கர்ப்பகாலத்தில் அனுசரிக்க வேண்டியவை

ஒரு பெண்ணுக்கு தாய்மை என்பது அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. 24/7 வேலை என்கிறோமே, அது போல தாய்மை என்பது இடைவிடாத வேலை. ஓய்வு என்கிற பதத்திற்கே இடமில்லை. ஆனாலும் எந்த ஒரு பெண்ணும் தாய்மையை சுமையாகக் கருதுவதே இல்லை. பத்து மாதங்களும் தன் குழந்தையை சுமப்பதில் ஒரு அலாதியான சுகமாகவே நினைக்கிறாள்.

கர்ப்பம் தரித்த பெண் முதலில் செய்ய வேண்டியது என்னென்ன?
உடனடியாக ஒரு மகப் பேறு மருத்துவரை நாடி, தன்னையும் தன் வயிற்றில் வளரும் குழந்தையையும் எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுவது என்று தெரிந்து கொள்ளுவதுதான்.

 • குழந்தை வளருவதால் ஒவ்வொரு மாதமும் கர்ப்பவதியின் எடை அதிகரிக்கும்.. சரியான அளவில் இந்த எடை கூடுகிறதா என்று பார்க்க வேண்டும்.
 • கணவன், மனைவி இருவருடைய குடும்பத்திலும் அப்பாவுக்கோ அல்லது அம்மாவுக்கோ இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அல்லது வேறு ஏதாவது பரம்பரை நோய்  இருந்தால் கர்ப்ப காலத்தில் அவை  தாக்காமல் பார்த்துக் கொள்ளுவதும் ஒருவேளை தாக்கினால் பாதுகாத்துக் கொள்ளவும் தெரிந்து கொள்ள வேண்டும்.
 • கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வர வாய்ப்பு இருப்பதால் மருத்துவரிடம் பேசவும். தகுந்த முன்னெச்செரிக்கையுடன் இருந்தால் இந்நோயகளைத் தவிர்க்கலாம்.

உணவுப் பழக்கம்:

தற்போது நீங்கள் உண்ணும் உணவுதான் உங்களுடைய மற்றும் உங்கள் கருவிலிருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஆதாரம் என்பதால் நல்ல சத்தான ஆகாரங்களை உண்ணுதல் அவசியம். புரோடீன், கால்சியம், அயன் (iron), போலிக் ஆசிட், விட்டமின்கள் A

E,C மற்றும்,B வகைகள் மிக முக்கியமாக தினமும் உணவில் தேவையான அளவில் சேர்க்கப்பட வேண்டும்.

கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன.  ஒரு பெண் இரண்டு முறை கருத்தரித்தால் இரண்டு முறையும் வேறு வேறுவிதமான மாறுதல்கள் ஏற்படும். ஆனால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் சில மாறுதல்கள் எல்லாப் பெண்களுக்கும் பொதுவானவை.

அவை என்னென்ன என்று பார்ப்போம்:

 1. பெண்ணின் கருமுட்டையும் ஆணின் விந்துவும் இணைந்து உருவான சினை மெது மெதுவே  நகர்ந்து நகர்ந்து கர்ப்பபையை அடைந்து அதனுடைய சுவர்களில் ஒட்டிக்கொண்டு வளர ஆரம்பிக்கிறது.
 2. மாத விடாய் நின்று கர்ப்பம் வளர உதவும் ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கின்றன.
 3. கர்ப்பவதியின் எடை கூடுகிறது.
 4. மார்பகங்கள் பெரிதாகின்றன.

கர்ப்ப காலத்தை பொதுவாக மூன்று மூன்று மாதங்களாக பிரிக்கிறார்கள்.

முதல் மூன்று மாதங்கள்: ( 1 – 12 வாரங்கள் வரை)

 • கரு முளை (embryo)  கர்ப்பபையைப் பிடித்துக் கொண்டு வளர ஆரம்பிக்கிறது. அதை சுற்றி நஞ்சு கொடியும் வளரத் தொடங்குகிறது.
 • கரு முளையின் திசுக்கள் வளரத் தொடங்குகின்றன.
 • 5 வது வாரத்தில் கருமுளையில் மூளை, முதுகுத் தண்டு, இதயம் உருவாகிறது.
 • இப்போது கரு முளை மூன்று தளங்களாக இருக்கும். வெளிப்புற அடுக்கிலிருந்து (ectoderm) சருமம், மத்திய மற்றும் சுற்றுப்புற நரம்பு மண்டலம், கண்கள், உட்செவி முதலானவையும் அவற்றை இணைக்கும் திசுக்களும் தோன்றுகின்றன.
 • அடுத்த உட்புற அடுக்கிலிருந்து இரத்த ஓட்டத்திற்கான அமைப்பு,

சில பெண்கள் இந்த முதல் மூன்று மாதங்களில் எடை குறைவதுண்டு. மார்னிங் சிக்னெஸ் என்று சொல்லப்படும் உடல்  அசதி, வாந்தி, மூட்டுக்களில் வலி, வியர்வை முதலியவை பொதுவாக எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும். வாந்தியும், குமட்டலும் சிலருக்கு நாள் முழுதுமே இருக்கும். அதிக எண்ணெய் இல்லாத உணவை சாப்பிடுவது நல்லது. இந்த மூன்று மாதங்களில் உடல் உஷ்ணம் கூடும். அடிக்கடி சிறு நீர் கழிப்பது, மலக் கட்டு, மிகுந்த அசதி ஆகியவையும் இந்த முதல் மூன்று மாதங்களில் இருக்கும். காரணமில்லாமல் அதீத சந்தோஷம், அதிக கோபம் என்று மாறி மாறி உண்டாவதும் கூட கரு வளர்ச்சிக்கான ஹார்மோன்கள் அதிக அளவில் சுரப்பதால்தான்.

நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள் சாப்பிடுவதும், அதிக அளவில் தண்ணீர் குடிப்பதும் ஆரோக்கியத்திற்கு நல்லது. காபி குடிப்பதை குறைத்துக்கொண்டு, கிரீன் டீ குடிக்கலாம்.

கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தன்னையும் தன்னை சுற்றியுள்ள இடத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுவது மிக மிக முக்கியம். சுத்தமான துணிகளை அணியவேண்டும். தினமும் குளிக்க வேண்டும். நன்கு சுத்தப்படுத்தப் பட்ட குடிநீரையே குடிக்க வேண்டும். சுகாதாரமான முறையில் தயார் செய்யப்பட உணவையே உண்ணவேண்டும். உணவில் முக்கியமாக DHA (decosa hexaanoic acid) எனப்படும் கொழுப்பு  சத்து அவசியம் இருக்க வேண்டும். கருவிலிருக்கும் குழந்தையின்  மூளை மற்றும்  கண்ணின் விழித்திரை நன்கு உருவாவதற்கு இந்த கொழுப்புச் சத்து இன்றியமையாதது. அதுமட்டுமில்லாமல், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்திக்கும், நோய்க் கிருமிகளை வெளியேற்றவும் இந்த கொழுப்புச் சத்து தேவை. உணவில் இருக்கும் இந்த சத்து குழந்தையின் கண் பார்வைக்கும், பிரச்சினைகளை சமாளிக்கும் திறமைக்கும், பொதுவான வளர்ச்சிக்கும் உதவுகிறது. கடல் உணவுகளிலும், கடுகு, கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய், மெந்தியம், வால் நட்ஸ், ப்ளக்ஸ் சீட்ஸ் (flax seeds) மற்றும் சோயா பீனிலும்இந்த  DHA கிடைக்கிறது. சிறிய அளவில் கீரை வகைகளிலும் காணப் படுகிறது.

நார் சத்து அதிகம் தேவை:

பேறு காலத்தில் நம் இரைப்பை, நாம் உண்ணும் உணவில் இருந்து அதிகமான  சத்துப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டி சிறிது மெதுவாகவே செயல் படுகிறது. மேலும் கர்ப்பப் பை பெரிதாகிக்கொண்டே இருப்பதால் இரைப்பையை அழுத்துகிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படுவது உண்டு. நிறைய நார் சத்து உள்ள காய்கறிகளை குறிப்பாக பீன்ஸ், கொத்தவரங்காய், அவரைக் காய், வாழைத் தண்டு சாப்பிடுவதால் இதனைத் தவிர்க்கலாம்.

கர்ப்பகாலத்தில் ஒரு பெண் கடைப்பிடிக்க வேண்டியவைகள்:

ஒரு பெண்ணுக்கு தாய்மை என்பது அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. 24/7 வேலை என்கிறோமே, அது போல தாய்மை என்பது இடைவிடாத வேலை. ஓய்வு என்கிற பேச்சிற்கே  இடமில்லை. ஆனாலும் எந்த ஒரு பெண்ணும் தாய்மையை சுமையாகக் கருதுவதே இல்லை. பத்து மாதங்களும்  குழந்தையை தன் வயிற்றில் சுமப்பதை ஒரு அலாதியான சுகமாகவே நினைக்கிறாள்.

கர்ப்பம் தரித்த பெண் முதலில் செய்ய வேண்டியது என்னென்ன?
உடனடியாக ஒரு மகப் பேறு மருத்துவரை நாடி,  தன்னையும் தன் வயிற்றில் வளரும் குழந்தையையும் எப்படி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுவது என்று தெரிந்து கொள்ளுவதுதான்.

 • குழந்தை வளருவதால்   ஒவ்வொரு மாதமும் கர்ப்பவதியின் எடை அதிகரிக்கும்.. சரியான அளவில் இந்த எடை கூடுகிறதா என்று பார்க்க வேண்டும்.
 • கணவன், மனைவி இருவருடைய குடும்பத்திலும் அப்பாவுக்கோ அல்லது அம்மாவுக்கோ இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அல்லது வேறு ஏதாவது பரம்பரை நோய்  இருந்தால் கர்ப்ப காலத்தில் அவை  தாக்காமல் பார்த்துக் கொள்ளுவதும் ஒருவேளை தாக்கினால் பாதுகாத்துக் கொள்ளவும் தெரிந்து கொள்ள வேண்டும்.
 • கர்ப்ப காலத்தில் மட்டும் சில பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வர வாய்ப்பு இருப்பதால் மருத்துவரிடம் பேசவும். தகுந்த முன்னெச்செரிக்கையுடன் இருந்தால் இந்நோய்களைத் தவிர்க்கலாம்.
 • அலர்ஜி, ஜலதோஷம், சளி முதலியவை பொதுவாக வரக் கூடியவை. சுய வைத்தியம் செய்து கொள்வதை விட்டு விட்டு மருத்துவரை நாடுவது நல்லது.

கர்ப்ப காலத்தில் பெண்ணின் உடலில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன.  ஒரு பெண் இரண்டு முறை கருத்தரித்தால் இரண்டு முறையும் வேறு வேறுவிதமான மாறுதல்கள் ஏற்படும். ஆனால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் சில மாறுதல்கள் எல்லாப் பெண்களுக்கும் பொதுவானவை.

