Uncategorized

கூடங்குளம்

தற்சமயம் மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் கூடங்குளம் அணு மின் நிலையம் அமைப்பதற்கான  ஒப்பந்தம்  1988 ஆம் ஆண்டு நவம்பர்  4 ஆம் தேதி இந்தியா ரஷ்ய அரசாங்கங்களால் கையெழுத்திடப்பட்டது.கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கட்டுமானப் பணிகள் மிகவும் மெதுவாகவே நடை பெற்றது. 1991 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா  பிளவு பட்டதும், NSG (Nuclear Suppliers Group) யில் குறிப்பிடப்பட்ட பல ஷரத்துக்கள் இந்த ஒப்பந்தத்தில் மீறப்பட்டதாக அமெரிக்க புகார் கூறியதும் இதற்கு காரணங்கள்.

ரஷ்யாவிலிருந்து வரும் அணு மின் நிலையத்திற்கான பொருட்களை நேரடியாக இறக்குமதி செய்ய ஒரு சிறிய துறைமுகமும் கட்டப்பட்டது. 2004  மாவது ஆண்டு ஜனவரி 4 ஆம் நாள் இத்துறைமுகம் இயங்க ஆரம்பித்தது. 2004 ஆம் ஆண்டுக்கு முன் வரை அணு மின் நிலையத்திற்கான பொருட்கள் தூத்துக்குடித் துறைமுகத்திலிருந்து தரை மூலமாக கூடங்குளத்திற்கு கொண்டு வரப் பட்டது.

இந்த அணு மின் நிலையம் அமைக்கத் தொடங்குவதற்கு முன்போ அல்லது கட்டுமானப் பணிகள் ஆரம்பித்த பின்போ எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை. ஆனால் பல வருடங்களுக்கு பின், அதுவும் அணு உலைகள் தயாராகி உற்பத்தியைத் தொடங்குவதற்கு முன் போராட்டம் வெடித்திருக்கிறது. போராட்டக்காரர்கள் இந்த அணு மின் நிலையம் இயங்கத் துவங்கினால் தங்களது வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும், அதனால் இந்த திட்டத்தையே முற்றிலுமாக கைவிடும் படியும் கூறுகிறார்கள். அணு மின் நிலையத்தினால் ஏற்படும் அபாயம் குறித்துத் தாங்கள் பயப்படுவதாக போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள். சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை விபத்தும் பிரான்ஸ் நாட்டில் அணு உலை அருகில் நடந்த குண்டு வெடிப்பும் தங்களுக்கு அதிக பீதியை ஏற்படுத்துவதாக இவர்கள் சொல்லுகிறார்கள்.

வேறு சிலர், 1986 -ல் நடந்த செர்நோபில் அணு விபத்தும் 1984 ல் ஏற்பட்ட போபால் கேஸ் விபத்தும் இவர்களுக்கு இந்த திட்டம் ஆரம்பிக்கப் படுவதற்கு முன் நினைவுக்கு வரவில்லையா என்று கேட்கிறார்கள்.

கூடங்குளம் போராட்டக்காரர்கள் சொல்லும் காரணங்கள்:

  1. சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை விபத்து.
  2. அணு சக்தி கழிவுப் பொருட்களை கடலில் போடுவதால் 500  மீட்டர் தொலைவிற்கு மீன் பிடிக்கத் தடை போடப்படும். அணுசக்தி கழிவினால் மீனினங்களுக்கு அபாயம் நேரலாம். அதனால் மீனவர்களின் வாழ்வு பாதிக்கப்படும்.
  3. மிக முக்கியமான காரணம்: அணு உலையில் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அந்தப் பகுதி மக்கள் இரண்டு மணி நேரத்திற்குள் அந்த பகுதியிலிருந்து வெளியேற்றப்படவேண்டும். இது சாத்தியமா என்ற கேள்வி மக்கள் மனதில் பலவிதமான பயன்களை தோற்றுவித்திருக்கிறது. ஏனெனில் போதுமான சாலை வசதி, போக்குவரத்து ஆகியவை இன்னும் சரிவர ஏற்படவில்லை.
  4. கதிரியக்கத்தால் நுரையீரல் புற்று நோய், தைராய்டு கோளாறுகள் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படும் என்று மக்கள் மனதில் பயம் தோன்றியிருக்கிறது.

