பஞ்ச காலத்தில் பெண்குழந்தைகள் அதிகம் பிறக்கின்றன!

பஞ்ச காலத்தில் பெண்குழந்தைகள் அதிகம் பிறக்கின்றன!

பஞ்ச காலத்தில் பெண்குழந்தைகள் அதிகம் பிறக்கின்றன என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.

நியுயார்க் சிடி பல்கலைக்கழகத்தின் சமூகவியலாளரும், ஜனத்தொகை வல்லுனரும் ஆன திரு. ஷிகே சாங் (Shige Song) நடத்திய ஆய்வில் இந்த விஷயம் தெரிய வந்துள்ளது. சீனாவில் ஏற்பட்ட மிகப்பெரிய பஞ்சத்தின் போது பிறப்பு அமைப்பு  (Birth pattern) எப்படி இருந்தது என்பது பற்றி திரு. ஷிகே சாங் ஆய்வு நடத்தியுள்ளார். சீனாவில் 1958 லிருந்து 1961 வரை மிகப் பெரிய பஞ்சம் (Great Famine of China) ஏற்பட்டது. திரு. ஷிகே தன் ஆய்வுக்காக செப்டம்பர் 1929 லிருந்து ஜூலை 1982 வரை குழந்தைகள் பெற்றெடுத்த சுமார் 3,00,000 சீனப் பெண்மணிகளின் தரவுகளை ஆராய்ந்ததில் ஆண் குழந்தைகள் பிறப்பு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருப்பது தெரிய வந்தது.

உணவு கிடைக்காத இந்தக் கொடிய பஞ்சத்தின் போது சுமார் 30 மில்லியன் மக்கள் இறந்தனர். பொதுவாக 109 ஆண் குழந்தைகளுக்கு 100 பெண்குழந்தைகள் என்ற அளவில் இருந்த நிலை மாறி 1960 ஆம் ஆண்டு, ஆண்குழந்தைகள் எண்ணிக்கை 104 ஆகக் குறைந்தது. பெண்குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆகவே இருந்தது.

பெண்ணின் உடல் சுற்றுச்சூழலுக்கு தக்கவாறு எதிர்செயலாற்றுகிறது என்கிற  ‘பாலின விகித சீர்படுத்துகை’ என்ற ஒரு புனைவுக் கருத்தை முன் வைக்கிறார்கள் சில அறிவியலாளர்கள். திரு சாங்கின் ஆய்வறிக்கை (sex ratio adjustment hypothesis) இதனை ஆதரிக்கிறது என்று ‘நேச்சர்’ இதழ் கூறுகிறது. சரியான போஷாக்கு (nourishment) இல்லாத ஆண்கள் மிகவும் குறைந்த குழந்தைகளை பெறுகின்றனர். வாழ்வாதாரமும் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவில் இருக்கிறது. அதனால் பெண்கள் பஞ்சத்தின் போது மிகக் குறைந்த ஆண்குழந்தைகளைப் பெறுகின்றனர்.

திரு. சாங் ஒரு கேள்வித்தாளை தன் ஆய்வுக்கு வந்த பெண்களிடம் கொடுத்து பஞ்சம் இருந்த காலத்தில் அவர்களுக்கு என்ன குழந்தை பிறந்தது என்று எழுதச் சொன்னார். அந்தக் காலத்தில் அல்ட்ரா ஸ்கேன் வசதி இல்லாததால் இந்தப் பெண்களால் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப குழந்தைகளின் பாலினத்தை  (ஆணா, பெண்ணா)  தெரிவு செய்வது சாத்தியமாகவில்லை என்கிறார் திரு சாங்

சீனாவின் பெரிய பஞ்சம் அப்போது சீனத் தலைவராக இருந்த மாவோவின் தப்பான பொருளாதார கொள்கையால் ஏற்பட்டது.

ஸ்டீல் உற்பத்தியைத் அதிகரித்து, தொழில்மயமாக்குதலை முன்னேற்ற எண்ணியதால் தானிய உற்பத்தி கிடுகிடுவென சரிந்தது. இதன் விளைவாகவே பெரிய பஞ்சம் ஏற்பட்டு பேரழிவு உண்டாயிற்று.

published in ooooor.com

ஐரிஷ் லக்

ஐரிஷ் லக்

‘இந்த வாரம் தேசீய நண்பர்கள் வாரம்; இதைப் படித்தவுடனே எத்தனை நண்பர்களுக்கு முடியுமோ அத்தனை பேருக்கு அனுப்பினால் உங்கள் எண்ணம் நிறைவேறும்’ என்று நண்பர் ஒருவர் ஒரு ஈமெயில் அனுப்பி இருந்தார்.

