சோனி நிறுவனத்திலிருந்து 6% தொழிலாளர்கள் பணிநீக்கம்!

சோனி நிறுவனத்திலிருந்து 6% தொழிலாளர்கள் பணிநீக்கம்!

சரிந்துவரும் தனது நிறுவனத்திற்கு புத்துயிர் கொடுக்க புதிய முதன்மை நிர்வாகி திரு. கஜொவா ஹிராய் (Kazuo Hirai) அவர்களின் நடவடிக்கை இது.

பலத்த நஷ்டத்தை சந்தித்து வரும் சோனி நிறுவனம் இன்று வியாழக்கிழமை (12.04.2012) உலகளாவிய அளவிலான இந்த பணிநீக்கத்தை அறிவித்திருக்கிறது.  சுமார் 10,000 அதாவது 6% தொழிலாளர்கள் இதனால் வேலை இழப்பார்கள். இன்னும் இரண்டு வருடத்திற்குள் பண நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும்  தனது தொலைக்காட்சி நிறுவனத்தையும் மீட்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

சோனியின் புதிய முதன்மை நிர்வாகியும், தலைவருமான திரு. ஹிராய், ஒரு பெரிய பத்திரிகையாளர் மாநாட்டில் சோனி நிறுவனத்தை புதுப்பிக்க உறுதிபூண்டு இருப்பதாகக் கூறினார்.

சோனி நிறுவனத்தின்  மாரச் மாதம் வரையிலான  நடப்பு ஆண்டு நிகர இழப்பு 6.4 பில்லியன் டாலர்கள்.  தொடர்ந்து 4 வது ஆண்டாக இந்த நிறுவனம் இது வரை இல்லாத அளவில் பெருத்த நஷ்டத்தை அடைந்திருக்கிறது.

“ஒரு முதன்மை நிர்வாகி என்ற முறையில் இதை நான் மிகவும் கவலைப்பட வேண்டிய விஷயமாகக் கருதுகிறேன். அதே சமயம், சோனி நிறுவனத்தை மாற்றவேண்டும் என்ற என் நிலைப்பாட்டிற்கு இது அதிக வலு கொடுக்கிறது”

டிஜிட்டல் காமிராக்கள், பர்சனல் கம்ப்யூட்டர்கள், ப்ளேஸ்டேஷன், விளையாட்டு முனையம் என்று பல்வேறு மின்னணுப் பொருட்களைத் தயாரிக்கும் சோனி  நிறுவனம், ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் போட்டியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தவிக்கிறது. 1980, 90 களில் இருந்ததைப்போல புதுமையான நுட்பத்திறன் கொண்ட, தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்ற நிலையை தக்க வைத்துக் கொள்ள விழைகிறது சோனி நிறுவனம்.

“சோனியின் நிலை மாறும். அதற்காக நாம் என்னையே அர்ப்பணிக்கிறேன்” என்கிறார் 51  வயதான திரு. ஹிராய்.

சோனி நிறுவனத்தின் முக்கியத் தயாரிப்புகளான டிஜிடல் கேமிரா, வீடியோ கேம்ஸ், ஸ்மார்ட்ஃ போன்ஸ் இவற்றின் மேல் அதிக கவனம் செலுத்தி இவற்றில் முதலீடுகளையும் தொழில்நுட்பத் திறனையும் வலுப்படுத்தி நிறுவனத்தின் விற்பனைத் திறனை இப்போதைய 60% லிருந்து 2015 க்குள் 70% ஆக உயர்த்தப் போவதாகச் சொல்லுகிறார்.

நிர்ணயிக்கப்பட்ட மற்றும் இயக்கச் செலவுகளைக் குறைத்தாலும் தொடர்ந்து 8 வருடங்களாக நஷ்டத்தை கொடுத்துக்கொண்டு இருக்கும் தொலைக்காட்சி நிறுவனத்தை 2014 க்குள் மறுபடி லாபகரமாக மாற்றிவிடுவோம் என்றார் அவர்.

வேலை இழப்பு மற்றும் மறு கட்டமைப்பு இவற்றுக்காக நடப்பு ஆண்டில் 75 பில்லியன் யென் (yen) கட்டணமாக எடுத்துக் கொள்ளப் போகிறது.

இந்தியா  மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் 2.6 ட்ரில்லியன் யென் அளவிற்கு தன் விற்பனையை உயர்த்தத் திட்டம் வகுத்து இருக்கிறது.

மருத்துவ உபகரணங்கள் உற்பத்தியில் எண்டோஸ்கோப் முதலான தயாரிப்புகளுடன் மருத்துவ பரிசோதனை துறையிலும் நுழைய இருக்கிறது.

நடப்பு ஆண்டு விற்பனை மதிப்பான 6.4 ட்ரில்லியன் யென்னை விட 2015 மாரச் மாதத்திற்குள் 8.6 ட்ரில்லியன் யென் ஆக விற்பனை உயரும் என்று எதிர்பார்க்கிறது.

பிப்ரவரி மாதம் நிகர நஷ்டம் 220 பில்லியன் யென் என்று கூறிய சோனி நிறுவனம் கடந்த செவ்வாய் அன்று அத்தனை 520 பில்லியன் என்று மாற்றியது. இதற்கு முக்கியக் காரணம் அமெரிக்க வரி கடனுதவி மூலம்தான் கட்ட வேண்டி வந்த 300 பில்லியன் யென் என்றும் தமது நிறுவனம் தொடர்ந்து அடைந்த நஷ்டத்தினால் வரி கடனுதவியை பயன்படுத்த முடியாமல் போனதும் தான் என்கிறது.

இயக்க இழப்பு 95 பில்லியன் யென்  என்று முன்னறிவிப்பு செய்திருக்கிறது. 2013 மாரச் மாதத்திற்குள் இயக்க லாபம் 180 பில்லியன் யென் என்ற இலக்கை  மறுபடி அடைந்து விடுவோம் என்று கணிக்கிறது.

மே மாதம் 10 தேதி தனது வருமான முடிவுகளையும் முன் கணிப்புகளையும் அறிவிக்கும்.