நமது தேசிய கீதம்

நமது தேசிய கீதம் 

 எல்லோருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!

ஆந்திர மாநிலம சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி என்கிற ஊரில் கடந்த செவ்வாய்க் கிழமை சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் நமது தேசிய கீதத்தைப் பாடினார்கள். பொது மக்களும் இதில் கலந்து கொண்டனர்.

 

இந்த நிகழ்ச்சி நடந்த இடம் மதனப் பள்ளியில் உள்ள பெசன்ட் தியோசொபிகல் கல்லூரி வளாகம். இங்கு தான் சம்ஸ்க்ருதம் கலந்த பெங்காலி மொழியில் இந்தப் பாடலை திரு.தாகூர் எழுதினார்.தியோசொபிகல கல்லுரியின் அப்போதைய முதல்வரும் திரு. தாகூரின் நண்பருமான ஜேம்ஸ் ஹெச். கசின்ஸ் (James H. Cousins) என்பவரின் மனைவி திருமதி மார்கரெட் கசின்ஸ் (இவர் ஒரு மேற்கத்திய இசை வல்லுநர்) பல வித மெட்டுக்களை போட்டுக் காண்பித்து கடைசியில் தாகூர் மனத்தைக் கவர்ந்த மெட்டில் இருப்பது தான் நாம் எல்லோரும் இப்போது பாடும் ‘ஜன கண மன’ பாட்டு. 1911 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த மெட்டு போடப்பட்டது.

 

1911ஆம் ஆண்டு பிரம்ம சமாஜத்தின் தத்வ போத பிரகாசிகை என்ற நூலில் திரு தாகூர் எழுதிய கவிதை தான் பிற்காலத்தில் நமது தேசிய கீதமாக மாறியது. முதல் முறையாக இந்தப் பாடல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் 1911ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 27 ஆம் தேத பாடப்பட்டது. போன வருடம 2011டிசெம்பர் நமது தேசிய கீதத்திற்கு100 வயது ஆனது.

 

1911ஆம் வருடம் எழுதப் பட்டிருந்தாலும், இந்தப் பாடலின் ஹிந்தி மொழியாக்கம் பல ஆண்டுகள் கழித்து 1950 ஆம் வருடம் ஜனவரி 24 ம் தேதி இந்திய அரசியல் அமைப்பால் தேசிய கீதமாக தத்தெடுக்கப் பட்டது.

 

இந்தப் பாடலை திரு தாகூர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த இடமும் இதே மதனப் பள்ளி தான். மதனப் பள்ளியில் இருக்கும் பெசன்ட் தியோசொபிகல கல்லூரிக்கு ‘தெற்கு சாந்தி நிகேதன்’ என்றே திரு தாகூர் பெயரிட்டார். இவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த தன் கைப்படஎழுதிய ‘ஜன கண மன’ பாடல் மதனப் பள்ளி தியோசொபிகல் கல்லூரி நூலகத்தில் கண்ணாடி சட்டத்திற்குள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டிருக்கிறது. திரு. தாகூர் இந்த ஆங்கில மொழியாக்கப் பாடலுக்கு ‘The Morning Song of India’ என்று பெயரிட்டார்.

 

திரு. தாகூரால் எழுதப்பட்ட 5 பத்திகள் கொண்ட இந்தப் பாட்டின் முதல் பத்தி மட்டும் தேசிய கீதமாக இசைக்கப் படுகிறது. இதைப் பாடுவதற்க 52 வினாடிகள் ஆகும். முழுவதும் பாடாமல் சுருக்கமாக முதல் அடியும் கடைசி அடியும் மட்டுமே சில சந்தர்பங்களில் பாடப் படுகிறது. சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் நம் நாட்டின் தலை நகரமான புது தில்லி செங்கோட்டையில் நமது தேசியக் கோடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப் படுகிறது.

