பனிக் காலத்தில் பாப்பாவின் பட்டு மேனிப் பராமரிப்பு:

பனிக்  காலத்தில்பாப்பாவின்பட்டுமேனிப்பராமரிப்பு:
குழந்தை பிறந்தவுடனே கொழு கொழு என்று இருக்கும். சிலநாட்களில் அதன் உடலில் இருக்கும் நீர் வற்றி சருமம் உலர்ந்து மெலிதாகிவிடும். இதனை “அரை வற்று” என்பார்கள். நாளாக ஆக, குழந்தை மெது மெதுவே உடல் தேறும். எல்லாக் குழந்தைகளுமே இந்த மாற்றத்திற்கு உள்ளானாலும் பனிக் காலத்தில் பிறக்கும் குழந்தைகளின் சருமப் பரமாரிப்பு என்பது சற்று கடினமானதுதான். புதுத் தாய்மார்களுக்கு பாப்பாவை பாதுகாக்க பல்வேறு குறிப்புகளைச் சொல்லவே இந்தக் கட்டுரை.

பிறந்த  குழந்தைகளின் இளம் சருமம் சிறிது வறண்டே காணப்படும். குளிர் காலத்தில் பாப்பாவின்  சருமம் வெகு சீக்கிரம் ஈரப்பதத்தை இழந்துவிடும். பனிக்  காலத்தில் சில்லென்ற காற்றும் அதில் இருக்கும் குறைந்த ஈரப் பதமும் சேர்ந்து சருமத்தை வறண்டு போகச் செய்யும். இதனால் குழந்தைகளின் சருமத்தில்  நீர் வறண்டு  தோல் உரியவும் ஆரம்பிக்கும். மேலும் தோல் சிவந்தும் காணப்படும்.

குழந்தையின்உடை:

குழந்தையை குளிர் தாக்காமலிருக்க ஸ்வெட்டர், குல்லா முதலியவற்றை போட்டே வைப்பதால், இளம் சருமத்தில் சின்ன சின்ன தடிப்புகள் (heat rashes) ஏற்படலாம். முதலில் பருத்தியால் ஆன உடையைப் போட்டுவிட்டு, பிறகு கம்பளி உடையைப் போடுங்கள். குழந்தையின் இளம் சருமத்திற்கு பருத்தி ஆடையே சிறந்தது. இதற்கு மேல் கம்பளி ஸ்வெட்டரைப் போடுவதால் குழந்தையின் சருமமும் பாதுகாப்பாக இருக்கும். குளிரும் தாக்காது.

குழந்தைகளின்நாப்கின்கள்:
நாப்கின்கள் போடுவதற்கு முன்மாய்ச்சரைசர் தடவவும். ஒவ்வொருமுறை நாப்கின் மாற்றும் போதும்  மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் ஒரு மிருதுவான துணியை நனைத்து பாப்பாவை நன்றாகத் துடைக்கவும். மாய்ச்சரைசர் தடவி பிறகு நாப்கின் கட்டவும். ஒரே நாப்கின்னை நீண்ட நேரத்திற்கு பயன்படுத்த வேண்டாம்.

குழந்தைக்குக்குளிப்பாட்டும்போது:

அதிக சூடான தண்ணீர் வேண்டாம். மிதமான சூட்டில் குழந்தையைக் குளிப்பாட்டவும். குழந்தைக்கு பயன்படுத்தும் சோப்பு, எண்ணெய் முதலியவை அதிக வாசனை இல்லாததாக இருக்கட்டும். சூடு நீர் குழந்தையின் இளம் சருமத்தை உலர்த்தி விடும்; அதிக வாசனைப் பொருட்கள் குழந்தையின் உடம்பில் ஊறும் எண்ணைப் பசையைப் போக்கிவிடும்.  பேபி ஆயிலை குளிப்பாட்டும் தண்ணீரில் சில துளிகள் கலந்து விடவும். குளிப்பாட்டிய பின் ஈரம் போக குழந்தையின் உடம்பைத் மிருதுவாகத் துடைக்கவும். மிக மிக மெல்லிய உறுத்தாத டவலை பயன் படுத்தவும்.  குழந்தையின் சருமத்திற்கு ஏற்ற லேசான வாசனையுள்ள சிறந்த மாய்ச்சரைசர் தடவவும். நான்கு அல்லது ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை  மாய்ச்சரைசர் தடவுவதால் சருமம் பொலிவாக இருக்கும். பாப்பாவின் பட்டு மேனி பாதுகாப்பாக இருக்கும்.

பெரியவர்களைப் போலவே சிறு குழந்தைகளுக்கும் பனிக் காலத்தில் உதடுகள் வெடிக்கும். உடம்பிற்குத் தடவும்  மாய்ச்சரைசர் உதட்டுக்கும் நல்லது. பாப்பாவின் பவள உதடுகளில் துளியே துளி மாய்ச்சரைசெர் தடவுங்கள். பாப்பா உதடுகள் மின்னச் சிரிக்கும் சிரிப்பிற்கு ஈடு இணை ஏது?

ஆயுர்வேதம் குழந்தைகளின் சருமப் பராமரிப்புக்கு பல விதமான மூலிகைகளை சிபாரிசு செய்கிறது. இவை தலை முறை தலைமுறையாக குழந்தைகளின் மேனிப் பராமரிப்புக்கு என்றே உபயோகப் படுத்தப் பட்டு வருகின்றன. ஆயுர்வேத புத்தகங்களிலும் இந்த மூலிகைகளைப் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.

 1. ஆலிவ் ஆயில்: வைட்டமின் ஈ நிரம்பிய இது, சருமத்தை பராமரித்து , போஷாக்களித்து பலவிதமான சரும நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இந்த ஆயில் நுண்ணுயிர் கொல்லியாகவும் (antimicrobial), சருமத்திற்கு இதமளிப்பதாகவும் இருப்பதால் பாப்பாவின் சருமம் ஆரோக்கியமாகவும், மெத்து மெத்தென்றும் இருப்பதற்கு உதவுகிறது. தினமும் குழந்தைக்கு ஆலிவ் ஆயில் தடவி குளிப்பாட்டுவதால் குழந்தையின் சருமம் மிக மிக மிருதுவாக இருக்கும்.
 2. பாதாம் ஆயில்: குழந்தையின் இளம் உடலை ஈரப் பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
 3. பாலா (country mallow) எனப்படும் மூலிகை பாப்பாவின் தளிர் மேனியை நோய் கிருமிகள் தாக்காமல் காக்கிறது.
 4. லிகோரைஸ் (Licorice) ஒரு வித வேர். இதன் சாற்றை உடம்பில் தடவினால் அரிப்பு, வீக்கம், தோல் சிவப்பாதல் முதலியவற்றை நீக்கும்.
 5. மெந்தியம்: குழந்தையின் சருமத்தில் இருக்கும் ஈரப்பசையை காக்கும் ஒரு அற்புதமான இயற்கையான மாய்ச்சரைசெர் மெந்தியம். இன்றைக்கும் பாட்டி வைத்தியத்தில் மெந்தியத்திற்கு ஸ்பெஷல் இடம் இருக்கிறது. பச்சைப் பயறு மற்றும் மெந்தியம் சேர்த்து அரைத்து சோப்பிற்கு பதிலாக அந்தக் காலத்தில் உபயோகப் படுத்தியதால் தான் இன்றைக்கும் பாட்டிமார்கள் அழகாக இருக்கிறார்கள்! பல வீடுகளில் இன்றைக்கும் குழந்தைக்கு குளிப்பாட்டும்போது பச்சைப் பயறு மாவையே பயன்படுத்துகிறார்கள்.
 6. ஆலோ வேரா எனப்படும் கற்றாழை சாறு: இது மிகப் பிரபலமான அழகு சாதனங்களிலும், பேபி கேர் பொருட்களிலும் உபயோகப் படுத்தப்படும் ஒரு மூலிகை. ஆயுர்வேதத்திலும் இதன் உபயோகம் அளவிடமுடியாதது. சரும நோய், தீக்காயங்கள், புண்கள் ஆகியவற்றிற்கு இது ஒரு சிறந்த நோய் நிவாரணியாக செயல் படுகிறது.  பாப்பாவின் பட்டு மேனியை நோய் கிருமிகள் அண்டா வண்ணம் பாதுகாக்கும் இது.

குழந்தைக்கான பராமரிப்புப் பொருட்கள் வாங்கும்போது மேற்கண்ட பொருட்கள் அடங்கியுள்ள லோஷன், கிரீம் எனப் பார்த்து வாங்குங்கள். இந்தப் பனிக் காலத்திலும் உங்கள் கண்மணி வாடாமல் அன்று பூத்த புஷ்பம் போலே இருப்பாள். புது பாப்பாவுக்கும்,  புது தாய்மார்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

published in a2ztamilnadunews.com

தேன் மற்றும் லவங்கப் பட்டையின் மருத்துவ குணங்கள்


“பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்” என்றாள் அவ்வைப் பாட்டி.

