Uncategorized

இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம்.

இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம்.

இந்தச் சிட்டுக் குருவிகள் மனிதர்களைக் கண்டு பயப்படுவதில்லை. கூட்டங்கூட்டமாக வசிப்பவை. மிகுந்த இரைச்சல் போடுபவை; நாம் சாப்பிடும் சாப்பாடோ, மற்ற தின்பண்டங்களோ துளி கீழே சிந்தினாலும் எங்கிருந்தோ ‘சிட்டா’ க பறந்து வந்து தன் அலகினால் கொத்தி எடுத்துக் கொண்டு ‘சிட்டா’ க பறந்து போவதால்தான் இதற்கு சிட்டுக் குருவி என்று பெயர் வைத்தார்களோ?

வீட்டு முற்றங்கள் தான் இவைகளின் ராஜ்ஜியம். இவை குதித்துக் குதித்து வரும் அழகே தனி.

இவைகளின் இரைச்சல் தாங்காமல் எவ்வளவு முறை விரட்டினாலும் திரும்பவும் வெகு சகஜமாக  வீட்டுக்குள் நிழைந்து வீட்டு உத்தரங்களிலும், சுவர்களில் இருக்கும் சின்னச் சின்னப் பொந்துகளிலும் கூடு கட்டுபவை. குருவி கூடு கட்டுவது குடும்பத்திற்கு நல்லது என்று கருதப் பட்டதால் குருவிக் கூட்டைக் கலைக்க மாட்டார்கள்.

இந்தக் குருவிகள் பெரும்பாலும் தானியத்தைத் தின்று வாழ்பவை. பழங்கள், கொட்டைகள், குப்பைகள், பிரட் துண்டுகள் என்று கிடைத்ததை தின்று வாழக் கற்றவை. இந்த குணமே இவை உலகெங்கிலும் காணக் கிடைப்பதற்குக் காரணம். நகரப் புறங்களில் வீடுகளிலும், கிராமப் புறங்களில் வயல் வெளிகளிலும், தானியக் கிடங்குகளின் அருகிலும் வாழக் கூடியவை.

இவைகளின் அபரிமிதமான எண்ணிக்கை, எந்தச் சூழலிலும் வாழும் பாங்கு, மனிதர்களைக் கண்டு பயப்படாத தன்மை இவற்றினாலேயே சிட்டுக்குருவிகள் பறவை இனங்களுக்கு ஒரு உதாரணமாகத் திகழ்கின்றன. இவைகளைப் பற்றிய ஒரு ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா? இதுவரை இவைகளைப் பற்றி 5000 விஞ்ஞான அறிக்கைகள் வெளிவந்துள்ளனவாம்.

                

முன்னொரு காலத்தில் பல்கி பெருகி இருந்த சிட்டுக் குருவி இப்போது அரிதாகி விட்ட காரணம் என்ன?

 • அந்தக் காலத்தில் – மாடி இல்லாத கூரை வீடுகளின் காலம்….மர உத்திரங்கள் இருந்த காலம். குருவிகளுக்குக் கூடு கட்ட எக்கச்சக்கமான இடங்கள். பழைய தனி வீடுகள் போய் அடுக்குமாடிக் கட்டிடங்கள் வந்துவிட்ட பின்பு பாவம் குருவிகளுக்கு கூடு கட்டிக் குஞ்சு பொரிக்க  இடம் இல்லாமல் போய்விட்டது. வீட்டுத் தோட்டங்களும் குறைந்து /மறைந்து விட்டன.
 • விவசாயத்திலும் ஏகப்பட்ட மாறுதல்கள்; செயற்கை இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதால் பூச்சிகள் இறந்துவிடுகின்றன. சிட்டுக்குருவிகள் தானியம் தின்று வாழக் கூடியவை என்றாலும், தங்கள் குஞ்சுகளுக்குக் கொடுக்க சிறு பூச்சிகளையும், புழுக்களையுமே தெரிவு செய்கின்றன. குஞ்சுகளுக்கு கொடுக்க உணவு இல்லாதபடியாலும் அவைகள் வாழ தகுந்த இடங்கள் இல்லாதபடியாலும்  குஞ்சுகள் பறவைகள் ஆவதற்கு முன்பே  இறந்து விடுகின்றன.
 • சிட்டுக் குருவிகள் பற்றிய ஆராய்ச்சியில் மேதையான டெனிஸ் சம்மர்ஸ்-ஸ்மித் இந்த இனம் குறைய காரணம் என்று சொல்லுவது என்ன தெரியுமா? நாம் பயன்படுத்தும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற “unleaded petrol” தான்! வியக்கவைக்கும் உண்மை இது. இந்த பசுமைப் பெட்ரோலின் கழிவுப் பொருட்களைத் தின்னும் சின்னச்சின்ன பூச்சிகள் அழிந்து விடுகின்றன. சிட்டுக் குருவிகளுக்கு பூச்சிகள் கிடைப்பது அரிதாகி விடுகிறது.
 • நகரப் புறங்களில் குப்பைக் கழிவுகள் அதிகமாகி விட்டபடியால் காக்கைகளும், பூனைகளும் பெருகி விட்டன. இவை சிட்டுக் குருவிகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கின்றன.

