வேலை

வேலை

 

 

“மத்தியான சாப்பாடு டேபிள் மேல இருக்கு. காபி பிளாஸ்க்ல இருக்கு!” – கணவனிடம் சொல்லிவிட்டு தலை வார ஆரம்பித்தாள். அவளது செயல்களை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த சாரதி ‘சரி’ என்றார்.

சித்ரா தலைவாரி முகம் கழுவி லேசான மேக்கப்புடன் வந்தாள். அவருக்கும் டிபன் எடுத்து வந்து வைத்து விட்டு சாப்பிட ஆரம்பித்தாள். ஐந்தே நிமிடத்தில் சாப்பிட்டு முடித்து புடவை மாற்றிக் கொண்டாள். டிபன் பாக்ஸை கைப்பையில் வைத்தபடி ‘போயிட்டு வரேன்’ என்று ஆபீஸுக்கு கிளம்பிப் போனாள்.

அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பும் இதே ரொட்டின் தான். அப்போது அவரும் கிளம்ப வேண்டியிருந்ததால் அவளை, அவள் வேலையைக் கவனிக்க முடிந்ததில்லை. தான் வீட்டில் இருக்க, அவள் மட்டும் வேலைகளை முடித்து விட்டு ஆபிஸ் போவதால் அவரது முழுகவனமும் அவள் மேல் விழுந்தது.

இருவரும் அரசு வேலையில் இருந்தனர். சித்ரா அவரைவிட பத்து வயது இளையவள். சாரதி அண்டர் செகரட்டரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

முதல் ஒரு வாரம் போனதே தெரியவில்லை. இன்று திங்கள். ஆபீஸ் செல்லும் அவரசம் இல்லாததால் நிதானமாக காபி குடித்துக் கொண்டே பேப்பர் படித்தாயிற்று. போரடித்தது. ஒரே வாரத்தில் இப்படி போரடிக்கிறதே! சித்ரா ஒய்வு பெறும்வரை இப்படித்தான் தனிமையில் இருக்க வேண்டுமோ? பத்து வருடம்! லேசான பயம் எழுந்தது.

தூங்கி எழுந்து மணி பார்த்தார். 4 ஆகியிருந்தது. டீ.வீ. போட்டார். பிளாஸ்கில் இருந்த காபியை குடித்தார். சித்ரா செய்து வைத்திருந்த நாடா பக்கோடாவை சாப்பிட ஆரம்பித்தார். டீ.வீ. பார்த்துகொண்டே காலி செய்துவிட்டார். அடடா! சித்துவுக்கு ஒன்றுமே இல்லையே! என்ன செய்வது?

அய்யங்கார் பேக்கரிக்குப் போய் ப்ரெட் வாங்கி வந்தார். சித்ராவுக்கு  பிரெட்  ஜாம் பிடிக்கும். ஃபிரிட்ஜை திறந்து பார்த்தார். ஜாம் இருந்தது. பக்கத்தில் அமுல் பட்டரும் இருந்தது. சட்டென்று ஒரு யோசனை. ப்ரெட் சாண்ட்விச் செய்தாலென்ன? பரபரவென செயல்பட்டார். சாண்ட்விச் மேக்கரை எடுத்து உயிரூட்டினார். ஒரு பிரட்டில் ஜாம் தடவினார். இன்னொன்றில் வெண்ணை தடவினார். எல்லா ஸ்லைஸ்களையும் சாண்ட்விச் மேக்கரில் வைத்து எடுத்தார். மொறுமொறுவென சாண்ட்விச் பார்க்க அழகாக இருந்தது. காசரோலில் போட்டு மூடினார். மணி பார்த்தார். பத்து நிமிடத்தில் சித்ரா வந்து விடுவாள். காபியும் போட்டு விடலாம்! ஃப்ரிட்ஜில் இருந்த பால் பாக்கெட்டை எடுத்து வெட்டி பாத்திரத்தில் கொட்டி அடுப்பில் வைத்தார். இன்னொரு பர்னரில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்தார். டிகாஷன் சொம்பை அதற்குள் வைத்தார்.