தேன் ஒரு இயற்கை உணவு. அவ்வைப் பாட்டி காலத்திலிருந்தே தேன் ஒரு அரிய விஷயமாக எல்லோரும் அதனைப் பற்றி கட்டாயம் அறிய வேண்டிய விஷயமாக  இருந்திருக்கிறது. அக்காரணம் கொண்டே அவ்வைப் பாட்டி கடவுளுக்கு தேனை கொடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறாள்.

தேன் நீண்ட நாட்களுக்குக் கெட்டுப் போகாதது. சில சமயங்களில் நீண்ட நாட்கள் உபயோகப் படாமல் இருந்தால் படிகங்கள் உருவாகி விடும். அப்போது தண்ணீரைக் கொதிக்க வைத்து தேன் பாட்டிலின் மூடியை சிறிது திறந்து விட்டு பாட்டிலை சூடு தண்ணீருக்குள் வைத்து விட்டு அடுப்பை அணைத்து விடவும். தேன் மறுபடி உருகி பழைய நிலைக்குத் திரும்பும். தேனை ஒருபோதும் கொதிக்க வைக்கக் கூடாது. மைக்ரோ வேவ் அவனிலும் வைக்கக் கூடாது. இப்படி செய்வது தேனில் இருக்கும் இயற்கையான உயிர் சத்தை கொன்று விடும்.

வெறும் தேன் மட்டுமல்லாமல் அதனுடன் இலவங்கப் பட்டை சேர்ப்பதால் பல நோய்கள் குணமாகும் என்று மருத்துவர்களும் அறிவியலாளர்களும் கூறுகிறார்கள். இந்தக் கலவை எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்றும் சொல்லுகிறார்கள்.
தேனின் இயற்கையான இனிப்பு, சரியான அளவில் எடுத்துக் கொண்டால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் கூட கெடுதல் செய்யாது.

 

இலவங்க பட்டையை நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ளவும். தேன் ஒரு பாட்டில் வீட்டில் எப்போதும் இருக்கட்டும்.
இனி இவற்றை வைத்துக் கொண்டு என்ன என்ன நோய்களை சரி செய்யலாம் என்று பார்க்கலாம்:

இருதய நோய்:
தேன் மற்றும் இலவங்கப் பட்டை பொடி இரண்டையும் கலந்து பிரெட்டின் மேல் ஜாம்முக்கு பதில் தடவி உண்பதால் கொலஸ்ட்ரால் குறையும். இருதயத்தில் இருக்கும் தமனிகளில் இருக்கும் கொலஸ்ட்ராலைக்  குறைக்கும். ஏற்கனவே மாரடைப்பு  நோய் வந்தவர்களும் இதை சாப்பிடுவதால்  மறுபடி மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். . வயது ஏற ஏற நம் இருதயத்தின் தசைகள் வலுவிழந்து போகின்றன. தேனும் இலவங்கப் பட்டையும் இருதய தசைகளை வலுப் பெறச்செய்கின்றன. அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் சில மருத்துவ மனைகளில் சில நோயாளிகளுக்கு இந்த தேன், லவங்கப் பட்டை சேர்ந்த உணவைக் கொடுத்து ஆராய்ந்ததில் இம்முடிவு தெரிந்தது.

மூட்டு நோய்:
மூட்டு நோய் உள்ளவர்கள் காலை, மாலை இருவேளைகளிலும் ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனும் ஒரு சிறிய ஸ்பூன் இலவங்கப் பட்டைப் பொடியும் கலந்து சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட மூட்டு நோய் குணமாகும்.

சிறுநீர் பை தொற்று நோய்:
சற்று வெது வெதுப்பான நீரில் இரண்டு மேசைக் கரண்டி இலவங்கப் பட்டை பொடி, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட நோய் கிருமிகள் அழியும்.

கொலஸ்ட்ரால்:
16 அவுன்ஸ் டீ தண்ணீருடன் 2 மேசைக் கரண்டி தேனும், 3 டீஸ்பூன் இலவங்கப் பட்டை பொடியும் சேர்த்து சாப்பிட கொலஸ்ட்ரால் அளவு இறங்கிவிடும். தொடர்ந்து சாப்பிட நல்ல பலன் தெரியும். சுத்தமான தேன் தினமும் உணவுடன் சாப்பிட கொலஸ்ட்ரால் மூலம் வரும் தொந்திரவுகள் குறையும்.

ஜலதோஷம்:
ஒரு மேசைக் கரண்டி தேனை சுடு நீரில் வைத்து சிறிது வெதுவெதுப்பாக்கி அதனுடன் இலவங்கப் பட்டை பொடியை சேர்த்து மூன்று நாளைக்கு சாப்பிட கடுமையான ஜலதோஷம், இருமல், சைனஸ் தொல்லைகள் மறையும்.

வயிற்றுத் தொல்லை:
வயிற்று வலி, வயிற்றுப் புண்ணுக்கு தேனும் இலவங்க பட்டை பொடியும் மிகச் சிறந்த மருந்து.

வாயுத் தொல்லை:
ஜப்பான் நாட்டில் நடந்த ஆய்வு மூலம் இலவங்க பட்டை பொடியை தேனுடன் குழைத்து  சாப்பிட வாயுத் தொல்லை தீரும் எனத் தெரிய வந்துள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி:
தினசரி தேனையும் இலவங்கப் பட்டைப் பொடியையும் சாப்பிடுவது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் நம் உடலை வைரஸ் தாக்குதலில் இருந்தும் காக்கும்.

அஜீரணக் கோளாறு:
இரண்டு மேசைக் கரண்டி தேனை எடுத்து அதன் மேல் சிறிது இலவங்கப் பட்டைப் பொடியைத் தூவி சாப்பாட்டுக்கு முன்னால் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறும், அசிடிடியும் குறையும். ஜீரணிக்க கடினமாக இருக்கும் உணவினை சாப்பிட்டவுடன் இந்தப் பொடியை தேனுடன் சாப்பிடுவது ஜீரணத்தை தூண்டி கடினமான உணவை ஜீரணிக்க உதவும்.

ஃப்ளு ஜுரம்:
இந்த ஜுரத்தை உண்டு பண்ணும் கிருமிகளை தேனின் இயற்கைத் தன்மை அழித்து விடுகிறது.

நீண்ட ஆயுளுக்கு:
ஒரு ஸ்பூன் இலவங்கப் பட்டை பொடியை மூன்று கப் நீரில் போட்டு கொதிக்க விடவும். அதனுடன் நான்கு டீஸ்பூன் தேன் சேர்த்து டீ செய்யவும். கால் கப் வீதம் மூன்று அல்லது நான்கு முறை குடிக்கவும். சருமத்தை இளமையாகவும் மென்மையாகவும் வைப்பதுடன், வயதாவதையும் தடுக்கிறது. இளமையிலேயே இந்த மாதிரி டீ பண்ணிக் குடித்து வந்தால், நூறு வயதுவரை கூட வாழலாம்.

முகப் பருக்கள்:
3 மேசைக் கரண்டி தேனுடன் ஒரு டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை குழைத்து பேஸ்ட் செய்யவும். இதப் பேஸ்ட்டை முகப் பருக்களின் மேல் நேரடியாக இரவு படுக்கப் போகுமுன் பூசவும். காலையில் எழுந்திருந்து வெதுவெதுப்பான நீரினால் முகத்தை அலம்பவும். தினசரி தொடர்ந்து செய்து வர முகப் பருக்கள் அடியோடு மறையும்.

சரும தொற்றுநோய்கள்:
தேனையும் இலவங்கப் பட்டை பொடியையும் சம அளவில் எடுத்து குழைத்து சொறி, சிரங்கு படை முதலியவற்றின் மேல் போட இவை மறைந்து விடும். தழும்பு கூட ஏற்படாது.

உடல் இளைக்க:
ஒரு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் தேன் மற்றும் இலவங்கப் பட்டைப் பொடியைப் போட்டு காலை உணவிற்கு முன்னும், இரவு தூங்கப் போவதற்கு முன்னும் குடிக்கவும். இந்தக் கலவையைக் குடிப்பதால் உடலில் இருக்கும் அதிகப்படி கொழுப்பு கரைவதுடன், மேலும் கொழுப்பு சேராமலும் இருக்கும். மிகவும் பருமனான உடல் இருப்பவர்கள் கூட தங்கள் எடையை குறைக்கலாம்.

