உலகின் நம்பர் ஒன் ‘‘ஓலே”!

அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் உலகின் நம்பர் ஒன் ‘‘ஓலே”!

சுமார் 60 வருடங்களாக அழகு சாதனப் பொருட்களை தாயரித்துவரும் ஓலே  நிறுவனம் பல புதிய பழைய நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி, அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் முதலிடத்தை பெற்றுள்ளது.

இதற்குக்காரணம் வாடிக்கையாளர்களின் தொடர்ந்த ஆதரவுதான். ஒருமுறை ஓலே பொருட்களை வாங்கியவர்கள் திரும்பத்திரும்ப அதையே வாங்க விரும்புகிறார்கள்.

பெயர் பெற்ற 50 அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் 41 நிறுவனங்கள் 60 வருடங்களாக இந்தத் தொழிலில் இருக்கின்றன. சுமார் 15 நிறுவங்கள் 100 வருடங்கள் அல்லது அதற்கும் அதிகமான வருடங்கள் அழகு சாதனத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

வருடத்திற்கு சுமார் 382 பில்லியன் டாலர்கள் முதலீடு; ஒவ்வொரு வாரமும் தற்கால நாகரிகத்துக்குத் தகுந்தாற்போல தயாரிக்கபட்ட புதுப் பொருட்களைக் சந்தைக்கு கொண்டுவருவது என்று கடுமையான போட்டாபோட்டி நிலவும் இந்தத் துறையில் 1950 ஆம் வருடம் துவங்கிய ஓலே நிறுவனம் முதல் இடத்தில் இருப்பது ஆச்சரியம் தான்!

இந்த வெற்றிக்குக் காரணம் இந்நிறுவனத்தின் பிரபலமும், இதன் தயாரிப்புகள் மேல் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும்தான். பாரம்பரிய மிக்க நிறுவனங்களின் தயாரிப்புகள் பெண்களால் தலைமுறை தலைமுறையாக பயன்படுத்த பட்டு வருகின்றன.

இந்த நிறுவனம் வயதாவதைத் தடுக்கும் பல அழகு சாதனங்களைத் தயாரிப்பதில் தன் கவனத்தைத் திருப்பியிருப்பதும்  இன்னொரு காரணம்.

2000 மாவது ஆண்டில் அமெரிக்க மக்கள் தொகையில் 60 வயதுக்கு மேல்பட்டவர்கள் 45 மில்லியன். இது 2020 இல் 75 மில்லியன் ஆக உயரும் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது.

வயதானவர்கள் தங்களை இளமையாகக் காட்டிக்கொள்ள விரும்புவதும் இவர்களின் முதலிடத்திற்குக் காரணம்!

மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த சிறுவன்!

மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த சிறுவன்!

கார் மோதியதில் பலமான அடிபட்டு 2 வாரங்கள் கோமாவில் இருந்த ஸ்டீவன் தொர்பே விழித்தெழுந்த அதிசயம்!

17 வயதுச் சிறுவன் ஸ்டீவனுக்கு மூளைச் சாவு ஏற்பட்டுவிட்டது, இனி அவன் கோமாவிலிருந்து மீண்டு எழுவான் என்ற நம்பிக்கையில்லை என்று 4 மருத்துவர்கள் கையை விரித்தனர். ஆனால் மனம் தளராத பெற்றோர்கள் தாங்கள் அவனிடம் ஒரு சிறு அசைவைப் பார்த்ததாகச் சொல்லி, இன்னுமொரு முறை அவனை சோதித்துப் பார்க்குமாறு வேண்ட சிறுவனின் தலை விதி மாறியது.

ஒரு நரம்பியல் வல்லுனர் சிறுவனின் மூளையில் சிறு சிறு சலனங்களை அடையாளம் கண்டு பிடித்தார். 2 வாரங்களுக்குப் பிறகு ஸ்டீவன் கோமாவிலிருந்து வெளிவந்தான். 7 வாரங்கள் ஆன பின் மருத்துவ மனையை விட்டு வெளியேறினான்.

பிப்ரவரி 2008 ஆம் ஆண்டு 17 வயது பள்ளிச்சிறுவன் ஸ்டீவன் தன் நண்பர்கள் இருவருடன் ‘ரோவர்’ காரில் சென்றுக்கொண்டிருந்த போது அங்கு அலைந்துகொண்டு இருந்த குதிரை ஒன்று காரின் பாதையில் குறுக்கிட்டது. இந்த விபத்தில் ஸ்டீவனின் நண்பன் மேத்யு ஜோன்ஸ் கொல்லப்பட்டான். ஸ்டீவன் முகம், தலை கை முதலிய பகுதிகளில் பலத்த காயத்துடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டான்.  2 நாட்களுக்குப் பிறகு மூளைச்சாவு ஏற்பட்டுவிட்டதாக மருத்துவர்கள் சொன்னார்கள். ஸ்டீவனுக்குப் பொருத்தப்பட்ட உயிர் ஆதாரங்களை துண்டித்து விடலாம் என்றும் அவனது உறுப்புகளை தானம் கொடுப்பது பற்றி யோசித்துச் சொல்லுமாறும் மருத்துவர்கள் அவனது பெற்றோரிடம் சொன்னார்கள்.

