சமையல் குறள்கள்!

                    recipe-problems

சமையல் குறள்கள்!

கற்கக்கசடற சமையல் குறிப்புகளைக் கற்றபின்

சமைக்க அதற்குத் தக.

சமைத்துண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின் செல்பவர்.

உண்ட பொழுதின் பெரிதுவக்கும் தன சமையலை

சூப்பரெனக் கேட்ட அணங்கு.

மனையாளின் சமையலைப் புகழ்ந்து உண்டார்

நிலமிசை நீடு வாழ்வார்.

பாஸ்தா என்பர் நூடுல்ஸ் என்பர்

நீராகாரச் சோற்றின் அருமையரியாதார்.

சமைக்க சமைப்பின் சுவையாக அஃதில்லார்

சமைத்தலின் சமைக்காமை நன்று.

சுவையென்ப ஏனைய சத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப உண்ணும் மாந்தர்க்கு.

நோய் வேண்டின் உண்ணுக ஹோட்டல்தனில்

நலம் வேண்டின் வீட்டுணவு.

சமைத்தலினும் நன்று அலங்கரித்தல் அதினிலும்

நன்றதனை டிஸ்பிளே செய்தல்.

சமைத்ததனால் ஆனபயன் என்கொல் ருசித்து

யாரும் அதனைப் புசியாரெனில்.

கற்பனைக்கும் உண்டோ அடைக்கும் தாழ் புதுவித

ரெசிப்பிகள் ஆவலுடன் படைப்போர்க்கு.

எக்குறை சொல்வோர்க்கும் உயுண்டாம் உய்வில்லை

சமையலை குறைசொல்லும் மகற்கு.

from an email sent by a friend

அலுவலகத்தில் நடக்கும் பாலியல் இன்னல்கள்

அலுவலகத்தில் நடக்கும் பாலியல் இன்னல்கள்

பக்கத்து வீட்டுப் பெண் கைப்பையும் கையுமாக கிளம்பும்போது ‘அவளுக்கென்ன கிளம்பிட்டா’ என்று நினைப்பவர்கள் நம்மில் பலர். ஆனால் ஒவ்வொரு நாளும் அலுவலகம் சென்று திரும்பும் அந்தப் பெண் அவள் பெண் என்ற காரணத்தால் சந்திக்கும் இன்னல்கள் பட்டியல் போட்டு மாளாது.

அலுவலகத்தில் ஜொள்ளு விடும் பாஸ், பக்கத்து இருக்கையில் அமர்ந்து அவளையே முறைக்கும் வழுக்கை விழுந்த நடு வயது தாண்டிய திருமணம் ஆன ‘வாலிபன்’, வயதாகிவிட்டது என்று சொல்லி அவளை  தொட்டுத்தொட்டு பேசும் ‘வயசாளிகள்’, பெண்களைப் பற்றிக் கேவலமாக பேசுபவர்கள், மறைமுகமாக கிண்டல் அடிப்பவர்கள் செவிகளைக்  கூசவைக்கும்  அசிங்கமான ஜோக் சொல்லுபவர்கள் என்று எத்தனை பேரை அந்தப் பெண் சமாளிக்க வேண்டும்? பாவம்!

அலுவலகத்தில் நடக்கும் இந்த பாலியல் இன்னல்களை சமாளிப்பது எப்படி?

அலுவலகம் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும் இந்நாளில் இந்தக் கேள்வி மிக இன்றியமையாதது.

1.       உங்களது விருப்பமின்மையை தைரியமாக வாய் விட்டுச் சொல்லுங்கள். உங்களுக்கு மிக அருகில் உங்கள் சக அலுவலர் வந்து நின்றால் “கொஞ்சம் தள்ளி நில்லுங்கள்; இத்தனை அருகில் நீங்கள் நிற்பது எனக்குப் பிடிக்கவில்லை” என்று பிறர் காதுகளில் விழும்படியாக சொல்லுங்கள். உங்களை தொட்டுப் பேசுபவர்கள், அசிங்கமான ஜோக்குகள் SMS அனுப்புபவர்கள் இவர்களுக்கும் அவர்களது எல்லைகோடு எது என்று தீர்மானமாக, தெளிவாகக் காட்டுங்கள்.