‘ஐரிஷ் லக்’ என்ற பெயரில் ஒரு மிகவும் சுவாரஸ்யமான நிஜக் கதை இருந்தது. இதோ உங்களுக்காக:

ஸ்காட்லாந்து நாட்டில் ஃப்ளெமிங் என்ற பெயரில் ஒரு ஏழை விவசாயி இருந்தார். ஒருநாள் வயலில் வேலை செய்யப் போனபோது உதவி செய்யக் கோரி ஒரு குரல் அருகிலிருந்த சதுப்பு நிலத்தில் இருந்து கேட்டது. தன் கையிலிருந்தவற்றை அப்படியே போட்டுவிட்டு ஓடினார் ஃப்ளெமிங். ஒரு சிறுவன் இடுப்பளவு ஆழத்தில் அந்தப் புதை மணலில் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான். நல்லவேளையாக ஃப்ளேமிங் அவனை காப்பாற்றினார்.  ஃப்ளேமிங் இல்லையென்றால் அந்தச் சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக புதை மணலில் மூழ்கி இறந்திருப்பான்.

அடுத்த நாள் ஒரு ஆடம்பரமான வண்டி  ஃப்ளெமிங் வீட்டு முன்னால் வந்து நின்றது. நேர்த்தியாக உடை அணிந்த ஒரு பிரபு அவ்வண்டியிலிருந்து இறங்கி வந்து நேற்று ஃப்ளெமிங் காப்பாற்றிய சிறுவனின் தந்தை தாம் என்று அறிமுகம் செய்து கொண்டார். “நீங்கள் என் மகனின் உயிரைக் காப்பாற்றினீர்கள். உங்களுக்கு நான் ஏதாவது கொடுக்க விரும்புகிறேன்”, என்றார்.

“இல்லை, என்னால் எதுவும் வாங்கிக் கொள்ள முடியாது” என்று பணிவாக மறுத்தார் ஃப்ளெமிங். அப்போது அவரது பிள்ளை அவர்களது எளிய குடிசையின் வாசலுக்கு வந்தான்.

“அவன் உங்கள் மகனா?” என்று கேட்டார் பிரபு.

“ஆமாம்” என்று பெருமையுடன் கூறினார் ஃப்ளெமிங்.

“அப்படியானால் சரி, நாமிருவரும் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளுவோம். என் பிள்ளைக்குக் கிடைக்கும் அதே மிகச்சிறந்த கல்வியை அவனுக்குக் கொடுக்கிறேன். அவன் அவனது தந்தையைப் போலிருந்தால் பிற்காலத்தில் நாமிருவரும் பெருமை அடையக்கூடிய அளவுக்கு வருவான்” என்றார்.

சொன்னதோடு மட்டுமல்ல; செய்தும் காண்பித்தார்.

விவசாயியின் மகன் மிகச் சிறந்த பள்ளிக் கூடங்களில் படித்தான். லண்டனில் உள்ள புனித மேரி மருத்துவப் பள்ளியில் படித்து உலகம் புகழும் பெனிசிலின் கண்டுபிடித்த சர் அலெக்ஸ்சாண்டர் ஃப்ளெமிங் ஆனார்.

வருடங்கள் பல கழிந்தபின் பிரபுவின் பிள்ளை நிமோனியாவால் பாதிக்கப்பட்டபோது பெனிசிலின் தான் அவரைக் காப்பாற்றியது.

அந்த பிரபுவின் பெயர் லார்ட் ரண்டோல்ப் சர்ச்சில். அவரது பிள்ளை?

சர் வின்ஸ்டன் சர்ச்சில்!

தினை விதைத்தவன் தினை அறுப்பான். நல்லது செய்பவனுக்கு எல்லாமே நல்லதுதான் நடக்கும்.

வாழ்க்கையில்……

பணம் தேவையில்லை என்பது போல் வேலை செய்;

யாரும் உன்னை புண்படுத்தவில்லை என்பது போல் அன்பு செய்;

யாரும் உன்னை பார்க்கவில்லை என்ற எண்ணத்துடன் நடனம் ஆடு;

யாரும் உன் பாட்டைக் கேட்கவில்லை என்ற எண்ணத்துடன் பாடு;

சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்;

இதோ ஒரு சின்ன ஐரிஷ் வாழ்த்து எல்லா நண்பர்களுக்கும்:

உன் கைகளில் எப்போதும் செய்வதற்கு வேலை இருக்கட்டும்;

உன் பணப்பையில் எப்போதும் ஒன்றிரண்டு காசுகள் இருக்கட்டும்;

உன் ஜன்னலில் எப்போதும் சூரியன் பிரகாசிக்கட்டும்;

ஒவ்வொரு மழைக்குப் பின்னும் வானவில் தோன்றட்டும்;

எப்போதும் நண்பன் ஒருவனின் கைகள் உனக்கருகில் இருக்கட்டும்;

கடவுள் உன் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்பட்டும்;

சைத்தானுக்குத் தெரிவதற்கு முன்  நீ இறந்து அரை மணி நேரம் ஆகி இருக்கட்டும்:

தேசீய நட்பு வார வாழ்த்துகள்!

published in ooooor.com