ஸ்டீவனின் தந்தை 51 வயதான திரு தொர்பே, பொது மருத்துவப் பயிற்சியாளர் திருமதி ஜூலியா பைபரை (டாக்டர் Julia Piper) தொடர்பு கொண்டார். அவர் தனக்குத் தெரிந்த நரம்பியல் வல்லுநர் ஒருவரை கோவென்ட்ரி யுனிவர்சிட்டி மருத்துவ மனையில் இருந்த ஸ்டீவனைப் பார்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஆச்சர்யப்படும்படியாக அவர் ஸ்டீவனுக்கு மூளைச்சாவு ஏற்படவில்லை என்றும் அவன் உயிர் பிழைக்க மயிரிழை வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார். மருத்துவர்கள் அவனைக் கோமாவிலிருந்து வெளிக் கொணர்ந்தனர். 2 வாரங்களுக்குப் பின் ஸ்டீவன் விழித்தெழுந்தான்.

ஸ்டீவனின் இடதுகை செயலிழந்துள்ளது. முகத்தை சீரமைக்க மிக விஸ்தாரமான அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அவனது மூக்கை புனரமைத்திருக்கிறார்கள். கண்ணுக்கும் ஒரு செயற்கை பொருத்தி அமைத்து இருக்கிறார்கள்.

“எனது பெற்றோர்களுக்கு இது ஒரு வலிமிகுந்த அனுபவம். எனது உறுப்புக்களை தானம் செய்யும்படி மருத்துவர்கள் கூறியது என் பெற்றோருக்கு இனம் தெரியாத சக்தியைக் கொடுத்திருக்க வேண்டும். அவர்களால் நான் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. என் படுக்கை அருகில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் என்னிடம் பேசிய சிலவற்றிற்கு நான் எதிர்வினை செய்ததாக அவர்கள் நினைத்தனர்.”

இத்தனையையும் மீறி தான் பிழைத்து எழுந்தது என்பதே தான் முற்றிலும் குணமானது போல்தான் என்கிறான் ஸ்டீவன்.

இது நடந்து 4 வருடங்கள்ஆகின்றன. கணக்கு எழுத்தர் பயிற்சியாளராக பணிபுரியும் ஸ்டீவனுக்கு இப்போது 21 வயது.  ஸ்டீவனுக்கு 3 சகோதரிகள் உள்ளனர்.

“மூளையில் பலத்த அடிபட்டு பிழைப்பது பெரிய அதிசயம் தான். ஸ்டீவன் பிழைத்து எழுந்தது எங்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி தான்” என்கிறார் கோவேன்ட்ரி மருத்துவமனை மற்றும் வார்விக்ஷையர் NHS ட்ரஸ்ட் பிரதிநிதி ஒருவர்.

இது நடந்தது பிரிட்டனில்.

News written for ooooor.com

சாணக்கியன் சொல்!

சாணக்கியன் சொல்!

 • மற்றவர்கள் செய்யும் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் எல்லாத் தவறுகளையும் நீங்களே செய்யும் அளவுக்கு உங்களுக்கு ஆயுள்  இருக்காது.
 • ஒரு மனிதன் மிகவும் நேர்மையானவனாக இருக்கக்கூடாது. நேராக வளரும் மரம்தான் முதலில் வெட்டுப் படும். நேர்மையான மனிதர்கள்தான் முதலில் வீழ்த்தப் படுகிறார்கள்.
 • விஷமில்லாத பாம்பானாலும் விஷமுள்ளதைப் போல நடிக்க வேண்டும்.
 • எல்லாவிதமான நட்புக்களின் பின்னாலும் ஒருவரது சுயநலம் இருக்கும். சுயநலம் இல்லாத நட்பு என்பது இல்லை. இது ஒரு கசப்பான உண்மை.
 • எந்த ஒரு செயலைச் செய்வதற்கு முன்னாலும் உங்களை நீங்களே 3 கேள்விகள் கேட்டுக் கொள்ளுங்கள்: ஏன் செய்கிறேன்? முடிவு என்னவாக இருக்கும்? வெற்றி அடைவேனா? இந்த 3 கேள்விகளையும் ஆழமாகச் சிந்தித்து திருப்தியான பதில் கிடைத்தபின் செயலை ஆரம்பியுங்கள்.
 • ஒரு செயலைச் செய்ய ஆரம்பித்து விட்டால், தோல்வி அடைந்து விடுவோமோ என்று பயந்து பாதியில் விட்டு விடாதீர்கள். உண்மையாக உழைப்பவர்கள் தான் சந்தோஷமாக இருப்பவர்கள்.
 • பயம் உங்கள் அருகில் வரும்போதே அதை அடித்து நொறுக்கி சிதைத்து விடுங்கள்.
 • பூவின் நறுமணம் காற்றடிக்கும் திசையில் மட்டுமே பரவும். ஒரு மனிதனின் நல்லதன்மை எல்லா திசைகளிலும் பரவும்.
 • உலகில் மிகவும் வலிமை பெற்றது இளமையும் ஒரு பெண்ணின்அழகும்.
 • படிப்புதான் உண்மையான நண்பன். கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் மரியாதை. படிப்பு அழகையும் இளமையையும் பின்னுக்குத் தள்ளிவிடும்.
 • கடவுள் சிலைகளில் இல்லை. உங்கள் நல்ல எண்ணங்கள் தான் கடவுள். ஆத்மா தான் கோவில்.
 • ஓர் மனிதன் தன் பிறப்பால் உயருகிறான். செயலால் அல்ல.
 • உங்களை விட மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடமோ, மிகத் தாழ்ந்தவர்களிடமோ நட்பு கொள்ள வேண்டாம். இத்தகைய நட்புக்கள் ஒரு போதும் மகிழ்ச்சி உண்டாகாது.
 • முதல் 5 வயது வரை உங்கள் குழந்தைகளுக்குச் செல்லம் கொடுங்கள். அடுத்த 5வருடங்கள் நன்றாகத் திட்டுங்கள். 16 வயதாகும்போது ஒரு நண்பனைப் போல நடத்துங்கள். உங்களின் வளர்ந்த குழந்தைகள் உங்களின் மிகச்சிறந்த தோழர்கள்.
 • குருடனுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி போல, முட்டாளுக்கு புத்தகம்.