புற்று நோய்:
சமீபத்தில் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் நடந்த ஆராய்ச்சியில் வயிறு, எலும்பு இவற்றில் உண்டாகும் புற்று நோய் முற்றிய நிலையில் இருந்தாலும் கூட இந்த இரண்டு பொருட்களின் கலவையால் சரி செய்யலாம் என்று தெரிய வந்திருக்கிறது. ஒரு மேசை கரண்டி தேன், ஒரு டீஸ்பூன் இலவங்கப் பட்டை பொடி கலந்து தினமும் மூன்று வேளை என்று ஒரு மாதத்திற்கு சாப்பிட வேண்டும்.

மிதமிஞ்சிய அசதி:
தேனில் இயற்கையாய் இருக்கும் இனிப்பு, நம் உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது. இந்த இனிப்பு நம் உடலுக்குத் தீங்கிழைப்பதில்லை. வயதானவர்கள் தேன், இலவங்கப் பட்டை பொடி இரண்டையும் சம அளவில் எடுத்து தினமும் சாப்பிடுவதால், உடலாலும் மனதாலும் மிகவும் சுறு சுறுப்பாக இருப்பார்கள்.  வயதானவர்களுக்கு மதியம் ஒருவித அயர்ச்சி ஏற்படும். பலவீனமாக உணர்வார்கள். அப்போது ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு மேசைக் கரண்டி தேன் சேர்த்து, அதி சிறிதளவு இலவங்கப் பட்டை தூவி, காலை பல் தேய்த்தபின்னும் மதியம் மூன்று மணி அளவிலும் குடித்துவர, அலாதியான தெம்புடன் நடமாடுவார்கள். ஒரே வாரத்தில் அசதி நீங்கி புத்துணர்வு பெறுவார்கள்.

வாய் துர் நாற்றத்திற்கு : ஒரு டம்ளர் சுடு நீரில் ஒரு டீஸ்பூன் தேன், சிறிது இலவங்கப் பட்டை பொடி போட்டு வாய் கொப்பளித்து வர துர் நாற்றம் விலகும்.

காது கேளாமை: தேனையும் இலவங்கப் பட்டைப் பொடியையும் சம அளவில் எடுத்து காலை, இரவு வேளைகளில் தினமும் சாப்பிட்டு வர காது கேளாமை நீங்கும்.

இயற்கையுடன் இயைந்து வாழும்போதும், இயற்கை மருந்துகளை பயன்படுத்தும்போதும் நம் நோய்கள் தானாகவே அகன்று விடுகின்றன.

மேலும் படிக்க 

published in a2ztamilnadunews.com

இன்று பாலிண்ட்ரோம்!

இன்று பாலிண்ட்ரோம்!

இன்றைய தேதி என்ன? 21.02.2012. இதில் ஒரு ஆச்சரியம் பாருங்கள். வலது பக்கத்தில் இருந்து படித்தாலும், இடது பக்கத்தில் இருந்து படித்தாலும் ஒரே மாதிரியே வரும். இப்படி இருக்கும் அமைப்பை ஆங்கிலத்தில் ‘palindrome’ என்கிறார்கள். பாலிண்ட்ரோம் அமைப்பு ஒரு வார்த்தையிலோ, ஒரு வாக்கியத்திலேயோ அல்லது சில எண்களின் கூட்டமைப்பிலோ வரலாம்.  பாலிண்ட்ரோம் என்ற வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து எடுக்கப் பட்டது. palin என்றால் மறுபடியும் என்று அர்த்தம். dromos என்றால் way, direction என்று பொருள். இந்த வார்த்தை 17 ஆம் நூற்றாண்டில் பென் ஜான்சன் என்கிற ஆங்கில எழுத்தாளரால் உருவாக்கப் பட்டது.

இந்தப்  பாலிண்ட்ரோம் அமைப்பில் கி.பி. 79 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வார்த்தை சதுரம் ஒன்று ஹீர்குலேனியம் என்ற இடத்தில் உள்ள ஒரு சுவற்றில் காணப்படுகிறது. இதுதான் மிகப் பழமையான பாலிண்ட்ரோம் என்று சொல்லப் படுகிறது.

“Sator Arepo Tenet Opera Rotas“  இதை எப்படி வாசித்தாலும் – மேலிருந்து கீழ், கீழிருந்து மேல், வல இடமாக, இடம் வலமாக – ஒரே மாதிரி இருக்கிறது பாருங்கள்.

பாலிண்ட்ரோம் என்பதனை தமிழில் ‘மாலை மாற்று’ என்கிறார்கள். முதன் முதலில் இந்த அமைப்பில் பாடல் எழுதியவர் சைவ சமயத்தைச் சார்ந்த சம்பந்தர். அந்தப் பாடல் இதோ:

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா

காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

இந்தப் பாடல் சீர்காழியில் உறையும் சிவ பெருமானைப் பற்றியது. ஈடு இணையில்லாத கடவுள்; வீணையைக் கையில் ஏந்தியவர்;பாம்புகளை மாலையாக அணிந்தவர்; காமனை அழித்தவர்; விஷ்ணு வடிவாகவும் இருப்பவர்; அவரே பக்தர்களின் துயர் களைய வேண்டும் என்று இப்பாடலில் சிவ பெருமானை வேண்டுகிறார் சம்பந்தர். திருஞா னசம்பந்தரின் ‘மாலை மாற்றுப் பதிகம்’ மிகவும் புகழ் வாய்ந்தது.

“ஒரு செய்யுள் முதல்,

ஈறு உரைக்கினும்,

அஃதாய் வருவதை

மாலை மாற்றென மொழி”

தமிழிலும் ஒரு வார்த்தை சதுரம் இருக்கிறது. இதை மேலிருந்து கீழ்,  இட வலமாக மட்டுமே வாசிக்க முடியும்.

க ர டி

ர யி ல்

டி ல் லி

மாதவச்சிவஞானயோகிகள் எழுதிய காஞ்சிப் புராணத்திலும், மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை எழுதிய திருநாகைக் காரோணப் புராணம் என்ற நூலிலும் ‘மாலை மாற்று’ பாணியில் பல செய்யுள்கள் உள்ளன.

தமிழில் உள்ள   பாலிண்ட்ரோம் வார்த்தைகள்

விகடகவி, மாமா, பாப்பா, காக்கா.

வாக்கியங்கள்: தேரு வருதே, மோரு போருமோ, மாலா போலாமா சமஸ்க்ருத மொழியில் இந்தப் பாலிண்ட்ரோம் அதிக அளவில் கையாளப் பட்டு வந்தன. சிக்கலான பாலிண்ட்ரோம் வார்த்தைகள், வாக்கியங்கள் கொண்ட கவிதை வரிகள் மகா என்ற கவிஞர் எழுதிய சிசுபால வதம் என்கிற நூலில் இருக்கின்றன. கீழே இருப்பது

நந்தி கண்ட கவி என்பவர் எழுதிய பாலிண்ட்ரோம் கவிதை வரிகள்.

सारस नयना घन जघ

नारचित रतार कलिक हर सार रसा

सार रसारह कलिकर

तारत चिरनाघ जनघ नायनसरसा ! |

ஆங்கில மொழியிலும் பாலிண்ட்ரோம் நிறைய இருக்கின்றன.

“A man, a plan, a canal, Panama”,

”Madam, I’m Adam”

”Madam in Eden, I’m Adam”,

“Doc, note: I dissent. A fast never prevents a fatness. I diet on cod.”

and “Never odd or even.” “Rise to vote sir”

ஆங்கில தேதி மற்றும் ஆண்டுகளை எழுதும்போதும் சில சமயங்களில் பாலிண்ட்ரோம் வரும். உதாரணங்கள்:

21.02.2012, 02.02.2020, 2.10.2012.

டேவிட் ஸ்டீபன்ஸ் எழுதிய ‘satire:veritas’ ,   லாரென்ஸ் லாவின் எழுதிய Dr. Awkward மற்றும்    Olson in Oslo முதலிய இரண்டு ஆங்கில நாவல்கள் பாலிண்ட்ரோம் முறையில் அமைந்துள்ளன.

 

 

 

published in a2ztamilnadunews.com

குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன் இழப்பு!

ஐம்புலன்களில் எந்தப் புலன் வேலை செய்யவில்லை என்றாலும் வாழ்க்கை நடத்துவது கஷ்டம் தான். காது கேளாமை என்பது ஒரே ஒரு குறைபாடு அல்ல. அதுவும் சின்னஞ்சிறு குழந்தைகள் காது கேளாமையால் பாதிக்கப் பட்டால் அவர்களது பேசும் திறமையும், மொழி அறிவும் பாதிக்கப்படும்.