அவை என்னென்ன என்று பார்ப்போம்:

 1. மாத விடாய் நின்று கர்ப்பம் வளர உதவும் ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கின்றன.
 2. கர்ப்பவதியின் எடை கூடுகிறது.
 3. மார்பகங்கள் பெரிதாகின்றன.

கர்ப்ப காலத்தை பொதுவாக மூன்று மூன்று மாதங்களாக பிரிக்கிறார்கள்.

சில பெண்கள்  முதல் மூன்று மாதங்களில் (1 – 12 வாரங்கள்) எடை குறைவதுண்டு.  மார்னிங் சிக்னெஸ் என்று சொல்லப்படும் காலையில் எழுந்திருக்கும்போதே உடல்  அசதி, வாந்தி, மூட்டுக்களில் வலி, வியர்வை முதலியவை பொதுவாக எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும். வாந்தியும், குமட்டலும் சிலருக்கு நாள் முழுதுமே இருக்கும். அதிக எண்ணெய் இல்லாத உணவை சாப்பிடுவது நல்லது. இந்த மூன்று மாதங்களில் உடல் உஷ்ணம் கூடும். அடிக்கடி சிறு நீர் கழிப்பது, மலக் கட்டு, மிகுந்த அசதி ஆகியவையும் இந்த முதல் மூன்று மாதங்களில் இருக்கும். காரணமில்லாமல் அதீத சந்தோஷம், அதிக கோபம் என்று மாறி மாறி உண்டாவதும் கூட கரு வளர்ச்சிக்கான ஹார்மோன்கள் அதிக அளவில் சுரப்பதால்தான்.

இரண்டாவது 3 மாதங்களில் (13 – 28 வாரங்கள்) வாந்தியும், குமட்டலும் ஓரளவுக்கு நின்றிருக்கும். ஆனால் பல்வேறு விதமான அறிகுறிகள் உண்டாகும். முதுகு, அடிவயிறு, தொடை முதலான பாகங்களில் வலி ஏற்படலாம். வயிறு பெரிதாவதால் சருமத்தில் கோடுகள் ஏற்படும். உள்ளங்கை, உள்ளங்கால்கள், வயிறு ஆகிய பாகங்களில் அரிப்பு ஏற்படும். சில சமயங்களில் கை மரத்துப்போவது உண்டு. குதிகால், கை விரல்கள், முகம் முதலிய பாகங்களில் வீக்கம் தோன்றக்கூடும். கருவறைக்குள் குழந்தை அசையத் தொடங்குவதும் இந்த கால கட்டத்தில் தான்.

மூன்றாவது 3 மாதங்களில் (29 – 40 வாரங்கள்) muthal ஆறு மாதங்களில் ஏற்பட்ட அறிகுறிகள் பல இப்போதும் தொடரக் கூடும். புதிதாக மூச்சு விடுவது சிறிது சிரமமாக இருக்கும். நெஞ்செரிச்சல் உண்டாகும். குழந்தை வளர்ந்து கொண்டே போவதால் கர்ப்பப் பை விரிவடைந்து மற்ற உள்ளுறுப்புகளை அழுத்துகிறது. இரவுத் தூக்கம் சற்று குறையும்.

சுகாதாரம்:

கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தன்னையும் தன்னை சுற்றியுள்ள இடத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளுவது மிக மிக முக்கியம். சுத்தமான துணிகளை அணியவேண்டும். தினமும் குளிக்க வேண்டும். நன்கு சுத்தப்படுத்தப் பட்ட குடிநீரையே குடிக்க வேண்டும். சுகாதாரமான முறையில் தயார் செய்யப்பட உணவையே உண்ணவேண்டும்.

உணவுப் பழக்கம்:

தற்போது நீங்கள் உண்ணும் உணவுதான் உங்களுடைய மற்றும் உங்கள் கருவிலிருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஆதாரம் என்பதால் நல்ல சத்தான ஆகாரங்களை உண்ணுதல் அவசியம். புரோடீன், கால்சியம், அயன் (iron), போலிக் ஆசிட், விட்டமின்கள் A

E,C மற்றும்,B வகைகள் மிக முக்கியமாக தினமும் உணவில் தேவையான அளவில் சேர்க்கப்பட வேண்டும்.

நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள் சாப்பிடுவதும், அதிக அளவில் தண்ணீர் குடிப்பதும் ஆரோக்கியத்திற்கு நல்லது. காபி குடிப்பதை குறைத்துக்கொண்டு, கிரீன் டீ குடிக்கலாம்.

உணவில் முக்கியமாக DHA (decosa hexaanoic acid) எனப்படும் கொழுப்பு  சத்து அவசியம் இருக்க வேண்டும். கருவிலிருக்கும் குழந்தையின்  மூளை மற்றும்  கண்ணின் விழித்திரை நன்கு உருவாவதற்கு இந்த கொழுப்புச் சத்து இன்றியமையாதது. அதுமட்டுமில்லாமல், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்திக்கும், நோய்க் கிருமிகளை வெளியேற்றவும் இந்த கொழுப்புச் சத்து தேவை. உணவில் இருக்கும் இந்த சத்து குழந்தையின் கண் பார்வைக்கும், பிரச்சினைகளை சமாளிக்கும் திறமைக்கும், பொதுவான வளர்ச்சிக்கும் உதவுகிறது. கடல் உணவுகளிலும், கடுகு, கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய், மெந்தியம், வால் நட்ஸ், ப்ளக்ஸ் சீட்ஸ் (flax seeds) மற்றும் சோயா பீனிலும்இந்த  DHA கிடைக்கிறது. சிறிய அளவில் கீரை வகைகளிலும் காணப் படுகிறது.

நார் சத்து அதிகம் தேவை:

பேறு காலத்தில் நம் இரைப்பை, நாம் உண்ணும் உணவில் இருந்து சத்துப் பொருட்களை முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டி சிறிது மெதுவாகவே செயல் படுகிறது. மேலும் கர்ப்பப் பை பெரிதாகிக்கொண்டே இருப்பதால் இரைப்பையை அழுத்துகிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படுவது உண்டு. நிறைய நார் சத்து உள்ள காய்கறிகளை குறிப்பாக பீன்ஸ், கொத்தவரங்காய், அவரைக் காய், வாழைத் தண்டு சாப்பிடுவதால் இதனைத் தவிர்க்கலாம்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியது:

குழந்தையை சுமப்பது வேண்டுமானால் சுகமான சுமையாக இருக்கலாம். ஆனால் வேலை பளுவையும் சேர்த்து சுமப்பது என்பது கொஞ்சம் கஷ்டம்தான். என்ன செய்யலாம்?

 • இரவுப் பணியில் இருப்பவர்கள் சிறிது காலத்திற்கு காலை வேளைக்கு மாற்றிக் கொள்ளலாம். நிறைய ஓய்வு தேவைப் படுவதாலும், இரவு தூக்கம் கர்ப்பிணிப் பெண்ணுக்கு மிக முக்கியம் என்பதாலும் உயர் அதிகாரியிடம் பேசி வேலை நேரத்தை மாற்றி கொள்ளலாம்.
 • சில மாதங்களுக்கு அதிக மன அழுத்தம் கொடுக்காத, சிறிது சுலபமான வேலையை கொடுக்குமாறு உங்கள் மேலதிகாரியிடம் கேட்டுக் கொள்ளலாம்.
 • உங்களுக்கு  வருடத்தில் எத்தனை விடுமுறை நாட்கள் உண்டோ அவற்றை சேமியுங்கள். குழந்தை பிறந்தபின் எடுக்கலாம். குழந்தையுடன் அதிக நேரம் செலவழிக்கவும், உங்கள் ஆரோக்கியத்தை மறுபடி சீர் படுத்திக் கொள்ளவும் இந்த நாட்கள் உதவும்.
 • நீங்கள் கர்ப்பம் தரித்திருப்பதை ஆரம்ப நாட்களிலேயே உங்கள் பணி இடத்தில் மேலதிகாரியிடம் சொல்லுவது நல்லது. அடுத்த சில மாதங்களிலேயே நீங்கள் விடுமுறையில் போவது தெரிந்து குறைந்த நாட்களில் முடிக்கும்  படியான வேலையை அவர் உங்களுக்கு கொடுக்க சம்மதிப்பார்.
 • உங்களது இடத்தில் இன்னொருவரைத் தயார் செய்வதும் அவருக்கு சுலபமாக இருக்கும்.
 • மிகவும் சிரமமாக இருக்கும் நாட்களில் உங்களுடன் கூட வேலை செய்பவர்களின் உதவியை நாடுங்கள்.
 • பேருந்துகளில் வேலைக்குச் செல்லுபவராக இருந்தால் சற்று முன் கூட்டியே பேருந்து நிலையத்திற்கு சென்று விடுங்கள். இதனால், அதிக கூட்டம், அதிக நேரம் பேருந்திற்காக நிற்பது போன்றவற்றை தவிர்க்கலாம்.
 • பேருந்திலிருந்து இறங்கும் போதும் ஏறும்போதும் அதிக எச்சரிக்கைத் தேவை. இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டுவது, அல்லது பின்னால் உட்கார்ந்து செல்வதை தவிருங்கள்.
 • நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமருவதைத் கூடிய மட்டும் தவிர்த்து விடுங்கள். அலுவலகத்தில் அவ்வப்போது சிறிது நடப்பது நல்லது.

உடைகள்:

மிகவும் இறுக்கமான உள்ளாடைகள் அணிய வேண்டாம். சற்று பெரிய அளவில் ரெடிமேட் ஆடைகளை வாங்குங்கள் . பருத்தி ஆடைகள் அணிவது உத்தமம்.

குழந்தைப் பேறு ஒரு பெரிய வரம். கர்ப்பம் தரிப்பது என்பது ஒரு நோய் அல்ல. என்னென்ன செய்யவேண்டும் என்னென்ன செய்யக் கூடாது என்று சரியாகத் தெரிந்து கொண்டு நடந்தால் குழந்தையும் தாயும் மிக ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.

published in a2ztamilnadunews.com

ஸ்ரீபுரம்

வேலூர் என்றால் வேலூர் கோட்டை நினைவுக்கு வரும். அல்லது சி.எம்.சி. மருத்துவமனை  நினைவுக்கு வரலாம். மற்றும் வெகு சிலருக்கு வாணியம்பாடியில் உள்ள  ‘ஏழைகளின்ஊட்டி’ என்றழைக்கப்படும் ஏலகிரி நினைவில் வரலாம். ஆனால் தற்போது வேலூருக்கு கிடைத்திருக்கும் புது அடையாளம் ஸ்ரீபுரத்தில் அமைந்துள்ள பொற்கோவில்.

ஸ்ரீபுரம் என்ற பெயருக்கு ஏற்ப இது மகாலக்ஷ்மிக்கான கோவில். கட்டி முடிக்கப்பட்டு சில வருடங்களே ஆகியிருந்தாலும் மிக பிரபலமாகிவிட்டது. பொற்கோவில் என்றால் பஞ்சாபிலுள்ள அமிர்தசரஸ் என்கிற நிலை மாறி தமிழ்நாட்டிலும் ஒரு பொற்கோவில் என்று சொல்ல வைத்திருக்கிறது   இந்த கோவில்.