2.       அவருக்கு நீங்கள் சொல்லுவது புரியவில்லை போல நடித்தால், அவர் எப்போதெல்லாம் உங்களிடம் தவறாக நடக்க முயற்சித்தார் தேதி, நேரம் உட்பட எழுதி வைத்துக்கொள்ளவும். உங்கள் செல்போனில் அவர் பேசுவதை பதிவு செய்யுங்கள்.

3.       அதே அலுவலகத்தில் வேலை செய்யும் உங்கள் நெருங்கிய தோழியிடம் சொல்லுங்கள். அந்த நபரை உங்கள் தோழி கண்காணிக்கலாம். இல்லை என்றால் நம்பிக்கைக்குரிய, உங்கள் மேல் அக்கறை காட்டும் மேலதிகாரியிடம் நீங்கள் அந்தக் குறிப்பிட்ட நபரால் அனுபவிக்கும் இன்னல்களைச் சொல்லுங்கள். எச்சரிக்கை: நீங்கள் தேர்ந்து எடுக்கும் நபர் நிஜமாகவே உங்கள் நலனில் அக்கறை காட்டுபவராக இருக்கவேண்டும்.

4.       மேற்சொன்ன எதுவும் சரிப்படவில்லை என்றால், அவர் மேல் சாட்சியங்களுடன் உங்கள் மேலதிகாரியிடம் புகார்  எழுதிக் கொடுங்கள். வாயால் சொன்னால்

  • ‘அதெல்லாம் அப்படித்தான் இருக்கும். வெளியில் வந்துவிட்டால் இதையெல்லாம் சமாளிக்கத்தான் வேண்டும்.’
  • ‘இந்தச் சின்ன விஷயத்தை பெரிது படுத்தாமல் வாயை மூடிக்கொண்டு போ’
  • ‘வெளியே சொல்லாமல் இரு’  என்று உங்களை அடக்க நினைக்கலாம்.  அதனால் புகார் எழுதிக் கொடுத்து, அதன் நகலையும் பத்திரப் படுத்துங்கள்.

5.       நீங்கள் சாட்சியங்களுடன் எழுதிக் கொடுத்தும் உங்கள் அலுவலகத்தில் அந்த நபர் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காத போது National Commission for Women, Human Right Law Network, Lawyers Collective போன்ற நிறுவனங்களின் உதவியை நாடலாம். அந்த நபர் மேல் நடவடிக்கை எடுக்கச்சொல்லி அவர்கள் மூலம் உங்கள் மேலதிகாரியை வற்புறுத்தலாம்.

6.       வேறு வேலை தேடலாம்: இந்த முடிவு கடைசி முடிவாக இருக்கட்டும்; புதிய அலுவலகத்தில் எல்லாமே நன்றாக இருக்கும் என்பது நிச்சயம் இல்லையே! புதிய வேலையைத் தேடிக் கொண்டு இந்த வேலையை விடுவது பற்றி தீர்மானம் செய்யுங்கள்.

சட்டம் என்ன சொல்லுகிறது?

2010 இல் அலுவலகத்தில் நடக்கும் பாலியல் துன்பங்களிலிருந்து பெண்களை பாதுகாக்கும் மசோதா முறைபடுத்தப்பட்டது.