 

குழந்தைகள் நாம் பேசுவதைக் கேட்டுக் கேட்டுத்தான் மொழி அறிவு பெறுகிறார்கள், பேசப் பழகுகிறார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.வளர்ந்த நாடுகளில் இந்தக் காது கேளாமை ஒரு பிறவிக் கோளாறாக இருக்கிறது; 1000 குழந்தைகளில் 3 குழந்தைகளுக்குக் காது கேட்பதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிறந்த குழந்தையால் பேச முடியாததால், குழந்தைக்கு  இந்தக் குறை இருப்பது குழந்தை பிறந்த உடனே மருத்துவருக்கோ அல்லது பெற்றோருக்கோ தெரிய வருவதில்லை.

 

தாய் பாடும் தாலாட்டையோ, ஒரு நர்சரி ரைம்சையோ  கேட்க இயலாத குழந்தைகளுக்கு பிற்காலத்தில் பேச்சுக் குறைபாடும் உண்டாகும்.காது கேளாமை என்பது வெளியே தெரியக் கூடிய குறை இல்லை. ஆதலால் உங்கள் குழந்தையின் கேட்கும் திறனை, குழந்தை பிறந்த உடனே சோதிப்பது நல்லது. எத்தனை சீக்கிரமாக குறை பாடு தெரிய வருகிறதோ அத்தனை சீக்கிரமாக குறைபாடு நீக்க வழியும் தேடலாம்.

 

குழந்தை பிறந்த பின், மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்கு வருவதற்கு முன் குழந்தையின் கேட்கும் திறனை சோதிக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் 4000   குழந்தைகள் இந்தக் குறைபாடுடன் பிறப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இப்படிப் பிறக்கும் குழந்தைகள் மற்றபடி ஆரோக்கியமாக இருக்கிறார்கள். உங்கள் குழந்தையின் கேட்கும் திறன் சரியாக உள்ளதா என்பதை பரிசோதிப்பது உங்கள் கடமை.

 

குழந்தையின் பேச்சுத் திறனுக்கும், மொழித் திறமைக்கும் குழந்தை பிறந்த முதல் வருடம் மிக மிக முக்கியமானது. கேட்கும் திறன் என்பது குழந்தையின் சமூக வாழ்க்கைக்கும், அறிவார்ந்த வளர்ச்சிக்கும் மிக மிக அவசியம்.

 

2007 மற்றும்  2010 நடந்த ஆய்வறிக்கைகளின் நோக்கங்கள்:

ஒவ்வொரு குழந்தையும் கேட்கும் திறனுக்காக முதல் ஒரு மாதத்திலேயே பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஒரு வேளை கேட்கும் திறன் இல்லை என்றால் எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது மற்றும் எந்த வகை காது கேளாமை என்பதையும் முதல் மூன்று மாதத்திற்குள் கண்டறியப் பட வேண்டும். முதல் ஆறு மாதங்களுக்குள் கேட்கும்  திறனைப் பெற குழந்தைக்கேற்ற ஒரு திட்டத்தை தேர்ந்து எடுத்து, அதற்கான எல்லா உதவிகளும் செய்து கொடுக்கப் பட வேண்டும். இவை மூன்றும் 1-3-6 நெறிமுறை ( protocol )என்று சொல்லப் படுகிறது.

 

பிறந்த குழந்தையின் கேட்கும் திறனை அறிய உதவும் சோதனைகள்:

இரண்டு வகையான பரி சோதனைகள்  பச்சிளம் குழந்தைகளின் கேட்கும் திறனை அறிய உதவுகின்றன. இரண்டுமே மிக மிக பாதுகாப்பானவை. சில நிமிடங்களில் செய்து முடிக்கப் படுபவை. குழந்தைகளுக்கு இந்த பரிசோதனைகளினால் எந்த பாதிப்பும் ஏற்படாது. பெரும்பாலும் குழந்தைகள் இந்த பரிசோதனைகளின் போது உறங்கிக் கொண்டு இருப்பார்கள்.

 

முதல் நிலைப் பரிசோதனை:  Otoacoustic Emission டெஸ்ட்:

குழந்தையின் உட்காதுகளுக்குள் வெளிப்புற சத்தத்தினால் ஏற்படும்  சின்ன சின்ன அதிர்வுகள்மிக நுண்ணிய ஒலிவாங்கி மூலம் அளக்கப் படுகின்றன. இந்த அதிர்வுகள் ஒரு கணணிக்குள் செலுத்தப்பட்டு குழந்தையின் கேட்கும் திறன் கண்டறியப் படுகிறது.

 

இரண்டாம் நிலை பரிசோதனை: ABR  (Auditory Brainstem Response) இந்தப் பரிசோதனை குழந்தையின் மெல்லிய சத்தங்களைக் கேட்கும் திறனை அறிய உதவுகிறது. குழந்தையின் காதுகளில் மிகச் சிறிய செவிப் பொறி ( ear phone ) மூலம் ஊக்கச் சொடுக்கல் (click stimulus ) செலுத்தப் படுகிறது. இது ஆறு மாதத்திற்கு குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு செய்யப்படும் பரிசோதனை.

 

சில சமயங்களில் குழந்தை விழித்துக்கொண்டோ, விளையாடிக் கொண்டோ இருந்தால் இந்தப் பரிசோதனைகளின் முடிவு சரியாக இல்லாமல் போகலாம். திரும்பவும் இப்பரி சோதனைகளைச் செய்ய வேண்டி வரும்.

 

உங்கள் வீட்டில் யாருக்கேனும் காது கேளாமைக் குறைபாடு இருந்தால் உங்கள் குழந்தையின் காது கேட்கும் திறனை ஒவ்வொரு வருடமும் சோதிப்பது நல்லது. குழந்தை பேசுவதில், அல்லது மொழியை கற்றுக் கொள்ளுவதில் பிரச்சினை இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

 

ஹியரிங் எய்ட் தவிர உட்காதுகளில் பொருத்தப் படும் உள்வைப்பு சாதனங்கள்  (implants ), பேச்சு சிகிச்சை (speech therapy ), செவிப் புலப் பயிற்சி (auditory training ) என்று பல விதங்களில் குழந்தையின் கேட்கும் திறனையும் மொழி கற்கும் திறனையும் மேம் படச் செய்யலாம்.

 

மருத்துவத் துறை இப்போது பல வகையில் முன்னேறி இருக்கிறது. உலகின் பல நாடுகளில் வெவ்வேறு விதமான ஆராய்ச்சிகள்  மருத்துவத்தின் ஒவ்வொரு துறையிலும் நடந்து வருகின்றன. பிறவிக் கோளாறுகளே இல்லாமல் குழந்தைகள் பிற்காலத்தில் பிறக்கவும் கூடும் என்ற நிலையும் வரலாம்.

 

எந்த ஒரு குறை பாடும் ஆரம்பத்திலேயே கண்டு பிடிக்கப்பட்டால் தீர்வு காணுவதும் எளிது. குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள் காது கேளாமை குறைபாடு இருப்பது கண்டு பிடிக்கப் பட்டால் செயற்கை கருவிகள் மூலம் கேட்கும் திறனை சரி செய்யலாம். குறைபாடு சீக்கிரம் கண்டு பிடிக்கப் பட்டு சிகிச்சையும் அளிக்கப் பட்டால் குழந்தையின் வாழ்வை அழகாக மலரச் செய்யலாம்.

 

ஐ.வி.எஃப் – சரோகசி

ஐ.வி.எஃப் – சரோகசி

“டிசெம்பர் 1 ஆம் தேதி அன்று ஆமீர் கான் – கிரண் தம்பதிகள் ஐ.வி.எஃப் – சரோகசி முறையில் ஒரு ஆண் குழந்தை பெற்றனர்.” போன வாரம் இந்தச் செய்தி எல்லாப் பத்திரிகைகளிலும் முதல் பக்கத்திலேயே வந்திருந்தது.

‘பாலிவுட் நம்பர் 1 நடிகர் ஆமீர்; பணத்திற்குக் குறைவில்லை; எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்; இதென்ன பெரிய விஷயம்?’ என்கிறீர்களா? நிஜம் தான். அவருக்கு என்றில்லை, நம் நாட்டில் இருக்கும் ஜனத் தொகையைப் பார்த்தால் குழந்தை பிறப்பது என்பது சர்வ சாதாரணமான விஷயம். இந்த செய்தியில் விசேஷம் குழந்தை பிறந்த முறை – அதாவது ஐ.வி.எஃப் – சரோகசி

அதென்ன ஐ.வி.எஃப் – சரோகசி?

