வான் வெளியிலிருந்து வரும் விருந்தாளிகள்!

வான் வெளியிலிருந்து வரும் விருந்தாளிகள்!  

தினமும் காலையில் குயில் கூவித் துயில் எழுப்பினால் …..எப்படி இருக்கும்? “பிரமாதமாக இருக்கும்; அருமையாக இருக்கும்; சொர்க்கமே என்றாலும் அது என் வீட்டைப் போல வருமா என்று பாடவும் தோன்றும்” என்கிறீர்களா? மிக மிக உண்மை. ஆனால் இப்போது நாம் இருக்கும் கான்க்ரீட் காடுகளில் இது சாத்தியமா என்றும் தோன்றும், இல்லையா? கட்டாயம் சாத்தியம்; சிறிது முயன்றால்!

பறவைகளை நம் வீட்டுக்குக் கூப்பிட அருமையான ஒரு வழி இருக்கிறது. பறவை ஆகார ஊட்டிகள் (Bird feeders) மற்றும் பறவை குளியல் தொட்டிகள் (bird baths) பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இவைகள் தாம் பறவைகளை அழைக்கும் அழைப்பிதழ்கள்! வீட்டின் வெளிப் பகுதிகளில் உங்கள் பார்வையில் படும்படி இவைகளை மாட்டுங்கள். இவை பறவைகளை உங்கள் வீட்டிற்குள் வரவழைக்க உதவுவது மட்டுமில்லாமல் உங்கள் வீட்டின் மிகச் சிறந்த வெளிப்புற அழகு சாதனமாகவும் அமையும். இதனால் உங்கள் வீட்டின் அழகு பலமடங்கு கூடும்.

கோடைக்காலம் பறவைகளை அழைக்க சிறந்த காலம். போன மாதம் அதாவது மாரச் மாதம் 20 ஆம் தேதி ‘உலக சிட்டுக் குருவிகள் தின’ மாகக் கொண்டாடப்பட்டது. அன்று பல பொது நிறுவனங்கள் விருப்பம் இருக்கிறவர்களுக்கு ‘பறவைக் கூடுகளை’ கொடுத்தன. எப்படி நாமாகவே பறவைக் கூடுகளை அமைப்பது என்றும் ஆலோசனை வழங்கின.

பறவைகள் நம் வாழ்வில் ஒரு அங்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது. காக்கைக்கு உணவு அளிப்பது, சிட்டுக்குருவிகளுக்கு நெல் மணிகளை போடுவது போன்றவை பெரும்பாலான வீடுகளில் இன்னுமும் ஒரு பழக்கமாக இருந்து வருகிறது. கிளி, புறா, காதல் பறவைகள் இவற்றை பலர் தங்கள் வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகிறார்கள்.

பறவைகளைக் கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பதை விடவும் இப்படி பறவை ஆகார ஊட்டிகளையும், கோடைக் காலத்தில் அவை வெப்பம் தீர குளிப்பதற்கு வேண்டி பறவைக் குளியல் தொட்டிகளையும் நம் வீட்டின் வெளியே அமைப்பது மிகச் சிறந்தது. பறவைகளின் இயற்கையான இயல்புகளை மாற்றாமல், அதே சமயம் நம் வீட்டில் வந்து அவை  உட்கார்ந்து விட்டுப் போகவும் நாம் வழி வகுத்துக் கொடுக்கலாம். பறவைகளை இயற்கைச்சூழலில் பார்ப்பது கண்ணுக்கும் மனதுக்கும் மிகச்சிறந்த ஒரு விருந்தாகும். குளியல் தொட்டியில் வந்து உட்கார்ந்து தன் சிறகுகளை விரித்து தண்ணீரில் முங்கி விட்டு ஒரு தடவை தன் உடலை சிலிர்த்துக் கொள்ளும் அழகு இருக்கிறதே ……அடாடா காணக் கண் கோடி வேண்டும்! இந்தப் பறவைகள் நமக்கும் இயற்கைக்கும் ஒரு பாலமாக அமைகின்றன.

பொதுவாக பறவைகளுக்கு என்று வீட்டு ஜன்னலில் ஒரு ஓரத்தில் சிறிது உணவு இடுவது வழக்கம். அப்படி அல்லாமல் தயார் நிலையில் கிடைக்கும் பறவை ஆகார ஊட்டிகள், பறவை குளியல் தொட்டிகள் ஆகியவற்றை வாங்கி தோட்டம் இருந்தால் மரக் கிளைகளிலோ, அல்லது சற்று உயரமான தூண்கள் அமைத்தோ தொங்கவிடலாம். அடுக்குமாடியில் வசிப்பவர்கள் ஜன்னல் சாளரத்தில் இவற்றை அமைக்கலாம்.

நெல் மணிகள், உப்பில்லாமல் சமைத்த சோறு இவற்றை இந்த ஆகார ஊட்டிகளில் போடலாம். ஆகாரம் சாப்பிடும் பறவைகள் இவற்றையே கழிவறையாகவும் பயன்படுத்துகின்றன. அதனால் இவற்றை தினமும் சுத்தம் செய்ய வேண்டும். பறவை குளியல் தொட்டிகளில் தினமும் தண்ணீர் விட வேண்டும்.

பறவைகளின் இனப்பெருக்க காலத்தில் கூடுகளை வாங்கி மாட்டலாம். ஒரு சிறிய அட்டைப் பெட்டியில்  வைக்கோலை அடைத்து வீட்டு வராந்தாவிலோ, பால்கனியிலோ, மரத்திலோ தொங்கவிடலாம். அதனால் குஞ்சுகள் பாதுகாப்பாக இருக்கும். பறவை இனங்கள் பெருகும்.

பறவைக் கூடுகள், பறவை ஆகார ஊட்டிகள், பறவை குளியல் தொட்டிகள் பல அழகழகான வண்ணங்களில், விதவிதமான மாதிரிகளில் கிடைக்கின்றன. உங்கள் வீட்டிற்கு பொருந்தும் வண்ணத்தில் வாங்கி மாட்டுங்கள். மிகவும் ‘பளிச்’ நிறத்தில் வேண்டாம். இவற்றால் பறவைகளின் எதிரிகள் கவரப் படுவார்கள். பறவைகளுக்கு ஆபத்து. அதனால் இயற்கையுடன் ஒத்துப் போகும் வண்ணத்தில் வாங்கி வீட்டைச் சுற்றி அமையுங்கள்.

பறவைகள் உங்கள் வீட்டிற்கு வர சிறிது காலம் பிடிக்கும். பொறுமையுடன் காத்திருங்கள். ஒருமுறை பழகிவிட்டால் பிறகு அவை உங்கள் உபசரிப்பில் மயங்கிவிடும்.

வான் வெளியிலிருந்து வரும் விருந்தாளிகளை அழைக்கத் தயாரா?

published in ooooor.com