திரு. அப்துல் கலாம் அவர்களின் கருத்துகள்:

இதெல்லாம் ஒரு புறமிருக்க முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்கள் கூடங்குளம் அணு மின் நிலைய திட்டத்தைப் பற்றி தன் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். நம் நாடு வல்லரசு நாடாக மாற இந்த திட்டம் நமக்கு மிகவும் தேவை என்கிறார் அவர். பாதுகாப்பான அணு மின் நிலையங்களால் ஆபத்து எதுவும் இல்லை; அணு உலைகளின் நம்பகத்தன்மை, பாதுகாப்பு, இயற்கை சீற்றங்களினால் வரும் பாதிப்பு போன்றவற்றை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தவேண்டும்; நம் நாட்டிற்கு இந்த திட்டம் எத்துணை அவசியம் என்கிற விஷயத்தை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்கிறார். நீர்மின்னியல், சூரிய சக்தி இவைகளைப் போல அணு மின் சக்தியும் சுற்றுப்புற சூழலுக்கு உகந்தது என்பது அவரது கருத்து.

பிரதம மந்திரி திரு. மன்மோகன் சிங் அவர்களின் கருத்துகள்:

பிரதம மந்திரி திரு. மன்மோகன் சிங் இந்த கூடங்குளம் விவகாரம் குறித்து தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், இந்தியாவில் தமிழகம் தொழில் துறையில் மிகவும் முன்னேறிய நிலையில் இருப்பதைக் குறிப்பிட்டு, கூடங்குளம் அணு மின் நிலையம் செயல் படத்துவங்கினால் அது தமிழகத்தின் முன்னேற்றத்தில்  மற்றொரு மைல் கல்லாக இருக்கும் என்றும் தமிழக மக்களின் பாதுகாப்பு, அவர்களது தொழில்,வாழ்க்கை முறை ஆகியவற்றில்  மத்திய அரசு மிகவும் அக்கறை கொண்டுள்ளது  என்றும் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல் பட தமிழக முதல்வரின் ஒத்துழைப்பை தாம் பெரிதும் நாடுவதாகவும்  கூறியுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கல்வி, போக்குவரத்துக்கான பாதைகள் அமைப்பது, குடிநீர் வசதி, போன்ற பல்வேறு நலத் திட்டங்களை  அரசு செய்து வருகிறது. மேலும்,அணு மின் சக்தி நம் போன்ற வளரும் நாடுகளுக்கு மிகவும் இன்றியைமையாதது; நாட்டின் நன்மையை கருத்தில் கொண்டே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது; நம் நாட்டில் உள்ள மற்ற அணு மின் நிலையங்களின் பாதுகாப்பு மிகச் சிறந்த நிலையில் உள்ளதால் கூடங்குளம் குறித்து எந்த வித பயமும் தேவையில்லை என்று தனது கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வரின் கருத்துகள்:

தமிழக முதல்வரோ மத்திய அரசு இத்திட்டத்தை கைவிடுவது நல்லது என்ற வகையில் பேசிவருகிறார். கூடங்குளம் பகுதி மக்களின் கவலையை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்; கூடங்குளம் குழப்பத்திற்கு மத்திய அரசு மாநில அரசை பழி சொல்லுவது போல இருக்கிறது; மத்திய அரசும், அணு ஆற்றல் நிறுவனமும் (ந்யுக்ளியர் பவர் கார்பரேஷன் இந்தியா) தான் முழு பொறுப்பை எடுத்துக்கொண்டு மக்களின் கேள்விகளுக்கு தகுந்த விடைகளைக் கூறவேண்டும்; மத்திய அரசு உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