முதலில் ஐ.வி.எஃப் என்றால் என்ன என்று பார்ப்போம்.
இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷன் (தமிழில் சொல்ல வேண்டுமானால் ஆய்வுக்கூட சோதனை முறைக் கருவுறுதல்)
என்பதின் சுருக்கம் தான் ஐ.வி.எஃப். இன் விட்ரோ என்றால் இலத்தீன் மொழியில் (in glass) ‘கண்ணாடி’யில் என்று பொருள். உயிரியல் துறையில் செயற்கை முறையில் திசுக்களை வளர்ப்பதற்கு கண்ணாடியால் ஆன சோதனைக் குடுவை, சோதனை குழாய் ஆகிய கண்ணாடி உபகரணங்களையே பயன்படுத்துவதால் இந்தப் பெயர் வந்தது. ஃபெர்டிலைசேஷன் என்பது கருவுறுதலைக் குறிக்கும். ஒரு சோதனைச் சாலையில், ஒரு கண்ணாடி தட்டில் (இந்த தட்டை பெட்ரி டிஷ் (petri dish) என்கிறார்கள்.) உண்டாக்கப்படும் கருத்தரிப்பை In vitro fertilization என்கிறார்கள்.

இயற்கையில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் உடலுறவின் மூலம் உண்டாகும் கர்ப்பத்தை வெளியே ஆய்வுக் கூடத்தில் நிகழச் செய்கிறார்கள். இதன் காரணமாகவே இதனை ஆய்வுக்கூட சோதனை முறைக் கருவுறுதல் என்கிறார்கள். இந்த முறையில் பிறக்கும் குழந்தைகளை ‘டெஸ்ட் ட்யூப் பேபி’ (சோதனைக் குழாய்க் குழந்தை) என்று சொல்லுகிறார்கள். 1978 ஆம் ஆண்டு இந்தஐ.வி.எஃப் முறையில் பிறந்த லூயிஸ் பிரவுன் என்கிற பெண் குழந்தைதான் உலகின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபி. ராபர்ட் ஜி. எட்வர்ட்ஸ் என்கிற உயிரியல் வல்லுனரால் உருவாக்கப்பட்ட இந்த கருத்தரித்தல் முறை அவருக்கு நோபல் பரிசினையும் 2010 ஆம் ஆண்டு வாங்கித் தந்தது.

செயற்கை கருத்தரிப்பு ஏன்?
இயற்கையாக ஒரு பெண்ணால் கருத்தரிக்க முடியாமல் போகும்போது செயற்கைக் கருத்தரிப்பை மருத்துவர் சிபாரிசு செய்யக் கூடும்.
செயற்கை கருத்தரிப்பில் பல வகைகள் உள்ளன. அதில் ஒரு வழி தான் இந்த ஐ.வி.எஃப். ஒரு பெண்ணிற்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்வதற்குப் பல காராணங்கள் உண்டு:
பெண்ணின் கருமுட்டைக் குழாயில் (ஃ பாலோப்பியன் ட்யூப் ) அடைப்பு ஏற்பட்டு அதனால் கருத்தரிப்பு உண்டாகாமல் போவது.
ஆணின் சக்தி குறைவான விந்துக்கள். இதனால் கருப்பைக்குள் விந்து நுழைவது முடியாமல் போகிறது. மற்ற முறைகளால் விந்துவை கருப்பைக்குள் செலுத்துவது இயலாமல் போகும்போது ஐ.வி.எஃப் முறையில் கருமுட்டையுடன் சேர்க்கிறார்கள்.

இந்த ஆய்வுக்கூட சோதனை முறை கருவுறுதல் வெற்றிகரமாக நடை பெற 3 முக்கியத் தேவைகள்:

 1. ஆரோக்கியமான கரு முட்டை;
 2. அந்த முட்டையை கருவுறச் செய்யும் வலிமை வாய்ந்த விந்தணுக்கள்.
 3. கருவைத் தாங்கக் கூடிய ஆரோக்கியமான கர்ப்பப்பை.

அதிகப் பணம் தேவைப்படும் என்பதால் மற்ற முறைகளால் ஒரு பெண் கர்ப்பந்தரிக்க முடியாமல் போகும்போது மட்டுமே மருத்துவர்கள் இதனை சிபாரிசு செய்கிறார்கள்.

ஐ.வி.எஃப் செயல் முறை:
ஒவ்வொரு மாத விடாய் சுழற்சியின் போதும் ஒரு கரு முட்டை பெண்ணின் கருவகத்தில் உருவாகிறது. கர்ப்பம் உருவாகாமல் போகும் போது முட்டை உடைந்து மாத விடாயாக வெளியே வருகிறது. ஆனால் ஐ.வி.எஃப் முறையில் கர்ப்பத்தை உண்டு பண்ண பல கரு முட்டைகள் தேவைப்படுகின்றன. அதனால், முதலில் பெண்ணின் கருவகம், பல கருமுட்டைகளை உற்பத்தி செய்ய ஹார்மோன் ஊசிகளின் மூலம் தூண்டப்படுகிறது. அப்படி உருவான கரு முட்டைகள் வெளியே எடுக்கப்பட்டு சோதனைச் சாலையில் ஆணின் விந்துவுடன் சேர்க்கப்படுகிறது. இந்த சேர்க்கையில் எல்லா முட்டைகளும் கருவுறுவுதில்லை. சில கரு முட்டைகள் மட்டுமே கரு உறுகின்றன. கரு உருவான முட்டைகளை முளைக் கருக்கள் (embryos) என்கிறார்கள். பல நாட்கள் சோதனைச் சாலையிலேயே இருக்கும் இந்த முளைக் கருக்களில் சிறந்தவைகள் மட்டும் தேர்ந்தெடுக்கப் பட்டு மீண்டும் பெண்ணின் கர்ப்பப்பைக்குள் செலுத்தபடுகிறது.

இதுவே இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷன் எனப்படுகிறது. இயற்கையான கர்ப்பம் போலவே பெண்ணின் கர்ப்பப்பையில் குழந்தை உருவாகிறது.

 

published in a2ztamilnadunews.com

சரோகசி (Surrogacy) என்றால் என்ன?

ஒரு பெண் இன்னொருபெண்ணின் கர்ப்பத்தைத் தாங்கி குழந்தையைப் பெற்று எடுப்பது தான் சரோகசி. சரோகசி என்கிற இந்த சொல்

surrogatus என்கிற இலத்தீன் மொழி வார்த்தையிலிருந்து வந்தது. இதன் அர்த்தம் ‘ஒருவருக்கு பதிலாக’ அல்லது ‘ஒருவரின் இடத்தில்’ என்பது. ஒரு பெண் தன் கர்ப்பப்பையை இன்னொருவரின் கர்ப்பத்தைத் தாங்குவதற்காக பயன் படுத்துவதுதான் இந்த சரோகசி. இப்படி இன்னொருவரது கர்ப்பத்தைத் தாங்கும் பெண்ணை சரோகேட்  மதர் அல்லது வாடகைத் தாய் என்கிறார்கள். மரபியல் மூலமாக வாடகைத் தாய்க்கும் அவர் பெற்றெடுக்கும் குழந்தைக்கும் எந்தவிதத் தொடர்பும் இருக்காது.

வாடகை கர்ப்பப்பையை ஏன் நாட வேண்டும்?  

பல முறை ஐ.வி.எஃப் முறை செய்தும் ஒரு பெண்ணால் கர்ப்பம் தரிக்கமுடியாமல் போகிறது. சில சமயங்களில்,

பெண்ணின் கர்ப்பப்பை, கர்ப்பத்தை 10 மாதங்கள் தாங்க முடியாதபடி பலவீனமாக இருக்கும் போது, அல்லது கர்ப்பப்பை தொற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகி கர்ப்பம் தரிக்கமுடியாமல் போகும் போதும் இன்னொரு பெண்ணின் உதவியுடன் தன் குழந்தையை பெற்றெடுக்க ஒரு பெண் விரும்பலாம்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) இந்த சரோகசி முறைக்கு பல விதிமுறைகளை நடைமுறைப் படுத்தியுள்ளது.
 • ஒரு பெண்ணால் உடல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் குழந்தை பெறமுடியாமல் போகும் போது மட்டுமே அந்தப் பெண்ணின் அனுமதியுடன் சரோகசி சிபாரிசு செய்யப்பட வேண்டும்.
 • வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தை, ‘Deoxyribo Nucleic Acid’ எனப்படும் டி. ஏன்.எ. பரிசோதனை மூலம் இன்னாரின் குழந்தை என்று நிரூபிக்கப் பட வேண்டும். இல்லாத பட்சத்தில் அந்தக் குழந்தை உருவாகக் காரணமாக இருந்த உயிரியல் பெற்றோர்கள் (biological parents) அக்குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
 • கர்ப்ப காலத்தில் வாடகைத் தாய்க்கு கொடுக்கப்படும் பண உதவிக்கு ஆவணச் சான்றுகள்  இருக்க வேண்டும். அவருக்கு கர்ப்பத்தினால் ஏற்படும் செலவுகள் அனைத்தையும் ஈடு செய்யும் அளவுக்கு பண உதவி அளிக்கப் படவேண்டும்.
 • ஒரு பெண் மூன்று தடவைக்கு மேல் தன் கர்ப்பப்பையை வாடகைக்குக் கொடுக்கக் கூடாது.