  • இதன்படி ஒவ்வொரு அலுவலகத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பது முதலாளிகளின் கடமை. எந்தவிதமான பாலியல் இன்னல்களுக்கும் அவர்கள் ஆளாகாமல் வேலை செய்துவிட்டுப் போகும்படியான நிலை இருக்கவேண்டும்.
  • ஒவ்வொரு அலுவலகத்திலும் பெண்களை தலைவியாகக் கொண்ட பெண்கள் குழு ஏற்படுத்தப் பட வேண்டும். இக்குழு பெண்களுக்கு அலுவலகத்தில் ஏற்படும் பாலியல் துன்பங்களை விசாரிக்க வேண்டும்.
  • தேவையற்ற பாலியல் நடத்தை, பேச்சு மூலமாகவோ, உடல் ரீதியாகவோ பெண்களை இழிவு படுத்துவது, அவமானப் படுத்துவது, பொது இடங்களில் அசிங்கமான சித்திரங்கள் வரைவது, தரக் குறைவான SMS அனுப்புவது, பெண்களுக்கு விரோதமாக நடந்து கொள்ளுவது இவற்றை பாலியல் இன்னல்களாக இந்த மசோதா குறிப்பிடுகிறது.
  • வேலைக்குப் போகும் பெண்கள் மட்டுமில்லாமல், கல்லூரி மாணவிகள், பெண் ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ மனையில் இருக்கும் நோயாளிகள், வீட்டு வேலை செய்பவர்கள் என்று எல்லோரும் இந்த மசோதாவின் கீழ் கொண்டு வரப் பட்டுள்ளார்கள்.
  • ஒவ்வொரு அலுவலகத்திலும் பாலியல் இன்னல்கள் சட்ட விரோதமானவை அதில் ஈடுபடுபவர்கள் வேலை நீக்கம் செய்யப் படுவார்கள் என்று எழுத்தில் போட வேண்டும்.
  • பாலியல் இன்னல்களை செய்பவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பெண்கள் தங்களை இவ்விதம் துன்புறுத்தும் கயவர்களைக் கண்டு பயப்படாமல் சட்டத்திடம் காட்டி கொடுக்க முன் வர வேண்டும்.

அப்போதுதான் இந்தக் கொடுமைக்கு ஒரு முடிவு கட்ட முடியும்

பாட்டியின் மரபணு!

பாட்டியின் மரபணு!

Elderly woman or old lady mowing the lawn and sweating in the hot sun clipart                                       Grandma and Grandchild Putting Flowers in Vase clipart                        Grandma - precious-and-sweet-grandma photo                                          Precious and Eternal - precious-and-sweet-grandma photo

ஒரு சோப் விளம்பரத்தில் பாட்டி சொல்லுவார்: “Like பாட்டி! Like பேத்தி!” அதாவது அழகு, அறிவு எல்லாவற்றிலும் பேத்தி தன்னைக் கொண்டிருக்கிறாள் என்று. இது வெறும் விளம்பரச் சொற்றொடர் அல்ல என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உண்மையிலேயே பாட்டிக்களுக்கும் பேரன் பேத்திகளுக்கும் மரபணு ரீதியாக மிகுந்த தொடர்பு இருக்கிறது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல பல வீடுகளில் இளம் தாய்மார்களை விட பாட்டிமார்கள் மிகுந்த உற்சாகமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பார்கள். இதற்குக் காரணம் பெண்களுக்கு இயற்கை தரும் மெனோபாஸ்!

மெனோபாஸ் ஏற்படுவதற்கு சரியான காரணம் இதுவரை தெரியவில்லை. தங்களது சந்ததிகளை நன்றாக போஷித்து ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்கவே இயற்கை பெண்களுக்கு மெனோபாஸ் என்ற ஒன்றைக் கொடுக்கிறது என்று ஒரு புனைவுக் கருத்து (hypothesis) நீண்டகாலமாக இருந்து வருகிறது.