இதன் பின்னணி

வேலூரிலிருந்து சுமார் 6 கி.மீ.தொலைவில் திருமலைக் கொடி என்ற இடத்தில் 100 ஏக்கரா நிலப் பரப்பில் 55,000 சதுர அடியில் அமைந்துள்ளது இந்தக் கோவில். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து  400 பொற்கொல்லர்களும் செப்பு வேலை செய்பவர்களும் ஆறு வருடங்கள் அயராது உழைத்து 600 கோடி ரூபாய் செலவில் இந்த கோவிலை வடிவமைத்து இருக்கிறார்கள். இங்கு வந்து தரிசனம் செய்யும் பக்தர்கள் இதனை உலக அதிசயங்களில் ஒன்று என்று கருதுவதாக சொல்லுகிறார்கள். முதலில் கோவிலின்  சுவர்களில் செப்புத்தகடுகள் அடிக்கபட்டு பிறகு தங்கத்தகடுகள் 9 அடுக்குகளாக வேயப்பட்டதாக சொல்லப்படுகிறது. உபயோகப்படுத்தப்பட்ட தங்கம் இந்திய ரிசர்வ்வங்கி மூலம் ஒளிவு மறைவின்றி வாங்கப்பட்டதாம்.

ஸ்ரீசக்திஅம்மா:
இக்கோவிலை தன்னுடைய இறை சக்தி மூலம் வடிவமைத்துள்ளார் ஸ்ரீசக்தி அம்மா. மிகச் சிறிய வயதிலேயே இறை ஞானம் பெற்றவர் இவர்  என்று இந்த கோவிலின் இணையதளம் இவரைப்பற்றி குறிப்பிடுகிறது. மனிதர்கள் தங்களைப் பற்றிய உண்மை அறிவு பெறவும், தர்ம நெறியில் நடந்து முக்தி பெறவும் இந்த கோவிலைதான் அமைத்ததாக ஸ்ரீசக்தி அம்மா கூறுகிறார். 1992 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம்தேதி தானே ஸ்ரீநாராயணி அம்மனாக அவதரித்து இருப்பதாக இவர் அதிகாரபூர்வமாக அறிவித்தார். “எப்போதெல்லாம் தர்மம் குறைந்து அதர்மம் தலை  தூக்குகிறதோ, அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன்; இந்த முறை நாராயணியாக அவதரித்து இருக்கிறேன். என் பெயர் சக்தி அம்மா” என்று சொன்னாதாக இணைய தளத்தில் ஒரு தகவல் காணக் கிடைக்கிறது.

ஸ்ரீநாராயணி பீடம்:
இது கைலாசகிரி என்ற சிறு குன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன் இந்த இடத்தில் பல சித்தர்களும் முனிவர்களும் கடும் தவம் செய்து லோகமாதாவை இந்நில உலகில் வந்து பிறக்க வேண்டும்  என்று பிரார்த்தனை செய்தார்களாம். அதன் காரணாமாகவே தற்போது சக்தி அம்மாவாக அவதாரம் எடுத்து இருக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன. ஸ்ரீநாராயணி பீடத்தில்தான் ஸ்ரீசக்திஅம்மா தங்கி இருக்கிறார்.

இந்தக் கோவிலுக்குச் செல்லும் வழி:
சென்னையிலிருந்து பல பேருந்துகள் வருகின்றன.  ஸ்ரீபுரத்திற்கு அருகில் இருக்கும் ரயில் நிலையம் காட்பாடி.
பெங்களூரிலிருந்து காட்பாடி  வந்து அங்கிருந்து ஸ்ரீபுரம் போகும் பேருந்து மூலம் செல்லலாம்.  சென்னையிலிருந்தும் மற்ற முக்கிய ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் இருக்கின்றன. காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை பலவிதமான தரிசனங்கள் உள்ளன. இந்த தரிசனங்களுக்கும் அபிஷகத்திற்கும் 2 மாதங்களுக்கு முன்பே பதிவு செய்து கொள்ளவேண்டும்.
பக்தர்கள் வந்து தங்க நல்ல வசதிகள் இருக்கின்றன.

கோவிலுக்குள்:

நுழைவாயிலிலிருந்துகிட்டத்தட்ட 3 கி.மீ. தொலைவு நடக்க வேண்டும். பாதுகாப்பு கெடுபிடிகள் சற்று அதிகம்தான். கைதொலைபேசி, காமிரா ஆகியவற்றை  எடுத்துப் போகக் கூடாது. எடுத்துப் போனால் கோவிலில் நுழைவதற்கு முன்பு அங்கு உள்ள பாதுகாப்பு அறைகளில் வைத்துவிட்டு பிறகு வெளியே வந்தவுடன் எடுத்துக் கொள்ளலாம். திருப்பதி கோவில் போலவே இங்கும் க்யூ உண்டு. ஸ்ரீசக்ரவடிவில் அமைந்துள்ள பாதையில் பக்தர்கள் போக வேண்டும். பாதை நெடுகிலும் நல்ல போதனைகள் பலவற்றைக் காணலாம்.

சீனியர் சிடிசன்களுக்கு கியூ இல்லை. நேராக செல்லலாம். குடும்பத்தவர் எவரும் அவருடன் செல்ல அனுமதி இல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கும், மிகவும்வயதானவர்களுக்கும் சக்கர நாற்காலிகள் தரப் படுகின்றன. தரிசனம் முடிந்து வெளியே வரும் போது லட்டு, பொங்கல் முதலிய பிரசாதம் கொடுக்கப்படுகின்றன. பக்தர்கள் லுங்கி, நைடிஸ், ஷார்ட்ஸ், பர்முடாஸ் போட அனுமதி இல்லை. புகை பிடித்தல், மது அருந்துதல் கூடாது.
வெகு நேரம் வரிசையில் நின்று விட்டு உள்ளே போனால் தூரத்தில் இருந்து தான் ஸ்ரீ மகாலக்ஷ்மியை தரிசிக்க முடிகிறது. பல பக்தர்களுக்கும் இதுதான் பெரிய குறையாக தெரிகிறது.
என்ன செய்கிறது? கலி காலத்தில் கடவுள் கூட கோவில் நிர்வாகிகளின் கைப்பாவை ஆகி விடுகிறார்!

published in a2ztamilnadunews.com

சர்க்கரை நோய் – சிறுவர் சிறுமியரையும் தாக்கும்

நேற்று  காலை செய்தி தாளைப் பிரித்தவுடன் முதலில் கவனத்தைக் கவர்ந்த செய்தி : “தாஜ் மஹால் இன்று இரவு நீலமாக மாறுகிறது!” என்பதுதான். ஆச்சரியத்துடன் படிக்க ஆரம்பித்தேன். விஷயம் இதுதான்: சிவப்பு ரிப்பன் HIV நோயைக் குறிக்கப் பயன் படுவதுபோல நீல ரிப்பன் அல்லது நீல நிறம் சர்க்கரை நோயைக் குறிக்கிறது. நவம்பர் 14 உலக சர்க்கரை நோய் தினமாக உலகெங்கும் அனுசரிக்கப்படிகிறது.இதன் காரணமாக  உலகெங்கும் உள்ள பிரபலமான நினைவுச் சின்னங்களை  உலக சர்க்கரை நோய் தினத்திற்கு முன் தினமான 13  ஆம் தேதி  இரவு நீல ஒளியில் மிளிரும்படி செய்யப்போகிறார்கள் என்று தெரியவந்தது. இப்படி செய்வதால் சர்க்கரை நோயைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே பரவும் என்று நம்புகிறார்கள்.

சர்க்கரை நோயைப் பற்றி மிக விரிவான விளக்கமும், வராமல் தடுக்கும் முறைகளும், வந்துவிட்டால் அதிகம் பாதிக்கபடாமல் தற்காத்துக் கொள்ளுவது பற்றியும் நிறைய செய்திகள் வந்திருந்தது.

தொடர்ந்து படித்தபோது இந்நோய் சிறுவர் சிறுமியரையும் பாதிக்கிறது என்று தெரிய வந்தது. முதலில் கவனத்தை கவர்ந்த செய்தி, படிக்க படிக்க மனதை கனக்கச் செய்யும் செய்தியாக மாறியது. சரியான முறையில் இந்நோயைப் பற்றி அறிந்து கொண்டு நம் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுப்பதன் மூலம் இந்நோயினால் சிறார்கள் முடங்கிவிடாமல் பார்த்துக் கொள்ளலாம் என்று அறிந்து என்  கவலை சிறிது குறைந்தது.

சிறுவர் சிறுமியருக்கு இந்நோய் வரக் காரணங்கள்:

 • சிறார்களுக்கு இயற்கையாகவே உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இருப்பது. இக்குறைப்பாட்டால் கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் பீட்டா செல்கள் அழிக்கப்படுகின்றன. இதன் காரணமாக உடம்பில் போதிய அளவு இன்சுலின் சுரப்பது இல்லை. இதனால் இரத்தம் மற்றும்   சிறுநீரில் இருக்கும் குளுகோசின் அளவு அதிகரிக்கிறது. இதையே சர்க்கரை நோய் என்று சொல்லுகிறார்கள்.
 • குடும்பத்தில் தகப்பனாருக்கு சர்க்கரை நோய் இருந்தால் குழந்தைகளுக்கு இந்நோய் வர 10% வாய்ப்பு இருக்கிறது. கூட பிறந்தவர்களுக்கு இருந்தால் 10% வாய்ப்பும், தாய்க்கு இருந்தால் 1% வாய்ப்பும் இருக்கிறது.
 • போலியோ, ரூபெல்லா அல்லது ஜெர்மன் மீசில்ஸ், ஹெபடைடிஸ் A முதலிய தொற்று நோய்களால் பாதிக்கப்படுதல்.
 • புற்று நோய் எதிர்ப்பு மருந்து உட்கொள்ளுதல், கணையத்தில் ஏற்ப்படும் புண்கள் முதலியவைகளும் பிற காரணங்களாக கருதப்படுகின்றன.

