கோடையில் செல்லப் பிராணிகளின் பாதுகாப்பு

கோடையில் செல்லப் பிராணிகளின் பாதுகாப்பு

சமீபத்தில் தொலைக் காட்சி ஒரு நிகழ்ச்சி ஒன்றில்  கேட்ட  கதை

ஒருவர் தன் வீட்டில் ஒரு பூனையை செல்லமாக வளர்த்து வந்தார். திடீரென்று அவருக்கு அந்தப் பூனையைக் கண்டால் பிடிக்காமல் போயிற்று. அதை ஒரு பையில் போட்டு காரில் ஏறிக் கொண்டு சற்றுத் தொலைவில் விட்டுவிட்டு வந்தார்.

இவர் வீடு வந்து சேருமுன் பூனை வந்து விட்டது. அடுத்தநாள் மறுபடியும் பூனையைப் பையில் போட்டு இன்னும் சற்றுத் தொலைவில் விட்டுவிட்டு வந்தார். பூனையும் இவருக்கு முன்னால் வீடு வந்து சேர்ந்து விட்டது. இவருக்கோ கோவமான கோவம். மறுநாள் பூனையைப் பையில் போட்டார். காரை வேகமாக எடுத்தார். இடது வலது, இடது வலது, மறுபடி இடது வலது என்று காரை ஓட்டிச்சென்று ஒரு வழியாகப் பூனையை எங்கோ கண்காணத் தொலைவில் விட்டார். வீட்டில் மனைவி காத்துக் கொண்டிருக்கிறார்.

தொலை பேசி ஒலித்தது. கணவர் தான்: “பூனை வந்து விட்டதா?”

“ஓ! ரொம்ப நேரத்திற்கு முன்னமேயே வந்து விட்டதே!”

“தொலை பேசியை அதனிடம் கொடு. எனக்கு வீட்டுக்கு வர வழி தெரியவில்லை…..!”

இந்தக் கதையின் நீதி என்ன என்பதைப் பார்க்கும் முன் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். பல வீடுகளில் பூனை, நாய் முதலிய பிராணிகளை செல்லப் பிராணிகளாக வளர்க்கிறார்கள். சொந்தக் குழந்தைகளை விடவும் அவைகளை நேசிக்கிறார்கள்.

மேற்சொன்ன கதையில் வரும் நாயகனைப் போல் இல்லாமல் நீங்கள் நேசிக்கும் செல்லப் பிராணிகளை இந்தக் கோடையில் பராமரிக்க இதோ சில எளிய வழிகள்:

கோடைக் காலத்தில் அவைகளுக்கு வெப்ப அதிர்ச்சியும்  (heat stroke), சுவாச ஒவ்வாமையும் (respiratory allergies) சரும வியாதியும் ஏற்படலாம். முக்கியமாக, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட, தடிமனான இரண்டு அடுக்குத் தோலுடன் கூடிய நாய்கள் கடும் கோடையினால் அதிகம் பாதிக்கப் படுகின்றன.

புல் டாக் (Bull dog) பாக்ஸர்  (Boxer) போன்ற சில நாய் இனங்களுக்கு முகம் தலையில்  சற்று பின் தள்ளி அமைந்திருக்கும். இவைகளுக்கு இயற்கையிலே சுவாசக் குழாய் குறுகலாக இருக்கும். அதனால் வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளுவது இவைகளுக்குச் சற்றுக் கடினம்.

கருப்பு நிறமுடைய, உரோமம் அதிகமுள்ள நாய் இனங்களுக்கு  நம்மைப் போல அதிகம் வியர்ப்பதில்லை. அவைகள் நாக்கைத் தொங்க விட்டுக் கொண்டு மூச்சிரைத்து வெப்பக் காற்றை வெளியேற்றி குளிர் காற்றை உள்ளிழுத்து  தங்கள் உடல் சூட்டைக் குறைத்துக் கொள்ள முடியும். இதன் காரணமாகவே இந்தச் செல்லப் பிராணிகள் கோடைகாலத்திலும்,  வறட்சி காலத்திலும் வெப்ப அதிர்ச்சி நோயால் பாதிக்கப் படுகின்றன. இவைகளின் பாதங்களிலும், மூக்கிலும் சிறிதளவு வியர்வை உண்டாகலாம். ஆனால் இது உடல் சூட்டைக் குறைக்காது.