½ நொடியில் தேடும் கூகிள்!

½ நொடியில் தேடும் கூகிள்!

நாம் தேடும் எதுவாக இருந்தாலும் சரி, கூகிள் தேடு பொறி அதை ½ நொடியில் கண்டுபிடித்துக் கொடுக்கிறதே, எப்படி என்று எப்பவாவது யோசித்துப் பார்த்தது உண்டா?  நமக்கென்னவோ ½ நொடிதான்!  நாம் தட்டச்சிடும் முக்கியச் சொல்லை வைத்துக் கொண்டு வலையதளத்தில் தேடிக் கண்டுபிடிக்க கூகிள் திரைமறைவில் எத்தனை காரியங்கள் செய்கிறது தெரியுமா?

திங்கள் அன்று கூகிள் தனது இந்த மஹா தேடு பொறியின்  இயக்கத்தின் பின்புலத்தில் இருக்கும் விஞ்ஞானம் என்ன, அது எப்படி இயங்குகிறது என்று ஒரு வீடியோ வெளியிட்டது.

கூகிளின் வெப்ஸ்பாம்( Webspam) தலைமை அதிகாரி, மென்பொருள் வல்லுநர் திரு. மேட் கட்ஸ் (Matt Cutts) யூ ட்யூப் வீடியோ ஒன்றில் இதனை விளக்கினார்.  கூகிளின் ராட்சதத் தேடும் பொறி பயனீட்டாளர்கள் தேடியதைக் கண்டுபிடிக்க வலையத்தை அனுதினமும் வலை போட்டுத் தேடுகிறது. தனது பயனீட்டாளர்களுக்கு மிகச் சமீபத்திய தரவுகளைக் கொடுக்க வலையத்தின் பதிவுகளை முழுவதுமாகக் குடைந்து குடைந்து தேடுகிறது. இது தினமும் நடக்கிறது.

திரு மேட் கட்ஸ் விளக்குகிறார்:

“இதற்கு 3 வேலைகளைச் செய்ய வேண்டும். முதலில் நிறுத்தி நிதானமாக, ஆழமாக, விரிவாக வலை வலம் (crawl the web) செய்யவேண்டும். இரண்டாவதாக கிடைத்தவற்றை  முதல் இடம், இரண்டாம் இடம் என்று  அட்டவணைப்படுத்த வேண்டும். கடைசியாக பயனீட்டாளர்கள் தேடிய விஷயத்தைப் பற்றிய முதன்மையான விவரங்களை உடனடியாக அவர்களுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும்”

“முன்பெல்லாம் நாங்கள் 30 நாட்கள் வலை வலம் வருவோம்; அவற்றை ஒரு வாரம் அட்டவணைப்படுத்துவோம்; அவற்றை வெளியிட மேலும் ஒரு வாரம் ஆகும். சில சமயங்களில் புதிய விவரங்கள் கிடைக்கும்; சில சமயம் பழைய தரவுகள் (datas) இருக்கும் தரவு தளத்தை அடைவோம்.”

“ஆனால் இந்த முறை அத்தனை உகந்ததாக இல்லை. ஏனெனில் கிடைத்த விவரங்கள் பல காலாவதியான விவரங்களாகவே இருந்தன. 2003 இல் கூகிள் தினசரி ஒரு கணிசமான அளவு வலை வலம் செய்யத் தொடங்கியது. இதனால் அட்டவணையை அதிக விவரங்களுடன் புதுப்பிக்க முடிந்தது.”

“போகப்போக இந்த முறை சிறந்த விளைவுகளை கொடுக்கத் துவங்கியது. எல்லா விவரங்களையும் புதிதாக வைக்க முடிந்தது. ஒவ்வொரு பக்கத்திற்கும் நாங்கள் கொடுக்கும் தர வரிசை (rank) எண்கள் நீங்கள் பார்க்க நினைக்கும் இணைப்பை நிர்ணயித்தது. அதிகத் தர வரிசை, அதிக மக்கள் பார்க்கும் இணைப்பு என்ற இவை அதிகரிக்க அதிகரிக்க நீங்கள் தேடும் தளம் விரைவில் கிடைத்து விடுகிறது.” என்கிறார் திரு கட்ஸ்.

நமக்கு வேண்டியதை தேடும் போது இன்னொரு விஷயமும் மிக முக்கியம் என்கிறது கூகிள். “அதுதான் வேர்ட் ஆர்டர் என்னும் வார்த்தை வரிசைப் படுத்துதல். உதாரணத்திற்கு நீங்கள் வித்யா பாலனைத் தேடினால் இரண்டு வார்த்தைகளும் பக்கத்துப் பக்கத்தில் இருக்க வேண்டும். இல்லாது போனால் வித்யா என்பதற்கு சில பக்கங்களையும் பாலனுக்கு அதே பக்கத்தில் வேறு பகுதிகளையும் தேடு பொறி காட்டும்.“

வலைத்தளப் பதிவாளர்களுக்கும் இது ஒரு மிகச்சிறந்த குறிப்பு.

“தேடும் வார்த்தைகளின் அருகாமை, கிடைக்கும் பக்கம் பயனீட்டாளர்கள் இடையே எத்தனை பிரபலமாக இருக்கிறது, அந்தப் பக்கத்தை சுட்டும் இணைப்புகள் இவைதான் இந்த தேடு பொறியின் வேகத்தின் ரகசியம்”.