சிறுவர்கள் சிறுமியர்கள் அவர்களது வயதிற்கு மீறிய அதிக எடையுடன் இருப்பது இந்நோய் வர மிக முக்கிய காரணமாகும்.
அதிக எடையுடன் பருவமெய்தும் சிறுமிகளுக்கு சர்க்கரை நோயுடன் முகத்தில் தேவையற்ற முடிகளும் வளருகின்றன.
குடும்பத்தில் சர்க்கரை நோய் இருக்கும் பட்சத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிக மிக கவனத்துடன் பாதுகாப்பது அவசியம். அவர்களது உடல் எடையை அவ்வப்போது பரிசோதித்து எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பெற்றோர்களின் பங்கு:

பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறிய வயதில் சர்க்கரை நோய் வந்திருப்பதை நம்ப மறுப்பதுடன் ஏற்கவும் விரும்புவதில்லை. அவர்கள் சாப்பிடும் இனிப்புப் பண்டங்களே காரணம் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அல்லது எப்போதோ எடுத்துக் கொண்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை காரணம் காட்டுகிறார்கள். “சர்க்கரை நோய் வருவதற்கு சிறார்களை குற்றம் சொல்லுவதில் பயனில்லை. அதற்கு பதிலாக இந்நோயை பற்றிய முழு தகவல்களையும் அவர்களுக்கு சொல்லுங்கள். சர்க்கரை நோய்க்குண்டான தகுந்த உணவுப் பழக்கங்களை அவர்களிடத்தில் மெது மெதுவே ஏற்படுத்தி இந்நோயைக் கட்டுப்பாட்டில் எப்படி வைத்துக்கொள்ளுவது என்று அறிவுறுத்துங்கள்” என்கிறார்கள் மருத்துவர்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கீழ்க் கண்ட முறையில் உதவலாம்:

 • இரத்தத்தில் இருக்கும் குளுகோஸ் அளவை அவ்வப்போது தாங்களே பரிசோதித்து  அறிய கற்றுக் கொடுக்கலாம்.
 • இரத்தத்தில் சர்கரையின்  அளவு அதிகரிப்பது (hyperglycemia) அல்லது குறைவது (hypoglycemia) போன்றவற்றைப் பற்றியும் அவற்றின் அறிகுறிகளையும், தினமும் இன்சுலின் எடுத்துக் கொள்ளுவத்தின் முக்கியத்துவத்தையும் எளிய முறையில் சொல்லிக் கொடுக்கலாம்.
 • குழந்தைகளுக்கு இருக்கும் இந்நோயைப் பற்றி பள்ளியில் அவர்களது ஆசிரியர்களுக்கு சொல்லுவது, சர்க்கரையின் அளவு குறையும்போதோ, அதிகமாகும்போதோ உடனடியாகச் செய்ய வேண்டுவது என்ன என்பது பற்றியும் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டுவது மிக முக்கியம்.
 • தவறாமல் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதிப்பது, சர்க்கரை நோய்க்கான உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது, உடற் பயிற்சியின் அவசியத்தை அவர்களுக்கு சொல்லி தவறாமல் உடற் பயிற்சி செய்ய வைப்பவது, வேளை தவறாமல் இன்சுலின் (மருந்தாகவோ, ஊசி மூலமாகவோ ) கொடுப்பது  பெற்றோர்களின் கடமை.

சிறார்களுக்கான உணவுக் கட்டுப்பாடு:

 • உணவுக் கட்டுப்பாட்டு அட்டவணை ஒன்றை தயார் செய்ய வேண்டும். இந்த அட்டவணையின் படி உண்ணுவது நலம். உணவு என்பது காலை சிற்றுண்டி, மதியம் சாப்பாடு, இரவு ஆகாரம் – நடுநடுவே சிறு சிறு தின்பண்டங்கள் (சர்க்கரை நோய்க்கானது) என்று அமைவது நல்லது.
 • சைவ உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உணவில் நிறைய பச்சை காய்கறிகளையும் முளை கட்டிய தானியங்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
 • உணவில் புரதச் சத்து அதிகம் இருக்கும் உணவு வகைகளும், நார்ச் சத்து அதிகம் இருக்கும் உணவு வகைகளும் இருக்க வேண்டும். குறைந்த கலோரி இருக்கும் உணவு வகைகளை சேர்த்து அதிக கலோரி நிறைந்த உணவு வகைகளை தவிர்ப்பதும் நல்லது.
 • துரித உணவு, எண்ணையில் பொறித்த சிப்ஸ் மற்றும் குளிர் பானங்களையும் தவிர்க்க வேண்டும்.
 • ஆரோக்கியமான வாழ்வு முறையை அவர்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டும். தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்க வேண்டும்.
 • நன்றாக விளையாட ஊக்குவிக்கலாம்.
 • அவர்களது எடை கூடாமல் கண்காணிக்க வேண்டும்.

சர்க்கரை  நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மிகவும் இன்றியமையாதது. வருமுன் காப்பது நல்லது; வந்தபின்  இந்நோயை கட்டுப்பாட்டில் வைக்க நம் குழந்தைகளுக்கு நாம் எல்லாவிதத்திலும் உதவலாம்.

 

published in a2ztamilnadunews.com

கூடங்குளம்

தற்சமயம் மிகவும் பரபரப்பாகப் பேசப்படும் கூடங்குளம் அணு மின் நிலையம் அமைப்பதற்கான  ஒப்பந்தம்  1988 ஆம் ஆண்டு நவம்பர்  4 ஆம் தேதி இந்தியா ரஷ்ய அரசாங்கங்களால் கையெழுத்திடப்பட்டது.கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கட்டுமானப் பணிகள் மிகவும் மெதுவாகவே நடை பெற்றது. 1991 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா  பிளவு பட்டதும், NSG (Nuclear Suppliers Group) யில் குறிப்பிடப்பட்ட பல ஷரத்துக்கள் இந்த ஒப்பந்தத்தில் மீறப்பட்டதாக அமெரிக்க புகார் கூறியதும் இதற்கு காரணங்கள்.

ரஷ்யாவிலிருந்து வரும் அணு மின் நிலையத்திற்கான பொருட்களை நேரடியாக இறக்குமதி செய்ய ஒரு சிறிய துறைமுகமும் கட்டப்பட்டது. 2004  மாவது ஆண்டு ஜனவரி 4 ஆம் நாள் இத்துறைமுகம் இயங்க ஆரம்பித்தது. 2004 ஆம் ஆண்டுக்கு முன் வரை அணு மின் நிலையத்திற்கான பொருட்கள் தூத்துக்குடித் துறைமுகத்திலிருந்து தரை மூலமாக கூடங்குளத்திற்கு கொண்டு வரப் பட்டது.

இந்த அணு மின் நிலையம் அமைக்கத் தொடங்குவதற்கு முன்போ அல்லது கட்டுமானப் பணிகள் ஆரம்பித்த பின்போ எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை. ஆனால் பல வருடங்களுக்கு பின், அதுவும் அணு உலைகள் தயாராகி உற்பத்தியைத் தொடங்குவதற்கு முன் போராட்டம் வெடித்திருக்கிறது. போராட்டக்காரர்கள் இந்த அணு மின் நிலையம் இயங்கத் துவங்கினால் தங்களது வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும், அதனால் இந்த திட்டத்தையே முற்றிலுமாக கைவிடும் படியும் கூறுகிறார்கள். அணு மின் நிலையத்தினால் ஏற்படும் அபாயம் குறித்துத் தாங்கள் பயப்படுவதாக போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள். சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை விபத்தும் பிரான்ஸ் நாட்டில் அணு உலை அருகில் நடந்த குண்டு வெடிப்பும் தங்களுக்கு அதிக பீதியை ஏற்படுத்துவதாக இவர்கள் சொல்லுகிறார்கள்.

வேறு சிலர், 1986 -ல் நடந்த செர்நோபில் அணு விபத்தும் 1984 ல் ஏற்பட்ட போபால் கேஸ் விபத்தும் இவர்களுக்கு இந்த திட்டம் ஆரம்பிக்கப் படுவதற்கு முன் நினைவுக்கு வரவில்லையா என்று கேட்கிறார்கள்.

கூடங்குளம் போராட்டக்காரர்கள் சொல்லும் காரணங்கள்:

 1. சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை விபத்து.
 2. அணு சக்தி கழிவுப் பொருட்களை கடலில் போடுவதால் 500  மீட்டர் தொலைவிற்கு மீன் பிடிக்கத் தடை போடப்படும். அணுசக்தி கழிவினால் மீனினங்களுக்கு அபாயம் நேரலாம். அதனால் மீனவர்களின் வாழ்வு பாதிக்கப்படும்.
 3. மிக முக்கியமான காரணம்: அணு உலையில் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அந்தப் பகுதி மக்கள் இரண்டு மணி நேரத்திற்குள் அந்த பகுதியிலிருந்து வெளியேற்றப்படவேண்டும். இது சாத்தியமா என்ற கேள்வி மக்கள் மனதில் பலவிதமான பயன்களை தோற்றுவித்திருக்கிறது. ஏனெனில் போதுமான சாலை வசதி, போக்குவரத்து ஆகியவை இன்னும் சரிவர ஏற்படவில்லை.
 4. கதிரியக்கத்தால் நுரையீரல் புற்று நோய், தைராய்டு கோளாறுகள் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படும் என்று மக்கள் மனதில் பயம் தோன்றியிருக்கிறது.

திரு. அப்துல் கலாம் அவர்களின் கருத்துகள்:

இதெல்லாம் ஒரு புறமிருக்க முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்கள் கூடங்குளம் அணு மின் நிலைய திட்டத்தைப் பற்றி தன் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். நம் நாடு வல்லரசு நாடாக மாற இந்த திட்டம் நமக்கு மிகவும் தேவை என்கிறார் அவர். பாதுகாப்பான அணு மின் நிலையங்களால் ஆபத்து எதுவும் இல்லை; அணு உலைகளின் நம்பகத்தன்மை, பாதுகாப்பு, இயற்கை சீற்றங்களினால் வரும் பாதிப்பு போன்றவற்றை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுத்தவேண்டும்; நம் நாட்டிற்கு இந்த திட்டம் எத்துணை அவசியம் என்கிற விஷயத்தை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்கிறார். நீர்மின்னியல், சூரிய சக்தி இவைகளைப் போல அணு மின் சக்தியும் சுற்றுப்புற சூழலுக்கு உகந்தது என்பது அவரது கருத்து.

