இன்ஸ்டாக்ராம் நிறுவனத்தை 1 பில்லியன் அமெரிக்க டாலருக்குக் கைப்பற்றியது பேஸ்புக்!

இன்ஸ்டாக்ராம் நிறுவனத்தை 1 பில்லியன் அமெரிக்க டாலருக்குக் கைப்பற்றியது பேஸ்புக்!

புகைப்படங்களை பகிர்ந்துகொள்ள உதவும் ஒரு இணையதளம் இன்ஸ்டாக்ராம் (Instagram). இதனை, சமூக இணையதள வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரிய தொகைக்கு – ஒரு பில்லியன் டாலருக்கு – வாங்கி இருக்கிறது பேஸ்புக்.

ஒரு சிறிய, வெகு சமீபத்தில் தொடங்கப்பட்ட, வெகு சொற்பமான ஊழியர்கள் கொண்ட ஒரு இணையதளத்திற்கு இது ஒரு மிகப் பெரிய தொகை.

இன்ஸ்டாக்ராம் மூலம் கைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். இந்தப் பயன்பாட்டுப் பொருளில் இருக்கும் ஒருவகை வடிகட்டிகள் (filter) மூலம் நாம் எடுத்த புகைப்படங்கள் 1970 களில் எடுத்தவை போலவோ அல்லது போலாராய்ட் காமிராவால் எடுத்தது போலவோ தோன்றும்படி செய்ய முடியும்.

இன்ஸ்டாக்ராம் பயனீட்டாளர்கள் தங்கள் காலை உணவான முட்டை சாண்ட்விச் முதல் சூரிய அஸ்தமனம், தங்கள் பெண் தோழிகளின் புன்னகை தவழும் முகங்கள் என்று எல்லாவற்றையும் புகைப்படங்கள் எடுத்துவிடுகிறார்கள்.

ஆரம்பித்து (2010) மிகக் குறுகிய  காலத்திற்குள் இந்த இணையதளம் 30 மில்லியன் விசுவாசமுள்ள, அன்பான பயனீட்டாளர்களை கவர்ந்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் 2011 ஆம் ஆண்டு இதனை ஐஃபோன் பயன்பாட்டுப் பொருளாக (Apps) தெரிவு செய்தது.

இன்ஸ்டாக்ராமிற்கு இருக்கும் விசிறிகள், சந்தையில் அதனுடைய  வர்த்தக சின்னத்தின் அங்கீகாரம், அதன் செயல்பாட்டுத் திறன் இவைகளை வைத்துக்கொண்டு அதற்கு ஒரு விலை நிர்ணயிப்பது கடினம். ஆனால் பேஸ்புக்கிடம் பணம் இருக்கிறது; வாங்கவும் முடியும்.

பேஸ்புக் முதன்முதலாக தன் பங்குகளை பொதுமக்களிடம் கொண்டுவர இருக்கிறது. அதன் மதிப்பு சில வாரங்களிலேயே 100 பில்லியன் அமெரிக்க டாலர்களாக ஆவதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதனால் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது கடலில் ஒரு துளி நீர் கலந்தாற்போல!

“தனது இந்த IPO (Initial Public Offering) விற்குப் பிறகு பேஸ்புக்கின் முகமே ஒரு வேட்டையாடுபவன் போல மாறிவிடும். யாரும் தன் பாதையில் குறுக்கே வராமல் பார்த்துக் கொள்ளவும் அப்படி வருபவர்களை வாங்கக்கூடிய வல்லமையும் அதற்குப் பெருகிவிடும்” என்று வெட்புஷ் (Wedbush) பகுப்பாய்வாளர் திரு மைக்கேல் பாச்டர் (Michael Pachter) கூறுகிறார்.

சான் பிரான்சிகோ நிறுவனமான இன்ஸ்டாக்ராமிற்கு பணமாகவும் பங்குகளாகவும் கொடுத்து அதன் சொற்பமான ஊழியர்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டுள்ளது பேஸ்புக். இந்த வணிக ஒப்பந்தம் ஜூன் மாத இறுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பேஸ்புக்கின் இந்தச் செயல் இன்ஸ்டாக்ராம் ஊழியர்களுக்கு மட்டுமல்ல அதில் துணிந்து முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களுக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டம் தான். சென்ற வாரம் Sequoia Capital நிறுவனம் நடத்திய முதலீடு ஆய்வில் இன்ஸ்டாக்ராம் நிறுவனத்தின் மதிப்பு 500 மில்லியன் டாலர் என்று  விஷயம் தெரிந்த நபர் கூறுகிறார். இந்த நபர் தன் பெயர் வெளிவரக் கூடாது என்ற நிபந்தனையின் மேல் இந்த விஷயத்தைக் கூறினார்.

1 பில்லியன் டாலர் விலையில் இன்ஸ்டாக்ராமை வாங்கியதன் மூலம்  ஒவ்வொரு இன்ஸ்டாக்ராம் பயனீட்டாளர்களுக்கும் 33 டாலர் கொடுக்கிறது பேஸ்புக். தன் பங்குகளை பொதுச் சந்தையில் கொண்டுவந்த பின் பேஸ்புக் எதிர்பார்க்கும் 100 பில்லியன் டாலர் கிடைக்குமானால் இந்த தொகை பேஸ்புக் முதலீட்டாளர்கள் ஒவ்வொரு பேஸ்புக் பயனீட்டாளர்களுக்கும் கொடுக்கும் 118 டாலரில் ஒரு பகுதியாக இருக்கும். அந்தக் கணக்கில் “1 பில்லியன் டாலர் என்பது மிக அதிகம்; கிறுக்குத்தனமானது என்று சொல்ல முடியாது” என்கிறார் பாச்டர்.

