பருப்புசிலி ஜீன்!

 

பருப்புசிலி ஜீன்!

“பரசாரா! மணி பதினொண்ணு ஆகப் போறது! சாப்பிட வாயேன்!” – ரங்கநாயகி குரல் கொடுத்தாள்.

தனது பர்சனல் கம்ப்யூட்டரில் ஜீனோம் வரிசையைப் பார்த்துக் கொண்டிருந்த பராசரன் அம்மாவின் குரல் கேட்டு கவனம் கலைந்து எழுந்தார்.

“ஏம்மா! நீ சாப்பிட்டாயோ? எனக்காகக் காத்துக்கிட்டு இருக்காதேன்னு எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டியே!” என்றபடியே தனது அறையை விட்டு வெளியே வந்தார் பராசரன்.

“உனக்கு என் கையால சாப்பாடு போட்டாத்தான் எனக்கு திருப்தி!” என்று சொல்லியபடியே ரங்கநாயகி டைனிங் டேபிளின் மேல் அவரது வெள்ளித் தட்டை எடுத்து வைத்தாள்.

“ஏம்மா! இன்னிக்கு என்ன சமையல்?” என்று கேட்டபடியே பராசரன் வந்து உட்கார்ந்தார்

“இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை! வழக்கம்போல் கொத்தவரங்காய் பருப்புசிலியும் ரசமும் தான்!” என்று பதில் சொல்லியவாறே அவருக்குப் பரிமாற ஆரம்பித்தாள் அவர் அம்மா.

பராசரன் வெகு ஆவலுடன் அம்மா பண்ணியிருந்த கொத்தவரங்காய் பருப்புசிலியை சாதத்தில் பிசைந்து சாப்பிட ஆரம்பித்தார். அம்மா கைச்சமையல் என்றாலே தனி ருசிதான். இத்தனை வருடங்களாக துளிக் கூட ருசி மாறாமல் அம்மாவால் எப்படிப் பருப்புசிலி பண்ண முடிகிறது? வழக்கம்போல் மனதிற்குள் வியந்து கொண்டே சாப்பிட்டார் பராசரன்.

மிகவும் ஆசையுடன் தான் செய்திருந்த பருப்புசிலியை சாப்பிடும் பிள்ளையை ‘எத்தனைதான் பெரிய விஞ்ஞானியா இருந்தாலும், அம்மாவிற்குப் பிள்ளைதானே!’ என்ற எண்ணத்துடன் நெகிழ்ச்சியாகப் பார்த்துக் கொண்டே, புதிய விருந்தாளியை உபசரிப்பதுபோல கேட்டுக் கேட்டு பரிமாறினாள்.

பராசரன் பிறந்தது வளர்ந்தது, பள்ளிப் படிப்பை முடித்தது எல்லாம் ஸ்ரீரங்கத்தில். கல்லூரிப் படிப்பிற்காகதான் ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியே வந்தார் அவர். மெட்ராசிலும், பிறகு வெளிநாட்டிலும் மேல் படிப்பை முடித்தார். பயோடெக்னாலஜியில் அவருக்கு இருந்த அளவற்ற ஈடுபாடு காரணமாக அதிலேயே ஆராய்ச்சியை மேற்கொண்டார். சென்னை பயோடெக்னாலஜி சென்டரில் தலைமை விஞ்ஞானியாகப் பல வருடங்கள் பணியாற்றி, அந்த மையத்தின் டைரக்டராகவும் பதவி வகித்து சமீபத்தில்தான் ஓய்வு பெற்றிருந்தார். பதவிக் காலத்தில் உலகம் முழுவதும் சுற்றி வந்தவர்.