இந்த இனத்தை எப்படிக் காப்பாற்றலாம்?

Nature Forever Society என்கிற நிறுவனம் சிட்டுக் குருவிகளைக் காப்பாற்ற, அவைகளைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு என்படுத்த பல முயற்சிகளை எடுத்து வருகிறது. குருவிக் கூடுகளை தத்து எடுத்துக் கொள்ளவும், குஞ்சுகளுக்கு ஆகாரம் கொடுத்து அவைகளைப் பராமரிக்கவும் முடிவு செய்துள்ளது.

BCIL-ZED Foundation மற்றும் Zoo Authority of Karnataka  நிறுவனமும் சேர்ந்து Gubbigoodu (குருவிக்கூடு) என்ற ஒரு முன்முயற்சியை தொடங்கியுள்ளன.

இந்த நிறுவனங்கள் தனி மனிதர்கள் தங்கள் வீடுகளில் குருவிக்கூடு அமைக்க ஊக்கம் அளிக்கின்றன.

குருவிக்கூடு அமைப்பது எப்படி?

 • ஒரு சிறிய அட்டைப் பெட்டியில்  வைக்கோலை அடைத்து வீட்டு வராந்தாவிலோ, பால்கனியிலோ, மரத்திலோ  தொங்கவிடலாம்.
 • இந்தப் பறவை வீட்டிற்குள் ஒரு சிறிய கிண்ணத்தில் பறவைக் குளியலுக்கு வசதியாக நீர் வைக்கலாம்.
 • சமைத்த உப்பு சேர்க்காத அரிசிச் சோற்றை வைக்கலாம்.

இந்த நிறுவனங்கள் விருப்பம் இருப்பவர்களுக்கு ‘குப்பிகூடு’ களைக் கொடுக்கிறது. குருவிகளுக்குத் தேவையான தானியங்கள், வீட்டில் வளர்க்க கூடிய பழச் செடிகள், புதர்ச் செடிகளையும் இந்த நிறுவனம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தச் செடிகள் சிட்டுக்குருவிகளை ஈர்க்கும்.

“விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக் குருவியைப் போல…”

நாளைக்கு சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று கவலைப் பட்டுக் கொண்டு நின்ற தனது மனைவி செல்லம்மாவைப் பார்த்து, அவள் பக்கத்து வீட்டிலிருந்து கடனாக வாங்கி வந்திருந்த அரிசியை எடுத்து வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து இருந்த சிட்டுக்குருவிகளுக்கு இறைத்தபடியே சிரித்துக் கொண்டே பாடினாராம் பாரதியார்.

இன்று காலையில் தினசரியில் சிட்டுக்குருவிகள் தினம் என்ற கட்டுரையைப் படித்தவுடன் பாரதியின் இந்தப் பாட்டும் நினைவுக்கு வர எங்கள் வீட்டு பால்கனியில் ஒரு குருவிக்கூடு கட்டித் தொங்கவிட முடிவு செய்துவிட்டேன். நீங்க?

