நெய்: ஆரோக்கியத்திற்கு மிக நல்லது

நெய்: ஆரோக்கியத்திற்கு மிக நல்லது

நெய்யை ‘அன்ன சுத்தி’ என்பார்கள். எதற்காக அன்னத்தை சுத்தம் செய்ய வேண்டும்? சமைக்கும் போது நாம் கோபப் பட்டால் நம்முடைய கோப தாபங்கள் அன்னத்திற்கு தோஷத்தை உண்டு பண்ணுமாம். அதனாலேயே பெரியவர்கள் சமைக்கும் போது ஸ்லோகங்கள் சொல்லிக்கொண்டே சமைக்க வேண்டும் என்பார்கள். சமைத்த உணவை கடவுளுக்கு நைவேத்தியம் பண்ணும்போது அதில் சிறிது நெய் சேர்ப்பது வழக்கம். நெய் அந்த உணவில் இருக்கும் தோஷத்தை போக்கி கடவுளின் படைப்புக்கு உகந்ததாக மாற்றி விடும்.

ஆங்கில வைத்தியத்தில் நெய் என்பது கொழுப்பு சத்து நிறைந்ததாக கருதப் படுகிறது. அதனால் அதை விலக்கச் சொல்லுகிறார்கள். ஆனால் ஆயுர்வேதம் நெய்யை மிகவும் உயர்ந்த பொருளாகக் கொண்டாடுகிறது. அதுவும் பசு நெய் பல்லாண்டு காலமாக மனிதனால் பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பண்டம்; நெய்யைப்பற்றி ஆயுர்வேதம் இன்னும் என்ன சொல்லுகிறது என்று பார்ப்போம்.

 • நெய் நமக்கு ‘ஒஜஸ்’ என்கிற உயிர் சக்தியைக் கொடுக்கிறது.
 • நமது நினைவாற்றலுக்கும், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
 • தேனைப் போலவே நெய்யும் நமது உடலின் திசுக்களுக்குள் ஊடுருவி செல்லும் சக்தி படைத்தது.
 • அனைத்து நோய்களையும் தீர்க்கும் அற்புத நிவாரணி;
 • நம் உடலுக்குத் தேவையான உயிர் சக்தியை கொடுக்க வல்ல ஒரு ‘தங்கத் திரவம்’ என்று பசு நெய்யைப் புகழ்ந்து தள்ளுகிறது ஆயுர்வேதம்.

ஆனால் நெய் என்பது பாலின் தரத்தைப் பொறுத்து இருக்கிறது. கலப்படம் இல்லாத பால் ஒரு சாத்வீகமான, உடலுக்கும் மனதுக்கும் அமைதியைக் கொடுக்கும் உணவு.

ஆனால் தற்சமயம், நமக்குக் கிடைக்கும் பால் பரிசுத்தமானதா என்பது ஒரு கேள்விக் குறிதான். பால் அதிகம் கறக்க வேண்டும் என்று பசு மாடுகளுக்கு ஹார்மோன் ஊசிகள் போடுகிறார்கள். கால்நடை தீவனங்கள் ரசாயனக் கலவைகளால் ஆரோக்கியமானவையாக இருப்பதில்லை.  இதனால் கறவை மாடுகளும் அவற்றின் பாலும் மிகவும் பாதிக்கபடுகின்றன.

நல்ல சுத்தமான பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட தயிர், மோர், நெய் முதலியவை நம் உடலுக்கு போஷாக்கைக் கொடுப்பதுடன்  வியாதிகளைப் போக்கும் உணவுப் பொருட்களாகவும் இருக்கின்றன.

வெண்ணெயைக் காய்ச்சும் போது, அதிலிருந்து நம் உடலுக்குத் தேவையான நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்கும் என்சைம்கள் வெளிப்படுகின்றன.  நெய்யின் தரம் வெண்ணெயின் தரத்தையும், நெய்யை நாம் எப்படி பாதுகாக்கிறோம் என்பதையும் பொறுத்து இருக்கும்.

 

சிறந்த வகையில் நெய் எடுக்கும் முறை:

 • வெண்ணை காய்ச்சும் வாணலி, நெய்யை பரிமாற தேவையான ஸ்பூன், நெய்யை வைக்கும் பாத்திரம் இவைகளை முதலில் கொதிக்கும் நீரில் (sterilize) போட்டு கிருமிகள் இன்றி எடுத்து வைக்கவும்.
 • வாணலியில் வெண்ணையைப் போட்டு குறைவான தீயில் வைக்கவும்.
 • வெண்ணை உருகி பிரவுன் நிற நுரை மேலே வரும். வெண்ணை காயும் போது அதை கரண்டி அல்லது ஸ்பூன் கொண்டு கிளறக் கூடாது.
 • நுரையை வெளியில் எடுக்கவும் கூடாது.
 • நுரை கொஞ்சம் கொஞ்சமாக கெட்டிப் பட்டு வாணலியின் அடியில் போய் வண்டலாகத் தங்கிவிடும்.
 • நெய் தங்க நிறமாக மாறி சத்தமில்லாமல் கொதிக்க ஆரம்பிக்கும்.
 • நெய்யின் மேல் சின்னச்சின்ன காற்றுக் குமிழிகள் வரும்.
 • இப்போது வாணலியை அடுப்பிலிருந்து இறக்கி நெய்யை நன்றாக ஆறவிடுங்கள்.
 • சுத்தம் செய்யப்பட்ட பாத்திரத்தில் நெய்யை வண்டல் இல்லாமல் விடவும்.

வண்டல் பிடித்தவர்கள் அப்படியே சாப்பிடலாம். இல்லாவிடில் வண்டலுடன் சிறிதளவு கோதுமை அல்லது அரிசி மாவு, சிறிது சர்க்கரை போட்டு பிரட்டி சாப்பிடலாம். அருமையாக இருக்கும்.