Uncategorized

மார்பக புற்று நோய்

மார்பக புற்று நோய் என்பது பொதுவாக மார்பகங்களில் உள்ள பால் சுரப்பிகளில் உண்டாகும் ஒருவித வீரியம் மிக்க கட்டி ஆகும். மிகவும் அரிதாக மார்பகத்தின் கொழுப்பு பகுதிகளை இணைக்கும் திசுக்களிலும் இந்தக்  கட்டிகள் உருவாகலாம். கட்டிகளின் அளவை வைத்து புற்று நோய் ஆரம்ப நிலையில் உள்ளதா அல்லது மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளதா என்று அறியலாம். ஆனாலும் மருத்துவர்கள் புற்று நோயின் தன்மையை முக்கியமாக கண்காணிக்கிறார்கள். ஏனெனில் சில சமயங்களில் சிறிய கட்டியாக இருந்தாலும்  மிகுந்த வீரியம் மிக்கதாகவும், பெரிய கட்டிகள் வீரியம் குறைந்ததாகவும் இருக்கலாம்.

மார்பக புற்று நோய் வர காரணங்கள் பல. பெண்களுக்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் என்கிற ஹார்மோன் மார்பக புற்று நோயை உண்டாக்குகிறது. இதைத் தவிர வேறு  சில காரணங்களும் இருக்கின்றன. சிலவற்றை நம்மால் தவிர்க்க முடியும். சில தவிர்க்க முடியாதவை.

தவிர்க்க கூடிய காரணங்கள்:

  • இந்நோய் நகர்ப்புற பெண்களை அதிகம் பாதிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நகர்புற பெண்கள் மிக தாமதமாக திருமணம் செய்துகொள்வது, குழந்தைகள் இல்லாமல் போவது, அல்லது 30 வயதுக்கு மேல் முதல் குழந்தை  பெற்றுக்கொள்ளுவது ஆகியவை இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
  • நகர்ப்புற  பெண்களிடையே அதிகமாக காணப்படும் புகைப்பிடித்தல் மற்றொரு காரணம். புகைப்பிடித்தலுக்கும் மார்பகப் புற்று நோய்க்கும் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இந்த புற்று நோய் புகைப்பிடிப்பவர்களை  மட்டுமல்லாது அவர்களுடன் கூட இருப்பவர்களையும் (passive smokers) பாதிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. புகைப் பிடிப்பதை நிறுத்துவது ஒன்றே இந்நோயின் கொடுமையிலிருந்து விடுபட ஒரே வழி.
  • ஓபீஸ் என்று சொல்லப்படும் அதிக பருமனும் மார்பக புற்று நோய் வருவதற்கு ஒரு காரணம். உடற் பயிற்சி செய்வதை அன்றாட வழக்கமாக்கிக் கொள்ளுதல் நலம். தினந்தோறும் உடற்பயிற்சி செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கி கொள்ளுவதன் மூலம் இந்நோயை தவிர்க்கலாம்.
  • நகர்புற பெண்களிடையே இருக்கும் மது அருந்தும் பழக்கமும் மார்பகப் புற்று நோய் வரக் காரணம். மது அருந்துவது          ஈஸ்ட்ரோஜென் சுரப்பதை அதிகரித்து மார்பக புற்று நோயை உண்டாக்கிறது. மது அருந்துவதை தவிர்ப்பது நலம்.
  • இதைப் போலவே அதிக கொழுப்பு சத்து நிறைந்த உணவு வகைகளை சாப்பிடுவதும் ஈஸ்ட்ரோஜென் சுரப்பதை அதிகரிக்கிறது. இதனால் புற்றுநோய் கட்டி வேகமாக வளருகிறது. கொழுப்பு குறைந்த உணவு வகைகளை சாப்பிடுவதன் மூலம் இந்த அபாயத்தை தவிர்க்கலாம்.
  • 40 வயதிற்கு பிறகு குழந்தை பெற்றுகொள்ளுவதும், குழந்தைக்கு தாய் பால் கொடுக்காமலிருப்பதும் கூட மார்பக புற்று நோய் வர காரணம்.