இந்தக் காலத்தில் நாய்கள் சோம்பலாய் உட்கார்ந்திருக்கும். மற்ற சமயங்களில் இருப்பது போல சுறுசுறுப்பாக இருக்காது. அதுவும் சிறிது வயதான, எடை அதிகம் கொண்ட, இதயம் மற்றும் சுவாச உறுப்பு நோய் இவற்றால் பாதிக்கப்பட்ட நாய்கள் கோடை வெப்பத்தால் அதிக துன்பத்திற்கு ஆளாகின்றன.

கோடைக் காலத்தில் இவற்றால் வழக்கம் போல் உடற்பயிற்சி செய்யவும் முடியாது. அதனால் உங்கள் செல்லப் பிராணிகளை கோடைக் காலத்தில் மிகவும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுவது அவசியம். உடற் பயிற்சி செய்யக் கட்டாய படுத்த வேண்டாம். கடும் வெயில் நேரத்தில் அவைகள் வீட்டிற்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

இது மட்டுமல்ல; இந்தக் கோடை அவற்றின் பசியையும் குறைத்துவிடும். உலர் உணவுகளைத் தவிர்த்து நீர் நிரம்பிய உணவுகளைக் கொடுக்கவும். பொதுவாக நாய்களின் உடல் வெப்பம் 102.5 டிகிரி இருக்கும். கடும் கோடையினால் வெப்பம் அதிகமாகி 106 டிகிரிக்கும் அதிகம் போய்விட்டால் நினைவு இழந்து மரணம் சம்பவிக்கக் கூடும். அதனால் கடும் வெய்யிலில் வெளியில் அழைத்துச் செல்ல வேண்டாம். காலை இளம் வெய்யிலில் அதாவது காலை 7.30 மணிக்குள்ளும் மாலை 6 மணிக்குப் பிறகும் உங்கள் செல்லப் பிராணியை வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.

என்ன உணவுகள் கொடுக்கலாம்?

தர்பூசணி, சப்போட்டா போன்ற பழங்கள், வைட்டமின் C, D நிரம்பிய உணவு வகைகளைக் கொடுக்க வேண்டும். குளிர்ந்த நீர் நிறையக் குடிக்கச்செய்வதன் மூலம் உங்கள் செல்லப் பிராணிகளின் உடலில்  உள்ள நீர் வற்றாமல் பார்த்துக் கொள்ளலாம்.

குளிர் நீர் குளியல்:

ஒரு நாள் விட்டு ஓரு நாள் அவைகளைக் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டலாம். மதிய நேரத்தில் குளிர்ந்த நீரில் நன்றாக நனைக்கப்பட்ட ஒரு துணியை  அவற்றின் உடலை சுற்றி கட்டுவதனால் வெப்பம் தாக்காமல் பாதுகாக்கலாம்.

கோடைக்காலத்தில் உங்கள் செல்லப் பிராணிகளை கூடுதல் கவனத்துடன் கண் காணிப்பது நல்லது. பருவ நிலை மாறுதலால் அவற்றிற்கு சருமத்தில் சிறு சிறு புண்கள் ஏற்படலாம். சில சமயங்களில் சளி, இருமலினால் ஒவ்வாமை நோயும், சுவாச நோயும் உண்டாகலாம்.

செல்லப் பிராணிகளின் குட்டிகளை மிகவும் அக்கறையுடன் கவனிக்கவும். ஆறு மாதத்திற்கும் குறைவான குட்டிகளுக்கு குடல் தோற்று நோய் ஏற்பட்டு அதன் காரணமாக வயிற்றுப் போக்கும், வாந்தியும் ஏற்படலாம்.

கோடைக்கால பராமரிப்பு என்பது நமக்கு மட்டுமல்ல; நம் செல்லப் பிராணிகளுக்கும் மிகவும் அவசியமான ஒன்று.

உங்கள் செல்லப் பிராணிகளின் நடவடிக்கை மற்றும் உணவுப் பழக்கம் இவற்றில் சின்ன அளவில் மாறுதல் தோன்றினாலும் உடனடியாக கால நடை மருத்துவரை அணுகவும்.

published in ooooor.com

One thought on “கோடையில் செல்லப் பிராணிகளின் பாதுகாப்பு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s