அவரது மனைவி வேதம் இரண்டு குழந்தைகளைப் பெற்றுப் போட்டு விட்டு ‘பூவும் பொட்டு’மாகப் போய் சேர்ந்து விட்டாள். அவரது மகன் முகுந்த் பராசரன் அமெரிக்காவில் இருந்தான். அப்பாவைப் போலவே அவனும் உயிரியலில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான். அமெரிக்கப் பெண்ணை மணந்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டான். அவனுக்கு ஒரு பெண் ‘ஜோ’ என்கிற ஜ்யோத்ஸ்னா. பராசரனின் மகள் ஜெயஸ்ரீ தன் கணவன் டிமோன் ஜபர்சனுடன் ஜெனீவாவில் இருந்தாள். மகள், மாப்பிள்ளை இருவருமே ஜெனடிக் என்ஜினீயரிங் படித்தவர்கள். ஜெயந்த் ஜெபர்சன் என்ற ஒரு பிள்ளை.

பராசரன் தனது ஓய்வுக்குப் பிறகு மீண்டும் ஸ்ரீரங்கத்திற்கே வந்து விட்டார். தன் தகப்பனாரின் பூர்வீக வீட்டில் தாயார் ரங்கநாயகியுடன் வசித்து வந்தார். வீட்டிலேயே பி.சி. ஒன்றை வாங்கிப் போட்டுக் கொண்டு வலைய இணையம் மூலமாக உலகத்தை பார்த்துக் கொண்டிருந்தார். பிள்ளையுடனும் பெண்ணுடனும் பேரன் பேத்திகளுடன் தினமும் ‘சாட்’ செய்வதும், தன் அம்மாவிற்காக அவர்களுக்கு ஈமெயில் அனுப்புவதும் அவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.

திருப்தியாகச் சாப்பிட்டு முடித்த பராசரன் தனது அறைக்கு வந்து மறுபடியும் ‘ஜீனோமை’ பார்க்க ஆரம்பித்தார். மாலை நான்கு மணிக்கு வழக்கம்போல ரங்கநாயகி சுடச்சுடக் காபியை எடுத்துக் கொண்டு பிள்ளையின் அறைக்கு வந்தாள். அவர் பி.ஸி யில் ஏதோ ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு, “ஏண்டாப்பா!, கொஞ்ச நேரம் படுத்துக்கறதுதானே?” என்று பரிவுடன் கேட்டபடியே காப்பியை நீட்டினாள்.

“பயோடெக்னாலஜில ரொம்பப் பெரிய விஷயத்தைக் கண்டுபிடிச்சிருக்காம்மா. அதைக் கம்ப்யூட்டரல பார்த்துக்கொண்டே இருந்தேன். தூக்கமே வரலை!” என்று அம்மாவிற்கு பதில் சொல்லிவிட்டு காப்பியை சுவைக்க ஆரம்பித்தார்.

“அப்படி என்ன கண்டுபிடிச்சிருக்கா?” – ரங்கநாயகி கேட்டாள். அவளுக்கு எப்போதுமே புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள ஆர்வம் அதிகம்.

“இவ்வளவு நாளா பெரிய புதிரா இருந்த ஜீன்களைப் பத்தின மர்மத்தைத் தான் விஞ்ஞானிகள் விடுவிச்சிருக்கா!” என்று குரலில் அதீத உற்சாகத்துடன் சொல்லிக் கொண்டே போனார் பராசரன். “இதனால இன்ன குணத்திற்கு இன்ன ஜீன் காரணம்னு தெரிஞ்சுடும். பரம்பரை நோய்கள் அடுத்த தலைமுறைக்கு வராம தடுத்துடலாம். எல்லாத்துக்கும் மேலா மனுஷா சிரஞ்சீவியா வாழலாம்…..!”

“அப்படியா…?” என்று அவர சொல்வதை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்ட ரங்கநாயகி, ”ஏதாவது மெயில் இருக்கா, பாரேன்!” என்றாள்.

