ஓரிகாமி கலை

அகிரா யுஷிசவா

“காகித ஓடம் கடலலை மீது …………” இந்தப் பாட்டுக் கேட்கும் போதெல்லாம் எனக்கு திரு. அகிரா யுஷிசவா நினைவுதான் வரும். நாம் குழந்தைகளாக இருந்தபோது செய்த காகிதக் கப்பல் பலருக்கு நினைவு இருக்கலாம்.

அகிரா யுஷிசவா (Akira Yozhizawa) காகிதத்தில் வெறும் ஓடம் மட்டுமல்ல, சுமார் 50,000 க்கும் மேற்பட்ட காகித மாதிரிகளைச் செய்திருக்கிறார். 1911, மார்ச் மாதம் 14 ஆம் தேதி ஜப்பான் நாட்டில் கமிநோகவா (Kaminokawa) என்ற இடத்தில் பிறந்த இவருக்கு இந்த ஆண்டு 101 வயது ஆகிறது. இவர் ஜப்பான் நாட்டின் பழமையான “ஒரிகாமி” என்ற அற்புதமான கலையின் கிராண்ட் மாஸ்டர் என்று போற்றப்படுகிறார். காகிதத்தை வைத்துக் கொண்டு செய்யும் இந்தக் கலைக்கு உயிர் அளித்தவர் அகிரா என்றால் மிகையாகாது. அவர் செய்த காகித மாதிரிகள் வெறும் காகிதங்களாக அல்லாமல் உயிர் உள்ளவைகளாகவே மாறிப் போயின என்பது உண்மை.

Ori என்றால் காகிதம் – kami என்றால் மடிப்பு என்றும் அர்த்தம். ஒரிகாமி (Origami) என்கிற ஜப்பானிய சொல் காகிதத்தை மடித்து செய்யும் கலையைக் குறிக்கிறது. இந்தக் கலையை வளர்த்தவர்களுள் திரு அகிரா மிக மிக முக்கியமானவர்.

குழந்தைப் பருவத்திலேயே ஒரிகாமி கலையை தானாகவே கற்றுக் கொள்ளுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். பால் பண்ணை விவசாயிக்கு பிறந்த இவர் தனது 13 வது வயதில் டோக்கியோவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார்.

தொழில்நுட்ப வரைவாளராக பதவி உயர்வு பெற்ற பின் இவருக்கு ஒரிகாமி கலையின் மேல் மிகுந்த காதல் ஏற்பட்டது. காரணம் என்ன தெரியுமா? தன் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வடிவியல் (geometry) சொல்லித் தருவதற்கு ஒரிகாமியை உபயோகப் படுத்தினார்.  தனக்குத் தெரிந்த ஒரிகாமி கலையை திரு. அகிரா வடிவியலைப் புரிந்து கொள்ளவும் மற்றவர்களுக்கு சொல்லித் தரவும் பயன்படுத்தினார்.

இந்த அரிய கலையை முழு நேரப் பணியாக மேற்கொள்ள விரும்பி 1937 இல் தொழிற்சாலை வேலையை விட்டு விட்டார். ஆனால் அவர் விரும்பிய அந்தக் கலை அவருக்கு சோறு போடவில்லை. வயிற்றுப் பிழைப்பிற்காக சுகுடனி (tsukudani) என்கிற கடற்பாசியைக் கொண்டு செய்த ஊறுகாயை வீடு வீடாகச் சென்று விற்று வந்தார். கலைஞனுக்கும் ஏழ்மைக்கும் என்ன ஒரு பந்தம்!

1944 ஆம் ஆண்டு வெளியான ஒரிகாமி ஷுகோ என்கிற புத்தகத்தில் இவரது படைப்புகள் முதல் முறையாக வெளியிடப் பட்டன. ஆயினும் 1951 இல் Asahi Graph பத்திரிகையில் வெளியான இவரது படைப்புக்கள் மூலம்தான் அவரது திறமை வெளி உலகிற்குத் தெரிய வந்தது. ஒரு தொழில் முறைக் கலைஞனாக இவரை அடையாளம் கட்டியது 1954 இல் இவர் வடிவமைத்த 12 ராசிகளின் காகித மாதிரிகள்தான்.