பிரதம மந்திரி திரு. மன்மோகன் சிங் அவர்களின் கருத்துகள்:

பிரதம மந்திரி திரு. மன்மோகன் சிங் இந்த கூடங்குளம் விவகாரம் குறித்து தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், இந்தியாவில் தமிழகம் தொழில் துறையில் மிகவும் முன்னேறிய நிலையில் இருப்பதைக் குறிப்பிட்டு, கூடங்குளம் அணு மின் நிலையம் செயல் படத்துவங்கினால் அது தமிழகத்தின் முன்னேற்றத்தில்  மற்றொரு மைல் கல்லாக இருக்கும் என்றும் தமிழக மக்களின் பாதுகாப்பு, அவர்களது தொழில்,வாழ்க்கை முறை ஆகியவற்றில்  மத்திய அரசு மிகவும் அக்கறை கொண்டுள்ளது  என்றும் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல் பட தமிழக முதல்வரின் ஒத்துழைப்பை தாம் பெரிதும் நாடுவதாகவும்  கூறியுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கல்வி, போக்குவரத்துக்கான பாதைகள் அமைப்பது, குடிநீர் வசதி, போன்ற பல்வேறு நலத் திட்டங்களை  அரசு செய்து வருகிறது. மேலும்,அணு மின் சக்தி நம் போன்ற வளரும் நாடுகளுக்கு மிகவும் இன்றியைமையாதது; நாட்டின் நன்மையை கருத்தில் கொண்டே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது; நம் நாட்டில் உள்ள மற்ற அணு மின் நிலையங்களின் பாதுகாப்பு மிகச் சிறந்த நிலையில் உள்ளதால் கூடங்குளம் குறித்து எந்த வித பயமும் தேவையில்லை என்று தனது கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வரின் கருத்துகள்:

தமிழக முதல்வரோ மத்திய அரசு இத்திட்டத்தை கைவிடுவது நல்லது என்ற வகையில் பேசிவருகிறார். கூடங்குளம் பகுதி மக்களின் கவலையை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்; கூடங்குளம் குழப்பத்திற்கு மத்திய அரசு மாநில அரசை பழி சொல்லுவது போல இருக்கிறது; மத்திய அரசும், அணு ஆற்றல் நிறுவனமும் (ந்யுக்ளியர் பவர் கார்பரேஷன் இந்தியா) தான் முழு பொறுப்பை எடுத்துக்கொண்டு மக்களின் கேள்விகளுக்கு தகுந்த விடைகளைக் கூறவேண்டும்; மத்திய அரசு உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

கூடங்குளம் ந்யுக்ளியர் பவர் ப்ராஜெக்ட் உயர் அதிகாரிகளின் கருத்துகள்:

இது இப்படி இருக்க, கூடங்குளம் ந்யுக்ளியர் பவர் ப்ராஜெக்ட் உயர் அதிகாரி ஒருவர் கூறுகிறார்:

“கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு அணு உலைகளை அனுப்பும் ரஷ்ய நிறுவனம் இந்தியாவின் அணு சக்தி சம்பந்தப்பட்ட உள்நாட்டு பொறுப்புச் சட்ட திட்டத்தின் (Civil Liability Law)  கீழ் வராது. 1988  ஆண்டில் இந்த ஒப்பந்தம் கைஎழுத்தானபோது நம் நாட்டில் இந்த மாதிரியான சட்டங்கள் எதுவும் இருக்கவில்லை. இந்த ரஷ்ய நிறுவனம் 2 அணு உலைகளை அனுப்பியிருக்கிறது. 3 வது மற்றும் 4 வது அணு உலைகள் இறக்குமதி செய்வது குறித்து இன்னும் ஒப்பந்தம் கையெழுத்து ஆகவில்லை; இதுவும் உள்நாட்டு பொறுப்புச் சட்டத்தின் கீழ் வருமா என்பது குறித்து தான் எதுவும் சொல்ல இயலாது” என்றும் அவர் கூறினார்.

கூடங்குளம் பகுதி வாழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களை கையகப்படித்திக் கொண்டதற்கு உண்டான பணத்தை மாநில அரசிடம் ஒப்படைத்துவிட்டதாகவும், இனி மாநில அரசுதான் பணப் பங்கீடு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். நிலச் சொந்தக் காரர்களிடம் பணத்தை நேரடியாகக் கொடுப்பதில்லை என்றார் அவர்.

சுற்றுப்புற சுழல் பாதுகாவலர்களைப் பற்றிச் சொல்லும்போது ” தாங்கள் மட்டுமே தேசத்தைப் பற்றி மிகவும் அக்கறை கொண்டிருப்பவர்கள் என்று அவர்கள் (சுற்றுப்புற சுழல் பாதுகாவலர்கள்) நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்களை குற்றவாளிகளாக நினைக்கிறார்கள். தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வாகன விபத்தில் சிக்கி இறக்கிறார்கள். அவர்களைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை” என்றும் கடுமையாக விமரிசித்தார்.

கூடங்குளம் உயர் மட்டக் குழு:

இத்தனை வாதங்கள், விவாதங்கள், போராட்டங்களுக்கு நடுவில் தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் மத்திய அரசு ஒரு உயர் மட்டக் குழுவை கூடங்குளம் விவகாரத்தை பற்றிய கணிப்பீடு செய்ய அமைத்துள்ளது. இந்தக் குழுவில் தமிழக அரசின் பிரதிநிதிகள், இந்த திட்டத்தை எதிர்ப்பவர்களின் பிரதிநிதிகள் என பலதரப்பட்ட அதிகாரிகள் இடம் பெற்றுள்ளார்கள். மக்களிடையே எழுந்துள்ள பயத்தைப் போக்க, மத்திய, மாநில அரசுகள் இரண்டு குழுக்களை அமைத்துள்ளது.

எதிர்ப்புக் குழு கோரிக்கைகள்:

கூடங்குளம் அணு மின் திட்ட எதிர்ப்புக் குழு அரசு அமைத்துள்ள உயர் மட்டக் குழுவிடம் பல கேள்விகளைக் கேட்டுள்ளது. கூடவே இந்திய ரஷ்ய நாடுகளுக்கு இடையே கையெழுத்திட்ட ஒப்பந்த பிரதியையும் கேட்டிருக்கிறது. White paper report  என்று சொல்லப்படும் வெள்ளைத்தாள் அறிக்கையையும் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்திருக்கிறது.

இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு வாய் மூடி மௌனியாக நிற்கிறான் சாதாரண இந்தியக் குடிமகன்!

published in a2ztamilnadunews.com

இந்தியனாக இருப்போம்!

இந்தியாவில் பிறந்த பின் இந்தியனாக இல்லாமல் வேறு எப்படி இருக்கமுடியும்? நான் இந்தியன்தான் என்கிறீர்களா? உண்மைதான். இந்தியாவில் பிறந்ததால் இந்தியனாக இருக்கிறோம். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு நம் நாட்டின் பொருளாதாரம் பற்றி தெரியும்? பண வீக்கம் பற்றி தெரியுமா? பணம் எப்படி வீங்கும் என்று அப்பாவித் தனமாக கேட்கும் இந்தியர்களே அதிகம்.

பண வீக்கம் என்றால் என்ன?

உங்களிடம் 100 ரூபாய் இருக்கிறது. அதில் நீங்கள் வாங்கும் பொருளின் மதிப்பு 80 ரூபாய் என்றால், அதாவது 100 ரூபாயின் மதிப்பு உண்மையில் 80 ரூபாய் என்பதுதான் பணவீக்கம் என்று சொல்லப்படுகிறது. இன்னும் சுலபமாகப் புரிய வேண்டுமானால் ஒரு காலத்தில் 100 ரூபாயில் நீங்கள் வாங்கிய பொருட்களை இப்போது அதே விலையில் வாங்க முடியாது. 50 வருடங்களுக்கு முன் தங்கம் ஒரு பவுன் 100 ரூபாய். இப்போது? பொருட்களின் விலை ஏறுவதும் பண வீக்கத்தின் அறிகுறிதான்.

ஒரு நாட்டின் நிஜமான சுதந்திரம் என்பது அரசியல் ரீதியான சுதந்திரம் அல்ல. பொருளாதார முன்னேற்றம் தான் மிக மிக அவசியம்.

ஒரு வருடத்திற்கு முன் அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாய் 39தான். இன்றைய மதிப்பு ரூபாய் 52 – 15. அமெரிக்காவிலிருக்கும் இந்தியர்கள் தாங்கள் சம்பளமாக வாங்கும் டாலரை 52 . 15 ஆல் பெருக்கிப் பார்த்து சந்தோஷப்படலாம். ஆனால்,இந்த புள்ளி விவரம் எதைக் காட்டுகிறது? நம் நாட்டின் பொருளாதாரம் சரிகிறது என்பதைத்தான். பல ஆசிய நாடுகளைப் போல நம் நாடும் ஒரு பொருளாதார நெருக்கடியை நோக்கிப் போய்கொண்டிருக்கிறது. நாம் உடனடியாக ஏதாவது செய்யாவிட்டால் இந்தப் பொருளாதாரச் சரிவை நேர் செய்ய முடியாது.

வெளி நாட்டில் தயாராகும் சோப்புகள், அழகு சாதனப் பொருட்கள், குளிர் பானங்கள், தின்பண்டங்கள், போன்றவற்றை நாம் பயன்படுத்துவதால் சுமார் 30,000 கோடி ரூபாய் அந்நிய செலாவணி நம் நாட்டிலிருந்து அயல் நாடுகளுக்குப் போய்க்கொண்டிருக்கிறது.

மிகக் குறைந்த விலையில் தயாராகும் இப்பொருட்கள் நம் நாட்டில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் வரும் லாபத்தில் பெரும் பங்கு வெளிநாட்டிற்கு போகிறது. இதனால் நம் பொருளாதாரம் வற்றி விடுகிறது.

ஏன் வெளி நாட்டுக் கம்பனிகள் இந்தியாவில் தாங்கள் கடையை விரிக்கிறார்கள்? நம் நாட்டில் முதலீடு செய்வது அவர்களுக்கு லாபகரமானது. குறைந்த சம்பளத்திற்கு, நிறைய நேரம் உழைக்கத் தயாராக இருக்கும் தொழிலாளிகள், அரசாங்கத்தால் கிடைக்கும் பல விதமான உதவிகள் இவற்றால் அவர்களது நாட்டில் செய்யப்படும் முதலீட்டை விட இங்கு குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தைப் பார்க்கலாம்.
இப்படிச் சொல்லுவதால், அந்நிய முதலீடு நம் நாட்டிற்கு வேண்டாம் என்றோ, வெளி நாட்டுப் பொருட்கள் நமக்கு வேண்டாம் என்றோ அர்த்தம் இல்லை. கட்டாயம் நமக்கு வெளிநாட்டு முதலீடு தேவை. அக்கம்பனிகளால் நமக்கு தொழில், வேலை வாய்ப்பு பெருகுகிறதே, அதனால் அயல் நாட்டு முதலீடு வேண்டாம் என்று சொல்லுவது தவறு. இந்த கம்பனிகள் நம் நாட்டில் இருக்கும் பொருட்களையும் தொழிலாளர்களையும் வைத்துக் கொண்டு தயார் செய்யும் பொருட்களை மற்ற வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால், நமக்கு அந்நிய செலாவணி கிடைக்கும். நம் நாட்டில் நம் ஆட்களை கொண்டு தயார் செய்த பொருட்களை நமக்கே அதிக விலையில் விற்கும் போதுதான் வருத்தம் ஏற்படுகிறது. 6 ரூபாயில் தயாரிக்கப்படும் குளிர் பானம் 30 ரூபாய்க்கு விற்கப்படும் பொது எத்தனை லாபம் தயாரிப்பவர்களுக்கு!

இவர்களால் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்யப் படும் இந்த குளிர் பானங்கள் பட்டி தொட்டிகளிலும், கிராமங்களிலும் கிடைக்கின்றன. இவர்களால் ஏற்படும் வியாபாரப் போட்டியை சமாளிக்க முடியாமல் உள்நாட்டு குளிர் பானங்கள் தயாரிப்புக் கம்பனிகள் பல மூடப்பட்டு விட்டன.

நம்மைப் போன்ற சாதாரணக் குடிமக்கள் என்ன செய்யமுடியும் என்று தோன்றுகிறதா? நிறையவே செய்யமுடியும்.