இத்தனையும் நடந்த பிறகு தேடல் குறிச்சொற்கள் பல நூற்றுக்கணக்கான வெவ்வேறு கணிபொறிகளுக்கு அனுப்பபடுகின்றன. அவை தங்களிடம் இருக்கும் விவரங்களின் அட்டவணையை ஆராய்ந்து இருப்பதிலேயே மிகச் சிறந்த பக்கத்தை காட்டுகின்றன.

“எங்களிடம் இருக்கும் அட்டவணை முழுவதிலும் இந்த தேடுதலுக்கு எது மிகச்சிறந்த பக்கம் என்று பார்த்து அந்தப் பக்கத்தை சின்னச்சின்ன குறிப்புகளுடன் குறியீட்டு சொற்களுக்கான பின்னணியுடன் ½ நொடியில் காட்டுகிறோம்”.

இது வெறும் கூகிள் தேடு பொறியின் ரகசியம் மட்டுமல்ல; கூகிள் உலாவியின் வெற்றி ரகசியமும் கூட என்றால் மிகையில்லை.

http://www.engadget.com/2012/04/24/google-explains-how-it-searches-the-internet-in-under-half-a-sec/

ஆரோக்கியமான கல்லீரல் வேண்டுமா?

ஆரோக்கியமான கல்லீரல் வேண்டுமா?

நமது கல்லீரல் நமது உடலின் முக்கியமான அங்கங்களில் ஒன்று. நமது உடலில் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு உறுப்பு இது. இதன் எடை 1.5 கிலோ கிராம். நமது உடலுக்குத் தேவையான கனிமப் பொருட்கள், வைட்டமின்கள் இவற்றை சேமிப்பதுடன், தேவைப்படும் போது புது புரதப் பொருட்களையும் உற்பத்திப் பண்ணுகிறது.

நாம் உண்ணும் உணவில் இருக்கும் கொழுப்புப் பொருட்களை செரிமானம் செய்வதற்கு வேண்டிய பித்தநீர் கல்லீரலால் உற்பத்தி செய்யப்படுகிறது. நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகளில் உள்ள நோயைக் குணப்படுத்த தேவையான பொருட்களை உடைத்து நம் உடல் அவற்றை உறிஞ்சிக் கொள்ள உதவுகிறது. இரத்தம் உறையவும் கல்லீரல் உதவுகிறது. கல்லீரலைப் பற்றிய இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், இது தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளவும் முடியும்.

கல்லீரலை எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுவது என்று பார்க்கலாம்:

 • மக்னீஷியம், மாவுச்சத்து, இரும்புச்சத்து நிறைந்த உணவு கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், உடலில் சேரும் நஞ்சுப் பொருட்களை வெளியேற்ற உதவும். நாள் முழுவதும் நிறையத் தண்ணீர் குடிப்பது அவசியம்.
 • அளவுக்கு அதிகமாக மது அருந்துவது 3 விதமான நோய்களை வரவழைக்கும். 1. ஆல்கஹாலிக் ஹெபடைடிஸ், (alcoholic hepatitis) 2. ஆல்கஹாலிக் சிர்ரோசிஸ் ( alcoholic cirrhosis) எனப்படும் ஈரல் நோய், 3. கொழுப்பு கல்லீரல் அல்லது ஃபேட்டி லிவர் (fatty liver). மது அருந்துவதை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். மது அருந்தாமலே இருப்பது உத்தமம்.
 • புத்துணர்ச்சி கொடுக்கும் (recreational drugs) மருந்துகள் கல்லீரல் திசுக்களை சேதப்படுத்தும். மருத்துவர்கள் கொடுக்கும் சில மருந்துகளும் நச்சுப் பொருள் கலந்ததாக இருக்கக்கூடும். மருத்துவர் குறிப்பிடும் அளவுக்கு மேல் இவைகளை சாப்பிட வேண்டாம்.
 • ஆர்கானிக் எனப்படும் உயிர்ம உணவுகள் ஆன்டிஆக்ஸிடென்ட் (antioxidants) நிறைந்து இருப்பதால், இவை கல்லீரலை பாதுகாத்து, நச்சுப் பொருள்களை வெளியேற்றி, சுத்தப்படுத்தவும் செய்கின்றன.
 • வண்ணப் பூச்சுக்கள், பூச்சி மருந்துகள் முதலியவற்றில் இருந்து வரும் நச்சு புகைகள், தூசுப் படலங்கள் நுரையீரலுக்குள் மிகச்சிறிய இரத்த நாளங்கள் வழியாக சென்று கல்லீரலை அடையக்கூடும். இதனால் கல்லீரல் பாதிக்கப்படும். இந்தப் பொருட்களைப் பயன்படுத்தும் போது பாதுகாப்புக் கவசம் அணிவது நல்லது.
 • உடற்பயிற்சி மிக அவசியம்.
 • ஹெபடைடிஸ் A மற்றும் B தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளுவது மிக இன்றியமையாதது.

கல்லீரலுக்கு நன்மை பயக்கும் சில உணவு வகைகள்:

பூண்டு: கல்லீரலில் சுரக்கும் நொதிநீர்களை தூண்டி நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

பச்சை காய்கறிகள்: பச்சையம் நிறைந்த பசலைக்கீரை, வெந்தயக்கீரை, புரோக்கோலி, முட்டைக்கோஸ் முதலிய நச்சுப் பண்பு நீக்கிகள் (detoxifiers) கல்லீரலுக்கு நல்லது.

