Uncategorized

வாயுத் தொல்லை

வாயுத் தொல்லை

உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாயுத் தொல்லையினால் அவதிப் படுகிறார்கள். இது ஒரு வியாதி அல்ல; ஆனால் ஒரு வியாதியின் அறிகுறியாக இருக்கலாம். நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம், வயிற்றுக்கும் மார்பிற்கும் நடுவே வலி – சில சமயங்களில் மார்பை அடைப்பது போன்ற உணர்வு இவையெல்லாம் வாயுத் தொல்லையின் அறிகுறிகளாக இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அறிகுறிகள் காணப்படும்.

வாயுத்தொல்லை ஏற்படக் காரணம்
நாம் உண்ணும் உணவு சரிவர செரிமானம் ஆகாமல் போவதுதான் வாயுத்தொல்லை ஏற்படக் காரணம்.
உணவு நம் இரைப்பைக்குள் சென்று அங்கு பலவிதமான செரிமான நீர்களுடன் கலந்து செரிக்கப் படுகின்றன.
அவ்வாறு செரிக்கப்படாத உணவின் மிச்சங்கள் பெருங்குடலுக்குள் சென்று வாயுவாக மாறுகிறது.

ஏன் சரிவர செரிமானம் ஆவதில்லை என்றால், நம்முடைய சாப்பிடும் பழக்கம் சரிவர இருப்பதில்லை. அதாவது தினமும் குறிப்பிட்ட நேரத்தில் நம் வயதிற்கும் நாம் செய்யும் வேலையின் அளவிற்கும் ஏற்ற சாப்பாட்டை சாப்பிடத் தவறுகிறோம். காலை உணவை தவிர்ப்பது, பசி நேரத்தில் காபி, தேநீர் முதலிய பானங்களை குடிப்பது, நீண்ட நேரத்திற்கு பட்டினி கிடப்பது அல்லது கிடைத்ததையெல்லாம் கிடைத்த போதெல்லாம் தின்பது என்று நம் வயிற்றை நாமே பாடாய் படுத்துகிறோம். ‘உனக்காக உழைக்கும் என்னை நீ சரியாக கவனிக்கவில்லை’ என்ற நம் வயிற்றின் கூக்குரல் தான் இந்த வாயுத் தொல்லை.

இன்னொரு காரணம்: சாப்பிடும்போதோ, நீர் குடிக்கும்போதோ அதிகமான காற்றையும் சேர்த்து விழுங்கிவிடுவது. அவசரமாக உணவை விழுங்குவது, சூயிங்கம், பான், புகையிலை மெல்லும்போது நிறைய காற்று நம் வயிற்றினுள் சென்றுவிடுகிறது. அதே போல கரியமில வாயு சேர்த்த குளிர் பானங்கள் உட்கொள்ளும்போது அதில் இருக்கும் வாயு நம் வயிற்றினுள் சென்று சேர்கிறது. (நாம் தினமும் பிராண வாயுவை சுவாசித்து கரியமில வாயுவை வெளியிடுகிறோம். அந்தக் கரியமில வாயுவை குளிர் பானத்தில் செலுத்தி பாட்டிலில் அடைத்து விற்கிறார்கள். அவர்கள் வியாபாரிகள் – நாம் அதை வாங்கி குடிக்கிறோமே! என்ன கொடுமை இது சரவணன் என்று கேட்க தோன்றுகிறதா?)
இப்படி கார்பனேடட் பானங்களைக் குடிப்பதாலும் வாயுத் தொல்லை ஏற்படும். காசு கொடுத்து நம் உடம்பை நாமே கெடுத்துக் கொள்ளுகிறோம்.

மலச்சிக்கல்: உணவு மிக நீண்ட நேரம் வயிற்றில் தங்குவதாலும், கழிவுப் பொருட்கள் சரியாக வெளியேற்றப் படாததும் கூட வாயுத் தொல்லைக்குக் காரணமாகலாம்.

அல்சர் எனப்படும் குடல் புண்:
இதுவும் கூட வாயுத் தொல்லைக்குக் காரணம். சரிவர மருத்துவம் செய்துகொள்ளாவிட்டால் வேறு பல சிக்கல்களை உண்டாக்கும்.

வேறு  காரணங்கள்:

 •  உணவுக் குழாய், குடல், சிறுகுடலின் முற்பகுதியில் ஏற்படும் கோளாறுகள்.
 •  வயிற்றில் அதிகப்படியான அமிலங்கள் சுரப்பது.
 •  குடலில் இருக்கும் திசுக்கள் மெலிவடைவது.
 • பித்தப்பை, கணையம் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்.

வாயுத் தொல்லையை எப்படித் தவிர்ப்பது?