வாடகைத் தாயை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள்?

நம் நாட்டில் சரோகசிக்கென்றே இருக்கும் பல அமைப்புகளும், மகப் பேறு மருத்துவர்களும்   குழந்தைப்  பேறு இல்லாமல் இருக்கும் பெண்களுக்கு இந்த சரோகசி முறையைப் பற்றி சொல்லுகிறார்கள். அவர்களின் சம்மதத்திற்குப் பிறகு இந்த அமைப்புகளின் கவுன்சிலர்கள்  வாடகைத் தாயாக ஆவதற்கு தயாராக இருக்கும் பெண்களிடம் பல முறை பேசுகிறார்கள். இந்த முறையை பற்றிய முழு விவரமும் அவர்களுக்கு சொல்லி அவர்களது சம்மதத்தை எழுதி வாங்குகிறார்கள். இரண்டு தரப்பும் ஒப்புக்கொண்ட பிறகே இம்முறை செயல் வடிவம் பெறுகிறது. இதில் இரு தரப்பினருக்கும் லாபம். ஒரு பெண்ணுக்கு குழந்தையும், இன்னொருவருக்கு பணமும் கிடைக்கிறது.

இந்த சரோகசி முறை இயற்கையில் கர்ப்பம் தரிக்க முடியாத, கர்ப்பப் பை பலவீனமாக இருக்கும்  பெண்களுக்கு ஒரு வரப் பிரசாதம் என்று சொல்லலாம். அதே போல வறுமையில் இருக்கும் பெண்களுக்கும் இப்படி கர்ப்பபையை வாடகைக்குக் கொடுப்பதில் நல்ல வருமானம் கிடைக்கிறது. கர்ப்ப காலம் முழுமைக்கும் ஆயுள் காப்பீடும், ஒரு மாதத்திற்கு 3000 ரூபாயும், குழந்தை பிறந்த பிறகு 2.5 லட்ச ரூபாயும் வாடகைத் தாய்மார்களுக்குக் கொடுக்கப்படுகிறது.

தற்சமயம் நம் நாட்டில் இந்த முறையை ஒழுங்கு படுத்த சட்டம் இல்லை. இந்திய ஜனத் தொகையில் கிட்டத்தட்ட 10 % மக்கள் மலட்டுத் தன்மையால் பாதிக்கப் பட்டுள்ளனர். சரோகசி முறையை சரிவரப் பயன்படுத்தினால் பல பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று மருத்துவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

இந்தியா போன்ற பழமையில் ஊறிய நாடுகளில் இம்முறை சிறிது தாழ்ந்த கண்ணோட்டத்துடனேயே பார்க்கப்படுகிறது. ஆமீர் கானைப் போன்ற பிரபலங்கள் வெளிப்படையாக தங்களுக்கு இம்முறையில் குழந்தை பிறந்ததைப் பற்றிக் கூறும் போது பழமையில் ஊறிய மனங்களும் மாறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

 

 

published in a2ztamilnadunews.com

ருத்ராக்ஷம்

ருத்ராக்ஷம் 

பெயர்க் காரணம்:

ருத்ராக்ஷம் என்பதை ருத்ர + அக்ஷ என்று பிரிக்கலாம். ருத்ர என்பது சிவபெருமானையும் அக்ஷ என்பது கண்ணீரையும் குறிக்கும். இந்தப் பூவுலகத்தில் மனிதர்கள் படும் துன்பங்களைப் பார்த்து பொறுக்கமுடியாமல் நீண்ட தவத்தில் ஆழ்ந்துவிட்டாராம். அவர் கண்களைத் திறந்த போது அவரது கண்களிலிருந்து சில கண்ணீர் துளிகள் பூமி தாயின் மடி  மேல் விழ, அந்த இடத்தில் ருத்ராக்ஷ மரங்கள் முளைத்தனவாம்.

கிடைக்கும் இடங்கள்:

ருத்ராக்ஷம் என்பது ஒரு வகைப் பழத்தின் விதை. இதனுடைய தாவரவியல் பெயர் Eleocarpous Ganitrux Roxb என்பதாகும்.

ருத்ராக்ஷத்தில்  பலவகைகள் உள்ளன. அவற்றில் மிகப் புனிதமானவையும், சக்தி வாய்ந்தவையும் ஹிமாலய பர்வதத்தில் கிடைப்பவைதான். தென்னிந்தியாவிலும், இந்தோனேஷியா , ஜாவா, சுமத்ரா மற்றும் பாலி முதலான நாடுகளிலும் ருத்ராக்ஷங்கள் கிடைக்கின்றன.

ருத்ராக்ஷத்தின் பெருமை:

ரத்தினங்களின் ராஜா என்று ருத்ராக்ஷம் அழைக்கப்படுகிறது. பண்டைய புராணங்களிலும் ருத்ராக்ஷத்தைப் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. அவைகளில் ருத்ராக்ஷத்தின் மருத்துவ மகிமையும், அதன் குணப்படுத்தும் சக்தியும் பரவலாகப் பேசப்படுகிறது.  கடவுளர்கள் கூட ருத்ராக்ஷம் அணிந்திருந்ததாக தெரிய வருகிறது. வெகு காலத்திற்கு முன்பே ருத்ராக்ஷ சிகிச்சை என்பது பிரபலமாக இருந்திருக்கிறது. 5 முகங்கள் கொண்ட 6 ருத்ராக்ஷங்களை இரவு முழுதும் நீரில் போட்டு வைத்து, காலையில் எழுந்து அந்த நீரை வெறும் வயிற்றில் குடிப்பதுதான் ருத்ராக்ஷ சிகிச்சை என்பது.     இப்படி குடிப்பதால் உடல் களைப்பு நீங்கி புத்துணர்வு ஏற்படும்.

உண்மையான ருத்ராக்ஷம்:

நிஜமான ருத்ராக்ஷத்தை எப்படி கண்டுபிடிப்பது? ருத்ராக்ஷத்தை தண்ணீரில் போட்டால் மூழ்க வேண்டும்; அப்போது அது உண்மையான ருத்ராக்ஷம் என்று சிலர் சொல்லுகிறார்கள். இன்னொரு பரிசோதனை காப்பர் காயின் (copper coin) பரிசோதனை. இந்தப் பரிசோதனையில் இரண்டு தாமிர காசுகளுக்கு நடுவில் ருத்ராக்ஷத்தை வைக்கிறார்கள். ருத்ராக்ஷத்தில் காந்த சக்தி இருப்பதால் அது சுழல ஆரம்பிக்கிறது. அப்படி சுழலும் ருத்ராக்ஷம் உண்மையானது என்று சொல்லலாம். ஆனால் ஒரு சில போலி வியாபாரிகள் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ருத்ராக்ஷத்தின் நடுவில் சிறிய காந்தத் துண்டை வைத்து அது சுழலும்படி செய்கிறார்கள். அதனால் இந்தப் பரிசோதனையும் சரியானது அல்ல.

சமீப காலமாக ருத்ராக்ஷத்தை ஸ்கேன் (scan) அல்லது X-Ray செய்து பார்க்கிறார்கள். இதன் மூலம் ருத்ராக்ஷத்தின் உள்ளமைப்பு தெரிய வருகிறது. அதனை ஆராய்ந்து உண்மையான ருத்ராக்ஷத்தை கண்டு பிடிக்கிறார்கள். ருத்ராக்ஷத்தில் இருக்கும் பிளவுகளை முகம் (முகி) என்கிறார்கள். ஒரு ருத்ராக்ஷத்தில் ஒன்று முதல் 21 முகிகள் வரை இருக்கும். ஒவ்வொரு ருத்ராக்ஷமும் தனித் தன்மை வாய்ந்தவை. இவை தவிர கணேஷ ருத்ராக்ஷம், கௌரிசங்கர ருத்ராக்ஷம் என்றெல்லாம் ருத்ராக்ஷங்கள் கிடைக்கின்றன.

ருத்ராக்ஷத்தை அணிவதால் வரும் நன்மைகள்:

இதைத் தவிர ஒவ்வொரு ருத்ராக்ஷமும் ஒரு கிரகத்துடன் தொடர்பு கொண்டவை. கிரகங்களினால் மனிதனுக்கு வாழ்வில் ஏற்படும் எதிர்மறை விளைவுகளை ருத்ராக்ஷம் சரி செய்யும் வல்லமை படைத்தவை. ருத்ராக்ஷங்கள் நம் மனத்தையும் உடலையும் ஆத்மாவையும் தூய்மை படுத்தும் சக்தியும் கொண்டவை. இவற்றில் இருக்கும் மின்காந்த சக்தி நம் மூளையை தூண்டிவிட்டு, நம் உடல் உறுப்புக்களை சரிவர இயங்கச் செய்கிறது. இரத்த அழுத்தம், மன அழுத்தம் இவை குறைய ருத்ராக்ஷம் உதவுகிறது.