கூடங்குளம் ந்யுக்ளியர் பவர் ப்ராஜெக்ட் உயர் அதிகாரிகளின் கருத்துகள்:

இது இப்படி இருக்க, கூடங்குளம் ந்யுக்ளியர் பவர் ப்ராஜெக்ட் உயர் அதிகாரி ஒருவர் கூறுகிறார்:

“கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு அணு உலைகளை அனுப்பும் ரஷ்ய நிறுவனம் இந்தியாவின் அணு சக்தி சம்பந்தப்பட்ட உள்நாட்டு பொறுப்புச் சட்ட திட்டத்தின் (Civil Liability Law)  கீழ் வராது. 1988  ஆண்டில் இந்த ஒப்பந்தம் கைஎழுத்தானபோது நம் நாட்டில் இந்த மாதிரியான சட்டங்கள் எதுவும் இருக்கவில்லை. இந்த ரஷ்ய நிறுவனம் 2 அணு உலைகளை அனுப்பியிருக்கிறது. 3 வது மற்றும் 4 வது அணு உலைகள் இறக்குமதி செய்வது குறித்து இன்னும் ஒப்பந்தம் கையெழுத்து ஆகவில்லை; இதுவும் உள்நாட்டு பொறுப்புச் சட்டத்தின் கீழ் வருமா என்பது குறித்து தான் எதுவும் சொல்ல இயலாது” என்றும் அவர் கூறினார்.

கூடங்குளம் பகுதி வாழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களை கையகப்படித்திக் கொண்டதற்கு உண்டான பணத்தை மாநில அரசிடம் ஒப்படைத்துவிட்டதாகவும், இனி மாநில அரசுதான் பணப் பங்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். நிலச் சொந்தக் காரர்களிடம் பணத்தை நேரடியாகக் கொடுப்பதில்லை என்றார் அவர்.

சுற்றுப்புற சுழல் பாதுகாவலர்களைப் பற்றிச் சொல்லும்போது ” தாங்கள் மட்டுமே தேசத்தைப் பற்றி மிகவும் அக்கறை கொண்டிருப்பவர்கள் என்று அவர்கள் (சுற்றுப்புற சுழல் பாதுகாவலர்கள்) நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களை குற்றவாளிகளாக நினைக்கிறார்கள். தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வாகன விபத்தில் சிக்கி இறக்கிறார்கள். அவர்களைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை” என்றும் கடுமையாக விமரிசித்தார்.

கூடங்குளம் உயர் மட்டக் குழு:

இத்தனை வாதங்கள், விவாதங்கள், போராட்டங்களுக்கு நடுவில் தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் மத்திய அரசு ஒரு உயர் மட்டக் குழுவை கூடங்குளம் விவகாரத்தை பற்றிய கணிப்பீடு செய்ய அமைத்துள்ளது. இந்தக் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதிகள், இந்த திட்டத்தை எதிர்ப்பவர்களின் பிரதிநிதிகள் என பலதரப்பட்ட அதிகாரிகள் இடம் பெற்றுள்ளார்கள். மக்களிடையே எழுந்துள்ள பயத்தைப் போக்க, மத்திய, மாநில அரசுகள் இரண்டு குழுக்களை அமைத்துள்ளது.

எதிர்ப்புக் குழு கோரிக்கைகள்:

கூடங்குளம் அணு மின் திட்ட எதிர்ப்புக் குழு அரசு அமைத்துள்ள உயர் மட்டக் குழுவிடம் பல கேள்விகளைக் கேட்டுள்ளது. கூடவே இந்திய ரஷ்ய நாடுகளுக்கு இடையே கையெழுத்திட்ட ஒப்பந்த பிரதியையும் கேட்டிருக்கிறது. White paper report  என்று சொல்லப்படும் வெள்ளைத்தாள் அறிக்கையையும் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்திருக்கிறது.

இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு வாய் மூடி மௌனியாக நிற்கிறான் சாதாரண இந்தியக் குடிமகன்!

published in a2ztamilnadunews.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s