 

 

தொடர்புடைய பதிவு: துளசி டீச்சரின் சிட்டுக்குருவி அனுபவங்கள் 

Advertisements

29 thoughts on “இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம்.

 1. நீங்கள் சொல்வது போல் நாம் சிட்டுக் குருவியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் ஏராளம்.எப்படி இந்த food pyramid அழிந்து கொண்டு வருகிறது என்பதை மிக அழகாக பதிவிட்டுள்ளீர்கள்.
  நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.
  நன்றி.
  ராஜி

 2. வீட்டு முன்கதவு சாவி எல்லார் கிட்டேயும் ஒவ்வொண்ணு இருந்தது. வீட்டை ஒட்டி ஒரு ரயில்வே லைன். அந்தத் தெருவின் கடைசி வீடு
  இதுதான். முன்கதவுக்கு மேலே ஒரு குருவி கூடுகட்டி,தன் பிள்ளைங்களோட இருந்தது!

  ஒரு நாள் சினிமா ரெண்டாவது ஆட்டம் போயிட்டு திரும்பி வந்தபோது பார்த்தா, கூடு பிரிஞ்சிருக்கு. மூணு குருவிக் குஞ்சுங்க தரையிலே
  கிடக்குதுங்க! ஐய்யயோன்னு பதறி, அதுங்களை நம்ம வீட்டுக்குள்ளே கொண்டு வந்தோம். செருப்பு வாங்குன அட்டைப் பெட்டியிலே
  வச்சுட்டேன். எல்லாம் கண்ணைக்கூடத் திறக்கலே. பாவம். ஆனா, மனுஷங்க தொட்டதாலே அதோட அம்மா அதை சேத்துக்காதாம்!
  இப்படிதான் வேற குடித்தனக்காரங்க சொன்னாங்க.

  மறுநாளிலே இருந்து அதுங்களுக்குப் பணிவிடை ஆரம்பிச்சிருச்சு.சின்ன’ட்ராப்பர்’லே சொட்டு சொட்டாப் பாலு விடுவேன்.சாதத்தை ஒவ்வொரு
  பருக்கையா கையிலெ மசிச்சு ஊட்டுவேன். ரெண்டு நாளிலே, மூணுலே ஒண்ணு மண்டையைப் போட்டுருச்சு. மத்ததுங்க ரெண்டும் கண்ணைத்
  திறக்க ஆரம்பிச்சது. அதுலே ஒண்ணு கொஞ்சம் ‘ஸ்லோ’! சாப்பாடை வாய்க்கிட்டே கொண்டுபோனா, ரொம்ப நேரம் யோசிச்சுத்தான்
  வாயைவே திறக்கும்! தத்தியா இருக்கேன்னு அதும்பேரே ‘தத்தி!’ மத்தது ச்சிண்ட்டு.

  அதுங்க மெதுவா இறக்கையை விரிக்க ஆரம்பிச்சவுடனே வீட்டுலே பல காரியங்களுக்குத் ‘தடா’ போட்டாச்சு. ஜன்னலுங்களைத்
  திறக்கக்கூடாது. கதவைத் திறக்கறதுக்கு முன்னாலே இதுங்க எங்கே இருக்குன்னு பாத்துட்டு அப்புறமா திறந்து, வெளியே போனதும் உடனே
  கதவை மூடிடணும். முக்கியமான இன்னொண்ணு ·பேன் போடக்கூடாது!

