சிவப்பு விளக்கா? அல்லது பச்சை விளக்கா? உங்கள் கைபேசிக்கு விடை தெரிந்திருக்கும்!

சிவப்பு விளக்கா? அல்லது பச்சை விளக்கா? உங்கள் கைபேசிக்கு விடை தெரிந்திருக்கும்!

வண்டி ஓட்டுனர்கள் பலருக்கும் போக்குவரத்து இயக்கச் சுட்டுக்குறியில்  (traffic signal) நிற்பது கொஞ்சம் சிரமமாக இருக்கும். முதலில் எத்தனை நேரம் நிற்க வேண்டுமோ என்ற தவிப்பு; வண்டி ஓடாமல் நிற்கும்போதும், மறுபடி வண்டியை ஓட்டத் துவங்கும்போதும் எரிபொருள் அதிகம் செலவாகுமே என்ற கவலை; எல்லாவற்றிற்கும் மேலாக அடுத்த சிக்னல் எப்படி இருக்குமோ என்ற யோசனை!

எரிபொருளைத் திறமையாக பயன்படுத்தும் ஓட்டுனர்கள் தங்களது வாகனத்தை ஒரே சீரான வேகத்தில் ஓட்டிச் செல்வார்கள். அதனால் பச்சை விளக்கு ஒளிரும்போது சரியாக போக்குவரத்து இயக்கச்சுட்டுக் குறியை கடப்பார்கள்.ஆனால் இது எல்லா சமயங்களிலும் சாத்தியம் இல்லை.

இதற்காக மசாசுசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வல்லுனர்கள் செல்போன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போக்குவரத்து இயக்கச்சுட்டுக் குறி எப்போது மாறும் என்பதை கணிக்கலாம் என்று கௌகௌமிடிஸ் என்ற ஆராய்ச்சியாளர் சொல்லுகிறார்.

வாகன ஓட்டுனர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களை வழி கண்டறிய டாஷ் போர்டின் மேல் வைத்துக் கொள்ளுகிறார்கள். இதைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் ‘சிக்னல்குரு’ என்ற ஒரு திட்டத்தை உரு அமைத்து இருக்கிறார்கள்.

டாஷ் போர்டின் மேல் இருக்கும் செல்போன் காமிராக்கள் போக்குவரத்து இயக்க விளக்குகளை புகைப்படம் எடுக்கின்றன. காமிராவின் மூலம் போக்குவரத்து இயக்கச்சுட்டுக் குறியின் இயக்க அமைப்பு ஆராயப்படுகிறது. இதில் கிடைக்கும் தகவல்கள் கைபெசியிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு போக்குவரத்து இயக்கச் சுட்டியின் இயக்க முறை கண்டுபிடிக்கப் படுகிறது. இதனை ஒன்று திரட்டி, முறைபடுத்தி ‘மெஷின் லேர்னிங்’ (machine learning) என்ற ஒன்றை செய்கிறார்கள்.

ஒவ்வொரு போக்குவரத்து சந்திப்புப் பற்றிய தகவல்கள் வரைபடம், GPS (Global Positioning System) மூலம் அறியப்பட்டு வாகனம் சிக்னல் அருகில் வரும்போது காமிரா இயக்கப்பட்டு, சிவப்பு விளக்கு பச்சை விளக்காக மாறுவதை வீடியோ காட்சிகளாக பதிவு செய்யப் படுகிறது. இந்தத் தகவல்களையும், ஏற்கெனவே எடுத்த படங்களையும்  வைத்துக்கொள்ள கொண்டு ‘சிக்னல்குரு’ எப்போது பச்சை விளக்கு விழும் என்பதைத் தீர்மானிக்கிறது.

“போக்குவரத்து சந்திப்பில் சிவப்பு விளக்கு இருப்பது தெரிந்தாலும் இது பச்சையாக மாறும். நீங்கள் 40 km/h என்ற வேகத்தில் போனால் சந்திப்பை நெருங்கும் போது பச்சை விளக்கு ஒளிரும். நீங்கள் சிக்னலில் நிற்காமல் வாகனம் ஓட்டிச்சென்று விடலாம்” என்று கௌகௌமிடிஸ் கூறுகிறார்.

பாஸ்டன் நகரை ஒரு முன்னோடியாக கொண்டு ஆராய்ந்ததில் ஓட்டுனர்கள் 20% எரிபொருள் சிக்கனம் செய்யமுடியும் என்று தெரிய வந்துள்ளது.

இந்த முயற்சிகள் இன்னும் மூல மாதிரியாகவே இருக்கின்றன. ஆனால் லாரி போன்ற பெரிய வாகனங்கள் ஓட்டுபவர்கள் இந்த விஷயத்தில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். பெரிய வாகனங்கள் சிக்னலில் நிற்கும்போதும், மறுபடியும் வாகனத்தை ஓட்ட துவங்கும்போதும் நிறைய எரிபொருள் செலவழிக்கின்றன. அதனைத் தடுக்கலாம் என்கிறார்கள்.

அதுவுமில்லாமல் இந்தத் தகவல்களை வைத்துக்கொண்டு, எரிவாயு நிலையம் இருக்குமிடம், விலை, நகர பேருந்துகள் நிற்குமிடம், வாகன நிறுத்துமிடங்கள் என்று பலவற்றையும் அறியலாம்.