தவிர்க்க முடியாத காரணங்கள்:

  • இது ஒரு பரம்பரை நோய்.
  • 40  வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இந்நோய்  தாக்குதலுக்கு அதிகம் ஆளாகிறார்கள். ஆனால் தற்சமயம், இளம் பெண்களும் இந்நோய்க்கு ஆளாவது தெரிய வந்துள்ளது.
  • 21 வயதிற்குள் பருவம் அடையும் பெண்கள், 55 வயதிற்கு மேல் மெனொபாஸ் அடையும் பெண்கள் மற்றும் குழந்தை பேறு இல்லாத பெண்கள் ஆகியவர்களுக்கு இந்நோய் வர வாய்ப்பு அதிகம் என்று நம்பப் படுகிறது.
  • ஆசிய, ஆப்ரிக்க பெண்களைக் காட்டிலும் ஐரோப்பிய, அமெரிக்க பெண்கள் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள்.

மார்பகப் புற்று நோயின் அறிகுறிகள்:

  • மார்பகப் புற்று நோய்க்கு தெளிவான அறிகுறிகள் தென்படுவதில்லை. சின்ன கட்டி, வீக்கம், தோலில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை அறிகுறிகளாக சொல்லலாம்.
  • மாதவிலக்கு முடிந்தஉடன் மார்பகத்திலோ அல்லது அக்குளிலோ தோன்றும் சிறிய கட்டி.
  • மார்பகத்தில் வலி, குத்தும் உணர்வு, மற்றும் மார்பகம் மிக மென்மையாக ஆவது.
  • அக்குளில் வீக்கம்.
  • மார்பக அளவு மற்றும் வடிவத்தில் ஏற்படும் மாற்றம்.
  • மார்பு காம்பின் நிறம் மாறுதல்.
  • மார்பகத்திலிருந்து இரத்தக் கரை படிந்த திரவம் வெளிவருதல்.
  • மேற் கண்ட அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால் உடனடியாக மருத்துவரை பார்க்கவும். மேமோக்ராம் மற்றும் மருத்துவரிடம் போய் மார்பகப் பரிசோதனை செய்து கொள்ளுவதன் மூலம் மார்பகப் புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டு அறியலாம்.

சுய பரிசோதனை:

மருத்துவர்கள் பெண்கள் தங்களை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுவதன் மூலம் இந்த மார்பக புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறியலாம் என்று அறிவுறுத்துகிறார்கள்.

சுய பரிசோதனை முறைகள்:

  • கண்ணாடி முன் நின்று கொள்ளவும். உங்கள் கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு தோள்களை நேராக வைத்துக் கொள்ளவும். நிதானமாக உங்கள் மார்பகத்தை கண்களால் சோதனை செய்யவும். வழக்கத்திக்கு   மாறாக ஏதேனும் வித்தியாசம் தெரிகிறதா என்று பார்க்கவும். மார்பகப் பிரதேசத்தில் சின்ன வீக்கமோ, கோடுகளோ  அல்லது சிறிய குழிகளோ இருக்கிறதா என்று பார்க்கவும்.
  • அடுத்ததாக மார்பு காம்புகளை பாருங்கள். வழக்கம் போல இருக்கின்றனவா? கைகள் இரண்டையும் தலைக்கு மேலே உயர்த்தி நீட்டிக்கொண்டு மறுபடியும் கண்களால் பார்க்கவும்.
  • வலது கையை தலைக்கு மேலே உயர்த்தி இடது கைகளால் வலது மார்பகத்தை தொட்டுப் பார்க்கவும். விரல்களால் நிதானமாக மெதுவாக அழுத்தி வீக்கமோ, வலியோ இருக்கிறதா என்று பரிசோதனை செய்யவும். இதைப் போல மற்றொரு பக்கமும் பரிசோதனை செய்யவும்.
  • மல்லாந்து படுக்கவும்.வலது கையை உயர்த்திக் கொள்ளுங்கள். வலது மார்பகத்தின் மேல் இடது கை விரல்களை மேலும் கீழும் நகர்த்துங்கள். சிறு சிறு வட்ட வடிவத்திலும் கைகளை நகர்த்தி நகர்த்தி சோதனை செய்யுங்கள். ஒரு குறிப்பிட்ட வகையில் கைகளை நகர்த்திக் கொண்டே போய், அக்குள் மற்றும் தோள் பட்டை எலும்பு வரையிலும் ஓரிடம் பாக்கி இல்லாமல் சோதனை செய்யுங்கள்.