  ரெண்டும் நல்லா வளந்துடுச்சுங்க. எங்க தலைமேலே உக்காந்து, ரெண்டு ரூமுக்கும் சவாரி. அரிசிலே கல்லு பொறுக்கும்போது, முறத்துலேயே
  உக்காந்து அரிசி தின்னுறது, இட்டிலிக்கு அரைக்கறப்ப, ஊற வச்ச அரிசி, பருப்பை, ஆட்டுக்கல்லுக்குப் பக்கத்துலேயே உக்காந்து தின்னுறது
  இப்படி நல்லா பழகிடுச்சுங்க. கூண்டு எல்லாம் இல்லே. இதுலே ச்சிண்டு எப்பவும் கண்ணாடி முன்னாலே உக்காந்து தலையை, அப்படியும்
  இப்படியுமா திருப்பிப் பார்த்துகிட்டு இருக்கும். ‘என்னடா மாப்ளே, அலங்காரமெல்லாம் சரியா இருக்கா?’ன்னு கேப்போம்.

  எங்க வீட்டுலே வேற இவர்,’எப்பப் பாத்தாலும் வீட்டுக்குள்ளேயே இருக்குதுங்களே. வெளியேபோய் சுதந்திரமா இருக்கட்டுமே’னு சொல்வார்.
  நானு, ‘இன்னும் கொஞ்சநாள் ஆகட்டும்’ன்னு சொல்லிகிட்டே இருந்ததுலே மூணு மாசமோடிருச்சு.

  ஒருநாளு, நான் இன்னொரு அறையிலே சமையலைக் கவனிச்சுகிட்டு இருக்கப்ப, ‘ஒரு குருவி வெளியே பறந்துருச்சும்மா!’ன்னு இவரு வந்து
  சொல்றார். ஓடிப்போய் பார்த்தா, ‘பால்கனி’ கதவு திறந்து இருக்கு! ச்சிண்ட்டு வழக்கம்போல கண்ணாடி பாத்துகிட்டு இருக்கு. பறந்து
  போனது நம்ம ‘தத்தி!’

  ஊமையாட்டம் இருந்துகிட்டு, வீட்டைவிட்டு ஓடிட்டா! ச்சிண்ட்டு மாத்திரம் இருக்கு. அப்பப்ப கத்துது. தத்தியை’மிஸ்’ செய்யுதோன்னு
  நினைக்கிறேன். அதுவா ஒண்ணும் போயிருக்காது. இவர்தான் வேணுமுன்னே கதவைத் திறந்து வச்சிருந்திருப்பார்! இப்ப என்ன செய்யறது?

  வேலிப் பக்கமாப் போய், அப்பப்ப தத்தி, தத்தின்னு குரல் கொடுத்துகிட்டு இருந்தேன். எந்தக் குருவியைப் பார்த்தாலும் நம்ம தத்தி மாதிரியே
  இருக்கு!

  ச்சிண்ட்டு சோகமா இருக்கற மாதிரி கண்ணாடி முன்னாலே உக்காந்து இருந்தது. மனசைக் கல்லாக்கிக்கிட்டுக், கதவைத் திறந்து வச்சேன்.
  ஆனா, அது இடத்தைவிட்டு நகரலே.ஒரு அரைமணி நேரம் ஆச்சு. அப்புறம் அது மெதுவாப் பறந்து வெளியே போய், கைப்பிடிச் சுவருலே
  உக்காந்தது. திருப்பியும் உள்ளே வந்தது.மறுபடி வெளியே போனது. அப்புறம் வரவே இல்லை!

  நீண்ட மறுமொழிக்கு மன்னிக்கணும் ரஞ்ஜனி.

  1. வாங்க துளசி!
   மன்னிக்கறதாவது? எத்தனை அழகான அனுபவம் உங்களுக்கு! என்ன மனசுப்பா இது? இந்த மாதிரி சிட்டுக்குருவிகளுக்கு இரங்கும் மனசு!
   ஓடி வந்து உங்களை அப்படியே அணைக்கணும் போல இருக்கு!
   தத்தியும், ச்சிண்ட்டு வும் பிரிந்துபோன வேதனையை நாங்களும் உங்களுடன் அனுபவிக்கிறோமே!
   Ode to சிட்டுக்குருவி!
   இருங்க தக்க மரியாதை பண்ணிடறேன்!

