நல்ல உறக்கம் ஞாபகசக்தியை அதிகரிக்கிறது

வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது தூங்குவது ஆசிரியருக்கு நல்ல பெயர் வாங்கித் தராது. ஆனால் ஏதாவது ஒரு தகவல் கிடைத்த உடனே தூங்குவது அந்தச் செய்தியை நன்றாக மனதில் தேக்கி வைத்துக்கொள்ள உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். இதனால் பரீட்சைக்குப் படிப்பது அல்லது அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய தகவல் அறிக்கை தயார் செய்வது போன்றவற்றை தூங்கப்போகும் முன் செய்வது நல்லதாம்.

இந்தியனாவில் உள்ள நாட்டார் டேம் பல்கலைக்கழகத்தில் தினமும் 6 மணி நேரம்  தூங்கும் 208 மாணவர்களை ஒரு பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அவர்களிடம்     வார்த்தை ஜோடிகள் (word pair)  கொடுக்கப்பட்டு அவற்றை நினைவில் வைத்துக் கொள்ளும்படி சொன்னார்கள். இவ்வார்த்தை ஜோடிகளில்  சில ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. சில தொடர்பில்லாதவை.

பல்வேறு கால அவகாசத்தில் அவ்வப்போது இடைவெளி விட்டு விட்டு – சில சமயம் ஒரு இரவு தூங்கிய பின் – அவர்கள் சோதிக்கப் பட்டனர். இணைச் சொற்களை நினைவு படுத்திச் சொன்னதில் குறிப்பிட்ட மாறுதல் எதுவும் இல்லை; ஆனால் தொடர்பில்லாத வார்த்தகளை நல்ல தூக்கத்திற்கு பிறகு மிகச் சரியாக நினைவு கூர்ந்தனராம். இரண்டாவது முறையாக 24 மணி நேர இடைவெளியில் அவர்களை பரிசோதித்தனர்.

யாரெல்லாம் உறங்குவதற்கு முன் மனப்பாடம் செய்தார்களோ அவர்கள் இரண்டு வகையான வார்த்தைகளையும் சரியாக நினைவு கூர்ந்தனர். உறங்குவதற்கு முன் புதுத் தகவல்களை படிப்பது, அல்லது கேட்பது நீண்டகால நன்மை பயக்கும் என்று தெரிகிறது. நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தகவல்களை உறங்குவதற்கு முன் ஒத்திகை பார்ப்பது நல்லது. அதாவது உறங்கும் மூளைக்கு எதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று  நாம் சொல்லுகிறோம் என்றும் சொல்லலாம்.

உங்களுக்கு இந்தமாதிரியான அனுபவம் உண்டா? பகிர்ந்துகொள்ளுங்களேன்!