சிகிச்சை முறைகள்:

மச்டேக்டோமி  (mastectomy) மற்றும் லம்பெக்டோமி (lumpectomy) என இரண்டு வகையான அறுவை சிகிச்சை முறைகளும் அவற்றுடன் கதிரியக்க சிகிச்சையும் மார்பகப் புற்று நோய்க்குண்டான சிகிச்சை முறைகள்.
மார்பகத்தின் பெரும் பகுதி புற்று நோயால் பாதிக்கப் பட்டிருக்கும் போதோ அல்லது புற்று நோய் மறுபடி வரக் கூடும் என்று சந்தேகிக்கும் போதோ மச்டேக்டோமி எனப்படும் அறுவை சிக்கிச்சை மூலம் புற்று நோய் தாக்கப்பட்ட பார்பகத்தை முழுவதுமாக அகற்றி விடுகிறார்கள்.

இந்த அறுவை சிக்கிச்சையினால் ஏற்படும் பிரதிகூலங்கள்:

  • குணமடைவதற்கு அதிக நாட்கள் பிடிக்கிறது என்பதுடன் சில பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன.
  • மார்பகம் முழுவதுமாக அகற்றப்படுகிறது.
  • இழந்த மார்பகத்தை மறுபடியும் செயற்கை முறையில் அமைப்பதற்கு நீண்ட காலம் ஆகிறது.

லம்பெக்டோமி:

மார்பகத்தின் ஒரு பகுதி மட்டும் புற்று நோயால் பாதிக்கப் பட்டிருந்து புற்று கட்டியும் 4 செ.மீ. க்கும் குறைந்த அளவில் இருக்கும்போது இந்த அறுவை சிகிச்சை செய்யப் படுகிறது. கதிரியக்க சிகிச்சையும், மார்பகத்தை பழையபடி வடிவமைத்தலும் இந்த அறுவை சிகிச்சைக்குப் பின் செய்யப்படுகின்றன.

இந்த அறுவை சிகிச்சையின் பிரதிகூலங்கள்:

  • கதிரியக்க சிகிச்சை நீண்ட நாட்களுக்குத் தேவை.
  • பாதிக்கப்பட்ட மார்பகத்தை வடிவமைக்க நீண்ட காலம் ஆகிறது.
  • புற்று நோய் மீண்டும் தோன்றக்கூடிய அபாயம்.
  • மறுபடி புற்று நோய் கண்டால் கதிரியக்க சிகிச்சை அதிக அளவில் தேவைப்படும். ஏற்கனவே பாதிக்கப்பட்டபடியால் கதிரியக்க சிகிச்சையை தாங்கி கொள்ள இயலாமல் போகலாம்.

எல்லா புற்று நோய்களையும் போலே இந்த புற்று நோயையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்துவது எளிது. ஆனால் இந்தியாவில் பல பெண்களுக்கு இந்த நோயைப் பற்றிய சரியான அறிவோ, விழிப்புணர்வோ இல்லை என்பதுதான் வருத்தத்தை தரும் உண்மை. மேலும் பெண்கள் இந்த நோயைப் பற்றி பேச கூச்சப் படுகிறார்கள். பல பெண்கள் மார்பகப் பரிசோதனைக்கு ஆளாக விரும்புவதில்லை. ஒருவேளை இந்த நோய்க்கு ஆளாகிவிடுவோமோ என்ற பயத்தில் நிறைய பெண்கள் மருத்துவப் பரிசோதனையை தள்ளிப் போடுகிறார்கள். நோய் முற்றிய பின் மருத்துவ உதவியை நாடுகிறார்கள். இதனால் அமெரிக்காவைக் காட்டிலும் நம் நாட்டில்  மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் , இந்த நோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை நம் நாட்டிலும் அமெரிக்காவிலும் ஒன்றாகவே இருப்பது வேதனைக் குரிய விஷயம்.

எந்த ஒரு பெண்ணும் தன் மார்பகத்தை இழக்க விரும்பமாட்டாள். புற்று நோய் எந்த அளவுக்கு பரவி இருக்கிறது என்பதைப் பொறுத்து சில பெண்களுக்கு ஓவரீஸ் என்று சொல்லும் கருவகத்தை நீக்குகிறார்கள். இதன் பலனாக ஈஸ்ட்ரோஜென் சுரப்பை கட்டுப் படுத்த முடியும்.

 

published in a2ztamilnadunews.com

Advertisements

3 thoughts on “மார்பக புற்று நோய்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s