 3. காண்பதே அரிதான சிட்டுக்குருவிகளைப் பற்றி எழுதி எங்கள் ஏக்கத்தை அதிகப் படுத்திவிட்டீர்களி ரஞ்சனி நான் 9 ம் வகுப்பு படிக்கும்போது என் வீட்டின் பரணில் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்த குருவிக்கு நானும் என் தம்பியும் சின்னி என்று பெயரிட்டு மகிழ்ந்த காலத்தை நினைத்து பார்த்தால் இன்றும் கண் கலங்குகிறது

  1. வாங்க விஜயா!
   உங்களுக்கு சிட்டுக்குருவி வளர்த்த அனுபவம் உண்டா? நீங்க எல்லாம் ரொம்ப கொடுத்து வச்சவங்க!
   உங்க வீட்டுல இடம் இருந்தா ஒரு குருவிக் கூடு வாங்கி கட்டிடுங்கோ! இன்னொரு சின்னியை வளர்க்கலாம்!

  1. வாங்க தனபாலன்!
   நீங்க சொல்வது ரொம்பவும் நிஜம். நம்மால் இந்த சின்னஞ்சிறு குருவிகளைக் கூட காப்பாற்ற முடியவில்லை என்பது எத்தனை பெரிய சோகம்!

 4. ஓ இது reblog செய்யப்பட்டதா?
  எத்தனை முறைப் படித்தாலும் சலிக்காத வகையில் அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
  மீண்டும் சிட்டுக்குருவி தினத்தன்று reblog செய்ததற்கு நன்றி.

 5. நல்லதொரு விழிப்புணர்வு ஆக்கம் !

  தொடர வாழ்த்துக்கள்…

  செல்போன் குறைந்த விலையில் கிடைப்பதால், செல்போன் இல்லாதவர்களே இல்லை என்பதுபோல் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தக் கூடிய சாதனமாக உள்ளது.

  செல்போனுக்கு கிடைக்ககூடிய சிக்னல்கள் அனைத்தும் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் செல்போன் டவரிலிருந்தே வெளிப்படும். இந்த டவர்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு கதிர்வீச்சு அதிகமாக இருக்கும்.

  இக்கதிர்வீச்சால் புற்று நோய், தலைவலி, தூக்கமின்மை, மயக்கம், கவனக்குறைவு, காதில் இரைச்சல், ஞாபகசக்தி குறைவு, அஜிரணக் கோளாறு, இதயத் துடிப்பு அதிகரிப்பு போன்றவை ஏற்படக்கூடும் என்று ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. மேலும் சிட்டுக் குருவிகள், மைனா, தேனீக்கள் போன்ற இனங்களைப் பார்ப்பதே ரொம்ப அபூர்வமாகி அழிந்துகொண்டு வருகிறது.

  1. வாங்க சேக்கனா!
   எந்த ஒரு தொழில் நுட்பமும் அளவோடு பயன்படவேண்டும். இல்லையென்றால் மனித இனத்துக்கும் அழிவு. விலங்கினங்களுக்கும் அழிவுதான்!

 6. நல்ல பகிர்வு. சிட்டுக்குருவிகள் அழிந்ததற்கு செல்ஃபோன் டவர்கள் காரணம்னு ஒரு கூற்று உண்டு. என்றாலும் அங்கொன்றும், இங்கொன்றுமாகச் சிட்டுக்குருவிகள் கண்களில் படுகின்றன. கூடு கட்டிட வேண்டியது தான். 🙂

  1. வாங்க கீதா!
   உங்களோட ஒரு பதிவுல போட்டிருக்கிறீர்களே, குருவி கூடு கட்டும் அழகு!
   என்ன ஒரு நுட்பம்! எத்தனை ஈடுபாடு!
   இந்தப் புகைப்படங்களுக்கு என்னுடைய இந்தப் பதிவுல இணைப்பு கொடுக்கலாமா?
   தோட்டமோ இடமோ இருந்தால் நிச்சயம் கூடு வாங்கிக் கட்டுங்கள்.