 

பிரபலமானவற்றைச் சுற்றி சச்சரவு எப்போதும் இருக்கும், இல்லையா? அதுபோல திரு. தாகூர் எழுதிய இந்த தேசிய கீதமும் பல சமயங்களில் சச்சரவுக்கு ஆளாகி இருக்கிறது.

இந்தப் பாடல் இயற்றப்பட்ட1911ஆம் ஆண்டு தான் இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ் முடிசூடிய ஆண்டு. ‘பாக்கிய விதாதா’, ‘அதிநாயக’ என்ற சொற்கள் அரசரைப் புகழ்ந்து எழுதப் பட்டவை; கடவுளின் புகழ் இல்லை என்று சிலர் அப்போதே எதிர்ப்புக் குரல் எழுப்பினர். இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் இரண்டாம் நாளின் முக்கிய நிகழ்ச்சி அப்போது இந்தியா வந்திருந்த ஐந்தாம் ஜார்ஜ் அரசரை வரவேற்பதுதான். இந்த மாநாட்டைப் பற்றிய செய்தியை பத்திரிகைகள் வெளியிடும் போது “வங்கக் கவி திரு ரவீந்திர நாத் தாகூர் இங்கிலாந்து அரசரை வரவேற்பதற்காக தான் இயற்றிய பாடலைப் பாடினார்” என்று குறிப்பிட்டிருந்தன.

ஆனால் திரு. தாகூர் அவர்கள் ஒரு சிறந்த தேச பக்தராகவே கருதப் பட்டார்.1919 இல் நடந்த ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குப் பின், தனக்குக் ஆங்கிலேய அரசால் (யாரைப் புகழ்ந்து பாடினார் என்று குற்றம் சாட்டப் பட்டாரோ அந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரால்)கொடுக்கப் பட்ட’சர்’ பட்டத்தையும் துறந்தார். இந்த சச்சரவுகளின் பின்னிலையில் திரு. தாகூர் 1937,1939 ஆம் ஆண்டுகளில் தான் எழுதிய கடிதங்களில் தாம் கடவுளையே ராஜா என்று குறிப்பிட்டதாகவும், தன்னை குறை சொல்பவர்களின் அறிவின்மை பற்றி வருத்தப் படுவதாகவும் கூறுகிறார்.

‘ஜன கண மன’ பாடலில் குறிப்பிடும் ‘ராஜா’, ‘அரியணை’, ‘ரதம்’ போன்ற சொற்கள் பரம் பொருளான ஸ்ரீ கிருஷ்ணனைக் குறிப்பதாகவே திரு தாகூரின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

இன்னொரு குற்றச்சாட்டு:

‘ஜன கண மன’ வில் குறிப்பிடும் இந்திய பிரதேசங்கள் எல்லாம் அப்போதைய ஆங்கில அரசின் கீழ் இருந்தவை; மன்னர்களால் ஆளப்பட்டு வந்த மாநிலங்களைப் (காஷ்மீர், ராஜஸ்தான், ஆந்திரா, மைசூர்) பற்றி எதுவும் எழுதவில்லை. இந்தியாவைச் சுற்றியுள்ள இந்து மகா சமுத்திரம், அரபிக் கடல் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. எல்லைப் பிரதேசங்களைப் பாடியதால், ஒட்டு மொத்த இந்தியாவையுமே தன் பாட்டில் சேர்த்திருக்கிறார் திரு. தாகூர்; ‘திராவிட’ என்பது தெற்குப் பகுதியையும், ‘ஜொலதித’ என்ற வார்த்தை கடல், மற்றும் சமுத்திரத்தைக் குறிக்கும் வடச் சொல் என்றும் பதில் அளிக்கிறார்கள் தாகூரின் ஆதரவாளர்கள்.

சாதாரண இந்தியன் இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு குடியரசு தினத்தன்று கிடைக்கும் இனிப்பை பற்றி கனவு கண்டு கொண்டு இருக்கிறான்.

வாழ்க பாரதம்! வெல்க பாரதம்!

published in a2ztamilnadunews.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s