யார் அணியலாம்:

ருத்ராக்ஷத்தை ஆண், பெண், குழந்தைகள் , பெரியவர்கள் என்று எல்லோரும் அணியலாம். ஜாதி, மத பேதம் ருத்ராக்ஷம் அணியத் தடை இல்லை. இது நமக்கு இயற்கை தந்த வெகுமதி. அதனால் இதை வேறுபாடின்றி எல்லோரும் அணிந்து பயன் பெறலாம்.

ஒருவரது பிறந்த நாளை வைத்து அவருக்கு ஏற்ற ருத்ராக்ஷத்தை தேர்ந்தெடுக்கலாம். இந்த சிவராத்திரி தினத்தில் சிவபெருமானுக்கு பிரியமான ருத்ராக்ஷத்தை அணிந்து அவரது அருளுக்குப் பாத்திரமாகலாம்.

 

 

published in a2ztamilnadunews.com

வயது முதிர்ந்தவர்களுக்கான ஆரோக்கிய குறிப்புகள்

வயது முதிர்ந்தவர்களுக்கான  ஆரோக்கிய குறிப்புகள் 

ஆரோக்கியம் என்பது எல்லோருக்குமே அவசியம் என்றாலும், வயது ஏற ஏற சில விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை மிகச் சிறந்த முறையில் பாதுகாக்கலாம்.

 • தொலைபேசியில் பேசும்போது இடது காதில் ரிசீவரை வைத்துக் கொண்டு பேசவும்.
 • இரண்டு வேளை காப்பி அருந்த வேண்டாம்.
 • குளிர்ந்த தண்ணீரில் (ப்ரிட்ஜ் தண்ணீர்) மாத்திரைகளை சாப்பிடாதீர்கள்.
 • மாலை 5 மணிக்கு மேல் கனமான  ஆகாரம் வேண்டாம்.
 • எண்ணெய் பதார்த்தங்களை கூடுமானவரையில் தவிர்க்கவும்.
 • காலை வேளைகளில் நீர் அதிகம் அருந்தவும். இரவு வேளைகளில் குறைவாக குடியுங்கள்.
 • ஹெட் போன், இயர் போன் அதிக நேரம் பயன் படுத்த வேண்டாம்.
 • இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணிவரை தூங்குவதை பழக்கப் படுத்திக் கொள்ளவும்.
 • மருந்து சாப்பிட்டவுடன் படுக்க வேண்டாம்.
 • கைபேசி சார்ஜ் ஆகும்போது அருகில் செல்ல வேண்டாம். பாட்டரி மிகவும் குறைந்து – அதாவது கடைசிக் கோட்டில் இருக்கும்போது பேச வேண்டாம். ஏனெனில், கைபேசியிலிருந்து வரும் கதிர் வீச்சு 100 மடங்கு அதிகம் இருக்கும். சார்ஜ் செய்யும்போது கைபேசியை பயன்படுத்த வேண்டாம்.

உடல் ஆரோக்கியத்திற்கான ஜூஸ்கள் :

 • காரட் + இஞ்சி +  ஆப்பிள் = நமது உடல் உறுப்புகளை சுத்தம் செய்து வலுப் பெறச் செய்கிறது.
 • ஆப்பிள் + வெள்ளரிக் காய் + செலெரி கீரை = கான்சர் வருவதை தடுக்கிறது; வயிறு கெடாமல் இருக்கவும்  தலை வலி வாராமல் பாதுகாக்கவும், கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் நல்லது.
 • தக்காளி + காரட் + ஆப்பிள் = சருமப் பாதுகாப்பிற்கும், வாய் துர்நாற்றத்தை தடுக்கவும் நல்லது.
 • பாகற்காய் + ஆப்பிள் + பால் = உடம்பின் உள்சூட்டைக் குறைக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.
 • ஆரஞ்சு + இஞ்சி + வெள்ளரிக் காய் = சருமம் உலராமலும் வறண்டு போகாமலும் காக்கிறது.
 • அ ன்னாசி + ஆப்பிள் + தர்பூசணி = உடலில் சேரும் அதிகப்படி உப்பை நீக்கி சிறுநீரகத்தைக் காக்கிறது.
 • ஆப்பிள் + வெள்ளைக் காய் + கிவி பழம் = சருமத்தைக் காக்கிறது.
 • பேரிப்பழம் + வாழைப் பழம் = இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப் படுத்துகிறது.
 • காரட் + ஆப்பிள் + பேரி + மாம்பழம் = உடல் உஷ்ணத்தை குறைக்கிறது; உடலின் நச்சுத் தன்மையை போக்குகிறது; இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
 • தேன் + திராட்சை + தர்பூசணி + பால் = வைட்டமின் C + B2 இவற்றில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகிறது.
 • பப்பாளி + அன்னாசி + பால் = விட்டமின்கள் C, E, மற்றும் இரும்புச் சத்து நிறைந்து இருப்பதால் சருமப் பளபளப்புக்கும் உடலின் வளர் சிதை மாற்றத்திற்கும் உதவும்.
 • வாழைப் பழம் + அன்னாசி + பால் = உடலுக்குத் தேவையான போஷாக்கைக் கொடுக்கின்றன. மலச் சிக்கல் வராமல் பாது காக்கும்.

இந்த ஜூஸ் வகைகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சாப்பிடவும்.

பொதுவான குறிப்புகள்:

காலை வேளைகளில் தவறாமல் வாக்கிங் போவது உடலை நாள் முழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

வேளை தவறாமல் மருந்து மாத்திரைகளை சாப்பிடவும். மாதம் ஒருமுறையோ அல்லது மூன்று மாதத்திற்கு

ஒருமுறையோ மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். எப்போதும் கைவசம் மருந்து மாத்திரைகளை வைத்திருங்கள். மருத்துவரின் அனுமதி இல்லாமல் நீங்களாகவே ஒருபோதும் மாத்திரைகளை சாப்பிட வேண்டாம்.

வெளியில் போகும்போது எங்கு போகிறீர்கள், எப்போது வருவீர்கள் என்று சொல்லிவிட்டுப் போகவும். கைபேசியை நினைவாக எடுத்துப் போகவும். போக வேண்டிய இடத்திற்குப் போனபின் பத்திரமாக போய் சேர்ந்ததை உங்கள் வீட்டிற்குத் தெரியப் படுத்துங்கள். அதேபோல உங்கள் வீட்டிற்குத் திரும்பியபின், நண்பருக்கோ, உறவினருக்கோ வீட்டிற்கு வந்து சேர்ந்த விவரத்தை சொல்லுங்கள். இந்தப் பழக்கம் பல அனாவசிய பயங்களைப் போக்கும்.

உங்களுக்கென்று ஒரு பொழுதுபோக்கு மிகவும் அவசியம். டிவி பார்ப்பதை குறைத்துக் கொண்டு படிப்பது, வீட்டிற்குள் விளையாடும் விளையாட்டுக்களை விளையாடுவது,  குறுக்கெழுத்துப் போட்டி, கதை எழுதுவது, பேரன் பேத்திகளுடன் விளையாடுவது என்று சந்தோஷமாக பொழுதைக் கழியுங்கள்.

நண்பர்களுடன் வெளியில் போவது, குடும்பத்துடன் மாதம் ஒரு நாள் வெளியில் சாப்பிடப் போவது இவையெல்லாம் உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கும். வீட்டில் சின்னச் சின்ன வேலைகளை செய்து தரலாம். சிறு வயதில் கற்றுக் கொள்ள ஆர்வம் இருந்தும் முடியாமல் போனவற்றை இப்போது மனமும் ஆரோக்கியமும் இருந்தால் கற்றுக் கொள்ளலாம். சுற்றலாத் தளங்களுக்கோ, கோவில்களுக்கோ போய் வரலாம்.

