Uncategorized

நினைவாற்றல்

நினைக்கத் தெரிந்த மனமே….

நினைவாற்றல் என்பது பிறக்கும் போது நம்  எல்லோருக்கும் ஒரே அளவாகத்தான் இருக்கிறது. நாம் வளர வளர நம் நினைவாற்றல் வளருகிறது அல்லது குறைகிறது. ‘வர வர எதுவுமே நினைவு இருப்பதில்லை; வயசாகிவிட்டது’ என்று நம்மில் பலர் சொல்லுகிறோம். பார்க்கபோனால் நாம் எல்லோருமே நமக்கு பிடித்த விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ளுகிறோம்; திரைப் படப் பாடல்கள் நினைவில் நிற்பது போல பாடப் புத்தகத்தில் நாம் படிப்பவை  நினைவில் இருப்பதில்லை.

சரி, நம் நினைவாற்றலுக்குக் காரணமான நம் மூளையைப் பற்றி சிறிது பார்க்கலாம். நம் மூளையானது ஒரு தசை பகுதி. எத்தனைக்கெத்தனை அதனை உபயோகப் படுத்துகிறோமோ, அத்தனைக்கத்தனை அது வலுவானதாக இருக்கும். யாரையும் பார்த்து “உனக்கு மூளையே இல்லையா? மூளையை கழற்றி வைத்து விட்டாயா? மூளை  வேலை செய்யாதா?” என்று கேட்க கூடாது. ஏனெனில் நம் எல்லோருக்கும் மூளை கட்டாயம் இருக்கிறது. மூளையை கழற்றி வைப்பது முடியாது. எந்த வயதானாலும் நம் மூளை வேலை செய்து கொண்டே இருக்கும்.

மூளையின் அமைப்பு:

மனித மூளை என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயம். நம் மூளையின் எந்தப் பகுதி எந்தச் செயலைச் செய்கிறது என்று பார்ப்போமா? நம் மண்டை ஓட்டுக்குள் இரண்டு அரை உருண்டைகளாக அமைந்துள்ளது நம் மூளை. ஒவ்வொரு அரை உருண்டையிலும் 4 மடல்கள் உள்ளன. இவையெல்லாம் சேர்ந்தே நம்மை செயல் புரியத் தூண்டுகின்றன.
Frontal Lobes: ( ஃப்ரன்டல் லோப்ஸ்)
இவை நமது நெற்றிப் பகுதிக்கு கீழே இருப்பவை. இவை நமது நினைவாற்றலுக்கும், மொழித் திறமைக்கும், திட்டமிடுதல், பிரச்சினையைத் தீர்ப்பது, தன்னிச்சை செயல்கள் ஆகியவற்றிற்கும் பொறுப்பு.
Parietal lobes: (பெரியேடல் லோப்ஸ்) இவை நமது மேல் தலையின் பின்பகுதியில் இருக்கின்றன. இவை நம் புலன்களின் மூலம் வரும் செய்திகளை (முக்கியமாக தொடு உணர்ச்சி) வாங்கி அதற்குத் தக்காற்போல நம்மை செயல்பட வைக்கின்றன.
Temporal Lobes(டெம்போரல் லோப்ஸ்): காதுகளுக்கு மேலாக மூளையின் இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ள இவற்றால் தான் நாம் கேட்க முடிகிறது. நமது பேச்சு, மற்றும் மொழித் திறமையிலும் இவற்றின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
Occipital lobes: இவைதான் நம் பார்வைக்குக் காரணமானவை. இவை தலையின் பின்புறம் இரண்டு பக்கங்களிலும் உள்ளன.

Cerebellum இது நாம் நிலை தடுமாறாமல் நிற்பதற்கும் நடப்பதற்கும் செயல்களின் ஒருங்கிணைப்புக்கும் காரணம்.

மூளையின்  வேலைத் திறனை  சில ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை மேற் கொள்ளுவதன் மூலம் அதிகரிக்க முடியும்.