மஞ்சள்: பொறியல் வகைகளுக்கு மட்டுமல்லாமல் உணவுப் பொருட்களில் இருக்கும் புற்றுநோய் காரணிகளை கல்லீரலிலிருந்து வெளியேற்றவும் உதவுகிறது.

எலுமிச்சை: காலையில் எலுமிச்சை சாறு குடிப்பது கல்லீரலை தூண்டுகிறது.

பீட்ரூட், காரட்:  நச்சுப் பொருட்களை வெளியேற்ற இவை உதவுகின்றன.

இந்த உணவுப் பொருட்கள் பொதுவான ஆரோக்கியத்திற்கும் உதவும்.

 

 

 

 

 

வானத்தில் ஒரு வாணவேடிக்கை! (Lyrid meteor shower)

வானத்தில் ஒரு வாணவேடிக்கை! (Lyrid meteor shower)

தீபாவளியன்று பூமியிலிருந்து நாம் விடும் ராக்கெட்டுகள் விண்ணை முட்டிக் கீழே விழும். அதே போல விண்ணிலிருந்து யாரோ ராக்கெட்டுகள் விட்டால் எப்படி இருக்கும்? இது நடக்குமா என்று கேட்கிறீர்களா? ஒவ்வொரு வருடமும் ‘வானத்தில் இந்த வாணவேடிக்கை’ நடந்துகொண்டுதான் இருக்கிறது.

பூமி, ஒவ்வொரு வருடமும் இந்த சமயத்தில்  தாட்சர் என்ற பழைய வால்

Lyrid meteor shower 3 days ago

நட்சத்திரத்தின் சுற்றுப் பாதையைக் கடக்கிறது. அப்போது தாட்சர் வால் நட்சத்திரத்தின் சிதைவுகள் பூமியின் வளி மண்டலத்திற்குள் நுழைகின்றன. பூமியின் ஈர்ப்பு சக்தி காராணமாக இவை வானத்திலிருந்து இழுக்கப்பட்டு கீழே விழுந்து எரிந்து மடிகின்றன. லைரா என்ற நட்சத்திரக் கூட்டத்திலிருந்து இந்த கதிரியக்கம் ஆரம்பிப்பதால் இதனை (Lyrid Meteor Shower) லைரிட் எரி நட்சத்திர மழை பொழிவு என்கிறார்கள். மணிக்கு 10 லிருந்து 20 என்ற அளவில் எரிநட்சத்திரங்கள் பூமியை நோக்கி இருண்ட வானத்திலிருந்து ஒளிப்பிழம்பாக ‘சர் சர்’ என்று வருவது கண்களுக்கு அரிய, அதிசய விருந்து. 1982 ஆம் ஆண்டு பூமி தாட்சர் வால் நட்சத்திரத்தின் அடர்த்தியான துகள்களின் நடுவே போனாதால் மணிக்கு சுமார் 90 எரி நட்சத்திரங்கள் விழுந்தன.

தாட்சர் வால் நட்சத்திரம் நமக்கு வெகு தொலைவில் இருக்கிறது. ஒரு முறை சூரியனை நீள் வட்ட வடிவில் சுற்றிவர இது எடுத்துக் கொள்ளும் காலம் 415 ஆண்டுகள். ஆனால் அதன் சிதைவுகள் அதன் சுற்றுப் பாதை நெடுகிலும் பரவிக் கிடக்கின்றன. இந்தச் சிதைவுகள் பெரும்பாலும் தூசி, மற்றும் மணல் துகளைவிட  மிக நுண்ணிய கற்கள். இவை மணிக்கு 100,000 மைல் வேகத்தில் சுமார் 70, 80 மைல் தூரம் வரை எரிந்து கொண்டே விழுகின்றன..

இந்த லைரிட்ஸ் வகை எரி நட்சத்திரங்கள் மிகவும் பலவீனமானவைகள். வான்வெளி நோக்கர்கள் (Skywatchers) ஆகஸ்ட் மாதத்தில் ஏற்படும் பெர்செயிட்ஸ் (Perseids) மற்றும் டிசம்பரில் ஏற்படும் ஜெமினைட்ஸ் (jeminids)  போன்றவற்றை மிகவும் விரும்புகிறார்கள். ஆனால் இந்த வருடம் லைரிட்ஸ் அமாவாசையன்று (new moon) வருவதால் வானம் இருண்டு இருக்கும். அதனால் இந்த எரி நட்சத்திரங்கள் விழுவதை நன்றாகப் பார்க்கலாம்.

இவை விழும்போது நடுநடுவே சில தீப் பந்துகளையும் பார்க்கலாம். வழக்கத்திற்கு மாறாக சில பெரிய சிதைவு துண்டுகள் பூமியின் மேல் – சில சமயங்களில் நம் காதுக்கு கேட்கக்கூடிய ஒலியுடன் – வந்து விழுவதால் இந்த தீப் பந்துகள் தெரிகின்றன.

சீன தேச வானியலாளர்கள் மே 22 ஆம் தேதி கி. மு. 687 ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்த எரி நட்சத்திர மழை பொழிவைப் பற்றி  தங்களது காலக்ரமத் தொகுப்பில் (Zuo Zhuan-Chronicle of China) எழுதிவைத்துள்ளார்கள். “இரவு நேரத்தில் நட்சத்திரங்கள் கண்ணுக்குத்தெரியாத போதில் நடுஇரவில் நட்சத்திரங்கள் மழையைப்போல பொழியத் தொடங்கின” என்று அப்புத்தகத்தில் இந்த நிகழ்வு சொல்லப்படுகிறது.

இது ஒரே ஒரு நாள் நிகழ்வு அல்ல. கடந்த சனிக்கிழமை சில இடங்களில் பார்க்க முடிந்ததாகச் சில செய்திகள் கூறுகின்றன.