இப்போதெல்லாம் தனக்கு யாரும் கடிதமே எழுதுவதில்லை என்று அவளுக்கு கொஞ்சம் வருத்தம்தான். விஷயப் பரிமாற்றங்கள் எல்லாம் உடனுக்குடன் ஈமெயில் மூலம் நடந்து விடுகிறது. ஆனாலும் கடிதம் வந்தால் திரும்பத் திரும்ப படிக்கலாம். தானும் தன் கைப்பட எழுதலாம் என்று நினைத்துக் கொள்வாள். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பேரன் பேத்திகளிடம் இருந்து வரும் ஈமெயிலை பராசரனுடன் உட்கார்ந்து பார்ப்பாள்.

“இதோ பார்க்கிறேன் அம்மா!” என்றபடியே தன் மெயில் பாக்ஸை திறந்தார். இரண்டு புதிய மெயில்கள் இருந்தன.

முதலாவது அவரது மகள் வயிற்றுப் பேரன் ஜெயந்த் ஜெபர்சன் அனுப்பி இருந்தான். வழக்கமான விசாரிப்புக்களுக்கு பிறகு அவன் தனது கொள்ளுப் பாட்டியை மிகவும் நினைவு படுத்திக்கொண்டு, “அம்மா போன ஞாயிற்றுக்கிழமை பருப்புசிலி செய்திருந்தாள். வாட் அ டேஸ்ட்! எனக்கு ரொம்பப் பிடிச்சு போச்சு! கொள்ளுப் பாட்டி இன்னும் ரொம்ப நன்றாக செய்வாள் என்று அம்மா சொன்னாள். நான் இந்தியாவிற்கு வரும்போது கொள்ளுப் பாட்டி கையால் பருப்புசிலி சாப்பிட மிக ஆவலாக இருக்கிறேன்! இனிமேல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பருப்புசிலி பண்ணச் சொல்லி விட்டேன்” என்று எழுதியிருந்தான்.

ரங்கநாயகிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. “ஜெயஸ்ரீ ரொம்ப சமத்து! நம்ம உணவுப் பழக்கத்தை மறக்காமல் குழந்தைக்கு பருப்புசிலி பண்ணிப் போடறா பாரு!” என்று சொல்லிச்சொல்லி மாய்ந்து போனாள். பராசரனுக்கும் பேரன் பருப்புசிலி சாப்பிட்டது சந்தோஷமாகத்தான் இருந்தது.

இரண்டாவது மெயிலை பராசரனின் மகன் முகுந்த் அமெரிக்காவிலிருந்து அனுப்பியிருந்தான். தனது ஆராய்ச்சி பற்றி அப்பாவுக்கு தெரிவித்து விட்டு கடைசி நாலு வரி தன் பாட்டிக்கு எழுதியிருந்தான்.

“அன்புள்ள பாட்டி! சென்ற ஞாயிற்றுக்கிழமை நானே பருப்புசிலி பண்ணியிருந்தேன். நான் முதல்முறையாக அமெரிக்கா போனபோது நீதான் எனக்கு பருப்புசிலி எப்படிப் பண்ணுவது என்று எழுதிக் கொடுத்தாய். என் அருமைப் பாட்டி! உன் கை மணம் எனக்கு வரவில்லை. ஆனால் உன் நினைவு ஏகமாக வந்தது. என் பெண் ஜ்யோத்ஸ்னாவிற்கு நான் செய்திருந்த பருப்புசிலி ரொம்பப் பிடித்து விட்டது. அங்கே நம்ம வீட்டில ஞாயிற்றுக்கிழமை மெனு பருப்புசிலிதான் என்று சொன்னவுடன், ‘நீயும் அப்படியே பண்ணுப்பா!” என்கிறாள். உன் கையால் பருப்புசிலி சாப்பிடணும் போலிருக்கு! அதற்காகவே கூடிய சீக்கிரம் இந்தியா வர நினைக்கிறேன்!”