   1. தாராளமாய் இணைப்பு கொடுங்க. தோட்டம் இங்கே இல்லை. ஆனால் இடம் இருக்கு. பார்க்கலாம். குருவிங்க வருமானு! :))))

 7. வீட்டின் முகப்பில் ஒரு நித்தியமல்லி கோடி வளர்ந்து இருந்தது.சில குருவிகள் அதில் கூடு கட்டி வாழ்ந்து வந்தன.இரண்டு மாதங்களுக்கு முன் அக்குருவிக் கூடு சிதைந்து கீழே கிடந்தது.அருகில் ஒரு குருவி குஞ்சு.அதை கையில் எடுத்து வைத்து ஒரு வீடியோ கிளிப் எடுத்தேன். குருவி குஞ்சை காணாமல் மற்ற குருவிகள் சத்தம் போட்டு கொண்டு இருந்தன.குருவி குஞ்சு ஓரளவு பறக்கும் நிலையில் இருந்தது. அந்த சிதைந்த குருவிக் கூட்டை மீண்டும் எடுத்து நித்திய மல்லி கோடியில் வைத்து குருவிக் குஞ்சை அதில் அமர வைத்தேன்.மற்ற குருவிகள் வந்து பாசத்துடன் அருகில் வந்து குலவின.
  மறுநாள் காலையில் குருவி கூட்டை பார்த்தேன் ,அது மீண்டும் சிதைந்து தரையில் கிடந்தது. குருவி குஞ்சை காணவில்லை. மற்ற குருவிகளும் அங்கு இல்லை. அது என்ன குருவி என்று தெரியவில்லை . வீடியோ வைப் பார்த்து சொல்லுங்களேன்

  1. ஹைய்யோ! எத்தனை அழகு இந்தக் குருவிக் குஞ்சு!
   இது கத்துவதும், உடனே மற்ற குருவிகள் குரல் கொடுப்பதும்… வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்ததற்கு நன்றி, திரு நமசிவாயம்!

   நம் இந்தியாவில் நான்கு விதமான சிட்டுக்குருவிகள் காணப்படுகின்றன. வீட்டுக் குருவிகள், மஞ்சள் கழுத்துக் குருவிகள், ஸ்பானிஷ், மற்றும் யுரேஷியன் மரக் குருவிகள்.

   இந்தக் குஞ்சைப் பார்த்தால் சாதாரணமாகக் காணப்படும் வீட்டுக் குருவி போல் தான் இருக்கிறது. உங்களுக்குத் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்!

   இன்னொரு விஷயமும் படித்தேன். நம் இதயம் நிமிடத்திற்கு 72 முறை துடிக்கிறது. ஒரு குருவியின் இதயம் 460 முறை துடிக்கிறதாம்!
   பாவம் இந்தக் குஞ்சின் இதயம் இன்னும் அதிக தடவை துடிக்குமோ என்று தோன்றுகிறது!

   இந்த அழகிய வீடியோவை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!

 8. இங்கே தில்லியில் இன்னும் சிட்டுக் குருவிகள் உண்டு! அதுவும் அலுவலகத்தின் பக்கத்தில் மதிய வேளைகளில் இங்கிருப்பவர்கள் அளிக்கும் ரொட்டித் துண்டுகளுக்கும், தானியங்களுக்கும் காத்திருந்து, கொத்தித் தின்னும் அழகை நிறைய ரசித்திருக்கிறேன்!

  ஆனாலும் எண்ணிக்கையில் குறைந்து விட்டதை நினைத்தால் வருத்தம் தான்.

  1. வாருங்கள் வெங்கட்!
   தில்லியில் இன்னும் சிட்டுக்குருவிகள் இருப்பதை அறிய சந்தோஷம்.
   கட்டாயம் இவைகளைக் காப்பாற்ற வேண்டும் நாம்.

 9. தமிழ்திரைப்படப்பாடல்களில் சிட்டுக்குருவியை வைத்து நிறைய பாடல்கள் வந்துள்ளன. இன்று இயற்கை மீதான அன்பு இல்லை. சுயநலம் பெரிதாகிவிட்டது. சிட்டுக்குருவிகளை முன்போல் இப்போது காணமுடிவதில்லை. ஆனாலும், வீதிக்கு ஒன்றிரண்டு திரிகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s