமற்ற நிலை நீடிக்கிறது.

இந்தக் கோகோ வெப்ப மண்டல நாடுகளில் விளையும் தியோப்ரோமா கோகோ என்ற மரத்தின் பழங்கள். இந்தப் பெயருக்கு ‘கடவுளர்களின் உணவு’ என்று அர்த்தம். இது பசியைத் தூண்டும் உணவு என்றுமட்டும் அல்லாமல் இரத்த அழுத்தத்தைக் குறைத்து மனதில் உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது

மேற்கு ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, தென்கிழக்காசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் கோகோ அதிகம் விளைகிறது. பருவநிலை மாற்றம், பயிரை அழிக்கும் பூச்சிகள், பயிரைத் தாக்கும் நோய்கள் இவைதவிர நிலையற்ற அரசியல் ஆகியவை இந்நாடுகளின் கோகோ உற்பத்தியை பாதிக்கின்றன.

திரு கெஸ்ட் தனது சக பேராசிரியர்களுடன் இந்தப் பகுதிகளுக்கு சென்று, விவசாயிகளுக்கு நிலையான பயிர் வளர்ப்பு முறைகளை மேம்படுத்துவது பற்றி சொல்லிக் கொடுக்கிறார். பாரம்பரியம் மிக்க விதைகளைத் தெரிவுசெய்வது, மேம்பட்ட பயிர் செய்யும் முறைகள், மண்ணின் மேலாண்மை, தொழில்நுட்ப ஆதரவு இவைபற்றியும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார். “இவை பற்றிய அறிவு, நவீன முறைகள் இல்லாமல் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வது கடினம்” என்கிறார் திரு கெஸ்ட்.

“உலகளாவிய உற்பத்தி வருடம்தொறும் ஒரு மில்லியனாக உயர வேண்டும்; இந்த உலகளாவிய தேவைக்கு சீன நாடு சாக்லேட் உற்பத்தியில் காட்டும் ஆர்வமும் ஒரு காரணம். அதிகரிக்கும் தேவைக்கேற்ப விவசாயிகள் நோய் தடுப்பு முறைகளையும், மாற்று விவசாய முறைகளையும் பின்பற்றி கோகோ பயிரை நல்லா லாபம் கொடுக்கும் தொழிலாக மாற்ற வேண்டும்.” என்று திரு கெஸ்ட் ‘தி ரெஜிஸ்டர்’ இதழ் பேட்டியில் கூறினார். 

 for ooooor.com