“நல்லக் கூத்து போ! உங்க தாத்தாவுக்கு பருப்புசிலி ரொம்பப் பிடிக்கும். உங்க அப்பா, அவருக்குப் பிறகு நீ, உன் குழந்தைகள், இப்போ உன் பேரன் பேத்திக்கும் பருப்புசிலி பிடிச்சுடுத்தே! நீ கொஞ்ச நேரம் முன்னால பரம்பரைக் குணம் ஜீன் என்றல்லாம் சொல்லிண்டு இருந்தாயே! நம்ம வீட்ல பருப்புசிலி ஜீன் பரம்பரை எல்லோருக்கும் வந்திருக்குப் போல இருக்கு!” என்று சொல்லி விட்டு வாய் விட்டுச் சிரித்தாள் ரங்கநாயகி.

ஒரு நிமிடம் தன் தாயாரை வியப்பு மேலிடப் பார்த்த பராசரன், “ஆமாம்மா! பருப்புசிலி ஜீன்தான்!” என்று சொல்லிவிட்டு அம்மாவுடன் சிரிப்பில் கலந்து கொண்டார்.

published in Mangayar malar

 

 

8 thoughts on “பருப்புசிலி ஜீன்!

 1. எஙவீட்லே கண்டதிப்பிலிரஸம், தவலடை, போளிஇப்படிப்பட்ட ஜீன்ஸ் ரொம்ப இருக்கு. ஆராய்ச்சியாளர் கண்டு சொல்லுமுன்னே
  வம்சம், ருசி அப்படியே உறிச்சு வைச்சிருக்கு , எங்க போய் பார்க்கணும் , இப்படிப்பட்ட டைலாகை பருபபுசிலி ஜீன் நன்றாக
  ஞாபகப்படுத்த வைத்து விட்டது. ஆராய்ச்சி அது இது என்று தெறியாதவர்கள் கூட ஓஹோ இப்படியும் ஒன்று இருக்குபோலிருக்கு என்று நினைப்பார்கள். கதை பருப்புசிலி போலவே ருசியாக இருக்கு

  1. இது எங்கள் வீட்டுக் கதைதான்! எங்கள் பேரன் பேத்தி என்று எல்லோருக்குமே பருப்புசிலி ரொம்பப்பிடிக்கும்.
   கதையை ரசித்துப் படித்து பின்னூட்டம் தந்தமைக்கு நன்றி.

 2. //“நல்லக் கூத்து போ! உங்க தாத்தாவுக்கு பருப்புசிலி ரொம்பப் பிடிக்கும். உங்க அப்பா, அவருக்குப் பிறகு நீ, உன் குழந்தைகள், இப்போ உன் பேரன் பேத்திக்கும் பருப்புசிலி பிடிச்சுடுத்தே! நீ கொஞ்ச நேரம் முன்னால பரம்பரைக் குணம் ஜீன் என்றல்லாம் சொல்லிண்டு இருந்தாயே! நம்ம வீட்ல பருப்புசிலி ஜீன் பரம்பரை எல்லோருக்கும் வந்திருக்குப் போல இருக்கு!” என்று சொல்லி விட்டு வாய் விட்டுச் சிரித்தாள் ரங்கநாயகி.// ;)))))

  அருமையாகவும் வேடிக்கையாகவும் உண்மையாகவும் உள்ளது.
  பகிர்வுக்கு நன்றிகள்.

 3. பருப்புசிலி ஜீன் பரம்பரை — அது என்னவோ நம் முன்னோர்களுக்குப் பிடித்தது குழந்தைகளையும் கவர்கிறது ஆச்சரியம் தான் !

 4. அன்பின் ரஞ்ஜனி – பருப்புசிலி ஜீனா – அடேங்கப்பா ? கொள்ளுப்பேரன் , பேதிகலூம் இரசிச்சுச் சாப்பிடறாங்களா ? பலே பலே ! நல்லாருக்கு கதை . வீட்ல எல்லாருக்கும் பிடிசசா – அத வச்சு ஒரு கதையா ? – கை வசம் தொழில் இருக்கு – ம்ம்ம் – நல்வாழ்த்துகள் ரஞ்ஜனி – நட்புடன் சீனா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s