 

‘டிங் டாங்…….. டிங் டாங்……..’ காலிங் பெல் ஒலித்தது. சித்ராதான். சாரதி கதவு திறந்து, “ஹாய் சித்து!” என்று உற்சாகமாக வரவேற்றார். உற்சாகத்தின் காரணம் புரியாமல் சித்ராவும் ‘ஹாய்’ சொல்லிவிட்டு, “சாதம் சாப்டீங்களா? காபி, பக்கோடால்லாம் சாப்டீங்களா?” என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டாள்.

“ஊம்……எல்லாம் ஆச்சு! உனக்குகூட டிபன் ரெடி” என்றார் சாரதி.

“எனக்கா?” வியப்புடன் கேட்டாள் சித்ரா.

“ஆமா! நீ போய் மூஞ்சி கைகால் அலம்பிட்டு வா. டிபனும் காபியும் கொண்டு வரேன்” என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் சென்றார் சாரதி.

வாஷ் பேசினில் முகம் கழுவிக் கொண்டே சித்ரா. “ப்ளம்பர் வந்தானா?” என்றாள்.

“ஆமா! போய் கூட்டிட்டு வந்தேன்.”

“ரொம்ப தேங்க்ஸ்”

“வெல்கம்”

முகத்தை டவலால் துடைத்தபடி வந்தவள் “டிபன் வாங்கிட்டு வந்தீங்களா?” என்று கேட்டாள்.

“வெளிலேருந்தா? மூச்! நானே பண்ணினேன். நீ டைனிங் டேபிளுக்கு வா” என்று சொல்லியபடி ஒரு கையில் ப்ரெட் சாண்ட்விச்சும் இன்னொரு கையில் காபியும் எடுத்துக் கொண்டு வந்தார்.

சித்ராவின் முகம் வியப்பில் மலர்ந்தது.

“அட! ப்ரெட் சாண்ட்விச்சா?” என்றாள்.

“ஊம்…. உனக்காக நானே செய்தேன். ப்ரெட், பட்டர், ஜாம் சாண்ட்விச். சாப்பிட்டுப் பார். இந்தா கூடவே காபி” என்று டம்ளரை அவளிடம் கொடுத்துவிட்டு பக்கத்தில் அமர்ந்தார்.

“எப்படி இருக்கு?” குழந்தையின் ஆர்வத்துடன் கேட்டார்.

“சூப்பரா இருக்கு! என் இதெல்லாம் பண்றீங்க? பேசாம ரெஸ்ட் எடுத்துக்கலாமில்ல?” சித்ரா குரல் தழுதழுத்தது. கண்களில் நீர் தளும்பியது.

“சீ அசடு! எதுக்கு அழறே? நான் வேலை செய்றேன்னுட்டா?” அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு கேட்டார் சாரதி.

சித்ராவுக்கு பேச்சு வரவில்லை.

“சித்தும்மா….! நீ எனக்காக இத்தனை வருஷம் என்னவெல்லாம் செஞ்சுருக்கே. இவ்வளவு நாள்  உன் வேலைகளை பகிர்ந்துக்க முடியாம வேலைப் பளு என்னை அழுத்திட்டு இருந்தது. எனக்கு வீட்டுக் கவலை தெரியாமல் நீ பாத்துகிட்டதால ஆபீஸ்ல பெரிய பொறுப்பை நான் சுமக்க முடிந்தது. அதே போல இனிமே வீட்டை நான் பார்த்துக்கப் போறேன். நீ கவலைப் படாம போயிட்டு வா. இன்னிலேந்து ராத்திரி சமையல் ஐயாதான் பண்ணப் போறார். என்ன செய்யணும்னு சொல்லிரு. செஞ்சு வச்சுடறேன்.” என்றப மெல்ல அவளை அனைத்துக் கொண்டார். சித்ரா பேசாமலிருந்தாள்.

“என்ன ஓகேயா?” என்றார் மறுபடியும். “டபுள் ஓகே!” கிசுகிசுப்பாக வந்தது அவள் குரல்.