இந்த வருடம் இந் நிகழ்வின் உச்ச கட்டம் இந்த வாரக் கடைசியில்  அமாவாசையன்று நடக்கப் போவதால் சந்திரனின் ஒளியால் எரி நட்சத்திரங்கள் மறைக்கப்பட மாட்டா என்று சொல்லுகிறார்கள்.

விடியற்காலை 1 மணிக்கு மேல் கிழக்கு வானில் இந்த வாண வேடிக்கையைக் கண்டு மகிழலாம்.

பிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசி

பிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசி
நம் எல்லாருக்கும் பல வருடங்களாக வெள்ளை அரிசிதான் தெரியும். அதுதான் சமைக்க சுலபம். வெள்ளை வெளேரென்று மெத்தென்று பார்க்கவே அழகாக இருக்கும். சீக்கிரம் வெந்துவிடும். ஆனால் சத்துக்கள் என்று எடுத்துக் கொண்டால் அதிலிருந்து நமக்குக் கிடைப்பது மிக மிகக் கொஞ்சம். தற்போது சிவப்பு அரிசியின் நன்மைகளை அறிந்துக்கொண்டு பல நாடுகளிலும் மக்கள் சிவப்பு அரிசியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
சிவப்பு அரிசியை தீட்டப்படாத அரிசி (unpolished) என்றும், முழு அரிசி என்றும் சரக்கு அரிசி என்றும் சொல்லுகிறார்கள். அதன் நிறம் பிரவுன் அல்லது சிவப்பாக இருக்கும். இதன் கெட்டியான மேல்தோல் (உமி) எனப்படுகிறது. இதற்கு அடுத்த மேல்தோல் மெல்லியதாக பிரவுன் நிறத்தில் இருக்கும் இந்த மேல்தோல் தவிடு எனப்படுகிறது. நாம் சாப்பிடும் வெள்ளை அரிசி மறுபடி மறுபடி தீட்டப்பட்டு அத்தனை சத்துக்களும் இழந்த பின் கிடைப்பது.
• இந்த சிவப்பு அரிசி ஓர் முழு தான்யமாக இருப்பதை தவிர, நமது ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதில் இருக்கும் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
• நார்சத்து நிறைந்து இருப்பதுடன், சுலபமாக செரிக்கக்கூடிய மாவுச்சத்தும் இருப்பதால் இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது.
• இந்த நார்சத்து புற்றுநோய் உண்டாக்கக்கூடிய வேதியியல் பொருட்கள் பெருங்குடலை அணுகாத வண்ணம் பார்த்துக் கொள்ளுவதால், கோலோன் புற்றுநோய் தடுக்கப் படுகிறது.
• மேலும் மலக்கட்டு ஏற்படாமல், மலம் சுலபமாக வெளியேறவும் உதவுகிறது.
• இதில் இருக்கும் கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

• ஒரு கிண்ணம் சிவப்பு அரிசியில் நமக்கு தினப்படி வேண்டிய 8% மாங்கநீசும் (magnesium) 14% நார்சத்தும் கிடைக்கிறது.
• புளிக்க வைக்கப்பட்ட சிவப்பு அரிசியில் சிறுநீர்ப்பை, கல்லீரல், உணவுக்குழாய் மற்றும் இரத்தப் புற்று நோய்கள் வராமல் காக்கக்கூடிய தன்மைகள் இருக்கின்றன.
சமைக்கும் முறை:
வெள்ளை அரிசியைவிட சமைப்பதற்கு அதிக நேரம் ஆவதால் சாதம் செய்வதற்கு முன் 30-40 நிமிடங்கள் ஊறவைப்பது நல்லது. சாதம் செய்யும் போது ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு நீர் ஊற்றலாம்.
வெள்ளை அரிசியில் செய்வது போலவே இதிலும் பயத்தம்பருப்பு சேர்த்து பொங்கல் செய்யலாம். செய்முறை அதே போலத்தான்.
சிவப்பு அரிசி செய்யும் தோசையும் மிக ருசியாக இருக்கும். 2½ கிண்ணம் அரிசிக்கு ½ கிண்ணம் உளுத்தம்பருப்பு என்ற அளவில் சிறிது வெந்தயமும் சேர்த்து அரைத்து இரவு புளிக்க வைத்து மறுநாள் செய்யலாம்.
கடைசியாக ஒரு குறிப்பு:
இந்த அரிசியிலிருந்து எண்ணெய் எடுக்கப் படாததால் சீக்கிரமே கெட்டுப் போய்விடக் கூடிய வாய்ப்புகள் அதிகம். வாங்கும்போது காலாவதியாகும் தேதி பார்த்து வாங்கவும்.

பூமி தினம் (Earth Day)

