“க” நா பாஷை தெரியுமா?

“க” நா பாஷை தெரியுமா?

இன்று காலை டெக்கான் ஹெரால்ட் தினசரியில் ஒரு கட்டுரை படித்தேன். அந்தக் கட்டுரையின் பெயர் ‘W’ixed ‘M’ords”. முதல் இரண்டு எழுத்துக்களை மாற்றிப் போட்டு வாசியுங்கள்.  இப்படி பேசுவதற்கு பெயர் “Spoonerism” என்று இந்தக் கட்டுரையை எழுதிய ஷார்பெல் ஃபொ்னாண்டஸ் குறிப்பிட்டு இருந்தார்.

மதிப்பிற்குரிய டாக்டர் வில்லியம் ஆர்ச்பால்ட் ஸ்பூனர் (Reverand Dr. William Archebald Spooner) என்பவரது பெயரால் இந்த ஸ்பூனரிஸம் வழங்கப்படுகிறது. உலகெங்கிலும் பல மனிதர்கள் இந்த ஸ்பூனரிஸத்தை பலவாறு பயன்படுத்தினாலும் திரு. ஸ்பூனர் சொன்ன ஒரு வாக்கியம் மிகவும் பிரபலமானது. I received a crushing blow என்று சொல்லுவதற்கு பதிலாக I received a blushing crow என்றாராம்.

இந்தக் கட்டுரையில் எழுத்தாளர் குறிப்பிடும் ஸ்பூனரிஸம் சில உங்களுக்காக:

when I was young I loved tairy fales.

my favorites are “Beeping sleauty” and “Back and the Jean stalk.”

I often wumble with my fords.

இந்தக் கட்டுரையைப் படித்த பின் நீங்களும் இப்படிப் பேச முயற்சிக்கலாம்.

இதைப் படித்தவுடன் எனக்கு சின்ன வயதில் என் அம்மா பேசிய (இப்போதும் பேசுகிறார்!) ‘க’ னா பாஷை நினைவுக்கு வந்தது. பேசும் வாக்கியத்தின் ஒவ்வொரு எழுத்துக்கு முன்பும் “க” சேர்த்துக் கொள்ளவேண்டும்.

இதோ உதாரணம்: “கர கஜ கனி கஇ கன் கனி கக் ககு கவ கர கலை”

(ரஜனி இன்னிக்கு வரலை)

இதைப் போல சாதாரண விஷயத்திற்கு அம்மா இந்த கானா பாஷையைப் பயன்படுத்த மாட்டார். எங்களுக்குத் தெரியாமல் எங்கள் அப்பாவிடமோ, பாட்டியிடமோ ஏதாவது சொல்ல வேண்டுமானால் மட்டும் இப்படி பேசுவார். இதை நாங்கள் வெகு விரைவில் கற்றுக் கொண்டு விட்டோம். அதனால் அடுத்த படியாக ‘அயின’ பாஷையை பேச ஆரம்பித்தார் எங்கள் அம்மா.

இதில் வாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தையின் ஒவ்வொரு முதல் எழுத்துக்கும் பிறகு ‘அயின’  சேர்க்கவேண்டும்.

மாயினாதவன் போயினன  வாயினரம் கயினல்யாணத்துக்கு வயினந்திருந்தான்.

ஹைலைட் செய்திருக்கும் பகுதிகளை விட்டுவிட்டு படியுங்கள். என் அம்மாவின் பேரன் பேத்தி அனைவருக்கும் இந்த ‘க’ ன பாஷையும் ‘அயின’ பாஷையும் அத்துப்படி.

அம்மாவின் குழந்தைகள் நாங்கள் எல்லோரும் வெளியூர் வந்து பல பாஷைகள் கற்றுக் கொண்டு விட்டோம். ஆனாலும் அம்மாவின் இந்த ‘க’ ன பாஷையும் ‘அயின’ பாஷையும் ஒரு ஸ்பெஷல் தான்!.

ஸ்பூனரிசம் பற்றிய இன்னொரு கட்டுரை இங்கே:

 

ஸ்பூனரிசம் என்பதை வைத்து நான் எழுதிய கடிதம் இங்கே