அதே ஆண்டு இவர் வெளியிட்ட ஒரு தனிக் கட்டுரையில், (ந்யு ஒரிகாமி ஆர்ட் – Atarashi Origami Geijutsu) ஒரிகாமி செய்முறையில் தனக்கென ஒரு வழியை ஏற்படுத்தினார். இந்த வழிமுறைக்கு “Yoshizawa-Randeltt system” என்று பெயரிட்டார். இதில் காகித மாதிரிகள் செய்யும் முறைக்கு என்றே தனித் தனியான வரை படங்கள், காகிதங்களை மடிக்க அம்புக் குறிகள், அடையாளங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டார். இதுவே இன்று வரை காகித மாதிரிகள் செய்பவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது. இந்தப் புத்தகம் இவரது வறுமைக்கும் விடிவெள்ளியாக இருந்தது. இதன் பிரதிபலிப்பாக தனது 43 வது வயதில் இன்டர்நேஷனல் ஒரிகாமி சென்டரை நிறுவினார் திரு அகிரா.

Felix Tikotin என்ற டச்சு சிற்பி  மூலம் முதல்முறையாக தனது தாய் நாட்டிற்கு வெளியே ஒரிகாமி கண்காட்சி ஒன்றை 1954 வது ஆண்டில் நடத்தினார். இதைத் தொடர்ந்து பல கண்காட்சிகளுக்கும் தனது படைப்புக்களை கொடுத்தார். என்ன ஆனாலும் தனது படைப்புக்களை விற்பதற்கு இவர் ஒப்பவே இல்லை. கேட்பவர்களுக்கு தனது பரிசாகவே கொடுத்தார். அதைப் போலவே பல்வேறு நிறுவனங்களுக்கும் தனது படைப்புக்களை இலவசமாகக் கொடுத்து கண்காட்சி நடத்திக் கொள்ள அனுமதி கொடுத்தார்.

இவரது இரண்டாவது மனைவி கியோ யுஷிசவா இவரது மேலாளராக இருந்ததுடன் இவருடன் இணைந்து ஒரிகாமியை சொல்லிக் கொடுப்பதிலும் ஈடுபட்டார்.

ஒரிகாமியில் பல தொழில் நுட்பங்களை புகுத்தி காகித மாதிரிகளின் அனைத்து வடிவங்களும் வெளி வருமாறு செய்தார் திரு அகிரா. இவர் உருவாக்கிய வெட் ஃபோல்டிங் (wet folding) முறையினால் காகித மாதிரிகள் அழகிய வட்ட வடிவம் கொண்டதாயும், கை தேர்ந்த சிற்பி ஒருவர் செதுக்கியது போன்ற தோற்றம் தருவதாயும் அமைந்தன. மாதிரிகள் செய்வதற்கு முன் காகிதங்களை நீரில் நனைத்து, அந்த ஈரக் காகிதங்களில் உருவம் செய்வதுதான் வெட் ஃபோல்டிங் முறை.

தனக்குக் கை வந்த கலையை விற்க விரும்பாத இந்தக் கலைஞனுக்கு ஜப்பானிய அரசு தனது குடிமக்களுக்கு வழங்கும் மிக உயரிய விருதான ‘Order of the Rising Sun’ விருதினைக் கொடுத்து கௌரவித்தது. ஜப்பான் நாட்டின் கலாச்சாரத் தூதுவராகவும் இவரை நியமித்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டது ஜப்பானிய அரசு.

இவரது அயராத உழைப்பாலும், படைப்புத் திறமையினாலும்  ஒரிகாமி படைப்புகள் வெறும் கலை வடிவம் என்பதைத் தாண்டி ஒரு முழுமையான, உயிரோட்டம் மிக்க கலைப் படைப்பாக இன்றும் உலகின் பல இடங்களிலும் வாழ்ந்து வருகிறது.

சென்ற வருடம் இவரது 100 வது பிறந்த நாளன்று  கூகிள் நிறுவனம் தனது லோகோவை இவரது ஒரிகாமி முறையில் அமைத்து இந்த உன்னதக் கலைஞனை நினைவு கூர்ந்தது.

2005 வது ஆண்டு நிமோனியாவால் பாதிக்கப் பட்டு மார்ச் மாதம் 14 ஆம் தேதி தனது 94 வது வயதில் இறைவனடி சேர்ந்தார் திரு. அகிரா.

கலைஞன் மறைந்தாலும் அவனது கலை மறையாது என்பதற்கு இணங்க

திரு. அகிராவின் படைப்புக்கள் காலத்தை வென்று நிற்கும்!

published in ooooor.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s