நல்ல ஆரோக்கியமான  பாட்டிகள் புதிய தாய்மார்களுக்கு சின்னஞ்சிறு குழந்தைகளை வளர்ப்பதில் மிகச் சிறந்த உதவியாளர்களாக விளங்குகிறார்கள். மனிதக் குழந்தைகள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள முடியாதது மட்டுமல்ல; நீண்ட காலத்திற்கு அம்மாவை சார்ந்தே இருக்கின்றன. மற்ற விலங்கினங்கள் போல் அல்லாமல் 3 வருடங்களுக்கு ஒரு முறை குழந்தை பிறக்கும் வாய்ப்பு மனித குலத்திற்கு இருப்பதும் பாட்டியின் தேவைக்கு ஒரு காரணம். புதிதாகப் பிறந்திருக்கும் குழந்தையை தாய் பார்த்துக்கொண்டால் முன்னால் பிறந்திருக்கும் குழந்தைகளை பார்த்துக் கொள்ள ஒரு பாட்டி வேண்டுமே!

மனிதவியல் வல்லுநர் திருமதி. க்ரிஸ்டன் ஹாக்ஸ் என்பவர் 1980 இல் தான்சானியாவில் உள்ள ஒரு வேட்டையாடும் பழங்குடியினர் இடையே  ஆராய்ச்சி நடத்தியதில், குழந்தைகளுக்கு நேரத்திற்கு உணவு கொடுத்து அவர்களை போஷித்துப் பாதுகாப்பது இந்த இனத்தில் இருக்கும் மூத்த பெண்மணிகள் என்று தெரிய வந்திருக்கிறது.

இந்த ஆய்வுக்கு பிறகு பின்லாந்து நாட்டில் 2004 இல் ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இந்த ஆய்வறிக்கை மெனோபாஸ் முடிந்து நீண்டகாலம் வாழும் பாட்டிமார்களுக்கு நிறைய பேரக் குழந்தைகள் இருப்பதை சுட்டிக் காட்டியது. பாட்டியின் சீராட்டலால் பேரக் குழந்தைகள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழவும் செய்தார்களாம்.

தங்களை வளர்த்து ஆளாக்கும் பாட்டிகளிடம் பேரன் பேத்திகள் அலாதியான அன்பும், பாசமும் காட்ட வேறு ஒரு காரணமும் உண்டு. அது அவர்கள் பகிர்ந்துகொள்ளும் மரபணுத் தொடர்பு!

எல்லாப் பெண்களுக்கும் இரண்டு X குரோமோசோம்கள் உண்டு. ஆணுக்கு ஒரு X குரோமோசோம் ஒரு Y குரோமோசோம் இருக்கின்றன. ஒரு ஆண்மகன் தன் தாயிடமிருந்து கிடைக்கும் ஒரே ஒரு X குரோமோசோமை தன் மகளுக்குக் கொடுக்கிறான்.

இதனால் தந்தை வழிப் பாட்டி தனது பேத்திகளுடன் 50% X குரோமோசோம் தொடர்புடையவள் ஆக இருக்கிறாள். ஆனால் தன் பேரன்களுடன் (பெண்களுக்கு Y  குரோமோசோம் இல்லாததால்) எந்தவித குரோமோசோம் தொடர்பும் அற்றவளாக இருக்கிறாள். தாய்வழிப் பாட்டி தன் பேரன் பேத்திகளுடன் ஒரே சீராக 25% X குரோமோசோம் தொடர்புடையவள் ஆக இருக்கிறாள். மரபணுத் தொடர்பு பாட்டிகளுக்கும் பேரன் பேத்திகளுக்கும் 23% லிருந்து 31% வரை இருக்கிறது. ஏன் X குரோமோசோம்? நமது மரபணுக்களில் 8% இந்த X குரோமோசோம்களால் ஆனது. குழந்தைப் பேறும் இதில் அடக்கம்.

மிகவும் சுவாரஸ்யமான இந்த அறிக்கை Proceedings of the Royal Society, Series B, Biological Sciences இல் வெளியானபோது மிகப் பெரிய அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்ட 10 கட்டுரைகளில் ஒன்றாக இருந்தது.