இதற்கு மிக முக்கியம் குறிப்பிட்ட நேரத்தில் உண்பது. எந்தப் பொருட்கள் சாப்பிட்டால் வாயு ஏற்படும் என்று உங்களுக்கே ஓரளவு தெரிந்திருக்கும். அந்தப் பொருட்களை தயவு தாட்சண்யமின்றி விட்டு விட்டுங்கள். சிலருக்கு பால் பால்சார்ந்த பொருட்கள் கூட வாயுத் தொல்லையைக் கொடுக்கும். மொச்சை வகைகள், முட்டை கோஸ், காலி ப்ளவர், உருளைக் கிழங்கு, வாழைக்காய், பருப்பு வகைகள் வாயுத் தொல்லையை உண்டாக்கும்; தவிர்ப்பது அல்லது சிறிய அளவில் தின்பது நல்லது. சமைக்கும் போது, இஞ்சி, பெருங்காயம் சேர்த்து சமைப்பது வாயுவைக் குறைக்கும்.

அதிகக் கொழுப்பு, அதிக நார்சத்துப் பொருட்கள் செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆகிறது. அவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள். நார்சத்து உணவு செரிமானத்திற்கு உதவினாலும், குடலில் நீண்ட நேரம் தங்குவதால் வாயுவை உண்டுபண்ணுகிறது. ஒரே நேரத்தில் நிறைய சாப்பிடாமல், சமமான இடைவெளியில் குறைந்த அளவு சாப்பிடுங்கள். நீண்ட நேரப் பட்டினி வேண்டாம். சாப்பிடும்போது ஆத்திரம் அவசரம் கூடாது. உணவை நிதானமாக மென்று தின்னுங்கள்.  இதனால் செரிமானம் நன்றாக ஆவதுடன், வாயு தோன்றுவதும் தடுக்கப்படுகிறது.

புதிதாக சமைக்கப்பட்ட உணவை உண்ணவும். காபி, தேநீர், ஆல்கஹால் முதலியவற்றை அதிகம் குடிக்காமல் ஒரு அளவில் நிறுத்திக் கொள்ளலாம். அதிகப்படியான வேலை, வேலை டென்ஷன், மனதில் தோன்றும் பய உணர்வு இவை போன்றவையும் செரிமானத்தை பாதிக்கும். புகைப் பழக்கம், குடிப்பது இவையும் வயிற்றுக்குப் பகைவர்கள்.

அதிகக் காரம், மசாலா, எண்ணையில் பொறித்த உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். இரவு நேரம் கழித்து உண்பது வேண்டாம்.

அசிடிட்டிக்கென்று எடுத்துக் கொள்ளும் மருந்துகளை அடிக்கடி சாப்பிடவேண்டாம். முதலில் குணம் ஏற்படுவதுபோல தோன்றினாலும் நாளடைவில் வயிற்றைக் கெடுத்துவிடும். அதேபோலே வலி நிவாரணிகளும் வயிற்றுக்கு நல்லதல்ல.

தினசரி உடற்பயிற்சி செய்வதும் மிக அவசியம். சாப்பிட்டவுடன் சிறிது நடக்கலாம்.

ஒரு எச்சரிக்கை:

சிலசமயம் இதய நோய்க்குண்டான அறிகுறிகள், வாயுத்தொல்லைக்கு உண்டான அறிகுறிகள் போலவே இருக்கும். எந்த ஒரு உடல் பாதிப்பானாலும் மருத்துவர் உதவியை நாடுவது நல்லது. வாயுத் தொல்லைதானே என்று நினைத்து அலட்சியப் படுத்தவேண்டாம். ஆரம்ப நிலையில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் பல நோய்களை முற்றவிடாமல் நம்மை நாமே பாது காத்துக் கொள்ளலாம்.

நாம் போடும் உணவைத் தின்று நமக்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கும் நம் வயிற்றை நாமே கெடுத்துக் கொள்ளலாமா? நிதானமாக சாப்பிட்டு, ஆரோக்கியமாக வாழலாம்.

published in a2ztamilnadunews.com

Advertisements

10 thoughts on “வாயுத் தொல்லை

 1. நமஸ்காரம் மேடம்,

  ரொம்ப உபயோகரமான தகவல். இன்றைக்கு 100க்கு 50 சதவிகிதத்தினருக்கு இத்தொல்லை இருக்கும், இ்ரவு பணியே இதற்கு காரணம். கடுகு சார் பதிவில் தாங்கள் ரா.கி. அவரின் கடித குறிப்பு படிக்க வந்த எனக்கு ஓர் அறிய தகவல் நன்றி.
  வேணும் நமஸ்காரம்,
  தங்கள் உண்மையுள்ள,
  கி. பாலகுருநாதன்,
  வேலூர்.

  1. வாங்க குருநாதன் ஸார். வணக்கம்.
   இந்தப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்பது பற்றி மகிழ்ச்சி.
   இனி அடிக்கடி வருகை தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

   //வேணும் நமஸ்காரம், தங்கள் உண்மையுள்ள// இந்த formalities எல்லாம் வேண்டாம் ஸார்! ஜாலியாக வந்து படித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

   உங்கள் அறிமுகம் சந்தோஷத்தைக் கொடுக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s