பூமி தினம் (Earth Day)
ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 22 ஆம் நாள் பூமி தினமாக அனுசரிக்கப்படுகிறது. எதற்காக நாம் வாழும் இந்த பூமிக்குத் தனியாக ஒரு நாள் ஒதுக்க வேண்டும்? பல காரணங்கள். அடுக்கிக்கொண்டே போகலாம்.
முதல் காரணம்: நாம் எல்லா வளங்களும் நிறைந்த இந்த பூமியில் பிறந்திருக்கிறோம். இதற்காக பூமித்தாய்க்கு நன்றி கூற.
இரண்டாவது காரணம்:
இந்த நிலவுலகை சுமார் 2 மில்லியன் மனிதரல்லாத உயிரினங்களுடன் பகிர்ந்து கொண்டு வாழுகிறோம். இன்னும் புதுப்புது உயிரினங்கள் கண்டுபிடிக்கப் பட்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 140,000 உயிரினங்கள் அழிந்து போக நாம் காரணம் ஆகிறோம். இதற்காக பூமித்தாயிடம் மன்னிப்புக் கேட்க!
இது மனித இனம் மேலாதிக்கம் செலுத்தும் சகாப்தம். அதனால் சில விஞ்ஞானிகள் இந்த சகாப்தத்தை மனித சகாப்தம் (Anthropogenic) என்றே குறிப்பிடுகிறார்கள். அதனால் இப்போது நடக்கும் நல்லது கெட்டது இரண்டுக்குமே நாம்தான் காரணம்.
ஏன் உயிரினங்கள் அழிந்து போயின? மனித இனப்பெருக்கம் தான் காரணம். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒன்றரை பில்லியன் ஆக இருந்த உலக மக்கள் தொகை இப்போது 7 பில்லியன் ஆக உயர்ந்திருக்கிறது. மக்கள் பெருக்க விகிதம் குறைந்திருந்தாலும் 2050 ஆம் ஆண்டு உலகின் மக்கள் தொகை 9 பில்லியனைத் தொட்டுவிடும் என்று எதிர்பார்க்க படுகிறது.
மக்கள் இனப் பெருக்கம் உணவுப் பெருக்கத்திற்கு வழி வகுத்தது. உணவுத் தேவையை பூர்த்தி செய்ய காடுகள் அழிக்கப்பட்டு விளைநிலங்கள் ஆயின. அங்கு வாழ்ந்து வந்த உயிரினங்களின் உறைவிடங்கள் குறைந்தன அல்லது மறைந்து போயின. பூமியின் நிலவளம் மனிதனால் சூறையாடப்பட்டது. நீர் வளத்தையும் பாதுகாக்க தவறினான்.
பூமியில் இருக்கும் அத்தனை செல்வங்களையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற மனிதனின் பேராசையால் பருவநிலை மாறியது. சுற்றுச்சூழல் மாசடைந்தது. கிட்டத்தட்ட 300 வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக மாறிவரும் இந்த நிலை பிராணிகளுக்கும், தாவரங்களுக்கும் பொருந்தக் கூடியதாக இல்லை. பல உயிரினங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. பல அழியும் தருவாயில் இருக்கின்றன.
ஒரே ஒரு சின்ன ஆறுதல்: பூமியில் இன்னும் சில இடங்கள் சுமார் 15 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றையாவது பாதுகாத்து நமது அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. இதைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தவே இந்த பூமி தினம் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 22 ஆம் தேதி உலகளாவிய அளவில் சுமார் 175 நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது.
இந்த பூமி தினத்திற்கு ஒரு கொடி, ஒரு பாடல் இரண்டுமே உண்டு. இதோ அவை பற்றிய விவரங்கள்:

இதுதான் ‘சூழலியல் கொடி’ (Ecology flag). இதை 1969 இல் கார்ட்டூனிஸ்ட் திரு. ரான் காப் (Ron Cobb) உருவமைத்தார். நடுவில் இருக்கும் குறியீடு ஆங்கில ‘E’ (environment) மற்றும் ‘O’ (Organism) என்ற வார்த்தைகளின் முதல் எழுத்துக்களின் கலவையாக கிரேக்க எண் (8) ‘தீட்டா’ (theta) வடிவத்தில் அமைந்திருக்கிறது. அமெரிக்க நாட்டுக் கொடியைப் போலவே 13 கோடுகள் பச்சை வெள்ளை நிறங்களில் மாறிமாறி இருக்கிறன. இடது ஓரத்தில் பச்சை சதுரமும் அதில் மஞ்சள் கலர் ‘தீட்டா’ (theta)வும் அமைந்துள்ளது. கிரேக்க எண் (8) ‘தீட்டா’ ‘Earth Day’ வில் உள்ள 8 எழுத்துக்களைக் குறிக்கின்றது.
Earth Anthem
Joyful joyful we adore our Earth in all its wonderment
Simple gifts of nature that all join into a paradise
Now we must resolve to protect her
Show her our love throughout all time
With our gentle hand and touch
We make our home a newborn world
Now we must resolve to protect her
Show her our love throughout all time
With our gentle hand and touch
We make our home a newborn world
உலகின் பல அரிய செல்வங்களை – குடி தண்ணீரிலிருந்து விலையுயர்ந்த ரத்தினக்கல் வரை – பெரும் செல்வந்தர்கள் மட்டுமே அனுபவிக்கிறார்கள். இந்த வளங்கள் எல்லாம் மனித இனத்திற்கு மட்டும் சொந்தமானது இல்லை. இந்த பூமியில் பிறந்த புழு, பூச்சிகள், செடி கொடிகளுக்கும் இவற்றை அனுபவிக்க உரிமை உண்டு. அவற்றுடன் சேர்ந்து வாழ்ந்தால்தான் மனித வாழ்க்கை சிறக்கும். நமது அடுத்த தலைமுறை செழித்து வாழும் என்பதை இந்த பூமி தினத்தில் நினைவு கொள்ளுவோம். பூமியின் வளங்களை காப்பது நம் கையில் தான் இருக்கிறது. இந்த பூமி தினத்தில் பூமியின் வளங்களைக் காத்து சக உயிரினங்களின் வளமான வாழ்க்கைக்கு வழி செய்வோம் என்ற உறுதி மொழியை எடுத்துக் கொள்ளுவோம்.

1000awesomethings.com வலைப்பூ பதிவாளர்!

1000 அற்புதங்கள் பதித்த கனடிய வலைப்பூ பதிவாளர்!

