உங்கள் வீட்டில் அட்லஸ் இருக்கிறதா?

 

 

 

 

 

 

உங்கள் வீட்டில் அட்லஸ் இருக்கிறதா? இல்லையென்றால் உடனே உடனே ஒன்று வாங்கி எல்லோருக்கும் கண்ணில்படும் படியாக மாட்டுங்கள். காரணம் சொல்லுகிறேன். உலக வரைபடத்தைப் பார்ப்பது மிக அருமையான பொழுது போக்கு. உங்கள் குழந்தைக்கு உலக வரைபடத்தைக் காட்டி நிறைய சொல்லிக் கொடுக்கலாம். Map reading என்பது எல்லா வயதினருக்கும் ஒரு சுவாரஸ்யமான ஒரு விஷயமாக இருக்கும்..

பல சமயம் எனக்கு இந்த மேப் ரீடிங் பல விஷயங்களை அறிய உதவி இருக்கிறது.

என் அக்கா பிள்ளைக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. குழந்தைக்கு 5 வயதில் ஸ்ரேயா என்று ஒரு அக்கா.

“தங்கச்சிப் பாப்பா பெயர் என்ன?” என்றேன் அவளிடம்.

அவள் “மேக்னா” என்றாள்.

எனக்கு எப்போதுமே ஒரு பழக்கம். எந்தப் பெயரைக் கேட்டாலும் என்ன அர்த்தம் என்று கேட்பேன். இப்போதும் அதேபோலக் கேட்டேன்.

“ஒரு நதியின் பெயர்” என்றாள் ஸ்ரேயா.

நான் சிரித்துக் கொண்டே “எந்த நாட்டில்…..?” என்றேன்.

ஸ்ரேயா உடனே என்னை அழைத்துப் போய் அவர்கள் வீட்டில் மாட்டியிருந்த உலக வரைபடத்தைக் காண்பித்து “இதோ பாரு சித்தி, வங்க தேசத்தில் ஓடும் ஒரு நதியின் பெயர் மேக்னா” என்றாள். நான் அசந்து போனேன்.

வங்க தேசத்தில் ஓடும் ஒரு முக்கியமான நதி மேக்னா. பிரம்மபுத்ரா நதியிலிருந்து பிரியும் இந்த நதி கங்கையுடன் சேர்ந்து கங்கை படுகையை ஏற்படுத்திவிட்டு வங்காள விரிகுடாவில் கலக்கிறது. மேக்னா நதியைப் பற்றி இத்தனை செய்திகளையும் (இன்னும் நிறைய செய்திகளையும்) அந்தக் குழந்தை சொன்ன ஒரு செய்தியிலிருந்து தெரிந்து கொண்டேன்.

இதைப் போல இன்னொரு அனுபவம். ஒரு முறை குடும்பத்துடன் கர்நாடகாவிலுள்ள கெம்மணங்குடி என்ற மலைபிரதேசத்துக்குப் போயிருந்தோம். 4 நாட்கள் தங்கலாம் என்று போனவர்கள் ஒரே நாளில் கீழே இறங்கிவிட்டோம். வேறு எங்கு போவது? மெதுவாக காரை ஓட்டிக் கொண்டு வந்தார் என் கணவர். வழியில் ஒரு பேருந்து நிலையம். வண்டியை நிறுத்தி உள்ளே விசாரிக்கப் போனோம். அங்கு ஒரு வரைபடம். அதைப் பார்த்தவுடன் எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை.

பெங்களூர் வந்ததிலிருந்து எனக்கு உடுப்பி போய் கிருஷ்ணனைசேவிக்க வேண்டும் என்று தீராத ஆசை. நாங்கள் அப்போது நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து உடுப்பி 100 கி.மி. தூரத்தில் இருப்பது அந்த வரைபடத்திலிருந்து தெரிய வந்தது.

எந்த மாநிலத்துக்குப் போனாலும் அதன் வரைபடத்தை வாங்கிவிடுவேன். என் கணவர் கார்  ஓட்டும்போது முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டு வழி காட்டுவது எனக்கு மிகப் பிடித்தமான ஒன்று.

சின்ன வயதில் உலக வரைபடத்தை பார்க்கும் போது உலகம் உருண்டை என்கிறார்களே, ஆனால் எல்லா நாடுகளும் ஒரே நேர்கோட்டில் இருக்கின்றனவே என்று தீராத சந்தேகம். தையரியத்தை வரவழைத்துக் கொண்டு லீலாவதி டீச்சரை கேட்டே விட்டேன். அவர் உடனே “மக்கு! மக்கு! உலக உருண்டையை பார்த்ததில்லையா? ஆபீஸ் ரூமிலிருந்து கொண்டு வா!” என்று சொல்லி ஒவ்வொரு நாடும் எங்கெங்கு இருக்கிறது என்று விளக்கினார். பிறகு உலக வரைபடத்தை க்ளோப் வடிவில் மடித்து “இப்போது பார், உலகம் உருண்டையாக இருக்கிறதா?” என்றார். எனது மேப் ரீடிங் ஆசைக்கு லீலாவதி டீச்சரும் ஒரு காரணம்.