நம் நாட்டில் தயாராகும் பொருட்களை வாங்க வேண்டும். குளிர் பானங்களிலிருந்து ஆரம்பித்து அழகு சாதனங்கள், கைபேசி வரை, ஷேவிங் கிரீமிலிருந்து குளியல் சோப் வரை, குழந்தைகளின் உணவுப் பொருட்கள், பவுடர்கள், நாப்கின்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

நம் உணவு வகைகளான இட்லி, தோசை, வடை ஆகியவற்றை சாப்பிடலாம். இந்தியர்களில் 5 பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது; 4 பேர்களில் ஒருவர் கூடுதலான எடையுடன் இருக்கிறார் என்றும் சில நாட்களுக்கு முன் செய்தித் தாள்களில் வந்திருந்தது. இதற்கான காரணம் நமக்குப் பழக்கமில்லாத உணவுவகைகளை உண்ணத் தொடங்கியதுதான். சுமார் 10 – 15 வருடங்களாகவே வெளியில் சாப்பிடும் வழக்கம் அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக வரும் இந்த நோய்களை life style diseases என்கிறார்கள். நம் தாத்தாக்கள், பாட்டிகள் நம்மை விட ஆரோக்கியமாக இருந்ததற்குக் காரணம் வீட்டில் தயாரிக்கப் பட்ட பொருட்களை மட்டுமே சாப்பிட்டு வந்ததுதான்.

இப்படிச் சொல்லுவதால் பிட்சா, பர்கர் சாப்பிடுவதை ஒரேயடியாக விட்டுவிடுங்கள் என்று சொல்லவில்லை. ஒரு அளவிற்கு வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் சாப்பிடுவதும், நம் நாட்டு உணவு வகைகளை சாப்பிடுவதும் நமக்கு மட்டுமல்ல; நம் நாட்டிற்கும் நல்லது. நம் குழந்தைகளுக்கும் நல்ல உணவுப் பழக்கங்களை சொல்லிக் கொடுப்போம்.

‘சிறு துளி பெரு வெள்ளம்’ – இல்லையா? நாம் எடுக்கும் சிறு சிறு முயற்சியும் நம் நாட்டைக் காப்பாற்றும் என்பதை நினைவில் கொள்ளுவோம். எத்தனையோ இந்தியர்கள் நம் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடு பட்டனர். சுதந்திர இந்தியாவின் பொருளாதார சுதந்திரத்தைக் காப்பது நம் கையில். காப்பாற்றுவோமா?

published in a2ztamilnadunews.com

நினைவாற்றல்

நினைக்கத் தெரிந்த மனமே….

நினைவாற்றல் என்பது பிறக்கும் போது நம்  எல்லோருக்கும் ஒரே அளவாகத்தான் இருக்கிறது. நாம் வளர வளர நம் நினைவாற்றல் வளருகிறது அல்லது குறைகிறது. ‘வர வர எதுவுமே நினைவு இருப்பதில்லை; வயசாகிவிட்டது’ என்று நம்மில் பலர் சொல்லுகிறோம். பார்க்கபோனால் நாம் எல்லோருமே நமக்கு பிடித்த விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ளுகிறோம்; திரைப் படப் பாடல்கள் நினைவில் நிற்பது போல பாடப் புத்தகத்தில் நாம் படிப்பவை  நினைவில் இருப்பதில்லை.

சரி, நம் நினைவாற்றலுக்குக் காரணமான நம் மூளையைப் பற்றி சிறிது பார்க்கலாம். நம் மூளையானது ஒரு தசை பகுதி. எத்தனைக்கெத்தனை அதனை உபயோகப் படுத்துகிறோமோ, அத்தனைக்கத்தனை அது வலுவானதாக இருக்கும். யாரையும் பார்த்து “உனக்கு மூளையே இல்லையா? மூளையை கழற்றி வைத்து விட்டாயா? மூளை  வேலை செய்யாதா?” என்று கேட்க கூடாது. ஏனெனில் நம் எல்லோருக்கும் மூளை கட்டாயம் இருக்கிறது. மூளையை கழற்றி வைப்பது முடியாது. எந்த வயதானாலும் நம் மூளை வேலை செய்து கொண்டே இருக்கும்.

மூளையின் அமைப்பு:

மனித மூளை என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயம். நம் மூளையின் எந்தப் பகுதி எந்தச் செயலைச் செய்கிறது என்று பார்ப்போமா? நம் மண்டை ஓட்டுக்குள் இரண்டு அரை உருண்டைகளாக அமைந்துள்ளது நம் மூளை. ஒவ்வொரு அரை உருண்டையிலும் 4 மடல்கள் உள்ளன. இவையெல்லாம் சேர்ந்தே நம்மை செயல் புரியத் தூண்டுகின்றன.
Frontal Lobes: ( ஃப்ரன்டல் லோப்ஸ்)
இவை நமது நெற்றிப் பகுதிக்கு கீழே இருப்பவை. இவை நமது நினைவாற்றலுக்கும், மொழித் திறமைக்கும், திட்டமிடுதல், பிரச்சினையைத் தீர்ப்பது, தன்னிச்சை செயல்கள் ஆகியவற்றிற்கும் பொறுப்பு.
Parietal lobes: (பெரியேடல் லோப்ஸ்) இவை நமது மேல் தலையின் பின்பகுதியில் இருக்கின்றன. இவை நம் புலன்களின் மூலம் வரும் செய்திகளை (முக்கியமாக தொடு உணர்ச்சி) வாங்கி அதற்குத் தக்காற்போல நம்மை செயல்பட வைக்கின்றன.
Temporal Lobes(டெம்போரல் லோப்ஸ்): காதுகளுக்கு மேலாக மூளையின் இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ள இவற்றால் தான் நாம் கேட்க முடிகிறது. நமது பேச்சு, மற்றும் மொழித் திறமையிலும் இவற்றின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
Occipital lobes: இவைதான் நம் பார்வைக்குக் காரணமானவை. இவை தலையின் பின்புறம் இரண்டு பக்கங்களிலும் உள்ளன.

Cerebellum இது நாம் நிலை தடுமாறாமல் நிற்பதற்கும் நடப்பதற்கும் செயல்களின் ஒருங்கிணைப்புக்கும் காரணம்.

மூளையின்  வேலைத் திறனை  சில ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை மேற் கொள்ளுவதன் மூலம் அதிகரிக்க முடியும்.

 1. அமைதியான, தேவையான தூக்கம்:  நம் எல்லோருக்கும் குறைந்த பட்சம் 8 மணி நேரத் தூக்கம் வேண்டும் என்றாலும் நல்ல தூக்கம் வரும்போது ஒரு 15 நிமிடம்(சின்ன கோழித் தூக்கம்)  தூங்கினால் கூட போதும். நமது உடல் தனக்குத் தேவையான ஓய்வைப் பெற்றுவிடும். இதைத்தான் ஆங்கிலத்தில் power nap என்கிறார்கள். தூங்கும் நேரத்தில் அதைத் தவிர்த்துக் கொள்வது உடலுக்கு நல்லதல்ல. அது நம் மூளையின் திறனையும் குறைக்கிறது.  ‘Early to bed, early to rise’ பல முறை கேட்டு கேட்டு அலுத்துவிட்ட போதிலும் நம் மூளை நன்றாக செயல் பட இந்தப்  பழக்கம் மிகவும் அவசியம்.
 2. போஷாக்கான உணவுப் பழக்கம்: நாம் சாப்பிடும் உணவின் மூலம் நம் மூளைக்கும் தேவையான சக்தி கிடைக்கிறது.  உணவில் நிறைய பழங்கள், முழு தானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.  இவற்றைத் தவிர வைட்டமின் B, B12, B6 போலிக் அமிலம்,  ஒமேகா – 3 எனப்படும் கொழுப்பு நிறைந்த உணவுகள், வைட்டமின் E, C, முதலியவைகளும் நம் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும்.
 3. புகை பிடித்தலும், மது அருந்துதலும்: இந்த இரண்டு பழக்கங்களும் மூளைக்கு பிராண வாயுவை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்களை சுருங்கச் செய்கின்றன. அளவுக்கு மீறி குடித்தல் நரம்புத் தளர்ச்சியை உண்டுபண்ணும்.
 4.  உடற்பயிற்சி: தினந்தோறும் தவறாமல்  உடற்பயிற்சி செய்வது அவசியம். இதன் மூலம், நம் மூளைக்குத் தேவையான பிராண வாயு கிடைக்கிறது. வயதானவர்கள் நடைப் பயிற்சி செய்வதன் மூலம் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளலாம்.

நம் மூளை என்பது நம் உடலில் இரண்டு சதவிகிதம் தான் என்றாலும், இதயம் அனுப்பும் இரத்தத்தில் 20 சதவிகிதம் மூளைக்குச் செல்லுகிறது. நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து 20 சதவிகித பிராணவாயு மூளைக்குச் செல்லுகிறது. அதனால் தான் பிரணாயாமம் செய்யும் போது நம் உடம்பு, மனம் சுறுசுறுப்பாகிறது. நம் உடலின் எல்லாப் பகுதிகளும் மூளையுடன் தொடர்பு கொண்டிருப்பதால் நம்மால் வலிகளையும் மற்ற உணர்வுகளையும் உணருகிறோம் ஆனால் மூளையில் அடிபட்டால் அதற்கு வலி தெரியாது என்பது ஒரு ஆச்சரியம்.

மூளையை எப்படி திறம்பட உபயோகிக்கலாம்?

 • ஏதாவது புதிய திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
 • அது உங்களுக்கு ஒரு சவாலாக இருக்கவேண்டும்.
 • அடிப்படை நிலையிலிருந்து கடினமான நிலைகளுக்குச் செல்லும்படி அமையவேண்டும்.
 • காண்பது, கேட்பது என்று எல்லாவித திறமைகளையும் அதில் முழுமையாக  ஈடுபடுத்துங்கள். இதன் காரணமாக மூளையின் அனைத்துப் பகுதிகளும் புத்துணர்ச்சி பெறுகின்றன.
 • ‘புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டேன்’ என்ற எண்ணம் மூளையை உற்சாகப்படுத்தும்.

இத்தனை பலனையும் அளிக்கக்கூடிய திறமை என்ன?

ஒரு புதிய மொழியைக் கற்கலாம். எழுதுவதிலிருந்து  ஆரம்பித்து மெது மெதுவே அந்த மொழியில் நீங்களே கதை கவிதை எழுதும் அளவுக்குப் போகலாம். ‘அட! என்னாலும் இன்னொரு மொழியில் புலமை பெற முடிகிறதே!’ என்ற உற்சாகம் தான் நமது மூளைக்கு நாம் கொடுக்கும் பரிசு.

பல பந்துகளை மேலே எறிந்து அவை கீழே விழாமல் மாற்றி மாற்றி பிடிக்கும் ‘ஜக்ளிங்’ (juggling) விளையாட்டைக் கற்கலாம். முதலில் இரண்டு பந்து பிறகு மூன்று, நான்கு என்று அதிகப் பந்துகளை பிடிக்கப் பழகிக் கொள்ளலாம். இந்த விளையாட்டில் நமது கவனம்,  பார்க்கும் திறன், இவற்றுடன் நமது கைகளுக்கும் (உடலின் ஒவ்வொரு பகுதிக்கும்)  பயிற்சி கிடைக்கிறது.