 1. அமைதியான, தேவையான தூக்கம்:  நம் எல்லோருக்கும் குறைந்த பட்சம் 8 மணி நேரத் தூக்கம் வேண்டும் என்றாலும் நல்ல தூக்கம் வரும்போது ஒரு 15 நிமிடம்(சின்ன கோழித் தூக்கம்)  தூங்கினால் கூட போதும். நமது உடல் தனக்குத் தேவையான ஓய்வைப் பெற்றுவிடும். இதைத்தான் ஆங்கிலத்தில் power nap என்கிறார்கள். தூங்கும் நேரத்தில் அதைத் தவிர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லதல்ல. அது நம் மூளையின் திறனையும் குறைக்கிறது.  ‘Early to bed, early to rise’ பல முறை கேட்டு கேட்டு அலுத்துவிட்ட போதிலும் நம் மூளை நன்றாக செயல் பட இந்தப்  பழக்கம் மிகவும் அவசியம்.
 2. போஷாக்கான உணவுப் பழக்கம்: நாம் சாப்பிடும் உணவின் மூலம் நம் மூளைக்கும் தேவையான சக்தி கிடைக்கிறது.  உணவில் நிறைய பழங்கள், முழு தானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.  இவற்றைத் தவிர வைட்டமின் B, B12, B6 போலிக் அமிலம்,  ஒமேகா – 3 எனப்படும் கொழுப்பு நிறைந்த உணவுகள், வைட்டமின் E, C, முதலியவைகளும் நம் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும்.
 3. புகை பிடித்தலும், மது அருந்துதலும்: இந்த இரண்டு பழக்கங்களும் மூளைக்கு பிராண வாயுவை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்களை சுருங்கச் செய்கின்றன. அளவுக்கு மீறி குடித்தல் நரம்புத் தளர்ச்சியை உண்டுபண்ணும்.
 4.  உடற்பயிற்சி: தினந்தோறும் தவறாமல்  உடற்பயிற்சி செய்வது அவசியம். இதன் மூலம், நம் மூளைக்குத் தேவையான பிராண வாயு கிடைக்கிறது. வயதானவர்கள் நடைப் பயிற்சி செய்வதன் மூலம் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளலாம்.

நம் மூளை என்பது நம் உடலில் இரண்டு சதவிகிதம் தான் என்றாலும், இதயம் அனுப்பும் இரத்தத்தில் 20 சதவிகிதம் மூளைக்குச் செல்லுகிறது. நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து 20 சதவிகித பிராணவாயு மூளைக்குச் செல்லுகிறது. அதனால் தான் பிரணாயாமம் செய்யும் போது நம் உடம்பு, மனம் சுறுசுறுப்பாகிறது. நம் உடலின் எல்லாப் பகுதிகளும் மூளையுடன் தொடர்பு கொண்டிருப்பதால் நம்மால் வலிகளையும் மற்ற உணர்வுகளையும் உணருகிறோம் ஆனால் மூளையில் அடிபட்டால் அதற்கு வலி தெரியாது என்பது ஒரு ஆச்சரியம்.

மூளையை எப்படி திறம்பட உபயோகிக்கலாம்?

 • ஏதாவது புதிய திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
 • அது உங்களுக்கு ஒரு சவாலாக இருக்கவேண்டும்.
 • அடிப்படை நிலையிலிருந்து கடினமான நிலைகளுக்குச் செல்லும்படி அமையவேண்டும்.
 • காண்பது, கேட்பது என்று எல்லாவித திறமைகளையும் அதில் முழுமையாக  ஈடுபடுத்துங்கள். இதன் காரணமாக மூளையின் அனைத்துப் பகுதிகளும் புத்துணர்ச்சி பெறுகின்றன.
 • ‘புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டேன்’ என்ற எண்ணம் மூளையை உற்சாகப்படுத்தும்.

இத்தனை பலனையும் அளிக்கக்கூடிய திறமை என்ன?

ஒரு புதிய மொழியைக் கற்கலாம். எழுதுவதிலிருந்து  ஆரம்பித்து மெது மெதுவே அந்த மொழியில் நீங்களே கதை கவிதை எழுதும் அளவுக்குப் போகலாம். ‘அட! என்னாலும் இன்னொரு மொழியில் புலமை பெற முடிகிறதே!’ என்ற உற்சாகம் தான் நமது மூளைக்கு நாம் கொடுக்கும் பரிசு.

பல பந்துகளை மேலே எறிந்து அவை கீழே விழாமல் மாற்றி மாற்றி பிடிக்கும் ‘ஜக்ளிங்’ (juggling) விளையாட்டைக் கற்கலாம். முதலில் இரண்டு பந்து பிறகு மூன்று, நான்கு என்று அதிகப் பந்துகளை பிடிக்கப் பழகிக் கொள்ளலாம். இந்த விளையாட்டில் நமது கவனம்,  பார்க்கும் திறன், இவற்றுடன் நமது கைகளுக்கும் (உடலின் ஒவ்வொரு பகுதிக்கும்)  பயிற்சி கிடைக்கிறது.