மக்களுக்கு கைபேசியின் மேல் இருக்கும் மோகத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி அவர்களது ஒவ்வொரு நொடியையும் தன்னுடன் பகிர்ந்து கொள்ளும்படியாகச் செய்யும் வகையில் இன்ஸ்டாக்ராம் நிறுவனத்தை தன்வசப்படுத்தியது பேஸ்புக்கின் பெரிய வெற்றி. இன்னொரு விஷயம் என்னவென்றால் பேஸ்புக்கின் கைபேசி பயன்பாட்டுப் பொருள் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டுப் பொருள் போல அத்தனை எளிதானது அல்ல. அதுவும் புகைப்படங்களை பகிர்ந்துகொள்ளும் பயன்பாட்டுப் பொருள்  மிக மோசமாக வடிவமைக்கப்பட்ட ஒன்று.

பேஸ்புக் எப்போதுமே தான் உருவாக்கும் தொழில்நுட்பத்தைவிட நன்றாக இருக்கும் தொழில்நுட்பத்தை வாங்கிவிடும்.

வழக்கமாக பேஸ்புக் சின்னச்சின்னதாகத் துவக்கப்படும் நிறுவனங்களை வாங்கி தொழில்நுட்பங்களை இணைக்கும் அல்லது ஒரே வழியாக அவற்றை மூடி விட்டு திறமை உள்ள பொறியாளர்களையும் மென்பொருள் உருவாக்குபவர்களையும் பணிக்கு எடுத்துக் கொள்ளும். ஆனால் இந்த முறை சற்று வேறுபட்டு இன்ஸ்டாக்ராமை சுதந்திரமாக இயங்க விடுவதே தன் திட்டம் என்று கூறுகிறது மென்லோ பார்க், கலிபோர்னியாவில் இருக்கும் பேஸ்புக்.

பேஸ்புக் முதன்மை நிர்வாக அதிகாரி  திரு மார்க் ஜூக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் “பேஸ்புக்கிற்கு இது ஒரு முக்கியமான மைல்கல். ஏனெனில் முதல்முறையாக பல பயனீட்டாளர்கள் உள்ள ஒரு நிறுவனத்தையும் அதன் தயாரிப்பையும் வாங்கியிருக்கிறோம்.” என்று திங்கள் அன்று (9.4.2012) இந்த செய்தியை அறிவிக்கும்போது குறிப்பிட்டு இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமிலிருந்து ட்விட்டர் முதலிய மற்ற சமூக வலயங்களுக்கு பதிவுகளை போடவும், தங்களது இன்ஸ்டாகிராம் பதிவுகளை பேஸ்புக்கிலிருந்து தனியே வைக்கவும் மக்களை அனுமதிக்க பேஸ்புக் திட்டங்கள் வைத்திருப்பதாகவும்  கூறினார்.

சிலரது கவலை:

பேஸ்புக் இன்ஸ்டாகிராமை அழித்துவிடும் என்று வலைப்பதிவாளர்களும் பகுப்பாய்வாளர்களும் கவலைப் படுகிறார்கள். பேஸ்புக்கின் நிலைப்பாடு நீடித்து இருக்குமா என்பதுதான் இவர்களின் கவலை.

“பல நிறுவனங்கள் இதைபோல் மற்ற நிறுவனங்களைக் கையகப்படுத்திக் கொள்ளும்போது அவற்றுக்கு ஆதரவு அளிப்பதாக சொல்லும் ஆனால் அது உண்மை அல்ல” என்கிறார் இ-மார்க்கெட்டர் நிறுவன பகுப்பாய்வாளர் திரு. டெப்ரா அஹோ வில்லியம்சன்.

இதற்கு மிகச் சமீபத்திய உதாரணம், மிகவும் விரும்பப்பட்ட ஃபிளிப் வீடியோ கேமராவை (Flip video camera) கைபடுத்திய சிஸ்கோ சிஸ்டம் இரண்டே வருடத்தில் அதை அழித்துவிட்டது.

பேஸ்புக் வசமான இன்ஸ்டாகிராமை விட்டு அதன் பயனீட்டாளர்கள் விலகுவதாக சில முணுமுணுப்புக்கள் எழுந்துள்ளது; ஆனால் நிஜத்தில் இன்ஸ்டாகிராம் பேஸ்புக்கின் உதவியுடன் இன்னும் புகழ் பெறலாம்.

கூகுள், யூ ட்யூப்பின்  (You Tube) சில அம்சங்களை தன்னுடன் ஒருங்கிணைத்த போதிலும் அதனை தனியாகவே இயங்க வைத்திருக்கிறது. அதேபோல் பேஸ்புக்கும் இன்ஸ்டாகிராமின் சில அம்சங்களை தன்னுடன் ஒருங்கிணைத்துக் கொண்டாலும் அதனை தனியாக இயங்க வைக்கலாம்.

“பேஸ்புக் இப்போது கூகுள்ஸ், ஆப்பிள்ஸ், மைக்ரோசாப்ட்ஸ் போன்ற உலக ஜாம்பவான்களுடன் போட்டி போடுகிறது. பேஸ்புக் போல இவர்களும் ஒரு பலமான வர்த்தக அடையாளத்தையும் பலமான நுகர்வோர் மேடையையும் வெகு காலத்திற்கு முன்பே உருவாக்கி இருக்கவேண்டும்.” என்கிறார் கார்ட்னர் (Gartner) பகுப்பாய்வாளர்  திரு. ப்ரையன் ப்ளாவ் (Brian Blau).

Ooooor.com 10.4.2012