மூளையைப் பற்றிய சில தவறான கருத்துக்கள்:

 • நாம் நமது மூளையின்  10 சதவிகிதம் மட்டுமே உபயோகிக்கிறோம்: 
  நாம் தினமும் நம் மூளையின் எல்லாப் பகுதியையும் பயன்படுத்துகிறோம் என்பதே நிஜம். உதாரணத்திற்கு நீங்கள் இந்த கட்டுரையை படித்துக் கொண்டிருக்கிறீர்கள்; உங்கள் கையில் காபி கோப்பை இருக்கிறது என்றால் உங்கள் கண்கள் இக்கட்டுரையைப் பார்க்கின்றன;   ஒரு கை கணினியில் இப்பக்கத்தை மேலும் கீழும் நகர்த்திக்கொண்டிருக்கிறது;  இன்னொரு கை காபி கோப்பையை ஏந்திக் கொண்டிருக்கிறது; அவ்வப்போது ஒரு வாய் காபியை ரசிக்கிறீர்கள்; உங்களது நாவினில் இருக்கும் சுவை நரம்புகள் காபி நன்றாக இருக்கிறதா இல்லையா என்றும் உங்கள் அறிவுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது; இன்னொரு பக்கம்  இந்தக் கட்டுரையை பற்றிய எண்ணங்களும் மனதில் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இவை அத்தனையும் நடக்கும் அதே வேளையில் நீங்கள் சுவாசிக்கிறீர்கள், நீங்கள் குடிக்கும் காபி ஜீரணம் ஆகிக்கொண்டிருக்கிறது, இமைகள் துடிக்கின்றன–இப்படி பல வேலைகள் மூளையின் எல்லாப் பகுதிகளாலும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
 • ஒருவரின்  ஆளுமை அல்லது தனித் திறமையை வைத்து அவர் வலது மூளையை அதிகம் பயன் படுத்துகிறார அல்லது இடது மூளையை அதிகம் பயன் படுத்துகிறார என்று அறியலாம்:

          இதுவும் தவறானது. நமது மூளையின் இரண்டு பகுதிகளும் ஒன்றுக்கொன்று இணையாகவே வேலை  செய்கின்றன. மிக சமீபத்தில்
எடுக்கப்பட்ட மூளையின் ஸ்கேன் மூலம் இரண்டு பகுதிகளும் ஒரே வேலையின் பல்வேறு பகுதிகளை நிறைவேற்றுகின்றன. நாம்
செய்யும் எந்தக் காரியத்திலும் நம் வலது, இடது மூளைப் பகுதிகளின் பங்கு உண்டு. இதனால் வலது பக்க மூளை மட்டும்
பயன்படுகிறது என்றோ இடது பக்க மூளை மட்டும் வேலை செய்கிறது என்பதோ இல்லை. உதாரணத்திற்கு ஒரு மொழியைக்
கற்கும்போது (மொழிக்கான இடம் இடது பக்க மூளை என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது.) நம் மூளையின் இடப்பக்கம் இலக்கணம்,
உச்சரிப்பு போன்றவற்றையும், வலது பக்கம் பேசும்போது ஏற்படும் ஏற்ற இறக்கங்களையும் பதிவு செய்துகொள்ளுகின்றன.

 • மூளையில் ஏற்படும் பாதிப்புகள் நிரந்தரமானவை:

ஒவ்வொருவர் மூளையிலும் குறிப்பிட்ட அளவு செல்கள்தான் உள்ளன; அதனால் விபத்தாலோ, மற்ற காரணங்களாலோ மூளையில் பாதிப்பு ஏற்பட்டால் அதை சரி செய்யமுடியாது என்று பல காலம் நினைத்திருந்தோம். ஆனால், மூளையில் இருக்கும் செல்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ளும் என்று தற்சமயம் கண்டுபிடித்திருக்கிறார்கள். நாம் புதிதாக ஏதாவது கற்றுக்கொண்டால் நம் மூளையும் அதற்கு ஏற்றாற்போல் தன்னை புதுப்பித்துக் கொள்ளுகிறது.

ஒன்றே ஒன்று மட்டும் நிஜம்: நமது உடலின் வலது பக்கத்தை நமது இடது மூளையும் இடது பக்கத்தை வலது மூளையும் இயக்குகின்றன என்பது மட்டும் மிக மிக நிஜம்.

 

published in a2ztamilnadunews.com

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

நாம் உண்ணும் உணவு சரிவர செரிமானம் ஆவதற்கு நம் இரைப்பை மூன்று விதமான வேலைகளைச் செய்கிறது.

 • இரைப்பையின் மேல்பாகம் சுருங்கி விரிந்து  நாம் உண்ணும் உணவை உள்ளே வாங்கிக் கொள்ளுகிறது.
 • இரைப்பையின் கீழ் பாகம் இரைப்பையினுள் சுரக்கும் செரிமானச் சாறுகளுடன் உணவை கலக்கிறது.
 • செரித்த உணவில் இருக்கும் கழிவுப் பொருட்களை மெதுவாக சிறு குடலுக்குள் தள்ளுகிறது.

நாம் உண்ணும் உணவு செரித்தபின் அதில் இருக்கும் வேண்டாத கழிவுகள் மலமாக வெளியேறுகின்றன.

கழிவுப் பொருட்கள் சிறு குடலிலிருந்து பெருங்குடலுக்கு வரும்போது அவற்றில் இருக்கும் நீர் உறிஞ்சப்பட்டு கெட்டியான மலமாக மாறுகிறது. கழிவுப் பொருட்கள் நீண்டநேரம் பெருங்குடலுக்குள் இருக்க நேரிடும்போது அதிகமான நீர் உறிஞ்சப்பட்டு மலம் மிகவும் கெட்டியாகவும் உலர்ந்தும் போகிறது. அப்போது மலம் சுலபமாக வெளியேறுவது தடைப்படுகிறது. இதையே மலச்சிக்கல் என்கிறோம்.

இதைத் தவிர மலச் சிக்கலுக்கு வேறு பல காரணங்களும் உண்டு. அவை:

 • வழக்கமான உணவை தவிர்த்து வேறு உணவை உண்பது;
 •  உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது; ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருவது;
 • அடிக்கடி பிரயாணம் செய்வது; இதனால் அன்றாடம் மலம் கழிப்பது தடை படுகிறது.
 • மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வைத் தள்ளிப் போடுவது;
 • நார்சத்துப் பொருட்களை குறைந்த அளவில் தின்பது; பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை அதிகம் உண்ணுவது;
 • குறைந்த அளவு  திரவப் பொருட்களை குடிப்பது;
 • கால்சியம், அயர்ன்  (iron) மாத்திரைகள் நாட்பட சாப்பிடுவது;
 • வலி நிவாரணி, மன அழுத்தத்தைக் குறைக்கும் மாத்திரைகள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளுவது;

அவற்றைத் தவிர பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மலச் சிக்கல் ஏற்படும். பெருங்குடல் அல்லது சிறுகுடலில் இருக்கும் தசைகள் சரிவர சுருங்கி விரிந்து கொடுக்காமல் இருப்பது, அல்லது சில உணவுப் பொருட்கள் ஒத்துக்கொள்ளாமல் போவது ஆகியவையும் மலச் சிக்கலுக்குக் காரணங்களாகும். சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கும், ஹைபர் தைராயிடிசம் என்று சொல்லுப்படும் நோய் இருப்பவர்களுக்கும் மலச் சிக்கல் வர கூடும்.

மலச்சிக்கலை தவிர்க்க சில எளிய வழிகள்:

 • நார்ச்சத்து நிரம்பிய பொருட்களை அதிகம் உண்பது:  பச்சை காய்கறிகளில் வாழைத் தண்டு மிகச் சிறந்த மலமிளக்கி. வாழைத் தண்டை பச்சையாக தயிரில் கலந்து சாப்பிடலாம். அல்லது கறி அல்லது சிறிதளவு பயத்தம் பருப்பு சேர்த்து கூட்டு செய்தும் உண்ணலாம். கீரை வகைகள், முட்டை கோஸ், காரட் முதலிய காய்கறிகள் சாப்பிடலாம். சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு முதலிய பழங்களை மேல் தோல் நீக்கி விட்டு உள்ளே இருக்கும் மெல்லிய வெள்ளைத் தோலுடன் சாப்பிடுவது மிகுந்த பலனைக் கொடுக்கும்.
 • திரவப் பொருட்கள் நிறைய எடுத்துக்கொள்ளுவது நல்லது.  நீர், மற்றும் புதிதாக பண்ணப்பட்ட பழச்சாறு, காய்கறி சூப் ஆகியவை நல்லது. தாகமாக இருக்கும் போது நீர் குடியுங்கள். காபி,  தேநீர், ஆல்கஹால் ஆகிவற்றை அருந்தாதீர்கள். உடலில் போதிய அளவு நீர் இல்லாவிடில் டிஹைடேரஷன் ஏற்படும். இதுவே மலச்சிக்கலை உண்டு பண்ணவும்  செய்யும். அதனால் நீர் அதிகம் குடிக்கவும்.
 • காலையில் வெறும் வயிற்றில் இரண்டு அல்லது மூன்று டம்ளர் நீர் குடிப்பது இயற்கையான வழியில் மலத்தைக் கழிக்க உதவும். இந்த முறையை நீர் சிகிச்சை (water therapy) என்று கூறுகிறார்கள்.
 • உடற்பயிற்சி மிக மிக முக்கியம். உடற்பயிற்சி செய்வதால் நம் செரிமான உறுப்புகள் நல்ல முறையில் இயங்கும். தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளுவது அவசியம்.
 • மலம் கழிக்கவேண்டும் என்ற உந்துதல் வரும் போது அடக்க முயல வேண்டாம். அதேபோல வேகமும் விவேகம் இல்லை. அவசரமாக  போகவேண்டும் என்று முக்குவதும் தவறு. முக்குவதால் ஆசன வாயிலிருக்கும் தசைகள் வெளியே தள்ளப்பட்டு மூல வியாதி வரும் அபாயம் இருக்கிறது.
 • தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மலம் கழிக்கும் பழக்கத்தை கடைப் பிடிப்பது நல்லது.