மனதை அமைதியாக வைத்திருக்கப் பழகுங்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல, வீட்டில் இருப்பவர்களுக்கும் மன அமைதியைக் கொடுக்கும். அலுவலகத்திற்கு போனபோது இருந்தது போல வாழ்க்கை இப்போது இருக்காது. மாற்றத்திற்கு உங்களை தயார் செய்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகள் விளையாடும் போது ரசிக்க உங்களுக்கு நேரம் இருந்திருக்காது. இப்போது பேரக் குழந்தைகளின் விளையாட்டை ரசியுங்கள். அவர்களுக்கு பாட்டு சொல்லிக் கொடுங்கள்; கதை சொல்லுங்கள். ஒய்வு பெற்றபின் வாழ்க்கையை அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுங்கள். வீட்டில் பெரியவர்கள் இருப்பது ஒரு பெரிய பாக்கியம். பெரியவர்கள் ஆரோக்கியமாகவும் இருந்து விட்டால் குடும்பத்தில் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

 

published in a2ztamilnadunews.com

வீட்டு உபயோகப் பொருட்களில் சிக்கனம்

வீட்டு உபயோகப் பொருட்களில் சிக்கனம்:

சமீபத்தில் நண்பர் ஒருவரின் ‘புதுமனை புகும் விழா’ வுக்குச் சென்றிருந்தேன். “3 படுக்கை அறைகள் – with attached bath…… வீடு முழுவதும் சுமார் 100 மின்சார இணைப்புகள்… plug points,  மின்விளக்கு, மற்றும் மின் விசிறி வசதியுடன்…….நீங்கள் எங்கு உட்கார்ந்து வேண்டுமானாலும்  படிக்கலாம்; உங்கள் தலைக்கு மேல் மின் விளக்கு, மின் விசிறி இருக்கும். கைபேசியை சாரஜ் செய்யலாம்….”என்று பெருமையுடன் வீட்டைச்சுற்றி காண்பித்தார்.

நம் எல்லோருக்கும் சகல வசதிகளுடன் கூடிய வீடு என்பது பெரிய மகிழ்ச்சி தரும் விஷயம் தான். ஆனால் அத்தனை வசதிகளும் மின்சார கட்டணமாக நமக்கே திரும்பி வரும்போதுதான்  ஒவ்வொரு வசதிக்கும் நாம் கொடுக்கும் விலை என்ன என்று தெரியும். நாம் ஒவ்வொருவரும் நமது வருவாயில் 6% முதல் 12% வரை வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதிலும், அவற்றை பராமரிப்பதிலும், அவற்றுக்கான கட்டணங்களை கட்டுவதற்கும் செலவிடுகிறோம். வாழ்க்கைத்தரம் உயர உயர இந்தச் செலவுகள் அதிகமாகிக்கொண்டே  போகிறது.

ஒரு காலத்தில் செல்வந்தர்கள் மட்டுமே உபயோகித்து வந்த பல பொருட்கள் இப்போது அத்யாவசியம் என்றாகிவிட்டது. மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ் தவிர நாம் அன்றாடம் பயன் படுத்தும் பல பொருட்கள் மின்சாரம் சார்ந்த பொருட்களாகவே இருக்கின்றன. இப்பொருட்கள் இல்லை என்றால் எதுவுமே செய்ய முடியாது என்கிற நிலை இல்லை என்றாலும், கணவன் மனைவி இருவரும் சம்பாதிப்பதால், இந்தப் பொருட்களின் மீதான செலவுகளை பற்றி அதிகம் கவலைப் படுவதில்லை; மேலும் இந்தப் பொருட்களினால் வீட்டு  வேலையையும் துரிதமாக முடிக்க முடிகிறது.

இம்மாதிரி பொருட்கள் வேண்டாம் என்று சொல்ல முடியாது ஆனால் இவற்றை பயன்படுத்தும் போது சில சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதனால் மின்சார கட்டணத்தை சற்று குறைக்கலாம்.

மின்சார சேமிப்பு:

 1. 1.       சாதாரண பல்புகளுக்குப் பதிலாக Compact Fluroscent Bulb பயன்படுத்தலாம்:

இம்மாதிரியான பல்புகள் சாதாரண பல்புகளை விட 75% குறைந்த மின் சக்தியைப் பயன் படுத்துகின்றன. அதுமட்டுமல்ல; இவ்வகை பல்புகள் சாதாரண பல்புகளை விட 10 மடங்கு அதிக காலம் நீடித்து உழைக்கின்றன. அதனால் அடிக்கடி பல்புகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. குறைந்த செலவில் நிறைந்த வெளிச்சத்தை கொடுக்கின்றன.

 1. தேவையில்லாத மின்விளக்கு, மின்விசிறி முதலியவற்றை அணைக்கவும். குழந்தைகளுக்கும் இந்தப் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். இரவில் படுக்கப் போகும்போது வேண்டாத ப்ளக் ஸ்விட்ச்களை அணைக்கவும். கைபேசி சாரஜ் ஆனவுடன் ப்ளக் இணைப்பை துண்டிக்கவும். தற்போது கிடைக்கும் வாஷிங் மெஷின்கள் துணி துவைத்து முடித்தவுடனும், குடி நீர் கெட்டில், குளியலறை கெய்சர் ஆகியவை நீர் சுட்டவுடனும்  தாமாகவே அணைந்து விடுகின்றன என்றாலும் ப்ளக் இணைப்பை துண்டிப்பது நல்லது.

நீரை சேமிக்க வழிகள்:

 1. மழை நீர் சேமிப்பு நம் வீட்டுக்கு மட்டுமல்ல; நாட்டுக்கும் நல்லது. நிலத்தடி நீரை அதிகரிக்கவும் உதவும்
 2. குளிப்பதற்கு  ஷவர் அல்லது பக்கெட் பயன்படுத்துங்கள். பாத்டப் குளியல் வாரத்திற்கு ஒரு நாள் என்று வைத்துக்கொள்ளலாம். கழிவறையில் ஃபளஷ் பயன்படுத்தும் போதும் கவனம் தேவை. அங்கும் சின்ன வாளியைப் பயன்படுத்தலாம்; தப்பில்லை.
 3. சில வாஷிங் மெஷின்களில் ‘save water’ என்று இருக்கும். நிறைய துணிகள் துவைக்கும் போது அதைப் பயன்படுத்தலாம். இரண்டாவது முறை துவைத்தவுடன் வெளி வரும் நீரை வாசல் கழுவ பயன்படுத்தலாம். மிதியடிகள், கைப்பிடி துணிகளை முதல் முறை இந்தத் தண்ணீரில் துவைத்து கடைசியாக நல்ல தண்ணீரில் அலசலாம்.
 4. கைபேசியில் கால் வெய்ட்டிங், காலர் டியூன், இணைய இணைப்பு முதலியவற்றை தவிர்ப்பது மாதாமாதம் கைபேசியின் கட்டணத்தை குறைக்க உதவும். உங்களுக்கு உதவும் வகையில் கைபேசி இணைப்பை (plan) தேர்ந்தெடுத்து கொள்ளவும்.

உங்கள் வீட்டு தொலைக்காட்சிக்கு கேபிள் இணைப்பை விட DTH (Direct to Home) இணைப்பு அதிக பயன் தரும். உங்களுக்கு வேண்டிய சானல்களைத் (package) தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். DTH இல் ஒயர்லெஸ் மூலம் நிகழ்ச்சிகள் நேரடியாக சாட்டிலைட் வழியாக ஒளிபரப்பு ஆவதால் கேபிள் தேவைப் படுவதில்லை. நீங்கள் பார்க்கும் சானல்களுக்கு மட்டும் பணம் கொடுத்தால் போதும்.

சமையல் எரிவாயுவில் சிக்கனம்:

சமையல் எரிவாயுவின் விலையைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. சமைக்காமலோ, சாப்பிடாமலோ இருக்க முடியாதே! இதோ சில சிக்கன டிப்ஸ்:

 1. அகலமான பாத்திரங்களைப் பயன்படுத்தவும்.
 2. சாம்பாரோ, ரசமோ கொதித்தவுடன் அடுப்பைக் குறைக்கவும். மிதமான சூட்டில் காய்கறிகளைச் சமைக்கும்போது அவற்றின் சத்துக்கள் அழிவதில்லை.
 3. அடுப்பில் தீயின் நிறம் நீலமாக இருக்க வேண்டும். மஞ்சள் நிறத்தில் தீ இருப்பது பர்னர் சரியில்லை என்பதைக் காட்டுகிறது. அடுப்பை நல்ல நிலையில் வைத்திருப்பது எரிவாயு சேமிப்புக்கு உதவும்.
 4. சிலிண்டரை பயன்படுத்தாத போது மூடி வைப்பது வாயுக் கசிவை குறைக்கும். இரவில் கட்டாயம் சிலிண்டரை மூடவும்.
 5. சமைத்த உணவை மறுபடியும் சுட வைக்க மைக்ரோவேவ் அவனை (microwave oven) பயன்படுத்தவும். சுட்ட அப்பளத்தில் பொறித்த அப்பளத்தின் சுவை வேண்டுமா? அப்பளத்தின் மேல் சிறிது எண்ணெய் தடவி மைக்ரோ அவனில் வைத்து எடுங்கள்.

சிறுதுளி பெருவெள்ளம்; சின்னச்சின்னதாக சேமிக்கலாம்; சிறுகக் கட்டி பெருக வாழலாம்.

 

 

published in a2ztamilnadunews.com