மூளையைப் பற்றிய சில தவறான கருத்துக்கள்:

 • நாம் நமது மூளையின்  10 சதவிகிதம் மட்டுமே உபயோகிக்கிறோம்: 
  நாம் தினமும் நம் மூளையின் எல்லாப் பகுதியையும் பயன்படுத்துகிறோம் என்பதே நிஜம். உதாரணத்திற்கு நீங்கள் இந்த கட்டுரையை படித்துக் கொண்டிருக்கிறீர்கள்; உங்கள் கையில் காபி கோப்பை இருக்கிறது என்றால் உங்கள் கண்கள் இக்கட்டுரையைப் பார்க்கின்றன;   ஒரு கை கணினியில் இப்பக்கத்தை மேலும் கீழும் நகர்த்திக்கொண்டிருக்கிறது;  இன்னொரு கை காபி கோப்பையை ஏந்திக் கொண்டிருக்கிறது; அவ்வப்போது ஒரு வாய் காபியை ரசிக்கிறீர்கள்; உங்களது நாவினில் இருக்கும் சுவை நரம்புகள் காபி நன்றாக இருக்கிறதா இல்லையா என்றும் உங்கள் அறிவுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது; இன்னொரு பக்கம்  இந்தக் கட்டுரையை பற்றிய எண்ணங்களும் மனதில் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இவை அத்தனையும் நடக்கும் அதே வேளையில் நீங்கள் சுவாசிக்கிறீர்கள், நீங்கள் குடிக்கும் காபி ஜீரணம் ஆகிக்கொண்டிருக்கிறது, இமைகள் துடிக்கின்றன–இப்படி பல வேலைகள் மூளையின் எல்லாப் பகுதிகளாலும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
 • ஒருவரின்  ஆளுமை அல்லது தனித் திறமையை வைத்து அவர் வலது மூளையை அதிகம் பயன் படுத்துகிறார அல்லது இடது மூளையை அதிகம் பயன் படுத்துகிறார என்று அறியலாம்:

          இதுவும் தவறானது. நமது மூளையின் இரண்டு பகுதிகளும் ஒன்றுக்கொன்று இணையாகவே வேலை  செய்கின்றன. மிக சமீபத்தில்
எடுக்கப்பட்ட மூளையின் ஸ்கேன் மூலம் இரண்டு பகுதிகளும் ஒரே வேலையின் பல்வேறு பகுதிகளை நிறைவேற்றுகின்றன. நாம்
செய்யும் எந்தக் காரியத்திலும் நம் வலது, இடது மூளைப் பகுதிகளின் பங்கு உண்டு. இதனால் வலது பக்க மூளை மட்டும்
பயன்படுகிறது என்றோ இடது பக்க மூளை மட்டும் வேலை செய்கிறது என்பதோ இல்லை. உதாரணத்திற்கு ஒரு மொழியைக்
கற்கும்போது (மொழிக்கான இடம் இடது பக்க மூளை என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது.) நம் மூளையின் இடப்பக்கம் இலக்கணம்,
உச்சரிப்பு போன்றவற்றையும், வலது பக்கம் பேசும்போது ஏற்படும் ஏற்ற இறக்கங்களையும் பதிவு செய்துகொள்ளுகின்றன.

 • மூளையில் ஏற்படும் பாதிப்புகள் நிரந்தரமானவை:

ஒவ்வொருவர் மூளையிலும் குறிப்பிட்ட அளவு செல்கள்தான் உள்ளன; அதனால் விபத்தாலோ, மற்ற காரணங்களாலோ மூளையில் பாதிப்பு ஏற்பட்டால் அதை சரி செய்யமுடியாது என்று பல காலம் நினைத்திருந்தோம். ஆனால், மூளையில் இருக்கும் செல்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ளும் என்று தற்சமயம் கண்டுபிடித்திருக்கிறார்கள். நாம் புதிதாக ஏதாவது கற்றுக்கொண்டால் நம் மூளையும் அதற்கு ஏற்றாற்போல் தன்னை புதுப்பித்துக் கொள்ளுகிறது.

ஒன்றே ஒன்று மட்டும் நிஜம்: நமது உடலின் வலது பக்கத்தை நமது இடது மூளையும் இடது பக்கத்தை வலது மூளையும் இயக்குகின்றன என்பது மட்டும் மிக மிக நிஜம்.

 

published in a2ztamilnadunews.com

Advertisements

5 thoughts on “நினைவாற்றல்

 1. அப்பப்பா எத்தனை தகவல்கள்!
  சேகரித்துத் தந்தமைக்கு மிக நன்றி.
  தெரிந்த தெரியாத புதுத் தகவல்கள்.
  நன்றி. இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

 2. உங்களின் நினைவாற்றலுக்கு ஒரு சபாஷ் நிறைய நல்ல தகவல்கள் பேஷ் பேஷ்
  இத்தூனுண்டு மூளை இவ்வளவு வேலை செய்கிறதா? நம்பவே முடியவில்லையே? தகவல்களூக்கு நன்றி ரஞ்சனி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s