ஆனால் ஒரு கேள்வி மனதை நெருடுகிறது. வெறும் மரபணுவை வைத்து மட்டுமே பாட்டிகள் தங்கள் பேரன் பேத்திகளை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்று கணக்கிட முடியுமா?

குரோமோசோம்கள் தவிர, குழந்தைகள் வாழும் சூழ்நிலை, அவர்களது கலாச்சாரம் இவையும் கூட உறவுகளை தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றன என்பதுதான் நிஜம்.

ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் இருக்கும் வாசேடா பல்கலைக் கழகப் புரொபசர் திரு. யாசுயுகி ஃபுகுகவா (Yasuyuki Fukuoka) 3,168 பெண்களை ஆராய்ந்து வெளியிட்ட அறிக்கை, தந்தை வழிப் பாட்டியின் செல்வாக்குத்தான் குழந்தைகளின் வாழ்வில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது; மகன்களுக்கு விரைவில் முதல் குழந்தை பிறப்பதற்கும், முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையில் அதிக இடைவெளி இல்லாமல் இருப்பதற்கும் தாய் வழிப் பாட்டி தான் காரணம் என்கிறது.

இதற்கு இவர் சொல்லும் காரணம்: ஜப்பான் நாட்டில் மருமகள் திருமணத்திற்கு பிறகு மாமியார் வீட்டில் வந்து  வசிப்பதுதான்!

 

 

published in ooooor.com

cartoons courtesy:  clip art  and so sweet grandma

சூப்பர் டூப்பர் ‘நடாஷா’

விலங்கினங்களிலிருந்து மனிதனைப் பிரித்துக் காண்பிப்பது அவனது ஆறறிவு தான். ஆனால் 22 வயது நடாஷா என்கிற பெண் மனிதக் குரங்கு, ஆராய்ச்சியாளர்களை தனது புத்திக் கூர்மையினால் இந்தக் கூற்று சரியா என்று பலமாகச் சிந்திக்க வைத்திருக்கிறது.

சூழ்நிலைக்குத் தக்க தன்னை மாற்றிக் கொள்ளுவதிலும், தனது சக மனித குரங்குகளுடன் பழகும் விதத்திலும் வேறு பட்டு தனித்தன்மையுடன் இருக்கிறாள் நடாஷா. தனக்கு உணவு கொடுக்க வரும் பொறுப்பாளரின் கவனத்தை கையைத் தட்டி, ஈர்த்து அதிக உணவைப் பெற்றுக் கொள்ளுகிறாள். அதுமட்டுமல்ல. தன்னை காண வரும் பார்வையாளர்களிடையே இவள் செய்யும் கோமாளித்தனமான விளையாட்டுக்கள் மிகப் பிரபலம். தன்னை பார்க்க வரும் பார்வையாளர்களை அருகே வரும்படிக் கூப்பிட்டு அவர்கள் தன்னை நெருங்கும் போது அவர்கள் மீது தண்ணீர் பீச்சி அடிப்பது இவளுக்குப் பிடித்தமான விளையாட்டு!

ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இவளை ஆராய்ந்ததில் சில மனிதக் குரங்குகள் சமூக சூழ்நிலைகளை உள்ளுணர்வால் மற்ற விலங்கினங்களை விட மிகச் சிறந்த முறையில் அறிந்து கொள்ளுகின்றன என்பது தெரிய வந்திருக்கிறது. நடாஷா மனோரீதியான பரிசோதனைகளில் 100 க்கு 200 மதிப்பெண் வாங்கி இருக்கிறாள்!

கிட்டத்தட்ட மனிதனின் புத்திக் கூர்மையுடன் சூப்பர் டூப்பர் நடாஷவைப் பார்த்த, ஆராய்ந்த விஞ்ஞானிகள் கற்பனைக் கதைகளில் வரும் ‘சூப்பர் குரங்குகள்’ எதிர்காலத்தில் நிஜமாக உருவாகும் சாத்தியக் கூறுகள் அதிகம் என்று கூறுகிறார்கள்.

 published in ooooor.com