1000awesomethings.com  வலைப் பதிவாளர் திரு நீல் பாஸ்ரிச்சா (Neil Pasricha) தனது 1000 மாவது வலைப்பதிவை வியாழக்கிழமை வெற்றிகரமாகப் பதிவு செய்தார். 1000 அற்புதங்கள் பற்றிய வலைப்பூ ஆதலால் இதுவே அவரது கடைசி வலைப்பதிவாக இருக்கலாம். வலைப்பதிவு செய்ய ஆரம்பித்து 4 வருடங்களுக்குள் டொராண்டோவைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்த 32 வயதுக்காரரின் வலைப்பதிவுகள் 45 மில்லியன் ‘ஹிட்’ களைத் தாண்டியுள்ளது.

இவர் குறிப்பிடும் சில அதி அற்புதங்கள்:

விக்கல் நின்றவுடன் ஏற்படும் நிம்மதி (635), மளிகைக் கடையில் பணம் செலுத்த வேகமாக முன்னேறும் வரிசையில் இடம் கிடைப்பது (501), ரொம்பவும் சிரித்து பின் அழுவது (538) நீண்டநேரம் அடக்கி வைத்துக்கொண்டு பிறகு அப்பாடா என்று ‘ஸுஸ்ஸு’ போவது! (529)

இவர் அதி அற்புதங்கள் என்று குறிப்பிடும் சில நமது அன்றாட வாழ்வில் சாதாரணமாக நடப்பவை தான் என்றாலும் இவரது வலைப்பூ பதிவுகள்  ‘தி புக் ஆப் ஆசம்’ (the book of awesome), ‘The book of even more awesome’, ‘The book of Holiday awesome’ என்ற பெயரில் புத்தகங்களாக வெளி வரத்  தொடங்கி விட்டன. முதல் ‘புக் ஆப் ஆசம்’ 2010 ஏப்ரல் மாதம் வெளியானது.

வருடக்கணக்கில் 1000மாவது அதி அற்புதத்திலிருந்து தலைகீழ் வரிசையில் எழுதிக் கொண்டு போனவர் முதலாவது அதி அற்புதம் என்று குறிப்பிட்டு இருப்பது பல வாசகர்களைக் குழப்புகிறது: “முதலாவது அதி அற்புதம் நீங்கள் விரும்பும் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்” என்று எழுதியிருக்கிறார்.

“நம் வாழ்வில் அதி அற்புதமான நொடிகள் முடிவடைவதில்லை; அதி அற்புதங்கள் என்றைக்கும் தொடர்ந்து கொண்டே இருக்கும். நீங்கள் விரும்பும் அதி அற்புதம் எதுவோ அதை தேர்ந்தெடுத்து நீங்களே கடைசி இடத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்” என்கிறார் நீல்.

வலைப்பூ பதிவு செய்ய ஆரம்பித்தவுடன் இவர் தெரிந்துகொண்டது, முதல் வகுப்பில் துபாய் போவது, ஓர் சின்னக் குழந்தை நம் கையைக் கெட்டியாகப் பிடித்து இழுத்து கொள்ளுவது, காதல் வயப்படுவது என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று அதி அற்புதம் என்பதைத்தான்.

மணமுறிவில் முடிந்த திருமணம், மனநிலைசரியில்லாத நண்பனின் தற்கொலை என்று இவர் தனது வாழ்வில் பல இன்னல்களை சந்திக்க நேரிட்டது. அப்போதுதான் நேர்மறையான எண்ணங்களை உண்டாகக்கூடிய ஏதாவது செயலை செய்ய வேண்டும் என்ற உந்துதலால் வலைபூ பின்னத் தொடங்கினார். சுரங்கப் பாதையின் முடிவில் தெரியும் வெளிச்சம் (567), நம்மை விட்டுச்சென்ற நண்பர்களை நினைத்து சிரிப்பது (829) முதலிய அதி அற்புதங்கள் மேற்கண்ட நிகழ்ச்சிகளின் பாதிப்பால் இவர் எழுதியவையாகும்.

தனது மகிழ்ச்சிகாகவே எழுதத் தொடங்கியதாக சொன்னாலும், இவரது எழுத்துக்களை நூற்றுக்கணக்கானவர்கள் படிக்கத் தொடங்கினார்கள்.

இவரது வலைப்பூ, புத்தகங்கள் மிகவும் பிரபலமான போதிலும் அலுவலகம் செல்வதை விடுவதாக இல்லை. தான் அதை மிக விரும்புவதாகச் சொல்லுகிறார். தனது வலையதளத்தில் விளம்பரங்கள் வருவதையும் விரும்பவில்லை இவர்.

1000 அதி அற்புதங்களை எழுதி முடித்துவிட்டாலும் தொடர்ந்து எழுதுவார் என்றே தோன்றுகிறது. தனது வாசகர்களையும், அவர்கள் எழுதும் கடிதங்களையும் மிகவும் ‘மிஸ்’ பண்ணுவதாகக் குறிப்பிடும் இவர் கடைசியாகக் கூறுவது:

“நம்மைச்சுற்றிலும் ஒவ்வொரு நாளும் பல அற்புதங்கள் நடக்கின்றன. அவைகளை தவறவிடாமல் கவனிப்பது நம் கையில் இருக்கிறது”


!function(d,s,id){var js,fjs=d.getElementsByTagName(s)[0];if(!d.getElementById(id)){js=d.createElement(s);js.id=id;js.src=”//platform.twitter.com/widgets.js”;fjs.parentNode.insertBefore(js,fjs);}}(document,”script”,”twitter-wjs”);