பொதுவான ஆலோசனைகள்:

 • சிலர் ஒரு நாளைக்கு ஒரு தடவை மட்டுமே மலம் கழிப்பார்கள். ஒரு சிலர் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மலம் கழிப்பார்கள். இதை வைத்துக்கொண்டு அவர்களுக்கு மலச்சிக்கல் என்று சொல்ல முடியாது. வயிறு முழுக்கக் காலியாகிவிட்டதா என்பது முக்கியம்.
 • சிலருக்கு வயிறு உப்புசமாகவே இருக்கும். இது மலச்சிக்களின் அறிகுறி அல்ல. கிழங்குகள் உண்பதைக் குறைத்துக் கொண்டு நிறைய பழங்கள், காய்கறிகள் சாப்பிட ஆரம்பித்தால் இது சரியாகி விடும்.
 • தொடர்ந்து சில நாட்கள் மலம் கழிக்காமல் இருப்பது, மலம் கெட்டிப்பட்டு வெளியே வர மிகவும் கஷ்டப்படுவது ஆகியவை இருந்தால் மருத்துவரை அணுகவும்.
 • மலமிலக்கிகளை மருத்துவர் சொன்னால் ஒழிய உபயோகப் படுத்த வேண்டாம். ஒருவேளை மலமிலக்கிகளை எடுக்க வேண்டிய கட்டாயம் வந்தாலும் மருத்துவர் குறிப்பிடும் காலம்  வரை மட்டும் பயன்படுத்தவும். தொடர்ந்து உபயோகிப்பதை தவிர்க்கவும்.மலமிலக்கிகள் திரவ வடிவிலும் மாத்திரையாகவும் கிடைக்கின்றன.  உங்களுக்கு பொருத்தமானதை மருத்துவர் குறிப்பிடுவதை பயன்படுத்தவும்.
 • நீங்கள் வழக்கமாக சாப்பிடும் மருந்துகளை மருத்துவரிடம் காட்டவும். சில நேரங்களில் அவை கூட மலச்சிக்கல் உண்டாகக் காரணமாகலாம்.
 • மருத்துவர் குறிப்பிடும் சிகிச்சையை மேற்கொள்ளவும். பொதுவாக பயோபீட் (biofeed) என்ற சிகிச்சை  மலச்சிக்கல் இருப்பவர்களுக்குப் பண்ணப் படுகிறது. இது ஒரு எளிமையான பரிசோதனை. இப்பரிசோதனையில் உணர் கருவி (scanner) மூலம் மலக்குடலில் இருக்கும் மலத்தை கண்டறிந்து வெளியேற்றுகிறார்கள். வலி இல்லாத இந்த முறை மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு மிகவும் பயன் தருவது. ஒரு தேர்ந்த மருத்துவ உதவியாளரின் மேற்பார்வையில் இந்த சிகிச்சையை செய்து கொள்ளுவது நன்மை பயக்கும்.

நம் பெற்றோர்கள், பாட்டி, தாத்தா சாப்பிட்டு வந்த உணவு முறைகளை விட்டுவிட்டு வெளிநாட்டு ஆகாரங்களை சாப்பிடுவதால் வரும் சிக்கல்களில் ஒன்றுதான் இந்த மலச்சிக்கல். இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து இனிய உணவை சாப்பிட்டு இனிதாக வாழ்வோம் இந்தப் புத்தாண்டில்!

published in a2ztamilnadunews.com

வாயுத் தொல்லை

வாயுத் தொல்லை

உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாயுத் தொல்லையினால் அவதிப் படுகிறார்கள். இது ஒரு வியாதி அல்ல; ஆனால் ஒரு வியாதியின் அறிகுறியாக இருக்கலாம். நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம், வயிற்றுக்கும் மார்பிற்கும் நடுவே வலி – சில சமயங்களில் மார்பை அடைப்பது போன்ற உணர்வு இவையெல்லாம் வாயுத் தொல்லையின் அறிகுறிகளாக இருக்கலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அறிகுறிகள் காணப்படும்.

வாயுத்தொல்லை ஏற்படக் காரணம்
நாம் உண்ணும் உணவு சரிவர செரிமானம் ஆகாமல் போவதுதான் வாயுத்தொல்லை ஏற்படக் காரணம்.
உணவு நம் இரைப்பைக்குள் சென்று அங்கு பலவிதமான செரிமான நீர்களுடன் கலந்து செரிக்கப் படுகின்றன.
அவ்வாறு செரிக்கப்படாத உணவின் மிச்சங்கள் பெருங்குடலுக்குள் சென்று வாயுவாக மாறுகிறது.

ஏன் சரிவர செரிமானம் ஆவதில்லை என்றால், நம்முடைய சாப்பிடும் பழக்கம் சரிவர இருப்பதில்லை. அதாவது தினமும் குறிப்பிட்ட நேரத்தில் நம் வயதிற்கும் நாம் செய்யும் வேலையின் அளவிற்கும் ஏற்ற சாப்பாட்டை சாப்பிடத் தவறுகிறோம். காலை உணவை தவிர்ப்பது, பசி நேரத்தில் காபி, தேநீர் முதலிய பானங்களை குடிப்பது, நீண்ட நேரத்திற்கு பட்டினி கிடப்பது அல்லது கிடைத்ததையெல்லாம் கிடைத்த போதெல்லாம் தின்பது என்று நம் வயிற்றை நாமே பாடாய் படுத்துகிறோம். ‘உனக்காக உழைக்கும் என்னை நீ சரியாக கவனிக்கவில்லை’ என்ற நம் வயிற்றின் கூக்குரல் தான் இந்த வாயுத் தொல்லை.

இன்னொரு காரணம்: சாப்பிடும்போதோ, நீர் குடிக்கும்போதோ அதிகமான காற்றையும் சேர்த்து விழுங்கிவிடுவது. அவசரமாக உணவை விழுங்குவது, சூயிங்கம், பான், புகையிலை மெல்லும்போது நிறைய காற்று நம் வயிற்றினுள் சென்றுவிடுகிறது. அதே போல கரியமில வாயு சேர்த்த குளிர் பானங்கள் உட்கொள்ளும்போது அதில் இருக்கும் வாயு நம் வயிற்றினுள் சென்று சேர்கிறது. (நாம் தினமும் பிராண வாயுவை சுவாசித்து கரியமில வாயுவை வெளியிடுகிறோம். அந்தக் கரியமில வாயுவை குளிர் பானத்தில் செலுத்தி பாட்டிலில் அடைத்து விற்கிறார்கள். அவர்கள் வியாபாரிகள் – நாம் அதை வாங்கி குடிக்கிறோமே! என்ன கொடுமை இது சரவணன் என்று கேட்க தோன்றுகிறதா?)
இப்படி கார்பனேடட் பானங்களைக் குடிப்பதாலும் வாயுத் தொல்லை ஏற்படும். காசு கொடுத்து நம் உடம்பை நாமே கெடுத்துக் கொள்ளுகிறோம்.

மலச்சிக்கல்: உணவு மிக நீண்ட நேரம் வயிற்றில் தங்குவதாலும், கழிவுப் பொருட்கள் சரியாக வெளியேற்றப் படாததும் கூட வாயுத் தொல்லைக்குக் காரணமாகலாம்.

அல்சர் எனப்படும் குடல் புண்:
இதுவும் கூட வாயுத் தொல்லைக்குக் காரணம். சரிவர மருத்துவம் செய்துகொள்ளாவிட்டால் வேறு பல சிக்கல்களை உண்டாக்கும்.

வேறு  காரணங்கள்:

 •  உணவுக் குழாய், குடல், சிறுகுடலின் முற்பகுதியில் ஏற்படும் கோளாறுகள்.
 •  வயிற்றில் அதிகப்படியான அமிலங்கள் சுரப்பது.
 •  குடலில் இருக்கும் திசுக்கள் மெலிவடைவது.
 • பித்தப்பை, கணையம் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்.

வாயுத் தொல்லையை எப்படித் தவிர்ப்பது?

இதற்கு மிக முக்கியம் குறிப்பிட்ட நேரத்தில் உண்பது. எந்தப் பொருட்கள் சாப்பிட்டால் வாயு ஏற்படும் என்று உங்களுக்கே ஓரளவு தெரிந்திருக்கும். அந்தப் பொருட்களை தயவு தாட்சண்யமின்றி விட்டு விட்டுங்கள். சிலருக்கு பால் பால்சார்ந்த பொருட்கள் கூட வாயுத் தொல்லையைக் கொடுக்கும். மொச்சை வகைகள், முட்டை கோஸ், காலி ப்ளவர், உருளைக் கிழங்கு, வாழைக்காய், பருப்பு வகைகள் வாயுத் தொல்லையை உண்டாக்கும்; தவிர்ப்பது அல்லது சிறிய அளவில் தின்பது நல்லது. சமைக்கும் போது, இஞ்சி, பெருங்காயம் சேர்த்து சமைப்பது வாயுவைக் குறைக்கும்.

அதிகக் கொழுப்பு, அதிக நார்சத்துப் பொருட்கள் செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆகிறது. அவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள். நார்சத்து உணவு செரிமானத்திற்கு உதவினாலும், குடலில் நீண்ட நேரம் தங்குவதால் வாயுவை உண்டுபண்ணுகிறது. ஒரே நேரத்தில் நிறைய சாப்பிடாமல், சமமான இடைவெளியில் குறைந்த அளவு சாப்பிடுங்கள். நீண்ட நேரப் பட்டினி வேண்டாம். சாப்பிடும்போது ஆத்திரம் அவசரம் கூடாது. உணவை நிதானமாக மென்று தின்னுங்கள்.  இதனால் செரிமானம் நன்றாக ஆவதுடன், வாயு தோன்றுவதும் தடுக்கப்படுகிறது.

புதிதாக சமைக்கப்பட்ட உணவை உண்ணவும். காபி, தேநீர், ஆல்கஹால் முதலியவற்றை அதிகம் குடிக்காமல் ஒரு அளவில் நிறுத்திக் கொள்ளலாம். அதிகப்படியான வேலை, வேலை டென்ஷன், மனதில் தோன்றும் பய உணர்வு இவை போன்றவையும் செரிமானத்தை பாதிக்கும். புகைப் பழக்கம், குடிப்பது இவையும் வயிற்றுக்குப் பகைவர்கள்.

அதிகக் காரம், மசாலா, எண்ணையில் பொறித்த உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். இரவு நேரம் கழித்து உண்பது வேண்டாம்.

அசிடிட்டிக்கென்று எடுத்துக் கொள்ளும் மருந்துகளை அடிக்கடி சாப்பிடவேண்டாம். முதலில் குணம் ஏற்படுவதுபோல தோன்றினாலும் நாளடைவில் வயிற்றைக் கெடுத்துவிடும். அதேபோலே வலி நிவாரணிகளும் வயிற்றுக்கு நல்லதல்ல.

தினசரி உடற்பயிற்சி செய்வதும் மிக அவசியம். சாப்பிட்டவுடன் சிறிது நடக்கலாம்.

ஒரு எச்சரிக்கை:

சிலசமயம் இதய நோய்க்குண்டான அறிகுறிகள், வாயுத்தொல்லைக்கு உண்டான அறிகுறிகள் போலவே இருக்கும். எந்த ஒரு உடல் பாதிப்பானாலும் மருத்துவர் உதவியை நாடுவது நல்லது. வாயுத் தொல்லைதானே என்று நினைத்து அலட்சியப் படுத்தவேண்டாம். ஆரம்ப நிலையில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் பல நோய்களை முற்றவிடாமல் நம்மை நாமே பாது காத்துக் கொள்ளலாம்.

நாம் போடும் உணவைத் தின்று நமக்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கும் நம் வயிற்றை நாமே கெடுத்துக் கொள்ளலாமா? நிதானமாக சாப்பிட்டு, ஆரோக்கியமாக வாழலாம்.

published in a2ztamilnadunews.com