வேர்ட்பிரஸ் வலைப்பதிவு செய்ய ஆரம்பித்ததிலிருந்து உலக வரை படத்தின் மேல் எனக்கு ஒரு தனி மதிப்பு! ஏன் தெரியுமா? தினமும் எனது எழுத்துக்களை எத்தனை பேர் எந்தெந்த நாட்டிலிருந்து படிக்கிறார்கள் என்ற புள்ளி விவரம் வருகிறதே!

கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டது. குழந்தைகளுக்கு பொழுது போவது மிகவும் கஷ்டம். அவர்களுக்கு இந்த மேப் ரீடிங் பற்றி சொல்லிக் கொடுங்கள். அவர்களை அருகில் உட்கார்த்திக் கொண்டு நீங்கள் பிறந்த ஊர்,

வளர்ந்த ஊர், நீங்கள் இதுவரை பார்த்த இடங்கள் என்று காண்பியுங்கள். ஒவ்வொரு இடத்தின் விசேஷங்கள், சுற்றுலா இடங்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். நாடுகளின் தலை நகரம், பேசும் மொழி, அங்கு ஓடும் நதிகள், சுற்றி இருக்கும் கடல்கள் என்று எத்தனை எத்தனையோ விஷயங்களை சொல்லிக் கொடுக்கலாம்.

வீட்டில் ஒரு உலக வரைபடம் இருந்தால் போதும் நாம் இப்போது இருக்கும் இடத்திலிருந்து ஆரம்பித்து உலகையே ஒரு சுற்று சுற்றி வரலாம் – உட்கார்ந்த இடத்திலிருந்தே பைசா செலவில்லாமல்!

Joke courtesy: Cartoonstock                                       

11 thoughts on “உங்கள் வீட்டில் அட்லஸ் இருக்கிறதா?

 1. குட் ஒன்.. இந்த கோணத்தில் நான் யோசிக்கவே இல்லை…மேப் ரீடிங் ஒரு கலை..எனக்கு எல்லாம் சில சமயம் என்னோட வீட்டுக்கு வரவே வழி மறந்து விடும் :).

 2. Pingback: Anonymous
 3. மிகவும் அழகான பயனுள்ள கட்டுரை தான். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  //சின்ன வயதில் உலக வரைபடத்தை பார்க்கும் போது உலகம் உருண்டை என்கிறார்களே, ஆனால் எல்லா நாடுகளும் ஒரே நேர்கோட்டில் இருக்கின்றனவே என்று தீராத சந்தேகம். //

  என்க்கும் சிறு வயதில் ரொம்ப் நாட்கள் இந்த சந்தேகம் இருந்தது உண்டு. பிறகு தான் தெளி[ரி]ந்து கொண்டேன்.

  1. ‘அவரவர்கள் அளவில் நீ சிந்திக்கத் தூண்டுகிறாய்’ என்று என்னுடைய இன்னொரு கட்டுரைக்கு ஒரு பெண்மணி பின்னூட்டம் எழுதியிருந்தார். உங்களது பின்னூட்டம் அதை சரி என்று நிரூபித்து இருக்கிறது. எல்லோரையும் சிந்திக்க வைக்கிறேன் என்பது சந்தோஷமான விஷயம் தானே? நன்றி VGk ஸார்!

 4. என் மகன் நான் ஆஸ்திரேலியா சென்றவுடன் என் கையில் கொடுத்தது உலக உருண்டையும் , மிகபெரிய உலக மேப்பும் தான் ..

  இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் அதிக தூரம் இல்லை அம்மா .. ஜஸ்ட் ஒரு எட்டு தான் ..ஹோம் சிக் வந்தால் மேப்பைப் பாருங்கள் .. இந்தியா எவ்வளவு பக்கம் என்றார் ..

 5. நன்றாக இருந்தது அம்மா! எங்கள் வீட்டில் அட்லஸ் இருக்கிறது, ஆனால் என் குழந்தைகள் அவற்றை எப்போதாவது தான் எடுத்து படிப்பார்கள்! உங்கள் கட்டுரை என்னை சிறிது யோசிக்க வைத்திருக்கிறது! அட்லஸ் சை எடுத்து படிக்க, அவர்களை ஆர்வமுற செய்வது என் கையில்தான் இருக்கிறது என்று நினைக்கறேன். முயற்சி செய்கிறேன், உங்கள் வழிகாட்டுதலுடன்!

 6. நம் எல்லோருக்குமே குழந்தைகளுடன் என்ன விளையாடுவது என்று பல சமயங்களில் தோன்றும். சாதாரண விஷயங்கள் கூட அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும்.

  குழந்தைகளை அட்லஸ் படிக்க, ஆர்வமுறச் செய்வது ஒருபுறம், அவர்களுடன் நீங்கள் சேர்ந்து செலவழிக்கும் அந்த நேரம் மிக முக்கியமானது.

  அதற்கு எந்த முயற்சி ஆனாலும் பரவாயில்லை மஹா!

 7. மிக அருமையான பதிவு ரஞ்சனி உண்மைதான். உலக வரைபடத்தில் உலகம் சுற்றிவர எனக்கும் ஆசைதான். பிடித்த பொழுது போக்கும் கூட அதைப் பார்த்துத்தான் ஆந்திராவில் பல விதமான கோயில்களுக்கும் கோட்டைகளுக்கும் இப்போது சுற்றி வருகிறோம் ஆனால் நான் கூகுளில் திறந்து வைத்துக்கொண்டு சுற்றிவருவேன். குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லிக்கொடுக்கவேண்டும் பாராட்டுக்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s